த்வைத நிலைகளை ஒப்புக்கொள்ளும் அத்வைதம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதைப் பற்றிக் குழப்பமே வேண்டாம். “நாம் அத்வைதிகள் அல்லவா? அந்த ஸம்ப்ரதாயத்தில் வந்திருப்பவர்களல்லவா? அல்லது அதுதான் ஸத்யமான தத்வம் என்ற நம்பிக்கை உடையவர்களல்லவா? அந்த அநுபவம் ஸித்திக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறவர்களல்லவா? நாம் போய் ஒரே த்வைத மயமான கார்யத்திலும் (சாஸ்த்ரிய கர்மாநுஷ்டானங்களிலும்), பக்தி உபாஸனையிலும் ஈடுபடுவதாவது?” என்று கொஞ்சங்கூடக்குழம்பவே வேண்டாம். அத்வைத ப்ரதிஷ்டாபனாசார்யாளான பகவத்பாதோளே இப்படிப் பண்ணும்படிதான் ஆக்ஞை செய்திருக்கிறார். இத்தனை காலம் த்வைதத்திலிருந்துகொண்டு தப்புப் பண்ணிவிட்டு இப்போது திடீரென்று அத்வைதம் வரவேண்டுமென்றால் எப்படிவரும்? த்வைதத்தால் பண்ணின தப்பை த்வைதத்தினாலேயே ஸரி பண்ணிக்கொண்டால், அப்புறம்தான் அத்வைதமாக ஸாதனை செய்யமுடியும். ஆனடிபயால் ஆசார்யாள் இப்படிப்பட்ட நிலையிலிருக்கிற நமக்காக த்வைதத்தை இந்த மட்டத்தில் நன்றாக ஒப்புக்கொண்டு, நம்மையும் இதை ரிஸர்வேஷன் இல்லால் தைர்யமாக ஒப்புக்கொண்டு, அப்புறம் பக்வப்படப்பட இதைவிட தீரத்தோடு இதனுடன் போராடி ஜயித்து அத்வைதத்துக்குப் போகும்படியாகச் சொல்கிறார்.

மற்ற ஸித்தாந்திகள் அத்வைதத்தை அறவே ஒப்புக்கொள்ளதாததுபோல அத்வைதிகள் மற்ற ஸித்தாந்தங்களை ஒப்புக்கொள்ளாமல் மறப்பதில்லை. அத்தைவ நிலையை அடைவதற்கு முன்னே த்வைதத்தின் பல நிலைகளும் இருக்கவே செய்கின்றன என்பதை ஆசார்யாள் நன்றாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

‘ந ச த்வைதஸ்ய அந்ருதத்வ புத்தி: ப்ரதமமேவ கஸ்ய சித் ஸ்யாத்’ – அதாவது, “ஆரம்பத்திலிருந்தே த்தைவ ப்ரபஞ்சம் பொய்யானது என்று அறிவு யாருக்கும் இருப்பதற்கில்லை” என்று ப்ருஹதாரண்யகத்தில் பரம அத்வைதமாக “அதுவும் பூர்ணம், இதுவும் பூர்ணம்” என்று வரும் மந்த்ரத்துக்கு பாஷ்யம் செய்யுமிடத்திலேயே ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்.*

