Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கர்மயோகமும் பற்றின்மையும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இம்மாதிரி சித்த சுத்திக்கு உதவி செய்வதால்தான் ஸ்வய லாபம், பற்று இல்லாமல் கார்யம் பண்ணுவதற்கு ‘யோகம்’ என்று பெரிய பெயர் கொடுத்து, ‘கர்ம யோகம், என்பது. மனஸின் இஷ்டப்படி போய்ச் செய்கிறதெல்லாம் ஜன்ம ஜன்மாவாக நம்மைப் பழிவாங்குவதற்கென்று சேர்ந்து விடுகிறது. ஏதாவது கஷ்டம் ஏற்பட்டால், பிடிக்காதது ஒன்று நேரிட்டால் “கர்மா” என்று தலையில் அடித்துக்கொள்வது இதைக் குறிப்பிட்டுத்தான். மனஸை சுத்தப்படுத்தி ஆத்மாவிடம் கரைவதற்கு முதல்படி போட்டுக் கொடுப்பது எதுவென்றால், அதுவும் கர்மாதான். ‘Path of Karma’ என்று இப்போது நிறையப் பேர் லெக்சர் செய்கிறதும், இங்க்லாண்டிலும் அமெரிக்காவிலுமுள்ள பப்ளிஷர்களை கொண்டு புஸ்தகம் போடுவதம் இதைக்குறித்துத்தான். கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் என்ற மூன்று மோக்ஷ ஸாதனங்களில் ஒன்றாக (நேர் ஸாதனமா, உபஸாதனமா என்ற விவாதம் இங்கே வேண்டாம்) இருப்பது இந்த Path of Action. இது நம் இஷ்டப்படி, மனம் போனபடி கார்யம் செய்கிறதல்ல. இஷ்டமோ, இஷ்டமில்லையோ, சாஸ்த்ரம் சொல்லிவிட்டது என்பதால் செய்தேயாக வேண்டிய கர்மாக்களை இங்கே செய்கிறோம். மனஸின் பற்று, பாசங்களுக்கு இங்கே இடமில்லை. இது ஸொந்த லாபம், ஜயம் கிடைக்குமா என்று பலனைப் பார்த்துச் செய்கிற கார்யமில்லை. ‘Disinterested Action’ என்கிறார்கள். ‘Uninterested’ இல்லை-அப்படிச்சொன்னால் அக்கறையில்லாமல் கார்யம் பண்ணுவது என்று அர்த்தமாகிவிடும். ‘Disinterested’ என்றால் ஸ்வய உணர்ச்சிகளாலே, தன்னுடைய ஸொந்த விருப்பு வெறுப்புக்களாலே பாதிக்கப்படாமல்' என்று அர்த்தம். `தன்னுடைய ஸொந்த லாபா லாபங்களைக் கருதாமல்’ என்று அர்த்தம். `நிஷ்காம்யம்’ என்பது இதைத்தான்.

இதிலேயும் ஒரு விருப்பு இருக்கத்தான் செய்கிறது! ‘ஆத்ம காமம்’ என்று உபநிஷத்தே சொல்லுகிறபடி தன் நிஜ ஸ்வரூபமான ஆத்மாவை அடைய வேண்டுமென்ற விருப்பம்1. உடனேயே அந்த நிலையை ‘அகாமம்’ என்றும் உபநிபஷத் சொல்கிறது. அதாவது ஆத்மாவில் ஐக்யப்பட வேண்டுமென்ற ஆசை ஆசையேயில்லாத அகாம நிலை என்கிறது. மனஸ் தன் லாபத்துக்காக ஆசைப்படுவதுதான் தப்பு. ஏனென்றால் இது பெறக்கூடிய லாபமெல்லாம் இந்த்ரியச் சிற்றின்பங்கள்தான். இங்கேயோ ஆத்மாவாவதற்கு அது ஆசைப்படும்போது தன் லாபத்துக்காக இல்லாமல், தான் அப்படியே நஷ்டப்பட்டுப் போவதற்கு ஆசைப்பபடுகிறது; தான் கர்ப்பூரம் எரிந்து போகிறாற்போலச் சுவடேயில்லாமல் அழிந்துபோய், ஆத்மாவை மாத்திரம் ப்ரகாசிக்க விடவேண்டுமென்று விரும்புகிறது. இந்த விருப்பம் தப்பில்லைதான். இது இருந்தால்தான் நாம் ஸம்ஸார வாழ்க்கையை விட்டு ஸத்ய தத்வத்தின் பக்கமே திரும்புவோம்.

