Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

அன்னைக்கு உதவிய ஐங்கரன் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அம்பாளும் விக்நேச்வரரை உத்பவிக்கப்பண்ணி அவர் ஸஹாயத்திலே ஜயம் பெற்றாளென்று லலிதோபாக்யானத்தில் வருகிறது.

லலிதாம்பிகை பண்டாஸுரனோடு யுத்தம் செய்த போது சக்திஸேனை என்பதாக முழுக்கவும் தேவஸ்த்ரீகளையே கொண்ட படையோடு போனாள். போய்ப் படைவீடாக ஒரு அக்னிக்கோட்டை கட்டப்பண்ணி அதற்குள் ஸேனா ஸழூஹத்தோடுகூட முகாம் போட்டிருந்தாள். பண்டாஸுரனுக்கு மந்த்ரபலம் நிறைய உள்ள விசுக்ரன் என்ற ஒரு அஸிஸ்டன்ட் இருந்தான். அவன் என்ன பண்ணினானென்றால் விக்ன யந்த்ரம் என்ற ஒன்றைப் பண்ணி அதை அக்னிக் கோட்டைக்குள்ளேபோய் அம்பாளின் கூடாரத்தில் விழும் படியாக விசிறி எறிந்தான். அந்த யந்திரத்தின் தன்மை என்னவென்றால், இந்த நாளில் Psychological Warfare என்கிறார்களே, அப்படி அது எதிராளியை பௌதிகமாகத் தாக்காமல் அவர்களுடைய மனஸையே சத்ருபக்ஷமாக மாற்றிவிடும், இப்போது Propagandaவினால் (பிரசாரத்தினால்) கொஞ்சம் கொஞ்சமாக மனஸை மாற்றுகிற மாதிரியில்லாமல். மந்திரசக்தி வாய்ந்த யந்த்ரமாதலால் அது உடனேயே மன மாறுதலை உண்டாக்கிவிடும்.

விக்ன யந்த்ரம் வந்து விழுந்தவுடன் அதன் மயக்கும் சக்தியால் சக்திஸேனைகளின் புத்தியே மாறிவிட்டது. “எதற்காக அஸுரர்களை நாம் கொல்லணும்? இது ஜீவ ஹிம்ஸைதானே? அம்பாளுக்கு அவர்களிடம் விரோதமென்றால் நமக்கென்ன வந்தது? இன்னம் அடி அஸ்திவாரத்துக்கே போனால் எதற்காக இந்த அம்பாளுக்கு அடங்கி நாம் வேலைக்காரப் பிழைப்புப் பிழைக்கணும்? நம்மால்தான் அவளுக்கு பலம் என்பதால்தானே நம்மைச் சேர்த்துத் திரட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்? இத்தனை நாளாக நாம் என்னவோ புத்தியில்லாமல் அவள்தான் நமக்கெல்லாம் மேலே, அவளுக்கே நம்மை அடக்கி ஆள்கிற பலம் இருக்கிறது என்றெல்லாம் நினைத்துக்கொண்டு ஏவல் செய்து விட்டோம். இப்போதுதான் மயக்கம் தெளிந்திருக்கிறது. இனிமேலும் இப்படித் தப்புப் பண்ணக்கூடாது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டுமென்றால் ஆயுதங்களைப் போட்டு விட்டு அப்படியே ஸ்ட்ரைக் பண்ணிவிடவேண்டும். யஜமானி-பணியாளி என்கிற கதை இனிமேலே பலிக்காது. எல்லாரும் ஸமம்தான்” என்றெல்லாம் அந்த ஸேனைகள் ட்ரேட் யூணியனிஸம், கம்யூனிஸம் எல்லாம் பேச ஆரம்பித்து விட்டன!

“வேர்க்க விருவிருத்துக்கொண்டு, அடியும் குத்தும் பட்டுக் கொண்டு இனிமேலே இவளுக்காக யுத்தம் செய்ய வேண்டியதில்லை. நாம் பாட்டுக்கு நிர்விசாரமாகத் தூங்கலாம். அக்னிக் கோட்டைதான் இருக்கவே இருக்கிறது. அதைத் தாண்டி யாரும் வந்து நம் தூக்கத்தைக் கெடுக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டு ஸேனா ஸமூஹம் முழுக்கப்படுத்துக்கொண்டு ‘கொர் கொர்’ என்று குறட்டை விட ஆரம்பித்துவிட்டன.

