அனைத்துலக மஹாபாரதக் கருத்தரங்கு குறிப்பு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பீடாரோஹன பொன்விழாவின் அங்கமாக அனைத்துலக மஹாபாரதக்

அனைத்துலக மஹாபாரதக் கருத்தரங்கு குறிப்பு

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பீடாரோஹன பொன்விழாவின் அங்கமாக அனைத்துலக மஹாபாரதக் கருத்தரங்கு சென்னையில் விளிறிவைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் நிகழும் டிசம்பர் திங்கள் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் 200க்கும் மேற்பட்ட அறிஞர்கள் இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிலிருந்தும் கலந்து கொண்டு மஹாபாரதம் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க இருக்கின்றனர். சிறப்பாக கிழக்காசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், இந்தோனேசியா, நேபால், அமெரிக்கா, பிரஞ்சு நாடுகளிலிருந்தும் உலக அளவில் புகழ்பெற்ற அறிஞர்கள் பங்கு பெறுகிறார்கள். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு கீழை நாடுகளில் கட்டப்பட்டுள்ள கோயில்கள் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள், சுவடிகள், அம்மக்களிடம் இன்றும் வாழ்ந்து வரும், நாட்டியங்கள், இசை வாழ்க்கைக் கூறுபாடுகள் பற்றி சிறப்புக் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. தத்துவம், சமயம், கலை, விஞ்ஞானம், மருத்துவம், பெண்கள் நிலை, இலக்கியங்கள், பிராந்திய பொழிகளில் மஹாபாரதம், தர்மம், ஆட்சிமுறை, நிர்வாகம், முதலிய பிரிவுகளில் கட்டுரைகள் வழங்கப் படுகின்றன. பெரும்பாலான பங்காளர்கள் முன்னாள் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பல் துறைப் பேராசிரியர்கள், அருங்காட்சியக இயக்குநர்கள் ஆவர். பங்கு பெறுவோரில் 80க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தவிர வெளிநாட்டு அம்பாஸிடர்களும், பண்பாட்டுத்துறை அதிகாரிகளும் இடம் பெறுகின்றனர். வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்களில் இந்திய பெருங்காப்பியங்களான மகாபாரதமும் இராமாயணமும் கிழக்காசிய நாடுகள் முழுவதும் எவ்வாறு அந்நாட்டு மக்களின் பண்பாக, கலையாக, வாழ்க்கையாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பரிணமித்துள்ளது என அறிந்து கொள்ளவும். இந்தியாவிலிருந்து கிழக்காசிய நாடுகள் முழுவதும் எவ்வாறு ஹிந்து சமயம் ஒரு மாபெரும் சமயமாக மலர்ந்து வளர்ந்து சிறந்திருந்தது என்பதை வரலாற்று அடிப்படையில் நம் மக்கள் அறிந்து கொள்ளவும் அரிய வாய்ப்பாக அமையும்.

ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நான்கு வெவ்வேறு அறைகளில் கட்டுரைகள் வாசித்தளிக்கப்படும். மாலை 5.30 முதல் 6.30 வரை சிறப்புச் சொற்பொழிவுகள், வெளிநாட்டு அறிஞர்களும், டாக்டர் பிரேமா பாண்டுரங்கம், ஊரன் அடிகள் போன்ற பெரியார்களும், இரவு 6.30 முதல் 8.30 மணி வரை கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் நாட்டு நாட்டியங்களும், M.O.P. கல்லூரி மாணவிகளின் நாட்டியங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய பண்பாட்டு மையம் யக்ஷகாணம், மணிபுரி, பொம்மலாட்டம், கதகளி முதலிய நாட்டியங்களை அமைத்துள்ளார்கள்.

