வாழ்க்கை முறையும் வயதும் தடையாகா : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

“இத்தனை நாள் ஏதாவதொரு தினுஸிலேயே வாழ்க்கை நடத்திவிட்டோம். இப்போது திடீரென்று ஏதாவது சாஸ்திராப்யாஸம் செய்வது, கலையைக் கற்பது என்றால் எப்படி முடியும்? அதற்கு ஒரு வயஸ் இல்லையா? ஐந்தில் வளையாதது (ஐம்பதில் வளையாது) என்று பழமொழி இல்லையா?” என்று கேட்கலாம். அததற்கான வயஸில்தான் அததுவும் ஸுலபமாக வரும் என்பதும், வித்யாப்யாஸத்துக்கு ஏற்ற ஒரு பருவம் உண்டு என்பதும் வாஸ்தவந்தான். ஆனாலும், ‘இந்த தேசத்திலே பிறந்துவிட்டு இதன் ஏராளமான சாஸ்திரங்களில் ஒன்றுகூடத் தெரியாமலிருக்கிறோமே!’ என்ற feeling இருந்தால் எந்த வயஸிலும் வித்யை வரும். ஆர்வமே இளவயஸின் துடிப்பையும், க்ராஹ்ய சக்தியையும் (கல்வியைக் க்ரஹித்துக் கொள்ளும் சக்தியையும்) உண்டாக்கிவிடும்.

இதுவரை ஏதாவதொரு வாழ்க்கை முறையில் போய் விட்டோமென்றால் அது ந்யாயமாக நாம் போயிருக்கப்படாத “ஏதாவதொரு” முறைதான். ஆகையால், “எந்த ஒரு முறை”யில்தான் நாம் போயிருக்க வேண்டுமோ அதிலே இனியாவது போவது என்ற உறுதியும் ஆர்வமும் இருந்தால் ஈஸியாக அப்படி மாற்றிக்கொள்ளலாம்.

ஐம்பதில் வளையுமா என்று கேட்பதையே ‘சாலஞ்ஜா’க எடுத்துக்கொண்டு, ‘ஓ வளையும்’ என்று காட்ட முயல வேண்டும். உரிய வயஸிலே ஒன்றைக் கோட்டை விட்டவர்கள் இப்படி ‘சாலன்ஜ்’ பண்ணி ஜயித்துக் காட்டவேதான் அந்தப் பழமொழி ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டும். ப்ரத்யக்ஷத்திலேயே இப்படிப் பலர் இருந்திருக்கிறார்கள்.

த்ருஷ்டாந்தமாக ஸமீப காலத்தில் ப்ரொஃபஸர் ஸுந்தரராமையர் என்பவர் இருந்தார். (அவர்) ஐம்பது வயஸுக்கு மேல்தான் சாஸ்திரம் படித்தார். அப்புறம் (கும்பகோணத்தில் ஸ்ரீமட ஸம்பந்தமுள்ளதாக உள்ள) அத்வைத ஸபை மாதிரியான பெரிய வித்வத் ஸதஸ்களில் கூட, இவற்றிலேயே பழம் தின்று கொட்டை போட்ட பெரிய பண்டிதர்களுக்கும் புரிபடாத தத்வ நுட்பங்களை அவர்களே ஆச்சர்யப்படும்படியாக எடுத்து விளக்கியிருக்கிறார். ஆகவே புதிய இளைஞர் தலைமுறையில் சிஷ்ய பரம்பரை உருவாக்குவதோடு, வயதானவர்களும் இது முதல் நம் சாஸ்திரங்களிலோ கலைகளிலோ, ஏதாவது ஒன்று அப்யாஸம் செய்து அதன் வழியாய் ப்ரஹ்ம வித்யைக்குப் போகும் பாக்யத்தைப் பெற முயலவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அனைவரும் வித்வானாயிருந்த காலம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அரசாங்கமல்ல மக்களும் சீடர்களுமே பொறுப்பு
Next