புத்தியை முதலில் மாறாட்டமாகக் கலக்கிவிட்டு, அப்புறம் அது ஸ்தம்பித்துச் செயலிழந்து தூங்கும்படிச் செய்யும் சக்தி விக்ன யந்த்ரத்துக்கு இருந்தால் இப்படி நடந்தது.

ஜ்ரும்பணாஸ்த்ரம் என்று ஒன்று உண்டு. அதை போட்டுவிட்டால் அதற்கு ஆளாகிறவர்கள் கொட்டாவி கொட்டாவியாக விட்டுக்கொண்டு அசந்து விழுந்துவிடுவார்கள். ‘ஜ்ரும்பணம்’ என்றால் ‘கொட்டாவி விடுவது.’

நவீன கால ஆயுதங்களைவிட பயங்கரமான விசித்ரமான ஆயுதங்தளை மந்த்ர சக்தியாலேயே ஆதிகாலத்தில் செய்திருக்கிறார்களென்று புராணத்திலுள்ள விவரங்களைப் பார்த்தால் தெரியும். ப்ரஹ்மாஸ்த்ரம், நாரயணாஸ்த்ரம், பாசுபதாஸ்த்ரம் முதலியவற்றின் சக்தியைப் பற்றிப் படிக்கும்போது ஆடம் பாம்(ப்), ஹைட்ரஜன் பாம்(ப்) எல்லாம் ஒன்றுமேயில்லை என்று தோன்றும். இப்போது இந்த பாம்(ப்)களின் ரேடியேஷனால் கர்ப்பசேசேத மேற்படுகிறது என்கிறார்களென்றால், அந்தக் காலத்தில் அச்வத்தாமா போட்ட அபாண்டவாஸ்த்ரம் உத்தரையின் கர்ப்பத்திலிருந்த சிசுவைப் பாதித்திருக்கிறது! கிருஷ்ண பரமாத்மாதான் அதை ரக்ஷித்துக் கொடுத்தார்.

அம்பாள் தன்னுடைய படைகள் ஸ்ட்ரைக் பண்ணிவிட்டு ஆனாலும் நல்லவேளையாக sabotage (நாசவேலை) செய்யாமல், அமர்க்களமாய் டெமான்ட்ரேஷன்கூடச் செய்யாமல், அததுகளும் நன்றாகத் தூங்கிக்கொண்டு கிடப்பதைப் பார்த்தாள். ஞானஸ்வரூபிணியாக இருக்கப்பட்ட அவளுக்குத் தெரியாததா? இதெல்லாமும் அவள் லீலைதான்!

விக்நேச்வரரின் ப்ரபாவம் வெளிப்படவேண்டுமென்றுதான் அவளே இப்படி ஒரு விக்னத்தை விசுக்ரன் என்ற வ்யாஜத்தில் உண்டாக்கிக் கொண்டிருந்தாள்.

சிவ – சக்திகளாக எப்போதும் இருப்பவர்களில் சக்தியே பண்டாஸுரனை வதைப்பதற்காக இப்போது லலிதாம்பிகையாக ஞானாக்னி குண்டத்திலிருந்து தோன்றியிருந்தாள். கல்யாணமாகாத கன்னியாக இவள் யுத்தத்துக்குப் போகக் கூடாது என்பதனால் இவளை விவாஹம் செய்துகொள்வதற்காக சிவனும் காமேச்வரர் என்ற ரூபத்தில் வந்தார். கல்யாணம் ஆயிற்று. காமச்வர – காமேச்வரி என்று அந்த தம்பதியைச் சொல்வது வழக்கம். அந்த காமேச்வரிதான் நம்முடைய காமாக்ஷியாக இருப்பது. அவளுடைய ஸ்தானம்தான் காமகோடி பீடம்.