ப்ரஹ்மத்திலிருந்து ஜகத்தின் தோற்றம் எப்படி என்பதைப் பற்றிப் பல கொள்கைகளை ப்ரஹ்ம ஸூத்ரத்தில் இரண்டாம் அத்யாய முதல் பாகத்தில் ஆராய்ந்திருக்கிறது. ப்ரஹ்மம்தான் ஜகத்தகாரணம் என்றாலும் வேறே வஸ்துக்களை வைத்துக்கொண்டு அது ஜகத்தைச் செய்ததா, தானே ஜகத்தாகப் பரிணமித்ததா, அல்லது வெறுமே இப்படி ஜகத் மாதிரி தோன்ற மட்டும் செய்கிறதா என்று பல அபிப்ராயங்கள் இருக்கின்றன. வேறு வஸ்துக்களைக் கொண்டு செய்ததென்றால் அவை எங்கேயிருந்து வந்தன? எங்கிருந்தோ வந்தனவென்றால் அப்போது ப்ரஹ்மம்தான் ஜகத்காரணம் என்பதே தப்பாகிவிடுகிறது. ப்ரஹ்மத்தைத் தவிர வேறு ஆதார வஸ்து இருந்துவிட்டால் ப்ரஹ்மமென்பது ப்ரஹ்மமே இல்லை! ப்ரஹ்மம் ஜகத்தாகப் பரிணமித்தது, அதாவது பால் தயிராகிற மாதிரி மாறிற்று என்றாலும் ஸரியில்லை. விகாரம் (மாறுதல்) இல்லாமல் ஸ்வரூபத்திலேயே இருப்பதுதான் ப்ரஹ்ம லக்ஷணம். இது இன்னொன்றாக மாறிற்று என்றால் ஸரியில்லை. அதோடுகூட, ஜகத்தாக இதுவே மாறிவிட்டதென்றால் அப்புறம் ப்ரஹ்மம் என்று தனியாக இருக்க முடியாது. ஜகத் தோன்றின பிறகு ப்ரஹ்மம் இல்லை என்று ஆகிவிடும். ஆனால், இந்த அபிப்ராயங்கள் எதுவும் ஸரியில்லை. ப்ரஹ்மம் வெறுமே ஜகத் மாதிரித் தோன்ற மட்டுந்தான் செய்கிறது; நிஜமாக ஸ்ருஷ்டி என்று ஏதோ வெளி சரக்கை வைத்துக்கொண்டு பண்ணவுமில்லை; அல்லது தானே உருமாற்றம் கொள்ளவுமில்லை” என்று ஆசார்யாள் ஸ்தாபித்திருக்கிறார். பரிணாமம் என்று வேறாக ஆவது வேறு, ஆசார்யாள் சொன்னதுபோல வேறாகத் தோன்றுவது வேறு. இதற்கு ‘விவர்த்தம்’ என்று பெயர். பரிணாமம் என்றால் வாஸ்தவமாகவே ரூபம் மாறுவது. புழு வண்டாகிறது பரிணாமம். அபபுறம் அந்தப் புழு உண்டா? இல்லை. ஆனால் அதே புழு ஏதோ பிய்ந்துபோன ரப்பர் துணுக்கு மாதிரித் தெரிகிறதென்றால் அப்போது வாஸ்தவத்தில் அதற்க்கு ஏதாவது மாறுதல் ஏற்பட்டதா என்ன? அது புழுவாகவேதான் இருந்துகொண்டு இருக்கிறது; அதே ஸமயம் ரப்பர் பிச்சாளம் மாதிரித் தெரிகிறது. இப்படி ப்ரஹ்மம் நிர்விகாரமாகவே, தன் நிஜ ஸ்வரூபத்தில் எந்தவிதச் சலனமுமில்லாமலேதான் இருக்கிறது. அப்படியிருக்கும்போதே அதில் மாயையானது ஜகத் தோற்றத்தைக் கல்பிக்கிறது என்று ஆசார்யாள் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ரஜ்ஜு – ஸர்ப்ப ந்யாஸம், அதாவது கயிறு பாம்பாகத் தெரிகிற மாதிரி என்று அத்வைத புஸ்தகங்களில் அடிக்கடி வரும்.

அத்வைதத்தின் அடிப்படையான இந்த கொள்கையை “ப்ரஹ்ம ஸூத்”ரத்தின் அந்த பாகத்தில் ‘ததநந்யத்வ – மாரம்பண – சப்தாதிப்ய’ என்ற (பதிநாலாம்) ஸூத்ரத்தில் நிலைநாட்டி விளக்கிக்கொண்டு போகிறபோதே நம்முடைய ஆசார்யாள் இதற்கு மாற்று அபிப்ராயமுள்ளவர்களையும் மதிக்கிறமாதிரி அத்வைதத்துக்கு முந்தைய நிலையில் த்வைதக் கருத்துக்களை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான் என்கிறார். ரொம்பவும் ஸ்பஷ்டமாக, ஸ்வப்ன தசையில் உள்ளவரை அந்த ஸ்வப்ன வ்யவஹாரங்கள் ஸத்யமாகவே இருந்து, முழித்துக்கொண்ட பிறகே பொய்யெனத் தெரிவது போல, பரமாத்மாவே ஜீவாத்மா என்ற ஞான விழிப்பு ஏற்படுவதற்கு முந்தி த்வைதமான எல்லா ஸம்ஸார வ்யவஹாரங்களுக்கும் ஸத்யத்தன்மை பொருந்துவதாகவே கொள்ள வேண்டும்’: ‘ஸர்வ வ்யவஹாராணாமேவ ப்ராக் ப்ரஹ்மாத் மதா விஜ்ஞாநாத் ஸத்யத்வோபபத்தே : ஸ்வப்ந வ்யவஹாரஸ்ய ப்ராக் ப்ரபோதநாத்’ என்று சொல்லியிருக்கிறார்.

