ஒலியும் படைப்பும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

சப்தம் என்பது என்ன? Vibration தான் (அதிர்வுதான்) என்று இன்றைய ஸயன்ஸில் சொல்கிறார்கள். அணுவிஞ்ஞானமும், ஐன்ஸ்டீன் கொள்கையும் என்ன சொல்கின்றனவென்றால், ‘அணுவுக்குள் புகுந்து பார்த்தால் எல்லா வஸ்துவும் ஒன்றுதான், அத்வைதம்தான். லோகமெல்லாம் ஒரே சக்தி வெள்ளம்தான். எல்லாம் ஒரே electro-magnetic (மின்-காந்த) பிரவாஹம்தான். ஆனால் ஏன் இப்படி வேறு வேறு வஸ்துக்களாகத் தெரிகிறது என்றால், அந்த ஒரே சக்தியில் தோன்றுகிற வெவ்வேறு விதமான vibrationகளால்தான்’ என்று சொல்கின்றன.

அதிர்வு உண்டானால் சப்தம் உண்டாகிறது. இதையே திருப்பிச் சொன்னால், சப்தம் உண்டாக வேண்டுமானால் அதற்கான அதிர்வு ஏற்பட்டாகவேண்டும்.

ஒரே சக்தியில் பலவித vibration ஏற்படுவதால் லோக சிருஷ்டி உண்டாவதாகச் சொல்கிற விஞ்ஞானக் கருத்தும், பரமாத்மாவின் சுவாஸமான வேத சப்தத்திலிருந்து லோகம் வந்தது என்பதும் முழுக்க ஒன்றேதான்.

மநுஷ்யர்கள், பிராணிகள் இருக்கிறோம். நம்முடைய ஆரோக்யம், உணர்ச்சிகள் முதலியன எப்படி ஏற்படுகின்றன? நம்முடைய ச்வாஸ கதியிலிருந்துதான். நாடிகளில் ச்வாஸம் போகிறபோது ஏற்படுகிற vibration-களால்தான் தேகத்தின் பல பகுதிகளுக்கும் ஆரோக்யம், அல்லது ஆரோக்யக் குறைவு ஏற்படுகிறது. யோக ஸாதனங்களால் ச்வாஸப் பயிற்சி மூலம் மூச்சை நாடிகளில் ஒழுங்குப்படுத்திக் கொள்கிறவர்களுக்கு ஆச்சரியப்படும்படியான ஆரோக்யம் இருக்கிறது. அவர்களுடைய ரத்தக் குழாய்களை நறுக்கினால்கூட ரத்தம் கொட்டாமலிருக்கிறது. நாடித்துடிப்பு, ஹ்ருதயத்துடிப்பு இவற்றைக் கூட நிறுத்திவிட்டு, அவர்களால் பூமிக்கடியில் உயிரோடு ஸமாதியில் இருக்க முடிகிறது. பாம்பும் தேளும் கடித்தாலும் விஷம் அவர்களைப் பாதிப்பதில்லை. மூச்சினால் உண்டாகும் நாடி சலனத்தை அவர்கள் ஒழுங்கு படுத்தியிருப்பதால்தான் இப்படி இருக்கிறது.