மகாபாரதம் பற்றிய கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது மூன்று பகுதிகளாக அமையும். முதல்பகுதியில் இந்திய நாட்டு மகாபாரதத் தலங்களும், சிற்பங்களும், ஓவியங்களும், படங்களாக அமைக்கப்பட உள்ளன. இதை மத்திய அரசு தொல்லியல் துறையின் தென்மண்டல பிரிவு அமைத்துள்ளது. மற்றொரு பகுதி தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், ஆகிய நாடுகளில் நமது கோயில்கள், சிற்பங்கள பற்றிய பெரும் படக்காட்சியும் அமையும். இதை சென்னை தமிழ் ஆர்ட்ஸ் அகாடமி அமைத்துள்ளது. மூன்றாவது கண்ணனது வரலாற்றை வண்ண வண்ண பொம்மைகளால் சித்தரிக்கும் காட்சி இடம் பெறுகிறது. இதை சென்னை கீதாபவன் அமைத்துள்ளது.

இவ்வனைத்துலகக் கருத்தரங்கு மாநாடு காஞ்சி காமகோடி சங்கராசார்ய சுவாமிகள் பீடாரோஹன பொன் விழாவின் அங்கம் ஆகும். ஐம்பது ஆண்டுகளாக நாட்டின் அன்மீக வாழ்க்கைக்கு அயராது உழைத்து சமயம் வளரவும், சமுதாயப் ¢ பணி வளரவும் அனைத்து சமயத்தோரும் சமமாக இனைந்து வாழ வழிகாட்டி வரும் பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருவடி மலர்களில் அனைத்துலக அறிஞர்களும் சுட்டித் திருவடி தொழும் வாடாப் பொன் மலர்களாக மலர்ந்து "ஜகத்குருவே இன்று போல் இன்னம் ஒரு நூற்றாண்டு வாழும் எனும் வாழ்த்தாக அமைகிறது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள், ஸ்ரீ ஜயெந்திர சுவாமிகள் அவர்களும், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சுவாமிகள் அவர்களும் விழாவில் கலந்து கொண்டு அனுக்ரஹ பாஷணம் அருள உள்ளார்கள். சுவாமிகள் நான்கு நாட்களும் இருந்து அருளாசி வழங்க உள்ளனர். மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத்துரைறை அமைச்சர் ஸ்ரீ முரளி மனோகர் ஜோஷி அவர்கள், கருத்தரங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். பூஜ்ய சுவாமி தயானந்த சுவாமிகள் அவர்கள் அருளுரை ஆற்றுகிறார்கள்.

1) இந்தோனேஷியா - பாலி, அறிஞர் டாக்டர் "குஸ்டே புடு பால்குநதி" வேதம், மகாபாரதத் துறைகளில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பாலியில் "ஹிந்து தர்ம பல்கலைக்கழகம்" உள்ளது. அதில் பேராசிரியராகத் திகழ்கிறார். ஜலான் சுதமோ என்ற நகரில் வசிக்கும் இவர் புகழ்பெற்ற இந்தோனேஷியா மகாபாரதத்தின் 18 பர்வங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். 5 தொகுதிகளாக (வால்யூம்கள்) அச்சிட்டிருக்கிறார். இது இந்தோனேஷிய மகாபரதத்தின் முதல் ஆங்கில மொழி பெயர்ப்பாகும். இவர் இந்தோனேஷியாவில் மகாபாரதம் பற்றி உரையாற்ற இருக்கிறார்.

2) டாக்டர் ஜான் ஏ கிரைம்டஸ் அமெரிக்க நாட்டு அறிஞர். சமஸ்க்ருத மொழியில் சிறப்புப் பட்டங்கள் பெற்றவர். சங்கரரின் அத்வைத வேதாந்தத்தில் வல்லுநர். சுரேஸ்வராசாரியாரின் நைஷ்கர்ம்ய சித்தி என்ற நூலைப் பற்றி ஆங்கிலத்தில் ஆராய்ச்சி நூல் வெளியிட்டுள்ளார். இந்திய தத்துவங்கள் பற்றி எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளனர். சமஸ்கிருத, ஆங்கில தத்வ டிக்க்ஷனரி ஒன்றும் வெளியிட்டுள்ளார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர், அமெரிக்காவில் உள்ள பல கழகங்களில் அங்கத்தினர் பல ஆராயச்சிப் பத்திரிகைகளின் எடிட்டர். அமெரிக்க நாட்டில் நார்த் டகோடா பல்ககைலக் கழகத்தில் இந்திய தத்துவ சமயங்களில் பேராசிரியர். சென்னை பல்கைலக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

