அதிகாரிகளையொட்டி உபதேச மாறுபாடு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்த நாளில் எல்லாருக்கும் எல்லாவற்றையும் சொல்கிறது போல அப்போது பண்ண மாட்டார்கள். பாத்ரமறிந்து, யோக்யதை பார்த்து, அதிகாரம் உள்ளவருக்கே சொல்வார்கள். ஸரியாகப் புரிந்து கொள்ள முடியாதவர்கள், புரிந்துகொண்டாலும் அதை முறையாகப் பாடுபட்டு அநுஷ்டானத்தக்குக் கொண்டவர முடியாதவர்கள், தப்பாகப் புரிந்துகொண்டதை அநுஷ்டானம் செய்து விபரீதத்தை உண்டாக்கி கொள்ளக்கூடியவர்கள் – என்றிப்படியெல்லாம் இருக்கக்கூடிய சராசரி ஜன ஸமூஹம் முழுதற்கும் ஒரு பெரிய தத்வத்தை – நிரம்பவும் அப்யாஸ, வைராக்ய ஸாதனை தேவைப்படும் ஸித்தாந்தத்தை- சொல்ல மாட்டார்கள். ‘ப்ரின்டிங் ப்ரெஸ்’ வராததால் ரொம்பக் குறைச்சலாகவே ப்ரதி எடுக்கக் கூடியதாகச் சுவடிகளில் அவர்கள் சாஸ்த்ரமாக எழுதிவைத்தது யார்? யோக்யதையுள்ள பாத்ரர்களாக இருந்தார்களோ, அதவாது ‘அதிகாரி’களென்று கருதப்பட்டவர்களாயிருந்தார்களோ அவர்களுக்குத் தான் ப்ரயோஜனப்பட்டன. யார் வேண்டுமானலும் வாங்கி ஒரு பொழுது போக்குக்காக, அல்லது க்யூரியாஸிடிக்காகப் படிக்கிற விதத்தில் பெரிய விஷயங்கள் புஸ்தகங்களில் இறைபடவில்லை.

நானே கூட கூட்டத்தில் பேசும்போது ஜனங்களுக்கு எட்டாத தத்வங்களை இப்போதே எல்லாரும் அப்யஸிக்க வேண்டுமென்கிறாற்போல வற்புறுத்திச் சொல்லிக்கொண்டு போனால் அது தப்புத்தான். ஸதா ஸர்வ காலமும் மாயையிலேயே உழன்று கொண்டிருக்கிற ஸர்வ ஜனங்களும் இந்த மாயைக்கு அப்பாற்பட்டதாக ஆத்மா என்று ஒன்று இருப்பதை தினமும் கொஞ்சம் நினைத்துக் கொள்ளத்தான் வேண்டும். எல்லாரும் அப்படிச் செய்ய வேண்டுமென்பதற்குத்தான் அத்வைதத்தைப் பற்றி உபந்யஸிப்பது. அந்தப் பரம தத்வம் ஒருத்தருக்குகூட நஷ்டப்பட்டுப் போகாமல் அதை எல்லாருக்கும் தெரிவிக்கவேண்டிய கடமை ஆசார்யாளுடைய மடத்திலிருக்கிற எங்களுக்கு இருக்கிறது. ஆனாலும் தினமும் கொஞ்சம் அத்வைத நினைப்பு இருக்கணுமென்றுதான் சராசரி ஜனங்களுக்குச் சொல்லணுமே தவிர, இப்போதே எல்லாரும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆத்ம விசாரத்தில் உட்காருங்கள் என்று சொல்லக்கூடாது. அது ஸாத்யமில்லாததைச் சொல்வதேயாகும். அதிகாரிகளாயில்லாதவர்கள் அப்படிச் செய்யப் பார்த்தால் அநேகத் கஷ்டங்கள், கெடுதல்கள் ஏற்படும். ஆகையால் த்வைதமான கர்மா, பக்திகளையே பொதுமக்களுக்கு அதிகம் சொல்லி, அதில் அவர்கள் நன்றாக இறங்கி அப்யஸிக்கிற அளவுக்கு வற்புறுத்திச் சொல்லி, அத்வைத லக்ஷ்யத்தை நினைவூட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

“கார்யத்திலேயே பற்று வைக்கக் கூடியவர்களாயிருக்கிற பாமர ஜனங்களுக்கு கார்யமில்லாத வேதாந்த ஸத்யங்களைச் சொல்லி புத்தியைக் குழப்பக்கூடாது” என்றே கீதையில் பகவான் கட்டளை போட்டிருக்கிறார்.1

த்வைதத்துக்கே அதிகாரிகளாகத் தற்போது இருக்கிறவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பக்வப்படுத்திதான் அத்வைதத்தை ஸாதனையாக அப்யஸிப்பதற்கான விஷயங்களைச் சொல்லவேண்டும். த்வைதமாகவே முதலில் நிறைய ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே போய் அப்புறம் அத்வைதத்தை நிறையச் சொல்லவேண்டும்.

