முரண்பாடு எதனால்? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அப்படியானால் கல்வி வேண்டாமா? ரொம்பப் பெரியவர்கள் கல்வி ரொம்ப அவசியம், ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்‘ என்று சொல்லியிருக்கிறார்களே? ஒளவை இன்னொன்றுகூடச் சொல்லியிருக்கிறாளே? –

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் – சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான், குறிப்பறிய
மாட்டா தவன்நன் மரம்.

என்பதாக எழுத்தறிவற்றவனை மரத்துக்கு ஸமானம் என்கிறாளே! பர்த்ருஹரியோ அவன் மிருகத்துக்கு ஸமானம் – “வித்யாவிஹீந: பசு:” – என்கிறாரே!

படித்தவர் லக்ஷணம் நாம் ப்ரத்யக்ஷமாகப் பார்ப்பது ஒரு விதமாயிருக்கிறது. நேர்மாறாக ரொம்பப் பெரியவர்களோ கல்வியை ஏகமாக ச்லாகிக்கிறார்கள். ஏன் இப்படி முரண்பாடாக இருக்கிறது?

ஆழ்ந்து அலசிப் பார்த்தால் முரண் எதுவும் இல்லை என்று தெரியும். அந்தப் பெரியவர்கள் சொன்ன கல்வி வேறாகவும், இன்று அமலாகிற கல்வி வேறாகவும் இருக்கின்றன. இதுதான் முரண்பாட்டுக்குக் காரணம். அவர்கள் சொன்னபடி கல்வி இருந்தால் குற்றம் வளராது, குறைந்து மறைந்தே போய்விடும்.

என்ன சொன்னார்கள்? அவர்கள் புத்தி வளர்ச்சி தருகிற கல்வியை மட்டும் சொல்லவில்லை. பக்தி வளர்ச்சி அளிப்பதாகவும் உள்ள கல்வியையே சொன்னார்கள்.

கற்றதனால் ஆயபயன் என்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழா (அர்) எனின்

என்று திருவள்ளுவர் சொன்னதுதான், அவர்கள் எல்லாருடைய அபிப்ராயமும்.

தெய்வ ஸம்பதமில்லாமல் அதாவது தெய்வத்திடம் பயப்படவேண்டும் என்று பண்ணாமல் படிப்பை மட்டும் கொடுப்பதால்தான் வீபரிதமாகப் போயிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is படிப்பும் குற்றமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வெள்ளையர் நாடுகளும் இஸ்லாமியர் நாடுகளும்
Next