முருகனின் தமிழ்நாட்டு அவதாரம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

இந்தக் காலத்தவர்களுக்குச் சில புதுக் கொள்கைகளில் ரொம்பவும் அபிமானம் இருக்கிறது. அதற்காக, பழங்காலத்தில் இருந்தவர்களையும் தங்கள் கொள்கைப்படி நடந்தவர்களாகக் காட்ட வேண்டும் என்று நினைத்து, அவர்கள் அபிப்பிராயங்களை மாற்றிச் சொல்லக்கூடாது. பிடிக்கிறவர்கள் புதுக் கொள்கைகளை வைத்துக் கொள்ளட்டும்; ஆனால், நம் பூர்விகர்கள்மீது இவற்றைச் திணிக்கக்கூடாது. முருகன் வேத மதத்தில் இல்லாதவன், தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் உரியவன், இங்குதான் ஆதி (ஒரிஜினல்) யில் இருந்தவன் என்பது ஒரு புதுக் கொள்கை.

யாகம் செய்கிற வேதியர்கள் தொழுகிற தெய்வம் என்று திருப்பரங்குன்றத்தில் இருக்கிற முருகனை சங்க நூலான திருமுருகாற்றுப்படை சொல்கிறது. முருகன் அவதாரமான ஞானசம்பந்தர் தாம் வேதத்தை வளர்க்கவே வந்ததாகச் சொல்லிக் கொள்கிறார். “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி யமண்” என்றும், “மறை வழக்கமிலா மாபாவியர்” என்றும் சம்பந்தரே சொல்லியிருக்கிற சமணர்களை வென்று மறுபடி வைதிக தர்மத்தை நிலைநாட்டத்தான் அவர் அவதாரம் பண்ணினார். ஸாக்ஷாத் அம்பாளுடைய க்ஷீரத்தை சம்பந்தர் பானம் பண்ணினார் என்பதே அவர் அவளுடைய நேர்ப்பிள்ளையான ஸுப்ரம்மண்யம் என்பதற்கு அத்தாட்சி. பிரம்மண்யத்தை – வைதிக தர்மத்தை – வாழ வைப்பதே தம் லட்சியம் என்பதாலேயே “வாழ்க அந்தணர்” என்ற தேவாரப் பாடலால் முடிந்த முடிவாகச் சமணரை ஜயித்தார். அந்தத் கதையைச் சொல்கிறேன்.

சமணர்களுக்கு அவர் அறிவு ரீதியில் வாதம் செய்து ஜயித்தது போதவில்லை. பாண்டிய ராஜாவுக்குத் திருநீற்று மகிமையால் வெப்பு நோய் தணித்ததும் போதவில்லை. தானாகவே உடம்பு குணமாயிருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ? மறுக்க முடியாத அற்புதத்தால் மதத்தை நிலைநாட்டப் பரீட்சை வைத்தார்கள். அதாவது அனல்வாதம், புனல்வாதம் செய்யவேண்டும் என்றார்கள். இரு கட்சிக்காரர்களும் தங்கள் தங்கள் கொள்கைகளைச் சுவடியில் எழுதி நெருப்பில் போடவேண்டும். எந்தச் சுவடி எரியாமல் இருக்கிறதோ, அதில் இருக்கிற தத்வமே சத்தியம் என்பது அனல் வாதம். ஆற்று ஓட்டத்தில் இரு தரப்பினரும் தங்கள் சுவடிகளை விட வேண்டும். எது பிரவாகத்தின் கதியை எதிர்த்து மறு திசையில் செல்கிறதோ அதுவே உண்மை என்பது புனல் வாதம். முதலில் அனல் வாதத்தில் சம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளே ஜயித்தார். அப்புறம் புனல் வாதம்.

ஜைனர்கள் ‘விப்ர க்ஷயம்’ என்று சுவடியில் எழுதி ஆற்றில் போட்டதாகச் சொல்கிறார்கள். ‘விப்ர க்ஷயம்’ என்றால் ‘பார்ப்பானே ஒழிக’ என்று அர்த்தம். வேத வேள்விகள் பரம அஹிம்ஸாவாதிகளான சமணர்களுக்கு விரோதமானதால் இப்படி எழுதி வெள்ளத்தில் போட்டதாகச் சொல்கிறார்கள். அது முழுகிப் போயிற்று.

