Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பய வாய்ப்புக் குறைதல் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கட்டவிழ்த்துவிடுவதில் இதுவே ஆரம்பம். (சற்றுமுன்) சொன்னமாதிரி, இது மனஸை ஓரளவுக்கு நல்லதில் போகப் பண்ணி, பெரிய அளவுக்குக் கெட்டதில் போகாமல் தடுக்கிறது. இதிலே நன்றாகப் பழகிப் பழகிச் சித்த சுத்தி ஏற்பட, ஏற்பட கார்யமில்லாமல் தனியாக மனஸை மட்டும் வைத்துக்கொண்டு த்யானம் என்று செய்ய ஆரம்பிக்கும்போது அது சிதறி ஓடாமல் கட்டுப்பட்டு நிற்க ஆரம்பிக்கிறது. இப்படிக் கட்டுப்பட்டு அது ஈச்வரனிடம் எவ்வளவுக்கெவ்வளவு நிற்கிறதோ அவவ்ளவுக்கவ்வளவு ஸம்ஸாரக் கட்டு அவிழ ஆரம்பிக்கிறது. அப்புறம்தான் மனஸ் என்பதாக ஆத்மாவைக் குறுக்கிக் கட்டுப்படுத்தும் கட்டே ஈச்வராநுக்ரஹத்தினால் அவிழ்ந்து, கர்மா செய்வதற்கு ஒரு தனி ஜீவன் என்பதே இல்லாமலாகி, எனவே ஸம்ஸாரக் கட்டை அடியோடு அறுத்துக்கொண்டு அத்விதீயமான ஆத்மாவாக ஜீவன் தன்னை அறிந்து அதிலேயே நிலைப்பதான முக்தி கிட்டுகிறது.

பயத்துக்குக் காரணமான த்வைதம் போவது அப்போதுதான். கர்மா செய்யும்போதும், த்யானம் செய்யும்போதும் த்வைதம் தவிர்க்கவே முடியாதது. ஆனாலும் மனம் போனபடி நினைப்பதிலும், மனம் போனபடி கார்யம் செய்வதிலும் த்வைதம் நம்மை பயமுறுத்திய மாதிரி, ஈச்வரனையோ பரமாத்ம தத்வத்தையோ நினைப்பதான த்யானத்திலும், தர்மமான கர்ம மார்க்கத்திலும் பயமுறுத்துவதில்லை. நாம் ஈச்வரனை நினைக்கிறோம், அல்லது ஈச்வரன் என்று ஒரு ரூபமாக இல்லாமல் பரமாத்ம தத்வம் என்று அவனுடைய ஸாரத்தை நினைக்கிறோமென்றால் அப்போது அந்த ஈச்வரன் அல்லது தத்வம் நினைப்பவனுக்கு வேறான த்விதீய வஸ்துவாகத்தான் இருக்கிறான், இருக்கிறது. ஆனாலும் மற்ற நினைப்புகளுக்கு லக்ஷ்யமாகும் இந்த்ரிய விஷயங்களைப் போலவோ, உலக வஸ்துக்களைப் போலவோ ஈச்வரன் அல்லது ஈச்வர தத்வம் நம்மைக் குழியில் தள்ளிவிடக்கூடுமென்ற பயத்துக்கு இடமேயில்லை.

ஆனாலும் மனஸ் இந்த உத்தம நினைப்பிலே ஒருமுகமாக ஆகி, அற்றே போய்விடுகிறவரை வேறே ஒருவிதத்தில் ஓரளவுக்கு பயம் இருக்கும்தான். ஈச்வரனுமே வெளியிலே வேறு வஸ்துவாயிருக்கிறவரையில், ‘என்ன மாயம் செய்வனோ? மஹா பெரிய பக்தர்களுக்கும் பிடிபடாமல் அவ்வப்போது ஓடிப்போய் மறைந்துகொண்டு கதறக்கதற விட்டு வேடிக்கை பார்த்தவனாயிற்றே! ஏதோ இப்போது கொஞ்சம் மனஸுக்குப் பிடிபட்ட மாதிரி இருந்தாலும் எப்போது நழுவி ஓடுவானோ? இந்தப் பாழும் மனஸும் என்னென்ன குப்பைத் தொட்டிகளுக்கு ஓடுமா?’ என்கிற பயம் இருக்கத்தான் செய்யும். எந்தவிதமான பயமானாலும் பயம் பயம்தானே? ஆதலினால், மனஸ் உள்ள த்வைத நிலையில் எத்தனை உச்சிக்குப் போனாலும் அது பரிபூர்ண அபய நிலையாய் இருக்க முடியாது. ஆனாலும் மனஸை இஷ்டப்படி விடும்போது அது ரொம்பவும் பயத்துக்கு ஹேதுவாக இருக்கிறாற்போல இல்லாமல், பக்தி மார்க்கத்தில் போகும்போது பயம் என்பதற்கு ரொம்பவும் குறைவாகவே இடம் ஏற்படுகிறது.

