ஆத்ம உணர்வும், மனோ வாழ்க்கையும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்படியாக வேறே ஒரு நிஜ நான் இருக்கிறது. அது எப்படி ஞானமயமாய், ஆனந்தப் பேருணர்வாயிருக்கிறது என்று நமக்குத் தெரியாதபடி மாயையானது மனஸின் திரையைப் போட்டு, மனஸின் அநுபவங்களை மட்டுமே ஜீவன் தனதாக நினைத்து, பெற்று, அநுபவிக்கும்படியாக வைத்திருக்கிறது.

நிஜ நாமாக இருந்து அதன் உணர்வை அறியவேண்டும், அதுவாகவே ஆகவேண்டும் என்று நாம் ஸதா ஸர்வகாலமும் விரும்பி, தவித்து, பாடுபட்டு ஸாதனை, ஆத்ம விசாரம் பண்ணிக்கொண்டு, மாயைத் திரையைப் போட்டிருக்கும். பகவானிடம் அதை விலக்கும்படி ப்ரார்த்தனை செய்துகொண்டேயிருந்தால் நிஜமாகவே மனஸ் உருகிக் கரைந்து போய்விடும்; எது நம்முடைய நிஜஸ்வரூபமோ அந்த ஆத்மா ப்ராகாசிக்க ஆரம்பித்துவிடும். தூக்கத்தையும் மூர்ச்சையையும் போலில்லாமல், ‘மனஸ் போனதால் அறிய முடியவில்லை, உணர முடியவில்லை’ என்று இல்லாமல் அப்போதுதான் இதற்கு மேம்பட்டதாகத் தன்னைத்தானே அறியும் அறிவாகவும், தன்னைத்தானே உணரும் ஆனந்த ஸ்வாநுபூதியாகவும் இருக்கலாம். தன்னை உணர்ந்து அறிவதே அங்கே ஆனந்தம்; தானே ஆனந்தம்!

இப்போது நாம் எதோடு நம்மையே ஐடின்டிஃபை பண்ணிக்கொண்டிருக்கிறோமோ (அதுவேதான் நாமாக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ) அந்த மனஸுக்குத் தன்னைத் தெரியவே தெரியாது. பிறவற்றைத்தான் தெரிந்து கொள்ளமுடியும் என்பதற்குக் ‘கான்வர்ஸா’க (எதிர்வெட்டாக), நம்முடைய நிஜ ஸ்வரூபமான ஆத்மாவாக உள்ளபோது தன்னை மட்டுந்தான் தெரியும்; பிற வஸ்து எதுவுமே தெரியாது.

தெரியாதது மட்டுமில்லை; ஆத்மாவுக்கு வேறான பிற வஸ்து என்று ஒன்று இல்லவே இல்லை என்பது ஞானவிசாரம் செய்தால் தெரியும். ஆத்மாநுபவ நிலையில் வேறொரு வஸ்து தெரியவில்லை என்றால், அது ஒருவன் கண்ணை மூடிக்கொள்ளும்போது லோகம் வெளியில் இருந்து கொண்டிருந்தாலும் அவனுக்கு மட்டும் தெரியாமற் போவதுபோல மட்டுமில்லை. ஸத்யமாகவே ஆத்மாவுக்கு வேறாக எதுவும் இல்லை. அதிலிருந்தே மாயையால் ஜீவமனஸ், அதற்கு செயற் களமாயுள்ள ஜகத் முதலியவை கற்பிக்கப்பட்டிருக்கின்றன1.

கற்பிக்கப்பட்டவை என்பதால் அவை அடிப்படையில் தாமே ஸத்யமானவை அல்ல என்றாகிவிடுகிறது. நம்மிடமிருந்து ஒரு மாயத்தோற்றம் உண்டானால் அந்தத் தோற்றம் நாமில்லைதானே? அதாவது நம்மையே வேறே யாரோ என்று எண்ணிக் கொள்ளும்படியாக நம்மிடம் ஒரு வேஷம் கற்பிக்கப்பட்டால் அந்த வேஷம் நிஜமான நாமல்ல. அல்லவா? ஆனாலும் நாம் இல்லாமல் அந்த வேஷம் உண்டாக முடியாது. அதைக் கல்பிக்க ஒரு அடிப்படை இருந்தால்தான் இதன் மேல் அதை ஏற்றிக்காட்டமுடியும். ஆசார்யாள் இதை “அத்யாஸம்” என்று சொல்வார். Super – imposition என்கிறார்கள். Substratum என்கிற அடிப்படை “அதிஷ்டானம்.” அதன்மேலே அத்யாஸமாக இன்னொன்று ஏற்றிக்காட்டப்படுகிறது. வேஷம் போட ஒரு ஆஸாமி இல்லாவிட்டால் வேஷமேயில்லை என்கிறதுபோல அதிஷ்டான ஆத்மா இல்லாமல் அதன் மேல் அத்யாஸமாக ஆரோபணம் செய்யப்படுகிற (ஏற்றுவிக்கப்படுகிற, தோற்றுவிக்கப்படுகிற) மாய மனஸும், மாயமான ஜகத்தும் இல்லை. ஆனால், ஆத்மா அவற்றில் இல்லவே இல்லை. வேஷத்துக்குள் நிஜ ஆசாமி கொஞ்சமாவது இருக்கிறானா? வேஷத்தைக் கலைத்தபின் அந்தக் கதாபாத்ரத்துக்கு இருந்த பேர், அதன் கதை எதுவுமே துளிக்கூட இவனுடையதாக இல்லாமல் போய்த்தானே விடுகின்றன? அப்போதும் இவன்பாட்டுக்குச் கொஞ்சங் கூட பாதிக்கப்படாமல்தான் இருந்தபடியேதானே இருக்கிறான்? வேஷத்திலேயே நிஜ ஆஸாமி கொஞ்சமாவது இருந்தால், வேஷம் போன பிற்பாடு அந்தக் கொஞ்சம் போய் இவன் மூளியாகி இருக்கவேண்டுமே! அப்படிக் காணோமே!