கல்யாணமானவுடன் பண்டாஸுர வதத்துக்காகப் புறப்பட்ட அம்பாள் ஈச்வரனைக் காமேச்வரனாக வரவழைத்தது மட்டும் போதாது, தன்னுடைய அருமைக் குழந்தை கணபதியையும் இந்த லலிதாம்பிகை ஆவிர்பாவத்தில் வரவழைத்து அவன் பெருமையை ப்ரகடனப்படுத்த வேண்டுமென்று நினைத்தாள். அதற்கு வாய்ப்பாகவே இப்போது சக்தி ஸேனை விக்ன யந்த்ரத்தால் தூங்கிக்கொண்டு கிடந்தது.

உடனே காமேச்வரன் மேல் தன் ப்ரேம கடாக்ஷத்தைச் செலுத்தி மந்தஸ்மிதம் (புன்னகை) செய்தாள் அம்பாள். அவர் முகத்திலும் மந்தஹாஸம் படர்ந்தது. இப்படி ஆதி தம்பதியின் பரஸ்பர அன்பில் உண்டான சிரிப்பின் காந்திஸமூஹம் ஒன்று சேர்ந்ததோ இல்லையோ, அதிலிருந்தே மஹா கணபதி உத்பவித்துவிட்டார்! ஆனந்த ஸ்வருபமாக, எப்போழுதும் ப்ரஸன்ன முகமாக, ஸுமுகராக இருக்கிற அவர் ரொம்பவும் பொருத்தமாக, ஸாக்ஷாத் அம்பாள் – ஈச்வரன் ஆகியவர்களின் முகத்திலிருந்து பெருகுகிர சிரிப்பு ஒன்று சேர்ந்ததிலிருநது உத்பவித்துவிட்டார்.

பிள்ளையாரின் பல ஆவிர்பாவங்களில் இது லலிதோபாக்யானத்தில் வருவது. லலிதோபாக்யானம் என்பது பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான ப்ரஹ்மாண்ட புராணத்தில் வருகிறது.

ஈச்வரனின் முகத்தைப் பார்த்துச் சிரித்தே அம்பாள் பிள்ளையாரை அவதரிக்கச் செய்ததை லலிதா ஸஹஸ்ர நாமத்தில் “காமேச்வர முகாலோக கல்பித ஸ்ரீ கணேச்வரா” என்று சொல்லியிருக்கிறதது.

எந்த தேவவதையானாலும் அதன் சக்தியெல்லாம் எவளொருத்தியின் அம்சலேசம்தானோ அப்பேர்ப்பட்ட பராசக்தி, தானே விக்ன யந்திரத்தைச் சக்தியற்றதாகச் செய்திருக்கலாமாயினும், விக்ன நிவாரணத்துக்காகவே ஒரு விக்நேச்வரனை ஏற்படுத்தியிருக்கும்போது அவர் ஸஹாயத்தினால்தான் இதைச் செய்ததாக இருக்கவேண்டுமென்பதற்காக இப்படி லீலை செய்தாள்.

அவள் இப்படி ஒரு சட்டத்துக்கு அடங்கியிருந்ததற்கேற்ப, அவளுடைய கடாக்ஷத்திலிருந்து உண்டான விக்நேச்வரரும், ‘என் ஸஹாயத்தைத்தானே ஆனானப்பட்ட பராசக்தியும் நாடவேண்டியிருக்கிறது?’ என்று கர்வப்படாமல் அவளை நமஸ்காரம் பண்ணினார். பணிவோடு அவளோடு ஆசிர்வாதத்தை வாங்கிக்கொண்டே விக்ன யந்த்ரத்தை அழிப்பதற்காகப் புறப்பட்டார்.

அக்னிக் கோட்டையின் ஒரு மூலையில் யந்த்ரம் புதைந்து கிடந்தது. பிள்ளையார் அதைக் கண்டுபிடித்து தந்தத்தால், குத்தித் தவிடு பொடியாக்கினார்.

உடனே தேவி கணங்கள் தூக்கம் கலைந்து எழுந்தன. அவற்றுக்கு ஏற்பட்டிருந்த மனோ பேதமும் மாறி, அம்பிகையிடம் பழையபடி பக்தி விச்வாஸம் கொண்டன. முன்னைவிட உத்ஸாஹமாக யுத்தம் செய்தன. முடிவில் பண்டாஸுரன் தோற்று போனான்.


Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஸமீபகால சம்பவத்தில் புராண நிரூபணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  முருகனுக்குதவிய முன்னவன்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it