உடம்புக்கு மட்டும் தான் மூச்சு முக்கியம் என்றில்லை. மனஸுக்கும் மனஸின் ஆரோக்யத்திற்கும் அதுவே முக்யமாயிருக்கிறது. எண்ணங்களுக்கு மூலமான மனஸும், மூச்சுக்கு மூலமான பிராணசக்தியும் ஒன்றாகவே இருப்பதால்தான் இப்படியிருக்கிறது. நாடி சலனத்தாலேயே ஆரோக்யமான (நல்ல) அல்லது ஆரோக்யக் குறைவான (கெட்ட) எண்ணங்களும் உண்டாகின்றன. நீங்களே கவனித்துப் பார்த்தால் தெரியும். ஒரு தெய்வ ஸந்நிதானத்தில் அல்லது மஹானின் அருகில் மனஸ் சாந்தமாக இருக்கிறபோது மூச்சு எப்படி சஞ்சரிக்கிறது; காமத்தினால், கோபத்தினால் வேகம் உண்டாகிறபோது ச்வாஸகதி எப்படியிருக்கிறது என்று பார்த்தால், ஒன்றுக்கொன்று நிரம்ப வித்யாஸமாயிருக்கும். ஸந்தோஷம் என்பதிலேயேகூட தெய்வ விஷயமாக ஒரு பஜனையில் அல்லது உத்ஸவத்தில் உண்டாகிறதற்கும், இந்திரிய சுகத்தை தருகிற விஷயங்களில் உண்டாவதற்கும் நாடி சலனத்தில் வித்யாஸம் தெரியும். பொதுவாக உத்தமமான ஸந்தோஷத்தில் மூச்சு வலது நாசித்துவாரத்தில் வரும்; வெறும் இந்திரிய ஸந்தோஷம் (புலனின்பம்) என்றால் இடது நாசித் துவாரத்தில் வரும். இத்தனை உணர்ச்சிகளிலும் ஆதாரமான சாந்தமான ஸத்வஸ்துவில் தியானம் வலுவாகிற போது, ஒரே சீராக, மிக மெதுவாக, இரு நாசிகளிலும் ஸமமாக மூச்சு வரும். தியான லக்ஷ்யத்தில் ஒன்றுபட்டுவிடுகிறபோது மூச்சே நின்றுவிடும். மனஸும் நின்றுவிடும். ஆனால் உயிர் இருக்கும். ஞானம் என்ற பேருணர்வு பூரித்து இருக்கும்.

ஆக, ஜீவன் என்று எடுத்துக் கொண்டால், அவனுடைய ஜடமான சரீரம், சைதன்யமான அறிவு இரண்டும் ச்வாஸகதியால் உண்டாகி வளர்கிறவைதான்; அல்லது அழிகிறவைதான். முறையான ச்வாஸகதி என்பது நம் உள்-vibration-களை ஒழுங்கு பண்ணிக் கொள்வதுதான்.

பரமாத்மாவிடமிருந்துதானே இத்தனை ஜட வஸ்துக்களும் சைதன்ய வஸ்துக்களும் தோன்றி விருத்தியாகின்றன? அழிவதும் வளர்வதுமாக இருக்கின்றன? இதற்கெல்லாம் ஏற்ற சலனங்கள் பரமாத்ம வஸ்துவில் ஏற்பட்டுத்தானே ஆகவேண்டும்?

பிரம்மம் நிர்குணமானது, சலனமற்றது என்கிற அத்வைதம் இருக்கட்டும். அந்த அத்வைதத்தின்படியும், இன்னதென்றே சொல்ல முடியாத (அநிர்வசனீயமான) மாயாசக்தியுடன் கூடி பிரம்மம் பலவான இந்த பிரபஞ்சமாக வேஷம் போட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லித்தானே இருக்கிறது? வேஷமோ, கீஷமோ, இப்படி ஜடமான லோகமென்றும், சைதன்யமுள்ள ஜீவர்கள் என்றும் விவகார தசையில் இருக்கிறமாதிரி ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. மாயை என்று சொன்னாலும், அதற்கும் ஆதாரமான “மாயின்” என்று ஈச்வரனேதான் இருக்கிறான். ஆகக்கூடி மாயாசக்தி என்று சொல்லிவிட்டாலும், இது அத்தனையும் பரப்பிரம்ம வஸ்துவில் தோன்றின சலனங்கள் தான்; Vibration கள் தான். இத்தனை சலனங்களாலும் அது சலனமடையாமல், உள்ளூர நிர்குண சாந்த வஸ்துவாகவே இருக்கிறது. ஆனாலும் நம் பார்வையில் சலனங்கள் உண்டுதான். அதுவும் கன்னாபின்னா என்று இல்லாமல் பெரிய பெரிய சூரியன் முதலான கிரஹங்களின் ஸஞ்சாரத்திலிருந்து ஆரம்பித்து, ஒரு சின்ன புல், பூண்டு அல்லது கொசு உண்டாகிற வரை, எல்லாம் ஒரே மாதிரி நியதிப்படி, ஒழுங்குப்படி நடந்து வருகிறது.

