போகிப் பண்டிகை

போகிப் பண்டிகை

ஒவ்வொரு ஆண்டும், தட்சிணாயணம், உத்திராயணம் என இரண்டு பகுதியாகப் பிரிக்கப்படுகின்றது. ஆறு மாதம் தட்சிணாயணம். ஆறு மாதம் உத்திராயணம். சங்கராந்தி முதல் - பொங்கல் முதல், உத்திராயணம் வருகிறது. உத்திராயணம் வடக்கு நோக்கி சூரியனுடைய நிலைமாறுகிறது. அவருடையே போக்கு மாறுகிறது. ஆகவே ஒளி அதிகமாகக் கூடுகிறது. அதற்கு முன் ஒளி சற்று குறைவாக இருக்கும். அதை வைத்துத்தான் சங்கராந்தி நல்ல ஒளியோடு தொடங்கும் நாள் என்று சொல்லப்படுகிறது. அதை வைத்துத்தான் சபரிமலையிலும் ஜோதி தரிசனம் வைத்திருக்கிறார்கள்.

உத்திராயணம் முதல், மங்கள காரியங்களை செய்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால், தட்சிணாயணத்தில் மங்கள காரியங்கள் செய்ய மாட்டார்கள். தட்சிணாயணம் என்பது தேவர்களின் இரவு காலம். ஆகவே இரவு காலத்தில் எந்த மங்கள காரியமும் செய்யக்கூடாது. உதயகாலம் முதல் எல்லாம் செய்யலாம். ஆகவே தை மாதம் முதல் அனைத்து காரியங்களுக்கும் சிறப்பான காலம்.

உஷத் காலம் - மார்கழி மாதம், சாதாரணமாகவே சூரியோதய காலத்தில் பூஜை, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. தேவதைகளுடைய உஷத் காலமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. அந்த சமயத்தில் பூஜை, பஜனை போன்றவை தவிர வேறெதுவும் செய்யும் பழக்கமே கிடையாது. இந்த மாதம் பக்தி செய்வதற்கே உண்டானது. இதற்குபின், தை வந்த பிறகு தான் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பகவத் சம்பந்தமான மங்கள காரியங்கள் மார்கழி மாதத்தில் நடைபெறும். மனித வாழ்க்கை சம்பந்தமான மங்கள காரியங்கள் தை மாதத்தில் நடைபெறும்.

போகிக் பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள். காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம். மறுநாள் சங்கராந்தி அன்று பிரத்யட்ச தேவதையான சூரியனுக்கு பூஜை செய்வது விசேஷம். அதற்கு மறுநாள் நமக்கெல்லாம் பால் தரும் பசுவை பூஜிக்க வேண்டிய நாள் இப்படி எல்லா ஜீவராசிகளுக்கும் இந்த மூன்று நாட்கள் மிகவும் பொருத்தமானது.

மனிதன் எல்லா ஜீவராசிகளோடும், தேவதைகளோடும் தனக்குள்ள தொடர்பை நினைவு படுத்திக் கொள்ளும் நாளாக வருவது இந்தப் பொங்கல் திருநாள்.

இந்தப் புண்ணியத் திருநாளில், ஒளி கொடுக்கும் நன்னாளில், நாம் சூரியனை வழிபட்டு, தேவதைகளின் அருளைப் பெற பூஜைகள் செய்து, அந்த ஒளியின் மூலம் நம் மனத்தில் உள்ள இருளை அகற்றி, நல்ல புத்தி ஒளி பெற்று, நல்வழி கிடைப்பதற்கு எல்லோருக்கும் ஆசீர்வாதம் செய்கின்றோம்!


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is கார்த்திகை தீபம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  பொங்கல் நன்னாள் வாழ்த்து
Next