Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பணத்தை விட்டுக் குணத்தைக் கொள்க : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

நான் பலவிதமான இடங்களில் தங்க வேண்டியிருந்திருக்கிறது. சில இடங்களில் சமையல்கட்டு ரொம்பவும் கீக்கிடமாக இருக்கும். அங்கேயிருந்து ஒரேயடியாகப் புகை கிளம்பி நான் பூஜை செய்கிற மண்டபம் வரை வந்து கப்பி விடும். மடத்து முகாமுக்குள் எங்கே போனாலும் புகையாயிருக்கும். இருப்பதற்குள் புகை எங்கே குறைச்சலாக இருக்கிறது என்று தேடிக்கொண்டே போய், கடைசியில் பார்த்தால் அடுப்படியிலேதான் புகை குறைவாக இருக்கும். அதனால் சமையற்கட்டுக்கு பக்கத்திலேயே பூஜைக்கட்டை வைத்துக் கொள்வேன்.

அடுப்பிலிருந்துதான் புகை உண்டாகி நாலா பக்கமும் பரவுகிறது. அதனால் அடுப்படியில் புகை குறைவாக இருக்கிறது.

நான் பொதுவாகப் பட்டணங்களுக்குள் போகாமல் கிராமங்களிலேயே சஞ்சாரம் செய்வது என்று வைத்துக் கொண்டிருந்தேன். காரணம் பட்டணங்களில் நவநாகரிகம் என்கிற பெயரில் அநாசாரம் ரொம்பவும் அதிகம்; கிராமங்களில் அவ்வளவு இராது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அப்புறம் பட்டணத்து ஜனங்களும் என்னை வற்புறுத்தி அழைத்ததால் பட்டணங்களுக்குப் போக ஆரம்பித்தேன். நான் நினைத்ததற்குப் பெருமளவு மாறுபட்ட சூழ்நிலையைப் பட்டணத்தில் பார்த்தேன். இதில் எனக்குக் கொஞ்சம் திருப்திகூட ஏற்பட்டது. வைதிக சிரத்தை, ஆசாரம், பூஜை புனஸ்காரம் எல்லாம் கிராமங்களில் இருப்பதைவிடவும் கூடப் பட்டணங்களில் அதிகமாக இருப்பதைத் தெரிந்து கொண்டேன்; புகையை உற்பத்தி செய்கிற அடுப்பு, அதை வெளியே அனுப்பிவிட்டு, தன் இடத்தைக் கூடிய மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பது போல், பட்டணங்கள் கூடியவரை ஆசாரங்களில் பயபக்தி காட்டுவதாகக் தோன்றியது.

கிராம ஜனங்களுக்குப் பட்டணத்தில் இருப்பதுபோல் வேலைவெட்டிகள் அதிகம் கிடையாது. அவர்கள் சகல அநுஷ்டானங்களையும் குறைவில்லாமல் செய்ய வசதி உண்டு. ஆனால், பொதுவாக அவர்கள் அநுஷ்டானங்கள் எதுவுமே செய்யாமல், சாஸ்திர விஷயங்கள் எதுவுமே தெரிந்து கொள்ளாமல் விருதாவாகக் காலத்தைப் போக்குகிறார்கள். பட்டணவாசத்து ஜனங்களுக்கு தலை தெறிக்க காரியங்கள் இருக்கின்றன. ஆபீஸ் காரியம், சோஷியல் சர்வீஸ், விளையாட்டு கிளப் எல்லாம் இங்கு அதிகம். இவற்றில் பலவற்றில் நமது ஆசார அநுஷ்டானங்கள் பலவற்றை விட்டுவிடும்படியாக இருக்கிறது. என்றாலும் ‘இப்படிச் செய்கிறோமே, இது தப்பு அல்லவா?’ என்ற பச்சாத்தாபமும் பட்டணத்து ஜனங்களிடம் ஒட்டிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் எத்தனையோ வேலை நெரிசல்கள் இருந்தாலும் ஏதோ ஒரு சின்ன பூஜை, கொஞ்சம் கொஞ்சம் அநுஷ்டானங்கள், பஜனை, புராணப் பிரவசனம், ஆலய வழிபாடு ஆகியவற்றைத் தனித்தனியாகவும், சங்கமாகக் கூடியும் காப்பாற்றி வருகிறார்கள். இது ஓரளவுக்கு சந்தோஷம் தருகிறது.