லோக வாழ்க்கை க்ஷேமகரமாக நடக்க இந்த ஒழுங்குதான் ஒத்தாசை பண்ணுகிறது. இயற்கைச் சக்திகளை எல்லாம் ஒழுங்குப்படுத்தித்தான் பரமாத்மா லோக வாழ்க்கையை உண்டாக்கியிருக்கிறார். ஆனாலும் இதிலே கொஞ்சம் கொஞ்சம் ஒழுங்கு தப்பிப்போகிற மாதிரியும் நடக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார்! வாழ்க்கைக்கு அநுகூலம் செய்யவேண்டிய இயற்கைச் சக்திகள் அப்படிச் செய்யாமலிருக்கிறதையும் பார்க்கிறோம். காலத்தில் மழை பெய்ய மாட்டேன் என்கிறது; அல்லது வெள்ளம் வருகிறது. வேறு ஏதாவது உத்பாதம் உண்டாகிறது.

ஒழுங்கு தப்பிப் போவதில் இந்த மநுஷ்ய மனஸ் இருக்கிறதே, அது எவ்வளவு தூரம்தான் போகும் என்றே சொல்ல முடியாமல், குட்டிச் சாத்தனாக அலைகிறது! பிரபஞ்ச வாழ்க்கை முழுதிலும் எத்தனையோ ஒழுங்கு, கட்டுப்பாடு, நியதி இருந்தாலும், இந்த மனஸை எடுத்துக் கொண்டால், இது மட்டும் ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் வெறிநாயாகத் திரிகிறது.

இயற்கைக் சக்திகள் நமக்குப் பிரதிகூலமாக இருக்கிற போது, அவற்றைச் சரிப்படுத்த வழி உண்டா? நம் மனஸைக் கன்னாபின்னா என்று விடாமல் கட்டுப்பாட்டில் கொண்டு வர ஏதாவது வழி இருக்கிறதா?

சலனம் – சப்தம் இதனால்தான் சகல காரியமும் ஏற்பட்டிருக்கிறது என்றால், லோக சக்திகளை அநுகூலம் பண்ணித் தரவும், நம் சித்தத்தையே சுத்தம் பண்ணிக் கொடுக்கவும் கூடச் சப்தங்கள் இருக்கத்தான் வேண்டும். அவைதான் வேதம், வேதம் என்பது.

நம்முடைய ச்வாஸகதியாலேயே, நாம் யோக மார்க்கத்தின் மூலம் பரமாத்மாவின் ச்வாஸத்தைப் பிடித்து, லோகோபகாரமாகவும், ஆத்ம க்ஷேமகரமாகவும் உள்ள காரியங்களை நடத்திக் கொள்ளலாம். இங்கே நாடி சலனம் இருந்தாலும் அது மநுஷ்யக் காதுக்கு எட்டக் கூடிய சப்தமாக இருக்கவில்லை. ஸயன்ஸிலேயே மநுஷ்யனின் காதுக்கு எட்ட முடியாத சப்தங்கள், மநுஷ்யக் கண்ணின் லென்ஸுக்கு அகப்படாத ஒளி அலைகள் எல்லாம் உண்டு என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமில்லை. எட்ட முடியாததை நமக்கு எட்டுகிற மாதிரி மாற்றிக் கொடுக்கவும் முடிகிறது. ரேடியோவில் ஒருத்தன் பாடுகிறான் என்றால், முதலில் அவன் பாடுகிற சப்தங்கள் மின்சார சக்தியினால் ஒரு விதமான காந்த அலைகளாக மாறிவிடுகின்றன. இப்படி மாறின அலைகள்தான் ஆகாசத்தில் விடப்படுகின்றன. அப்போது இவற்றை நம் காதால் கேட்க முடிகிறதா? இல்லை. ஆனாலும் ரேடியோப் பெட்டியில் உள்ள கருவிகள் ஆகாசத்தில் இருக்கிற அந்த மின்சாரக் காந்த அலைகளைப் பிடித்து, மறுபடி நம் காதுக்கு எட்டுகிற மாதிரியே சப்த அலைகளாக்கிப் பாட்டாகக் கொடுக்கிறது.