இப்படி உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொண்டு, ஆசார்யாளே விதித்துள்ளபடி புஷ்கலமாக (பூர்ணமாக) கர்மாநுஷ்டானம், பக்தி உபாஸனை பண்ணி, அப்புறந்தான் மனஸ் போகப் பண்ணிக்கொள்வதற்கான ஞான விசாரத்துக்கும்போகவேண்டும். அப்போதுதான் உள்ளது உள்ளபடி எப்போதுமே இருக்கும் ஒன்றே ஒன்றான தத்வததை அடைய முடியம். அத்வைதத்தை ஒப்புக்கொள்பவர்களாச்சே த்வைதமாகப் பண்ணலாமா? ‘அத்வைதம் என்று நீட்டி முழக்கிவிட்டுக் கடைசியில் பார்த்தால் இவர்களும் நான் பண்ணும் கர்மா – பக்திகளைத்தானே பண்ணுகிறார்கள்!’ என்று த்வைததிகள் பரிஹாஸம் செய்பவர்களே!” என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை. ஸத்யம்தான் வேண்டும் என்றால் எல்லாவற்றுக்கும் துணிந்துதான் ஆகவேண்டும். ஒரேயடியாகப்பணிவதற்கும் துணியவேண்டும்! கொள்கையபிமானம் உள்படி எல்லா மானாபிமானமும் போகணும். இதுதான் ஆசார்யாள் வழி.

வறட்டு ஸித்தாந்தப் பிடிமானம் போகணும். ‘முரட்டுப் பிடிவாதம்’ என்கிறோமே, அது தன் வாதத்தையே முரட்டுத்தனமாகப் பிடித்துக் கொண்டிருப்பதுதான். இப்படி, ஸித்தாந்த வாதத்தையே வாயளவில் பிடித்துக்கொண்டு, வாழ்க்கை அநுஷ்டானத்தால் அந்த ஸித்தாந்த ஸாரத்தைத் தெரிந்துகொள்வதற்கு அடிநிலையிருந்து முயற்சி பண்ண பயப்பட்டால் உருப்பட முடியாது.

ஆசார்யாள் அவதாரத்தை முடித்துக்கொண்டு விதேஹ முக்தியடைய இருந்த ஸமயத்தில் பக்தர்கள் அவரிடம் வந்து, “தங்களுடைய ஏராளமான உபதேசங்களின் ஸாரத்தை வைத்துச் சுருக்கமாகக் கொடுத்து அநுக்ரஹம் பண்ணுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள், அப்போது அவர் ஸாதாரணமாக நம் மாதிரியாக உள்ள ஜீவன் அடிமட்டத்திலிருந்து எப்படி ஆரம்பித்துப் படிப்படியாக அத்யாத்ம ஸாதனைக்குப் போகவேண்டுமென்பதை ஐந்து ச்லோகங்களில் உபதேசித்தார். (‘உபதேச பஞ்சகம்’ என்றும் ‘ஸோபாந பஞ்சகம்’ என்று கூறப்படும்) அதிலே, “வேதத்தைத் தினமும் ஓதி, அதில் சொன்ன கர்மாக்களையெல்லாம் நன்றாக அநுஷ்டியுங்கள்” என்று முதல் வரியிலேயே உபதேசித்திருக்கிறார். ஸொந்த ப்ரீதிக்காக இல்லாமல் ஈச்வர ப்ரீதிக்காக இப்படிக் கர்மா பண்ணுங்கள் என்கிறார். அப்புறம், “பகவதோ பக்திர் த்ருடாதீயதாம்”, அதாவது, “பகவானை த்ருடமான பக்தியோடு உபாஸியுங்கள்” என்கிறார்.