பூரண சந்தோஷம் பழைய தர்மங்களை நாம் பூரணமாக அநுஷ்டிக்குமாறு நம்மைச் செய்து கொள்ளும் போதுதான் உண்டாகும். இப்போதைய பட்டணவாச வாழ்க்கை முறையும், நவநாகரிகமும் வெறும் பணத்தையும் லௌகிக சௌக்கியங்களையும் தேடிப்போனதால் உண்டானவைதாம். பணத்துக்கான இந்த வேட்கை போக வேண்டும், குணவானாக வேண்டும் என்பதற்கே அவரவரும் பிரயத்தனப்பட வேண்டும். மேலும் மேலும் பணம் தருகிற தொழில், மேலும் மேலும் வியாதி தருகிற காரியங்கள் இவற்றை விட்டுவிட்டு, நிம்மதியோடு நிறைவோடு அடங்கி வாழ்வதற்கு மனஸார முயற்சி செய்ய வேண்டும். பக்தியும் பூஜையும்கூடப் பணத்துக்காக, மற்ற சௌகரியங்களுக்காகச் செய்யப்படலாம். நம் பூஜையை மற்றவர்கள் எப்படி சிலாகிக்கிறார்கள், தமது சாஸ்திரப் பாண்டித்தியதைப் பிறர் எப்படி மெச்சுகிறார்கள் என்பதிலெல்லாம் ஆசை உண்டாகக்கூடும். இவ்விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மூலம் அகம்பாவத்தைத் விட்டுத் தொலைப்பதுதான். அது தொலைந்தால் அடக்கத்தோடு, ஆனந்தத்தோடு, எந்தக் காரியத்தையும் ஈசுவரார்ப்பண புத்தியோடு செய்து நாமும் க்ஷேமம் அடையலாம்; லோகத்தையும் க்ஷேமமாக வைத்திருக்கலாம்.

‘நாகரிக வாழ்க்கை’ என்கிற பெயரில் ஏதோ ஒன்றுக்கு ஆசைப்பட்டுக் கொண்டு இப்போது பல நல்ல வழிகளை விட்டுவிட்டோமே என்பதை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. ‘நாகரிக’ மார்க்கத்தில் போய்க் கொண்டிருந்த மேல் நாட்டில் பலர் வாழ்க்கையின் நிறைவு இதில் இல்லவே இல்லை என்று சலிப்படைந்து, நம்முடைய வேதாந்தம், பக்தி முறை இவற்றுக்குத் திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள் ஆசைப்படுகிறார்கள். நாமோ அநாதி காலமாக நமக்கு வந்துள்ள அற்புதமான பிதுரார்ஜிதத்தை அலட்சியம் செய்து, மேல்நாட்டுக்காரர்கள் வேண்டாம் என்று கழித்துக்கட்டியதை எடுத்துக் கொள்கிறோம்.

இத்தனை கோளாறுகளுக்கும் மூலம் பணமே பெரிதாகிவிட்டதுதான். இனியாவது பணத்தில் பற்றுதலை விடவேண்டும். ஸத்குணங்களைச் சம்பாதிக்க பாடுபடவேண்டும். அப்போதுதான் ஜன்மா எடுத்த பலனை நாம் அடைந்து லோகத்துக்கு உபகாரம் செய்தவர் ஆவோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is கணக்காயிருக்கணும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  வரதக்ஷிணைப் பிரச்சனை
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it