இதைச் சொல்லும் போது விஞ்ஞானம் மதத்துக்கு விரோதியே இல்லை; மதத்தை வளர்க்க அதுவேதான் ரொம்ப ஒத்தாசை செய்கிறது என்று தோன்றுகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன் டெலிபோன், ரேடியோ ஆகியன வருவதற்கு முந்தி, “வேதசப்தமாவது, ச்வாஸமாவது?” என்று யாராவது நாஸ்திகர்கள் ஆக்ஷேபணை கிளப்பியிருந்தால், அவர்களுக்குப் பதில் சொல்லவே முடியாமல் இருந்திருக்கும். இப்போது இந்த ஸயன்ஸ் discoveries (கண்டுபிடிப்புகள்) தான் நமக்குக் கை கொடுக்கின்றன.

ஜடமான ரேடியோப் பெட்டிக்கு இருக்கிற சக்தியை சைதன்யமுள்ள ஜீவர்களும் சம்பாதித்துக்கொள்ள முடியும். அதற்கு மேலும் செய்ய முடியும். தபஸ்தான் இந்த சக்தியைத் தருவது. ஒரு ஸத்தியத்தைத் தெரிந்து கொண்டுதான் ஆவது என்று, அதற்காக அன்ன ஆகாரத்தை விட்டு, வீடு வாசலை விட்டு, எப்போது பார்த்தாலும் அதே சிந்தனையாக மனஸை ஒருமுகப்படுத்தி விட்டால், அதுதான் தபஸ். இத்தனையிலும், ‘நான் இத்தனை பிரயாசைப்படுகிறேன் அல்லவா? அதனால் எனக்கு ஸத்தியம் தெரிந்தே ஆகவேண்டும்’ என்ற அஹம்பாவம் இருக்கக்கூடாது. நாம் எத்தனை பிரயாஸைப் பட்டாலும், பகவத் பிரஸாதமாகத்தான் எந்த ஸத்தியமும் பிரகாசிக்கும் என்ற விநயம் எப்போதும் இருக்கவேண்டும். இம்மாதிரி தபஸ் பண்ணி, யோக நிலையில் உச்சிக்குப் போனவர்கள்தான் ரிஷிகள்.

ரிஷிகளுக்கு லோக ஸ்ருஷ்டியிலே ஏற்படும் சகல சலனங்களும் -அதாவது பரமாத்மாவின் ச்வாஸகதிகளும் – தெரிந்தது. தெரிந்தது மட்டுமில்லை; மின்சார அலையை சப்த அலையாக convert பண்ணுவது (மாற்றுவது) போல, அந்த சலனங்களுக்குரிய சப்தங்கள் மநுஷ்யக் காதுக்கு எட்டுகிற சப்தங்களாகவும் அவர்களுக்குத் தெரிந்தன. அப்படிப்பட்ட சப்தங்களையே வேத மந்திரங்கள் என்று தந்திருக்கிறார்கள்.

