ஸத்கர்மா பலிக்காததேன்? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘அப்படியானால் சாஸ்த்ரம் பொய்யா? லோகக்ஷேமத்துக்காக என்று அது விதித்த ஸ்வதர்ம கர்மாக்களால் எப்படி அந்த பயன் ஏற்படாமல் போகலாம்?’ என்று கேட்கலாம்.

அப்படி அர்த்தமில்லை. தனி மநுஷ்யன் பண்ணுகிற தப்புக்களுக்கு அவன் அநுபவித்துக் கஷ்டப்படத்தான் வேண்டும் என்று இருக்கிறமாதிரியே ஸமூஹம் பூராவும் தப்பு வழியில் போகிறபோது அதுவும் க்ஷேமத்தை அடையாமல் கஷ்டத்தைத்தான் அடையவேண்டுமென்று ஒவ்வொரு ‘பீரியட்’களில் ஏற்படுவதாக வைத்துக்கொள்ளலாம். அம்மாதிரி ஸமயங்களில் நாம் அதன் நல்லதற்காகப் பண்ணுவது பலிக்காத மாதிரி ஆகிறது. ‘மாதிரி’தான்! பலிக்கவேயில்லை என்று சொல்லமுடியாது. க்ஷேமாபிவ்ருத்தி நம் கண்ணுக்கு முன்னே தெரியாதபோதகூட ஜனஸமூஹத்தின் கூட்டுப் பாபம் நாம் செய்கிற ஸத்கர்மாக்களால் குறையத்தான் செய்யும். ஸொந்த வாழ்க்கை போலவே ஜனஸமூஹத்தின் வாழ்க்கையிலும், ஏற்கெனவே பண்ணினதற்கு அநுபவித்தாகணும்; அதைப் புதிசாகப் பண்ணுவதால் ஒன்று குறைத்துக்கொள்ளலாம், அல்லது பெருக்கிக்கொள்ளலாம் என்று இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் ‘சாஸ்த்ரம் பொய்யா? ஏன் பலன் கிடைக்கவில்லை?’ என்ற கேள்வி வராது.

நாம் செய்த பழைய பாபம் என்ன, ஜன ஸமூஹம் முழுதும் சேர்ந்து பண்ணின பூர்வ பாபம் என்ன, தற்போது நாம் சாஸ்த்ரப்படி பண்ணும் ஸத்கார்யங்களுக்குப் புண்ய ‘வால்யூ’ என்ன, இது பழைய மூட்டையின் பாரத்தை எவ்வளவு குறைக்கிறது என்பதெல்லாம் எதுவும் தெரியாத படியே ஈச்வரன் நம்மை வைத்திருக்கிறான். ஆனபடியால், பலன் என்று எதையோ எதிர்ப்பார்த்துக்கொண்டு, அது கிடைக்கவில்லையே என்பதில் ஆதங்கப்படாமல் நாம் பாட்டுக்கு, “இந்தக் கணக்கெல்லாம் ரஹஸ்யமாகப் பார்த்து எவன் தீர்த்துக் கொண்டிருக்கிறானோ, அவன் தீர்க்கிறபோது தீர்க்கட்டும். நாம் ஒன்றும் கேள்விகேட்காமல், ஒன்றையும் எதிர்ப் பார்க்காமல் நமக்கான கார்யத்தைச் செய்துகொண்டு போவோம்” என்று செய்து கொண்டேயிருக்கவேண்டும். இப்படிப் பலனை முக்யமாக நினைத்துச் செய்யாமலிருக்கும்போதுதான் முழுக்க முழுக்க சாஸ்த்ரம் சொல்லும் தர்ம வழியிலேயே போகமுடியும். பலனைப் பார்க்க ஆரம்பித்துவிட்டோமானால், ‘இப்படி தர்மமாகப் போய் பலன் அடையமுடியவில்லையா? ஸரி, அப்படியானால் வேறு குறுக்கு வழி, தப்புவழி, அதர்ம வழியிலே போய்தான் அடையப் பார்ப்போமே’ என்று தோன்றும். தர்ம வழியிலேயே செல்வதற்கு நிஷ்காம்ய கர்மம் எனும் disinterested action தான் உதவும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கர்மயோகமும் பற்றின்மையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பய வாய்ப்புக் குறைதல்
Next