த்வைத – அத்வைத அதிகாரிகளைப் பொறுத்தே உபதேசம் வித்யாஸமாயிருக்கவேண்டும். இதில் முக்யமாக, இப்போது நாம் எடுத்துக்கொண்டுள்ள விஷயத்தில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், ‘த்வைத அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலிருந்தே அத்வைத் லக்ஷ்யம் என்ற ஒன்றைத் துளி சொல்லவேண்டும். அப்புறம் பக்வப்படுத்திக் கொண்டே போய் அத்வைதத்துக்கு அதிகாரியாக்க வேண்டும்’ என்பதால் இவர்களுக்கு முழுக்கவும் த்வைத உபதேசத்தோடேயே முடித்துவிடக் கூடாது என்றாகிறது. ஆனால், இவர்கள் அத்வைதத்துக்கு அதிகாரிகளாவதற்குப் பக்வப்பட்ட பிற்பாடோ இவர்களுக்கு த்வைதத்தைப் பற்றிக் கொஞ்சங்கூடச் சொல்லக்கூடாது. அங்கே இங்கே கூட த்வைதத்தில் இவர்களுடைய சித்தம் போகவிடாமல் முழுக்க முழுக்க அத்வைதமாகவே சொல்லிக் கொண்டு போய் அதிலேயேதான் இவர்களை ஆணி அடித்தாற்போல நிறுத்தவேண்டும்.

த்வைதிகள்தான் த்வைதத்துக்கு மேலே அவர்கள் போகவேண்டியதான நிலைகளைப்பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்ளவேண்டுமே தவிர, அத்வைத ஸாதகர்கள் அவர்கள் விட்டு விட்டு வந்த த்வைத ஸமாசாரங்களை மறுபடி நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. அவற்றை மறக்கத்தான் வேண்டும். அதனாலேதான் அப்படிப்பட்டவர்களுக்கான சாஸ்த்ரங்கள் ஈச்வரன், ஈச்வர க்ருபை உள்பட த்வைதமான, த்வைதாத்வைதமான எதையும் விஸ்தரிப்பதில்லை.

நம்முடைய தேசத்தில் தத்வங்கள் அறிவு மட்டத்தோடு நிற்காமல், அவற்றின் அநுபவத்தைப் பெறுவதற்கான அநுஷ்டானங்களையும் விஸ்தாரமாகக் கொண்ட ஸம்ப்ரதாயங்களாக இருக்கின்றன. இவற்றை அநுஷ்டிக்கக்கூடிய அதிகாரிகளா என்று பார்க்காமல் லெக்சர் பண்ணினால் அது ஸரியேயில்லை. அத்வைத ஸித்தாந்தத்தைப் போல மஹாபாவிகளே கடினமான நீண்ட ஸாதனைக்கப்புறமதான் அநுபவத்துக்குக் கொண்டுவரக் கூடியதான தத்வ சாஸ்த்ரத்தை ஜனநாயக ரீதியில் ப்ரசாரம் செய்வது யுத்தமில்லை.2

அத்வைத சாஸ்த்ரங்கள் கர்மாநுஷ்டானம், உபாஸனை ஆகியவற்றில் நன்றாக முன்னேறி, அவற்றையும் விட்டுவிட்டு ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு மஹாவக்ய உபதேசம் பெற்ற ஆத்ம விசாரம் செய்ய ஆஸ்தை உடையவர்களைக் கருதியே முக்யமாக எழுதப்பட்டவை. முன்னே சொன்னாற் போல, இவர்களை இவர்கள் புத்திபூர்வமாக ஸாதனை செய்யும் வரையில் அத்வைதத்திலேயே ஆணி அடித்தாற் போல நிறைநிறுத்த வேண்டுமென்ற அபிப்ராயத்தில்தான் த்வைதமான ஈச்வர க்ருபையைப் பற்றிப் பளிச்சென்று சொல்லாமல் விட்டது. நிதித்யாஸனத்தில் மேலே மேலே உயர்ந்த நிலைகள் கிட்டி மனோ நாசத்திலேயே முடிந்து ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஏற்படுகின்றதென்று சொன்னாலும் இப்படி மேலும் மேலும் உயர் நிலைகளை அடைவிப்பது ஈச்வர க்ருபைதான் என்று சொல்லி, இவனுக்கு வேறான ஒரு ஈச்வரனை அந்த இடத்தில் வலியுறுத்துவதில்லை.