நாம் நிஜமான ஆசார்ய சிஷ்யர்களானால் அவர் தம்முடைய ஜீவயாத்ரையை முடித்துக்கொள்ளும்போது முடிவாக அநுக்ரஹித்த உபதேசப்படிதான் நடக்க வேண்டும். அதாவது கர்மா, பக்திகள் பண்ணி, ‘நம் சித்தம் சுத்தியாயிற்று, அதற்குச் சிதறாமல் ஒன்றிலேயே நிற்கிற ஆற்றல் ஏற்பட்டுவிட்டது’ என்று நமக்கு நிச்சயமான உறுதி ஏற்பட்டபோதுதான் கர்மாவையும் பக்தியையும் நிறுத்திவிட்டு அத்வைத விசாரத்தில் தீவ்ரமாக ஈடுபடலாம். ஆரம்பத்திலிருந்தே அத்வைத லக்ஷ்யம் மறக்கப்படாதுதான். தினமும் கொஞ்சநேரம், ‘இது அத்தனையும் மாயைதான், த்வைதந்தான்; ஆத்மா ஒன்றுதான் ஸத்யம், அது எந்தக் கார்யமுமில்லாமல் பரம சாந்தமாக இருப்பதுதான் என்று நினைத்து, ‘நாம் அப்படித்தானிருக்கிறோம்’ என்று பாவனையாகவாவது சற்று நேரம் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அந்த பாவனை வாஸ்தவமாகவேண்டுமென்றால் அதற்குக் கர்மா, பக்திகள் பண்ணினால்தான் முடியும். பாவனை வலுக்க வலுக்க இவைதாமே விட்டுப்போகும். முதலிலேயே விடப்படாது. த்வைதத்தைக் கொண்டே அத்வதைத்துக்குப் போகவேண்டும். சரீரத்தால் செய்யும் கர்மாநுஷ்டானத்தைக் கொண்டே கர்ம நாசத்துக்கு வழி தேடவேண்டும். மனஸைக் கொண்டு செய்யும் பக்தியாலேயே மனோ நாசத்துக்குப் பக்வப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மற்ற ஸித்தாந்திகள் அத்வைதத்தை ஒப்புக்கொள்வதில்லை; ஆனால் அத்வைதிகள் அவர்கள் சொல்கிற த்வைதத்தையும் அத்வைதத்துக்கு ஏற்றிவிடும் படிகளாக ஒப்புக்கொள்கிறோமென்பதில் ஆச்சர்யமில்லை. வீட்டில் கீழே ‘க்ரெனண்ட் ஃப்ளோரி’ல் இருப்பவர்களுக்கு மேலே மாடியிருப்பது தெரியாமலிருக்கலாம். ஆனால் மாடியிலே இருக்கிறவருக்குக் கீழே ஒரு தளம் இருப்பது தெரியாமலிருக்க முடியாது. “இந்த வீட்டுக்கு மாடி இருக்கா என்ன?” என்று கீழே இருப்பவர்கள் கேட்கலாம். ஆனால் மாடியில் இருப்பவர், “இதற்குக் கீழே ஒரு ஃப்ளோர் இருக்கா?” என்று ஸந்தேஹப்பட்டு கேட்கமாட்டார்! இங்கேயிருந்து (கும்பகோணத்திலிருந்து) சிதம்பரத்துக்குப்போய் அங்கேயே இறங்கிவிடுபவருக்கு மெட்ராஸ் இருப்பது தெரியாது. ஆனால், மெட்ராஸ் போகிறவர் சிதம்பரம் வழியாய்த்தான் போகவேண்டும். மலை உச்சிக்குப்போகிறவர் கீழேயிருந்துதான் போகவேண்டும்; அதனலே கீழே உள்ள மலை ப்ரதேசங்களையும் அவர் “இருக்கு” என்று ஒப்புக்கொள்வார். கொஞ்ச தூரம் மட்டும்போய் அங்கேயே நின்றுவிடுகிறவர்களுக்கு உச்சியை தெரியாது. அவர்கள் பார்வையில் அந்த உச்சி மறைந்திருந்தால். “இதற்கு (அவர்கள் வந்திருக்கும் இடத்துக்கு) மேலே உச்சி இல்லை” என்று கூட நினைத்துவிடலாம்!. இந்த மாதிரி உபமானங்கள் கூடச் சொல்லவேண்டியதில்லை. என்னவோ சொன்னேன். மற்ற ஸித்தாந்தங்களையும் அரவணைத்துத் தழுவிக்கொண்டு போவதே அத்தைவமாதலால் இப்படியெல்லாம் சொல்வது கூட அதன் ‘ஸ்ப்ரிட்’டுக்கு ஏற்காததுதான்.


* ப்ருஹதரண்யகோபநஷத்-5-1-1

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is முடிவுள்ளதே ஸம்ஸாரம் ; ஏகோபித்த கருத்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸத்ய, ஸந்தோஷங்கள் அத்வைதத்திலேயே
Next