அப்புறம் சம்பந்தர் ஒரு தேவாரப் பாடலை எழுதிப் பிரவாகத்தில் போட்டார். அந்தச் சுவடியோ அலையோட்டத்தை எதிர்த்துக் கொண்டு கன ஜோராகச் சென்றது. குலச்சிறையார் என்கிற பாண்டிய மந்திரி குதிரையில் ஏறி, கரையோடு அந்த ஏடு போகிற திசையில் வேகமாகச் சென்றார். அப்புறம் சம்பந்தர் ஒரு பதிகம் பாடி அதை நட்டாற்றில் நிற்கச் செய்தார். குலச்சிறையார் அந்த ஏட்டை ஒரே சந்தோஷத்துடன் எடுத்துக் கொண்டு கரை சேர்ந்த இடம் இப்போது “திருவேடகம்” (திரு ஏடு அகம்) என்று வழங்குகிறது. இதுவே, சம்பந்தரின் முடிவான வெற்றி. புனலை எதிர்த்துப் போன அந்த ஏட்டில் சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் என்ன எழுதியிருந்தார்?

“வாழ்க அந்தணர்” என்றே ஆரம்பிக்கிறது அந்தத் தேவாரப் பாடல். வேதம் இருந்தால்தான், பிரம்மண்யம் இருந்தால்தான் லோகத்துக்கு, க்ஷேமம் என்பதில் சம்பந்தருக்குக் கொஞ்சம்கூட சந்தேகம் இல்லை; அதற்கு உபகரிப்பதே தம் ஜன்மவிரதம் – அவதார காரியம் – என்று தயங்காமல் வெளியிட்டார் என்பது இதிலிருந்து தெரிகிறது. நவீன காலத்தில் சிலருக்கு இந்தக் கொள்கை பிடிக்காமலிருக்கலாம். ஆனால், சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளுக்கு அதில் நிச்சயமான உறுதியிருந்தது என்பதை ஆட்சேபிக்க முடியாது.

அது சரி; ஆனால், வேதத்தை ஓதிக் கொண்டு, யாகம் செய்து கொண்டிருக்கிற ஒரு கூட்டம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு மகான் நினைப்பாரா? சர்வ ஜனங்களும் சமஸ்தப் பிராணிகளும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் மகானின் ஸதா கால நினைப்பாக இருக்கும். ஞான சம்பந்தர் மேலே சொன்ன பாடலை இப்படித்தான் ஆசீர்வாதம் செய்து முடிக்கிறார்:

வையகமும் துயர் தீர்கவே

“லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து” என்பது தமிழ்க் குழந்தையின் அருகில் இப்படி அருள் சொட்ட வெளிவந்திருக்கிறது. சரி, வையகம் என்றால் அதில் எல்லா ஜீவராசிகளும் ஜாதிகளும் அடக்கம்தானே? அப்படியானால் வையகம் முழுவதும் துயர் தீருகிறபோது, தானாகவே அதிலிருக்கிற அந்தணர்களும் வாழ்ந்து விட்டுப் போகிறார்கள். அவர்களை எதற்கு, வையகத்தைச் சேராதவர் மாதிரி தனியாகப் பிரித்து, முதல் ஸ்தானம் கொடுத்து, “வாழ்க அந்தணர்” என்று சொல்ல வேண்டும்? பிராம்மண ஜாதியில் பிறந்ததால் சம்பந்த மூர்த்தி ஸ்வாமிக்குத் தனி அபிமானமா? ஒரு மஹானுக்கு இப்படி சின்ன அபிமானங்கள் இருப்பதாகச் சொல்வது நன்றாகவேயில்லையே!