ஈச்வரன் மஹா மாயாவி! அவனன்றி அணுவும் அசையாது என்கிறார்கள். ஆனாலும் அவன் நம் மனஸிலே புகுந்து கொண்டுதான் நம்மை நினைக்கப் பண்ணுகிறான் என்பது கொஞ்சம்கூடப் புரியாத நிலையிலேயே நம்மை வைத்திருக்கிறான். நம் நினைப்பு கன்னாபின்னா என்று இருப்பதைப் பார்க்கும்போது, ‘இது நிச்சயமாக அவன் நினைப்பதாயிருக்க முடியாது; இப்படிப்பட்ட நினைப்புக்கள் அவனுக்கு ப்ரீதியாக இருக்காது’ என்று தோன்றுகிறது. நல்ல நினைப்புகளைத் தூண்டிவிடும்படி அவனிடமே ப்ரார்த்திக்கிறோம். காயத்ரிக்கே அதுதான் அர்த்தம். ஆனதால், எல்லாம் ஈசன் செயலே என்று சொன்னாலும், அவன் ‘நம் செயல்’ என்று நாம் ஏதோ செய்து பார்த்து, முட்டி, மோதிக்கொண்டு, அதனாலேயே அறிவு பெறுகிறோமா என்று பரீக்ஷிக்கிற விதத்தில்தான் நமக்குத் தனி மனஸைக் கொடுத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. எல்லாம் அவன் திட்டம், எல்லாம் அவன் செயல் என்றால் அப்புறம் நாம் நம்மைத் திருத்திக் கடைத்தேற்றிக் கொள்வதற்காக ஸாதனை என்று ஒன்று செய்யவேண்டியதே இல்லையே!

நம் தனி மனஸ் தன்னிஷ்டமாக ஒன்றில் போவதற்கு அவன் எவ்வளவு தூரம் இடம் கொடுப்பான்? எப்போது கொஞ்சமும் இடம் கொடுக்காமல் தானே பூராவூம் எடுத்துக் கொள்வான்? – (என்று) யாரும் சொல்ல முடியாது. ஆகையினால், ஆத்ம விசாரத்தில் நாம் ப்ரவேசித்து அவனால் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்படுகிற மனஸையும் கூட அவன் பூர்ணமாக எடுத்துக் கொள்வதற்கு முன் விளையாட்டுப் பார்க்கக் கூடும். அதாவது அப்போதுகூட ஜீவமனஸ் ஸ்வதந்த்ரமாக நினைத்து முடிவபுண்ண ஈச்வரன் அநுமதிக்கக்கூடும். இம்மாரியான உச்ச கட்டத்திலே ஜீவனானவன், ‘த்வைதமான ஈச்வர க்ருபை இத்தனை நன்றாயிருக்கிறதே! அதனால் இதைச் செய்கிற ஈச்வரனிடம் த்வைதமாய் பக்தி பண்ணிக்கொண்டே அதோடு நின்றுவிட்டாலென்ன?’ என்று நினைக்கலாமல்லவா? அப்போது இதே ஈச்வரனின் அரூபமான, நிர்குணமான ஸார ஸத்யத்தில் ஜீவன் ஒன்றாவது எப்படி “ஒரு ஜீவன் தானாக இஷ்டப்பட்டுக் கேட்கிறதைக் கொடுப்போம்” என்று ஈச்வரன் கடைசிமட்டும் விளையாட்டுப்பண்ணுவானாகில், இவனுக்கு அத்வைத ஸித்தி எப்படிக் கிடைக்கும்?


1 3. 26 மூன்றாம் பகுதியில் ‘ஆசாரம்’ என்ற உரையில் ‘தலைவர் கடமை: கீதை உபதேசம்’ எனும் உட்பிரிவு பார்க்க.
2 இவ்வுரையின் பெரும்பாலான பகுதிகள் பொது உபந்யாஸங்களில் கூறப்படாதவை; ஒரு சில ஸாதகர்கள் அல்லது பண்டிதர்களுக்கிடையில் ஸ்ரீசரணர்கள் அருளியவையும், ஓரிரு ஸாதகர்களின் கேள்விகளுக்குத் தந்த பதிலுமே இதில் முக்யமான பங்காக அமைந்துள்ளது. இவற்றை இங்கு தொகுத்தளித்துப் பலருக்கும் தெரிவிப்பதற்கு ஒரு ஸமாதானம் பிற்பாடு இவ்வுரையிலே வருவதாகத் தொகுப்பாசிரியர் கருதியே இவ்விதம் செய்துள்ளார். அதாவது, அத்வைத ஸாதனையில் கணிசமாக முன்னேறியவர்களுக்கு மாத்ரமில்லாமல், பொதுவாக ஆன்மிக நாட்டம் கொண்ட எல்லோருக்கும் கண்ணன் கீதோபதேசம் செய்தபோது, அத்வைத சாஸ்திரத்தில் வெளிப்படச் சொல்லாத பல கருத்துக்களையும் வெளியிட்டிருக்கிறாரென்று ஸ்ரீசரணர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். அதேபோல ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தில் அதிகம் செல்லாவிடினும் பொதுவான ஆன்மீக நாட்டமுள்ளவர்களே இந்நூலைப் படிப்பவர்களில் அதிகம் இருப்பதால் த்வைத – அத்வைத மார்க்கங்களை இணைக்கும் விஷயமாக ஸ்ரீசரணர்கள் திருவாய் மலர்ந்தவற்றைச் சேர்த்திருக்கிறது. கர்மா, பக்திகளை நிறையக் கூறியே இவற்றையும் கூறியிருக்கிரோமென்பது கவனத்துக்குரியது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is இடை நிலைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஈசன் செய்வதற்கு சாஸ்த்ரம் எதற்கு?
Next