ஒன்று தோன்றுகிறது. வேதத்துக்கு “ச்ருதி” என்று ஒரு பேர். கேட்கப்படுவது எதுவோ அதுவே ச்ருதி. ச்ரோத்ரம் என்றால் காது. புஸ்தகத்தில் எழுதிப் படிக்காமல், குரு சிஷ்ய பரம்பரையாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே வேதம் தலைமுறை தலைமுறையாக வந்திருப்பதால் அதற்கு “ச்ருதி” என்று பேர் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எழுதிப்படிக்கக் கூடாது என்று ஏன் வைத்தார்கள் என்றால் வேத சப்தங்களை இப்படி எழுத முடியாது என்பதால்தான். ‘ழ’வுக்கும், ‘ள’வுக்கும் நடுவிலுள்ள சப்தம் மாதிரி, லிபியில் கொண்டு வர முடியாத பல சப்தங்கள் வேதத்தில் உண்டு. காதால் கேட்டுத்தான் இவை வரவேண்டும். அதோடுகூட உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் என்றெல்லாம் வேத மந்திரங்களுக்கு ஸ்வரமும் உண்டு. அதாவது ஒரு அக்ஷரத்தை உயர்த்த வேண்டும். இன்னொன்றைத் தாழ்த்திச் சொல்ல வேண்டும். சிலதை ஸமமாகச் சொல்ல வேண்டும். புஸ்தகத்தில் எத்தனைதான் diacritical mark போட்டு காட்டினாலும், அச்சுப்பிழை வந்து விட்டால், உச்சாரணக் கோளாறாகும்; உச்சரிப்பு தப்பினால் பலனே போய்விடும்*. ஓர் அக்ஷரத்தை அழுத்தி அல்லது மெல்லிசாகச் சொல்லுகிறதால் ஏற்படுகிற சலனத்துக்கும் இன்னோர் அக்ஷரத்தை அப்படிச் சொல்வதால் உண்டாவதற்கும் நிறைய வித்யாஸமிருக்கும். நம்முடைய உணர்ச்சிகள், இயற்கையை நடத்தி வைக்கும் தேவசக்திகள், இவையும் இந்த வித்யாஸத்துக்கு ஏற்ப மாறிப் போகும்.

ஒன்றுக் கொன்று உச்சாரணம் மாறுபட்டால் எத்தனை விபரீதம் உண்டாகிவிடும் என்பதற்கு, வேதத்திலேயே தைத்ரீய ஸம்ஹிதையில் ஒரு கதை இருக்கிறது. இந்திரனை வதைக்கக்கூடிய பிள்ளை தனக்குப் பிறக்க வேண்டும் என்பதற்காக த்வஷ்டா என்ற தேவதச்சன் ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணினான். அப்போது அக்ஷரங்களின் உச்சரிப்பில் உதாத்தம், அநுதாத்தம் என்று சொன்னேனே, இந்த உயர்த்தல் – தாழ்த்தலில் அவன் தப்பு பண்ணியதாலேயே, அவன் விரும்பின பலனுக்கு நேர்மாறாக, “இந்திரனை வதைக்கக் கூடிய பிள்ளை”க்கு நேர்மாறாக, “இந்திரன் வதைக்கக்கூடிய பிள்ளை, அதாவது இந்திரனால் வதைக்கப் படக்கூடிய பிள்ளை” தனக்கு வேண்டும் என்று அவன் பிரார்த்தித்ததாக ஆகிவிட்டது. கதையும் அப்படியே பிற்பாடு நடந்தது!

ரேடியோவில் ஒரு wave-length (அலைவரிசை) கொஞ்சம் தப்பினால்கூட, வேறு ஏதோ ஸ்டேஷனை அல்லவா பிடித்து விடுகிறது? மயிரிழை தப்பாமல் ரேடியோவில் வேவ்-லெங்க்த் வைத்தால்தானே சரியாகக் கேட்கிறது? இப்படியேதான் வேத உச்சாரணமும். கொஞ்சம்கூட ஸ்வரம் தப்பிப் போகக் கூடாது. வேவ் – லெங்க்த் மாறினால் ஸ்டேஷன் மாறிவிடுகிற மாதிரி, வேத சப்தம் மாறினால் பலனே மாறிவிடும்.