லோக க்ஷேமம்தான் அவருக்கு லக்ஷ்யம். ஆனால், அதற்கு சாதனம் வேத யக்ஞங்கள்தான். இதனால்தான் வேத கர்மாக்களைச் செய்கிறவர்களைத் தனியாகப் பிரித்து முதலில் சொன்னார். – பட்சபாதம் இல்லை.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

வானவர்களான தேவர்களுக்கு யக்ஞத்தில் ஆஹுதி கொடுத்தால்தான் மழை பெய்யும் – தண்புனல் வீழும். மழை பெய்து தானிய சுபிக்ஷம் உண்டானால்தான் ராஜாங்கம் செழிக்கும் – வேந்தன் ஓங்குவான். நடுவே ‘ஆனினம்’ என்று ஏன் தனியாகச் சொல்லியிருக்கிறது? முடிகிறபோது ‘வையகம்’ என்று சொன்னதில் இதுவும் அடக்கம்தானே?அந்தணரைத் தனியாக சொன்னதற்குக் காரணம், அவர்கள் செய்கிற யாக கர்மா என்று சொன்னீர்கள்; சரி, ‘பசுக்களை – ஆனினத்தை – தனியாகச் சொன்னது ஏன்?’ என்று கேட்பீர்கள். லோகோபகாரம் செய்ய வேண்டும் என்கிற பரம நியமங்களுடன் வாழ்ந்து வேதங்களைச் சொல்லி ஆஹுதி செலுத்தி யாகத்தைச் செய்பவர்கள் என்பதால் அந்தணர்களைச் சொன்னது போலவேதான், யாகத்தில் ஆஹுதியாகிற நெய்யையும் பாலையும், எரிப்பதற்கு உதவுகிற சாணத்தையும் தருகிறது, என்பதாலேயே ஆனினத்தைத் தனியாக குறிப்பிட்டார். ஆக தனியாக இவை மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஓரவஞ்சனையில்லை. வையகம் துயர்தீர உதவியாக நடைபெற வேண்டிய வேள்விக்கு உதவி செய்வதாலேயே தனியாக வாழ்த்தினார். லோகோபகாரமாக வேத கர்மத்தைச் செய்வதற்காகத்தான் அந்தணரை வாழ்த்தினார். அந்தக் கர்மாவை விட்டுவிட்டவர்களுக்கு இந்த வாழ்த்து இல்லை; அப்படிப்பட்டவர்களுக்கு நானும் வக்காலத்து வாங்க வரவில்லை.

எங்கு பார்த்தாலும் வேள்விகள் நடந்து வேத நெறி விருத்தியானால், தீயதெல்லாம் தீய்ந்துபோகும் என்பது சம்பந்தர் சித்தாந்தம் என்று தெரிகிறது.

ஆழ்க தீயதெல்லாம் ! அரன் நாமமே

சூழ்க ! வையகமும் துயர் தீர்கவே !

என்று, பின் இரண்டு வரிகளில் பாடுகிறார்.

வேதநெறி என்பது ஒரு பெரிய ஆறு; ஒரு ஆற்றிலேயே பல படித்துறைகள் இருப்பதுபோல், வேத நெறியில் சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று பல இருக்கின்றன. இவற்றுள் “மிகு சைவத்துறை விளங்க” வந்தவர் ஞானசம்பந்தர் என்கிறார் சேக்கிழார். அதனால், வேத தர்மம் தழைத்தோங்குகிறபோது, எங்கு பார்த்தாலும் சிவபெருமானின் நாமமே – ஒலிக்க வேண்டும் என்கிறார். இப்படியிருந்தால் வையகத்தில் – ஒரு ஜாதிக்கு மட்டும் இல்லை என்பதோடு நம் பாரத தேசத்துக்கு, ஹிந்து சமூகத்துக்கு மட்டும் இல்லை; உலக முழுவதிலுமே – ஒரு கஷ்டம் இல்லாமல் எல்லோரும் ஆனந்தமாயிருப்பார்கள் என்கிறார்.

இந்த லோக க்ஷேம லக்ஷியத்துக்காகவே சிலர் யக்ஞாதிகளைச் செய்ய வேண்டும் என்று அவர்களை விசேஷமாக வாழ்த்தினார். அவர்களுடைய தர்மத்தை நிலைநாட்டித் தருவதே அவரது அவதார காரியமாக இருந்தது.

வேத தெய்வமாகக் இருந்துகொண்டு, பர மதங்களை நிராகரித்து, மறைவழக்கை நிலைநாட்டுவது சுப்ரம்மண்யரின் அவதார காரியம் என்பது இதிலிருந்து தெரிகிறது.

வடக்கே ஏற்பட்ட ஸுப்ரமண்ய அவதாரத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is வேத நெறியை வாழ்விப்பவன்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  முருகனின் வடநாட்டு அவதாரம்
Next