ஸொந்த லாபத்தைக் கருதாத இதில்தான் மஹா பெரிய லாபமிருக்கிறது. ‘யம் லப்த்வா ச (அ)பரம் லாபம் மந்யதே ந (அ)திகம் தத:‘, அதாவது, ‘எதை அடைந்தபின் அதைவிடப் பெரிய லாபமாக வேறெதையும் மதிக்க முடியாதோ அப்படிப்பட்ட லாபம்’ என்று பகவான் சொல்கிற2 ஆத்ம லாபந்தான். முன்னே சொன்னாற்போல் மனஸை அறவே நஷ்டப்படுத்திக்கொண்டு பெறுகிற லாபமாக இது இருப்பதால் இது போற்றுதற்குரியதே. மற்ற லாப எண்ணத்தோடு இதைச் சேர்த்துவிடக் கூடாது.

மனஸுக்கு இஷ்டமாக, ஸந்தோஷமாக இருக்கிறது என்பதற்காக இல்லாமல், மனஸை சுத்திசெய்து ஆத்மாவில் சேர்ப்பிப்பதற்கு உதவுகிறது என்றே சாஸ்த்ரீய விதிமுறைகளின்படி கார்யங்களைச் செய்வதுதான் கர்ம மார்க்கம், அல்லது கர்ம யோகம் என்று சொல்லப்படுவது. ‘கர்மா’ என்று தலையில் அடித்துக்கொள்கிறதன் ‘எஃபெக்ட்’டைத் தணித்து அது போடுகிற பந்தத்தைத் தளர்த்திவிடுவதே கர்மயோகம் சொல்லும் ஸ்வதர்ம கர்மாநுஷ்டானம்; அதாவது அவனவனும் தனக்கு சாஸ்த்ரம் விதித்திருக்கிற கடமைகளைக் கொஞ்சங்கூட வழுவாமல் பின்பற்றுவது.

கர்மா செய்வது எப்படி மனஸையும் நல்லதாகவோ கெட்டதாகவோ பாதிக்கிறது என்று பார்த்தோம். கர்ம பந்தம் என்று சொல்வதிலும் இப்படியே நம்முடைய மனஸின் ஜன்மாந்தர எண்ணங்கள், போக்குகள், அநுபவ நெடிகள் (இவற்றை ‘வாஸனை’ என்றே சொல்லியிருக்கும்) எல்லாம் கலந்துதானிருக்கின்றன. நாம் செய்யும் நல்ல, கெட்ட கார்யங்களுக்கான பலன்கள் ஸ்டோராகின்றன. இப்படிச் சேர்ந்த கர்மாவை அநுபவிக்கவே ஜன்மாக்கள் ஏற்படுகின்றன என்று சொல்லும்போது, இப்படிச் சேரும் கர்மா என்பது கையை, காலை ஆட்டிச்செய்வது மட்டுமில்லை. எந்தெந்த மனோபாவத்துடன் இவற்றைச் செய்தோமோ அதுவும்தான் ஸ்டோராகிறது. நம்முடைய நல்ல, கெட்ட குணங்கள், எண்ணங்கள் ஒவ்வொன்றுக்குமான பலனை நாம் ஜன்மாக்கள் எடுத்து அநுபவிக்கத்தான் வேண்டும். இந்த ஜன்மாவில் சில வஸ்துக்களில் வைக்கும் தீவிரமான ஆசை, வேறு சிலவற்றில் வைக்கும் தீவிரமான த்வேஷம் எல்லாமும் ஸ்டோராகின்றன. அடுத்த ஜன்மாவில் இவை மறுபடி நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. வாஸனை, பூர்வ வாஸனை ஜன்மாந்தர வாஸனை என்றெல்லாம் சொல்வது இதுதான். பெருங்காயம், பூண்டு முதலானவற்றின் நெடி லேசில் போகாதது போல இவை உடம்பு போனபிற்பாடும் ஸூக்ஷ்ம சரீரத்தைப் பிடித்துக்கொண்டு, அப்புறம் மறுபடி ஸ்தூலமாகப் பிறக்கும்போது மனஸுக்குள்ளிருந்து தன் நெடியை வீசவிடுவதால் வாஸனை என்று பெயர். விஷய வாஸனை என்றும் சொல்வார்கள். இந்த்ரிய நுகர்ச்சிகளுக்கு விஷயமாக இருப்பவற்றுக்குத்தான் குறிப்பாக ‘விஷயம்’ என்று பெயர். புலன்களின் பல தினுஸான இன்பங்களைச் சுற்றியேதான் மனஸ் படர்ந்து, அதற்கான காரியங்களில் ஜீவனை ஏவுவதால் விஷய வாஸனைதான் கர்மா மூட்டையைப் பெரிசாக்குவது. ஏதோ ஒரு புலனின் இன்பத்தை அடையவேண்டும் என்ற பலனை எதிர் பார்க்காமல், நிஷ்காம்ய கர்மம் செய்யும்போது, அதாவது கர்மத்தையே யோகமாகச் செய்யும்போது, மூட்டை குறைகிறது. மூட்டை என்பதற்கு பதில் கட்டு என்று சொன்னால், அதன் இறுக்கம் தளர்கிறது. நிஜமான கர்ம யோகத்தில் தன்னுடைய புலனின்பப் பலனை மட்டுமின்றி, உத்தம நோக்கத்தில் உதித்த லோக க்ஷேமம் என்ற பலனைக்கூடக் கருதக்கூடாது.