தர்ம கர்மாவும் இப்படித்தான். கட்டை அவிழ்க்க வேண்டிய அதுவே கட்டைப் போட்டுவிடப் போகிறதே என்றுகூடச் சில ஸமயங்களில் பயப்படவேண்டியதாகிறது. கர்மா என்று வரும்போது, அது எத்தனை ஸத்கர்மாவாக இருந்தாலுங்கூட, எத்தனை வெளி வஸ்துக்களை, மநுஷ்யர்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது? அவற்றை, அவர்களை deal பண்ணுவதில் கோபம், எரிச்சல், ஏமாற்றம் (ஏமாறுவது, ஏமாற்றுவது இரண்டும்தான்) – எத்தனையோ ஏற்பட இடமிருக்கிறது. அப்போது, கட்டு தளருமா என்று இருக்கிறது. ஆனாலும் பலனை எதிர்பார்ப்பதில்லை என்பதில் தீவ்ரமாயிருந்துவிட்டால், “நாம் ஸின்ஸியராக நம்மால் முடிந்த மட்டும் ப்ரயாஸை பண்ணுகிறோம். அப்படியும் இந்த வெளி வஸ்தக்கள் ஸரியாயில்லையா? ஏதோ சொத்தை சொள்ளைதான் கிடைக்கிறதா? மநுஷ்யர்கள் ஸாதகமாக இல்லாமல் குந்தகம் பண்ணுகிறார்களா? எல்லாம் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். இருப்பதைக் கொண்டு நம்மால் என்ன பண்ணமுடியுமோ பண்ணலாம்” என்பதாகக் கோபம் முதலான தப்புணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமலிருக்கலாம்.

எத்தனை சொன்னாலும், த்வைதத்தைச் சேர்ந்ததேயான கர்மாவிலும் பக்தியிலும் பரிபூர்ண அபயநிலை கைகூடாது. ஆனாலும் க்ஷணத்துக்கு க்ஷணம் பயத்துக்கு இடம் கொடுப்பதாக இருக்கிற ஸம்ஸாரத்திலிருந்து அபய பதமான அத்வைதத்துக்குப் போகவேண்டுமென்றால் அதற்குக் கர்மாவும் பக்தியும்தான் ஆரம்ப ஸாதனங்கள். ‘எப்போதும் பயம்’ என்கிற நம்முடைய நிகழ்கால நிலை, இவற்றிலே “எப்போதாவது பயம்” என்று ஆகிறது. அப்புறம் “ஒரு போதும் பயமில்லை” என்கிற நிலை.

அந்த நிலை வர ஆரம்பத்தில் உதவி செய்வது ஸ்வதர்ம கர்மாநுஷ்டானந்தான். அதனால்தான், கீதையிலே பகவான், “ஸ்வதர்மத்தைப் பண்ணி அதிலேயே செத்தாலும் அதுவே ச்ரேயஸ். (ச்ரேயஸ், ப்ரேயஸ் என்று இரண்டு சொன்னேனே, நினைவிருக்கிறதோல்லியோ?) பிறன் தர்மத்தை எடுத்துக் கொண்டாயோ அது பயத்தைத்தான் கொண்டுவிடும்” என்பதாக ‘பயம்’ என்ற வார்த்தையைப் போட்டார். பயம் என்றால் ஸம்ஸார பயம்தான்.

ஸ்வதர்மே நிதநம் ச்ரேய: பரதர்மோ பயாவஹ:

என்றார். ‘நிதனம்’ என்றால் சாவு. தன் தர்மத்தையே பண்ணிக் கொண்டு செத்தாலும் அதுவே ச்ரேயஸ்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஸத்கர்மா பலிக்காததேன்?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  உலக நாடகமும் ப்ரளயங்களும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it