3) டாக்டர் பசூக் இந்தர் வுத். இப்பெண்மணியார் தொல்லியல் துறையில் பட்டம் பெற்றவர். தாய்லாந்தில் சில்பகான் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக உள்ளார். தாய்லாந்தில் சைவம் என்ற தலைப்பில் ஆராய்சசி செய்தவர். ஹிந்து தெய்வ உருவங்களின் அமைதி பற்றியும் தத்துவங்கள் பற்றியும் ஆய்ந்தவர். பௌத்த சமயம், மைத்ரேயர் பற்றியும் ஆராய்ச்சி செய்தவர். பல தொல்லியல் இடங்களில் அகழ்வாய்வு செய்தவர். சமஸ்கிருத மொழியில் வல்லமை பெற்றவர். தாய்லாந்தில் துவாரவதி பற்றிய ஆய்வு செய்தவர். பரோடா பல்கலைக் கழகத்தில் படித்தவர். தாய்லாந்தில் சைவம் பற்றியும் மகாபாரதத் தொடர்பு பற்றியும் கட்டுரை படிக்க இருக்கிறார்.

4) டாக்டர் சிராபத் பிரபந்த வித்யா தாய்லாந்து பாங்காக் மாநகரில் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பிரிவுக்கு பேராசிரியராக உள்ளார். சமஸ்கிருத மொழியிலும், பாலி மொழியிலும் புகழ் பெற்றவர். அந்நாட்டில் உள்ள கல்வெட்டுக்களில், குறிப்பாக சமஸ்கிருத கல்வெட்டுகளில் ஆழ்ந்த அறிஞர். தாய்லாந்து, இந்தியா நாடுகளின் தொடர்பு பற்றி சிறந்த அறிஞர். நமது காஞ்சி ஆசார்ய சுவாமிகளிடம் ஆழ்ந்த பக்தி பூண்டவர். பல முறை இந்தியாவுக்கு வந்தவர். இந்திய - தாய்லாந்து நாட்டு பண்பாட்டு தொடர்புக்கு பாலம் போல் விளங்குபவர். பல நூல்களின் ஆசிரியர். தென் தாய்லாந்தில் மகாபாரத சைவத் தொடர்புகள் பற்றி கட்டுரை வாசிக்க வருகிறார்.

5) டாக்டர் கசசிவா ஜிரஸ்ஸா - இப்பெண்மணி தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில் சில்பகான் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் பேராசிரியையாக பணியாற்றகிறார். இவர் தாய்லாந்தில் கணேசர் வழிபாடு குறித்து சிறப்பாக ஆராய்ச்சி செய்தவர். கணேசர் சிற்பங்கள் பற்றி பேச இருக்கிறார்.

6) டாக்டர் எனாமுல் ஹக் - வங்காளதேஷில் டாக்கா மாநகரில் வங்காளக் கலை ஆய்வு நிறுவனத்தின் தலைவராகத் திகழும் இவர் யுனெஸ்கோ நிறவனத்தின் சார்பில் தமிழ்நாடு கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய கோயில்களை ஆய்ந்து உலக வரலாற்று சின்னமாக அறிவிக்க அறிக்கை அளிக்க அனுப்பப்பட்டுள்ளார். இஸ்லாமியாராகிய இவர் ஹிந்து தெய்வீக உருவங்களையும், சிற்பங்களையும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றவர். டாக்காவில் வங்காள தேச, தேசிய அருங்காட்சியகத்தை நிறுவியவர். அதன் இயக்குனராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். வங்கதேசக் கலை பற்றி அனைத்து ரீதியில் பல ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் நடத்தியவர். பல அராய்ச்சி நூல்கள் இயற்றியவர். இசையிலும், நாட்டியத்திலும் சிறந்த ஈடுபாடு கொண்டவர். பல நாட்டிய நாடகங்களை இயற்றி அரங்கேற்றியவர். தமிழ்நாட்டுக்கும், வங்க தேசத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றி அறிய ஆர்வம் மிக்கவர். டாக்டர். இரா. நாகசாமி எழுதிய "வங்கதேச தென்னிந்திய தொடர்புகள்" என்ற நூல் வெளியிட இருக்கிறார். இவரது மனைவியாரும் சிற்நத ஆராய்ச்சியாளர். வங்க தேசத்தில் மகாபாரதச் சிற்பங்கள் குறித்த கட்டுரை வாசிக்க இருக்கிறார்.