இதனாலெல்லாந்தான் வேதத்தைக் காதால் கேட்டுப் பாடம் பண்ணவேண்டும் என்று வைத்தார்கள். “ச்ருதி” என்று ஸம்ஸ்கிருதத்திலும், “எழுதாக் கிளவி” என்று தமிழிலும் வேதத்துக்கு பேர் ஏற்பட்டது.

“ச்ருதி” என்ற பெயருக்கு இன்னொரு காரணமும் தோன்றியதைச் சொல்ல வந்தேன். மற்ற சாதாரண ஜனங்களுக்குக் கேட்காத இந்த திவ்ய சலனங்களின் சப்தங்கள் ரிஷிகளுக்குக் கேட்கத் தானே செய்தது? அதை அவர்கள் புஸ்தகத்திலே படித்தார்களா? அல்லது அவர்களாக இயற்றினார்களா? இரண்டுமில்லாமல் ஆதியிலேயே கேட்கப் பட்டு லோகத்துக்கு வந்ததாலும் “ச்ருதி” என்று சொல்லலாம் என்று தோன்றிற்று.

ரிஷிகளுக்கு “மந்த்ர த்ரஷ்டா”க்கள் என்று பெயர் என்று சொன்னேன். ‘த்ரஷ்டா’ என்றால், பார்ப்பவன். “பார்ப்பான்” என்பதற்குக் கூட அதுதான் அர்த்தம். மந்திரங்களைப் “பார்த்தவர்கள்” என்றால், அவர்கள் மந்திரங்களைக் “கேட்கவில்லை” என்று ஆகும். மந்திரங்கள் அவர்களுடைய கண்ணுக்கு அகண்ட ஆகாசத்தில் கூட்டங்கூட்டமாக தெரிந்தன என்று “மந்த்ர த்ரஷ்டா” என்பதற்கு அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

இதில் எது சரி? பார்த்தார்களா? கேட்டார்களா? பார்த்தார்கள் என்றால் வேதமந்திரங்கள் எந்த லிபியில் எழுதியிருந்தது? தேவநாகரி, கிரந்தம், எல்லாவற்றுக்கும் மூலமான ப்ராம்மி முதலான எந்த லிபியும் இல்லாத காலத்தில், எந்த எழுத்தில் மந்திரங்கள் தெரிந்தன? வேத சப்தங்களையும், ஸ்வரங்களையும் உள்ளது உள்ளபடி எந்த லிபியிலும் எழுதி முடியாதே!

இதற்கெல்லாம் பதில் என்னவென்றால், பார்த்தார்கள், கேட்டார்கள் என்றெல்லாம் சொன்னாலும், வாஸ்தவத்தில் வேத மந்திரங்கள் ரிஷிகளுடைய உயர்ந்த தியான நிலையில் அவர்களுடைய ஹ்ருதயத்திலே ஸ்புரித்தன, அதாவது flash ஆயின என்பதுதான். அந்த நிலையில் அவர்களுடைய கண் பார்க்காமலும், காது கேட்காமலுங்கூட இருந்திருக்கும். அப்படி அப்படியே உள்மனஸில் மந்திர ஸப்தங்கள் flash ஆகியிருக்கும்.

காண்பது, பார்ப்பது என்பது கண்ணால் செய்கிற காரியத்தை மட்டும் குறிப்பதல்ல. எல்லா உணர்ச்சியையும் அது குறிக்கும். “ஒருத்தன் வாழ்க்கையில் பல இன்ப துன்பங்களைக் கண்டான்” என்று சொல்கிற இடத்தில், ‘கண்டான்’ என்றால் கண்ணால் பார்த்தான் என்று மட்டுமா அர்த்தம்? ‘அநுபவித்தான்’ என்பதுதானே அதன் பொருள்? ‘மந்த்ர த்ரஷ்டா’ என்றாலும், இப்படியே அநுபவித்தில் தெரிந்து கொண்டதாக வைத்துக் கொள்ளலாம்.