இதே மாதிரித்தான் ஆத்மாவில் மாயா கல்பிதமாக, அதாவது வேஷமாக ஏற்பட்ட ஜீவ ஜகத்துக்கள் ஆத்மா இன்றி இருக்கவேமுடியாது என்றாலும் ஆத்மா இவற்றிலே இல்லை. இதைத்தான் பகவான்.

மத் – ஸ்தாநி ஸர்வ பூதாநி ந ச (அ)ஹம் தேஷு (அ)வஸ்தித:

அதாவது, “ஸர்வ பூதங்களும் என்னிடமே இருப்பு உடையன; ஆனால் நான் அவற்றில் இல்லை” என்கிறார்2.

“நான் அவற்றில் இல்லை” என்றால் ஆத்மா ஜீவஜகத்துக்களில் இல்லை என்று அர்த்தம். ‘ஆத்மா ஜீவனில் இல்லை என்றால் என்ன அர்த்தம்?’ என்றால், ஜீவனின் நிஜ ஸ்வரூபமான ஆத்மா மாயா கல்பிதத்தால் அந்த ஆத்மாவை அறியாத தனியான ஜீவத்வம் என்பதோடு, இன்டிவிஜுவாலிடியோடு இருக்கும் ஸ்திதி நிஜம் இல்லை என்று அர்த்தம். கல்பனை என்றாலே நிஜமில்லை என்றுதானே அர்த்தம்? ஸரி, இந்த ஜீவத்வம் (இன்டிவிஜுவாலிடி) என்பதை (ஆத்மாவை அறியாத) நாம் என்னவாக நினைத்து ‘ஐடின்டிஃபை’ செய்துகொண்டிருக்கிறோம்? மனஸாகத்தான். இப்போது என்னவோ நாம் தோண்டித் துருவிப் பார்த்து மனஸுக்கு மேலே உயிர் தத்வமாக ஒன்று இருக்கிறது என்று கண்டுபிடித்தாலும், இது நம்முடைய வாழ்க்கை நடைமுறையில் உண்மையாக நிலைக்கவில்லை. நாம் என்பது நம் மனஸ்தான் என்ற எண்ணத்திலேயேதான் நம்முடைய வாழ்க்கை நடக்கிறது.

வாழ்க்கை என்று எதைச் சொல்கிறோம்? சாப்பிடுவது, கல்யாணம் பண்ணிக்கொள்வது, குழந்தை குட்டி பெறுவது, படிப்பது, ஸம்பாதிப்பது, ஊர் ஊராய் ஓடுவது, பாட்டு கேட்பது, ஸினிமா பார்ப்பது, நாவல் படிப்பது என்று இப்படி அநேக கார்யங்களைப் பண்ணுவதைத்தான் வாழ்க்கை என்றும் ஜீவனம் என்றும் சொல்கிறோம். இந்தக் கார்யங்களில் நம்மைச் செலுத்துவதாக அநேக எண்ணங்கள் இருக்கின்றன. இந்த எண்ணங்களை யெல்லாம் பிறப்பிப்பது மனஸ். கார்யங்களில் நம் இந்த்ரியங்களை ஏவுவதும் அதுதான். ஆகையால் தனி ஜீவன் என்கிறவனின் ஸாரமாகத் தோன்றுகிற ஜீவனம் என்பதே மனஸை ஸென்டராக வைத்து நடத்தப்படுவதுதான். எண்ணத்தினாலும் கார்யத்தினாலும் உருவாகிற ஜீவனம் என்பது எண்ணமும் கார்யமுமில்லாத ஆத்மாவைக் குறித்ததாக இருக்க முடியாதுதானே? ஆக, என்ன முடிவுக்கு வருகிறோமென்றால், ஃபிலாஸபி முடிவில் நாம் எந்த முடிவுக்கு வந்தாலும் ஸரி, லோகத்திலே ஜீவனம், ஜீவத்வம் என்றால் அவை மனஸை வைத்துத்தான்!ஆகையால் “நான் ஜீவ ஜகத்தில் இல்லை” என்று பகவான் அடித்துச் சொல்கிறபடி ஆத்மா ஜீவ பாவத்தில் இல்லை என்றால், அது மனஸிலே இல்லை என்றே அர்த்தம்.


1 இவ்விஷயம் இவ்வுரையின் பிற்பிரிவுகள் சிலவற்றில் விவரிக்கபெரும்.
2கீதை 9.4 ‘தெய்வத்தின் குரல்’ முதற்பகுதியில் ‘கண்ணன் சொன்னான்; கம்பனும் சொன்னான்’ என்ற விரையும் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மனக் கலப்பில்லாத உயிர் உணர்வு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆத்மாவுக்கு த்விதீயமான மனம்
Next