இதைக் கொஞ்சம் புரியவைக்கப் பார்க்கிறேன்: ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்ளும்போதே லோக க்ஷேமத்தையும் உத்தேசித்ததாகத்தான் சாஸ்த்ரங்கள் தார்மிக கர்மாக்களை வகுத்துக் கொடுத்திருக்கின்றன. இதைப்பற்றி ஸந்தேஹமேயில்லை. தனக்காகப் பண்ணுவது போய் உலகுக்காகப் பண்ணுவது என்று இவன் ஆரம்பித்தால்தான் உலகங்கள், உயிர்கள் எல்லாவற்றுக்கும் மூலமான, தாயும் தந்தையுமாக உள்ள ஈச்வரனின் அருள் இவனுக்குக் கிட்டி விடுபடும் வழிக்கு இவன் போகமுடியும். ஆனாலும் ஒருவன் இப்படி ஸ்வதர்மாநுஷ்டானம் பண்ணும் போது, ‘நான் இப்படிப் பண்ணினதால் உலகத்துக்கு இந்த நல்லது ஏற்பட்டதா?’ என்று பலனை பார்த்துக் கணக்குப் போட்டுகொண்டே இருக்கப்படாது. லோக க்ஷேமத்துக் கென்றே சாஸ்திர கர்மாக்களைப் பண்ணினாலும், எந்த நன்மையான பலனை உத்தேசித்து அந்தக் கர்மாவை சாஸ்த்ரம் கொடுத்திருக்கிறதோ அது ஈடேறாமலும் போகலாம். உத்தம லக்ஷ்யங்களுக்காகப் பல பேர் உயிர்த்தியாகம் பண்ணியுங்கூட அவை நிறைவேறாமல் போவதையும் நாம் அவ்வப்போது பார்க்கிறோம். அதனால் சாஸ்த்ரம் லோகக்ஷேம பலனை உத்தேசித்து கர்மாவைச் சொன்னாலும் நாம் அந்த உத்தேசத்தையே எப்போது பார்த்தாலும் நினைத்துக் கணக்குப் போடாமல் செய்தால்தான், இம்மாதிரியான ஸந்தர்ப்பங்களில், “நல்லதைச் செய்து என்ன கண்டோம்? இது கலி, கெட்டதற்கே காலம். நல்லது இந்த லோகத்தில் எடுபடப் போவதில்லை. நாம் பாட்டுக்குச் சும்மாக் கிடப்போம்” என்கிற ஆயாஸம், மனக்கசப்பு, தோல்வி மனப்பான்மை முதலானவை ஏற்படாமலிருக்கும். ஆகையினால் இந்தப் பலனைக்கூட எதிர்ப்பார்க்காமல் வெற்றியோ, தோல்வியோ நாம் பாட்டுக்கு, “சாஸ்த்ரம் சொல்லிற்றா? செய்வோம்” என்று, அதன்படி செய்துகொண்டே போக வேண்டும்.


1 ப்ருஹதாரண்யகம் 4.3.21
2 கீதை 6.22

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கார்யமும் த்யானமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸத்கர்மா பலிக்காததேன்?
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it