7) லாவோஸ் நாட்டு அறிஞர் "டாக்டர் மணி சமுத் ஹோரே". இவர் மானிட இயல் துறையில் பட்டம் பெற்றவர். லாவோஸ் நாட்டின் தலைநகர் பல்கலைக்கழகத்தில் மானிடப் பண்பாடு, சமுதாயத் துறையின் பேராசிரியர். லாவோஸ் நாட்டுப்புற வாழ்வில் இராமாயணம், மகபாரதம் வகிக்கும் நிலை பற்றி ஆய்வு செய்தவர். லாவோஸ் நாட்டில் ஏராளமான இராமாயண, மகாபராத சுவடிகள் உள்ளன. இவை அந்நாட்டு மொழியில் உள்ளன. நாட்டுப்புற பாடல்களாகவும் இவை திகழ்கின்றன. இப்பெண் பேராசிரியை லாவோஸ் நாட்டில் மகாபாரதம் பற்றிய கட்டுரை வாசிக்க இருக்கிறார்.

8) கம்போடியா நாட்டு அறிஞர் மேதகு டாக்டர் "சோன் சௌபர்ட்", கம்போடியா நாட்டு மக்களின் மதிப்பையும் மிகும் அன்பை பெற்ற இப்பேராசிரியர் வரலாறு, தொல்லியல் துறையில் பட்டம் பெற்றவர். கலை வரலாறு பற்றி பிரஞ்சு நாட்டில் பாரிஸில் டாக்டர் பட்டம் பெற்றவர். பிரஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளைக் கற்றவர். கம்போடியா நாட்டில் "பினோம் பெண்" மாநகரில் மன்னரின் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பேராசிரியராக திகழும் இவர், கம்போடிய பிரதம மந்திரியின் உதவியாளராகத் திகழ்ந்தவர். கம்போடிய மக்கள் சபையின் துனைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு. அபபதவி வகித்தவர். கம்போடிய நாட்டு மன்னரால் "காண்ஸ்டிடீயூஷன் கவுன்சில்" உறுப்பினராக நியமிக்கப்பட்ட அக்கௌன்சில் உறுப்பினராக திகழ்பவர். கம்போடிய வரலாற்றுச் சின்னங்களை ஆராய்ச்சி செய்தவர். தமிழ்நாட்டில் பல்லவர் கலையைப் பற்றி ஆராய்சசி செய்தவர். பாண்டிச்சேரியில் இருந்த பல்லவர் கேயில்களை ஆராய்ச்சி செய்தவர். காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சுவாமிகளின் பீடாரோகன பொன்விழாவை ஒட்டி நடைபெறும் இம் மகாபாரத மாநாட்டின் பொதுத்தலைவராக (ஜெனரல் பிரஸிடெண்டு) விளங்குபவர். பிரஞ்ச சாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள இவர், இம்மாநாட்டில் பங்கு பெற சிறப்பாக சென்னை வருகிறார். இம்மாநாட்டில் கம்போடிய நாட்டு அங்கோர் கோயில்களில் 9,10,11வது நூற்றாண்டுகளில் "மகாபாரத சிற்பங்கள" பற்றி கட்டுரை வாசுக்க இருக்கிறார்.