வேதம் சப்த ரூபத்தில் இருப்பதால் அதை நம்முடைய காதுகளுக்கு மேற்பட்ட திவ்ய சக்தி பெற்ற காதுகளால் (திவ்ய ச்ரோத்ரத்தால்) ரிஷிகள் கேட்டுக் கொண்டார்கள் என்றும் சொல்வதுண்டு.

அர்ஜுனன் பகவானின் விச்வரூபத்தைப் பார்க்க ஆசைப்பட்டான்; அப்போது கிருஷ்ண பரமாத்மா, ‘இந்த உன் கண்ணால் என் விச்வரூபத்தை பார்க்க முடியாது. உனக்கு அதற்கான வேறு திருஷ்டியை, தெய்விகமான பார்வையைத் தருகிறேன்’ என்று சொன்னதாகக் கீதையில் இருக்கிறது (XI.8).

“திவ்யம் ததாமி தே சக்ஷு:”

அர்ஜுனனுக்கு திவ்ய சக்ஷுஸ் [தெய்விக ஆற்றல் வாய்ந்த கண்] உண்டானது போல், ரிஷிகளுக்கு பரமாத்மாவிடமிருந்து தோன்றி அகண்ட ஆகாசத்தில் வியாபித்திருந்த மந்திர சப்தங்களைக் கிரஹிக்கக் கூடிய திவ்ய ச்ரோத்ரம் [தெய்வீக சக்தி வாய்ந்த காது] உண்டாகியிருந்தது.

லோக ஸ்ருஷ்டிக்கும் லோக வாழ்க்கைக்கும் வேண்டிய சப்த சலனங்களை மட்டும்தான் வேதம் கொடுக்கிறது என்றில்லை. இதைத் தாண்டி பரமாத்ம ஸத்யத்தோடு ஒன்றாகப் போய் விடவும் அதில் மந்திரங்கள் இருக்கின்றன. ஒருத்தன் வந்த வழியாகவே திரும்பிப் போனால் புறப்பட்ட இடத்துக்கே போய் சேர்ந்து விடுவான் அல்லவா? அந்த மாதிரி, ஸ்ருஷ்டி எப்படி வந்தது என்று பார்த்துக் கொண்டே போகிற போது, கடைசியில் சலனமே எழும்பாத ஸ்தானத்துக்கு அது கொண்டு விட்டுவிடுகி்றது. சில மந்திரங்களினால் ஏற்படும் நாடி சலனமே அங்கே அழைத்துப் போகிறது. உபநிஷத் மஹா வாக்யங்கள், பிரணவம் எல்லாம் இப்படிப் பட்டவைதான்.

இவ்வளவும் எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், வேதத்தை யாரும் இயற்றவில்லை; ரிஷிகளும் இயற்றவில்லை; பரமாத்மாவுமேகூட யோசித்து யோசித்து ஓலைச் சுவடியும், எழுத்தாணியும் வைத்துக் கொண்டு வேதத்தை எழுதவில்லை என்று விளக்குவதற்குத்தான்.


* வேதத்தை ஏன் எழுதிப் படிக்காமல், வாயால் சொல்லிக் காதால் கேட்டே பயில வேண்டும் என்பதற்கான விளக்கத்தை “தெய்வத்தின் குரல் – முதற்பகுதி”யில் “வேத ரட்சணம் ஏன் ஆயுட்காலத் தொழிலாக வேண்டும்?” என்ற உரையில் காணவும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is அநாதி - அபௌருஷ்யம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வெள்ளையர் ஆராய்ச்சி - நல்லதும் கெட்டதும்
Next