தகுதித் தடைகள் சில : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அந்தக் காலத்தில் ரொம்பவும் நீசத்தனமான ஒரு கார்யத்தைப் பண்ணினவனைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதைமேல் ஏற்றி ஊர்வலம் விடுவது வழக்கம். தாங்கமுடியாத அவமானத்தில் தப்பு நன்றாக மனஸில்பட்டு மறுபடி அம்மாதிரி அவன் பண்ணாமலிருப்பதற்குத்தான் இப்படிச் செய்தார்கள்.

குற்றவாளிகளையும் கௌரவமாக நடத்தவேண்டும், ஜெயிலை ‘ட்ராவலர்ஸ் பங்களா’ மாதிரி ஸெளக்யமாக்கித் தரவேண்டும் என்று ஆரம்பித்தால் இந்த அன் -எம்ப்ளாய்மென்ட் யுகத்தில் எவருக்கும் அங்கேதான் போய் ஸுகவாஸம் பண்ணலாமே என்று தூண்டிவிடுகிறமாதிரி ஆகிறது! மநுஷ்யாபிமானம் என்பது தப்புப் பண்ணுபவன் நல்ல மநுஷ்யனாக முன்னேறுவதைக் கெடுப்பதற்கே தூண்டு கோலாகிவிடக்கூடாது; எதிலும் பாத்ரமறிந்து செய்ய வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

பழைய நாளில் கழுதைமேல் ஏறினவனுக்கும், ஃபோர்ஜரி பண்ணினவனுக்கும் ஸபையில் இடமில்லை. இதை, “கழுதையேறினாரையும் கூடலேகை செய்தானையும் குடவோலை எழுதிப் புக இடம் பெறாததாகவும்” என்று சாஸனத்தில் சொல்லியிருக்கிறது. “கூடலேகை” என்றால் பொய்க் கையெழுத்து. “லேகை” என்றால் எழுதப்படுவது. “கூடம்” என்றால் பொய், மோசடி; fraud என்பது. கூடலேகை என்பது ஃபோர்ஜரி.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சாஸ்த்ரமும் சட்டமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வேட்பாளர் இல்லாத-வாக்காளர் இல்லாத தேர்தல்
Next