Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

குமுதம் ஸ்பெஷல் பத்திரிகைக்கு அளித்த பேட்டி

குமுதம் ஸ்பெஷல் பத்திரிக்கைக்கு சுவாமிகள் அளித்த பேட்டி.

ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகளைப் பற்றிய 'பயோடேட்டா' குமுதத்தில்

வெளியானதும் வாசகர்களிடையே ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

இது சம்பந்தமாய்ப் போனில் பேசுகிறவர்கள் சராமாரியாகப் பொரிந்து

தள்ளுவார்கள். சமாதனமாக ஏதாவது சொல்ல முன்வந்தாலும், அதைக் காதில்

போட்டுக் கொள்ளாமல் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துவிட்டுத்தான்

வைப்பார்கள்.

இவ்வளவு சலசலப்பு ஏற்பட்ட பின்னர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமி அவர்களை

நேரில் தரிசித்து, ஒரு விளக்கம் தருவது நன்மை என்ற நினைப்போடு காஞ்சிக்குச்

சென்றோம்.

காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்திற்கு நாம் சென்றபோது பகல் 11.30 மணி

(புதன்கிழமை, பிப்ரவரி 2) முன் பகுதியில் பால பெரியவர்கள் அப்போதுதான்

பூஜை முடித்து பிரதட்சிணம் செய்து கொண்டிருந்தார்கள்.

மகா சுவாமிகள் முக்தியடைந்து சில நாட்களே ஆகியிருந்ததால்,

கூடியிருந்த பக்தர்களின் முகங்களில் ஒருவிதமான சோகம் அப்பிக்

கொண்டிருந்தது. ஸ்ரீ மடத்தின் எல்லா ஊழியர்களிடையேயும், நிர்வாகிகளிடமும்

மௌனமான அந்தச் சோகம் குடிகொண்டிருந்ததை உணர முடிந்தது.

ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள், மடத்தின் பின்புறம் அவருடைய வழக்கமான

இருப்பிடத்திலிருந்து மக்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருந்தார்கள். ஆண்,

பெண், குழந்தைகள் அடங்கலாகக் கிட்டத்தட்ட எழுபது எண்பது பேர்

இருப்பார்கள். ஒவ்வொருவர் கையிலும் சுவாமிகளின் ஆசீர்வாதம் பெற

கல்யாணப் பத்திரிகை.

கல்யாணம் நிச்சயமாகியிருந்த பெண்ணின் பெற்றோர் பயபக்தியோடு

தங்கள் முறைக்காக காத்திருந்தார்கள்.

கோரிக்கைகள் அனேகமாக ஒன்றுபோலத்தான்.

"பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது. பெரியவர் ஆசீர்வாதம்

பண்ண வேணும்."

"கம்ப்யூட்டர் படிப்பு முடிச்சிட்டான். நல்ல வேலையாகக் கிடைக்கணும்."

"எனக்கு சஷ்டியப்த பூர்த்தி. ரெண்டு பேருமா வந்திருக்கோம். ஆசீர்வாதம்

பண்ணுங்கோ."

"எங்க ஊரில் கும்பாபிஷேகம்."

"நான் தினசரி பூஜை பண்ணிட்டு வர்றேன். இந்தச் சிவலிங்கம் தான்

பூஜையில். ஏதோ மனசுக்குத் தோன்றியது. உங்களிடத்தில் காண்பிக்க வேண்டும்

என்று.."

நூற்றுக்கணக்கான கோரிக்கைகள், ஒவ்வொருவருக்கும் நிதானமாகப் பதில்

சொல்லி விபூதி, குங்குமம் பிரசாதம் தருகிறார்கள். பிரசாதத்தில் டயமண்ட்

கல்கண்டு கூடவே இருக்கும்.

சிவலிங்கத்தைக் காண்பித்தவரிடம் விளக்கம் தருகிறார் ஸ்ரீ ஜெயேந்திரர்.

"இது சிவலிங்கம் அல்ல. சாளக்கிராமம். ஆனால் விரிசல் கண்டிருக்கிறது.

பூஜையில் வைக்கக்கூடாது," என்று சொல்லி அதை என்ன செய்ய வேண்டும்

என்று பொறுமையுடன் விளக்குகிறார்.

பக்தர்களின் முகங்களில் அலாதியான திருப்தி. 'தெய்வத்தின் குரல்' எழுதிக்

கொடுத்த ரா.கணபதி அவர்களும் ஆசி பெறக் காத்திருக்கும் பிரமுகர்களில்

ஒருவர்.

வரிசையில் நகர்ந்துகொண்டே ஸ்ரீ சுவாமிகளைத் தரிசித்தோம்.

வேறு ஒரு வழியாக உள்ளே வரச் சொன்னார்.

சுவாமிகளின் வலதுபுறம் தாடிவைத்த துறவி ஒருவர் அமர்ந்திருக்கிறார்.

வெளியூரிலிருந்து வந்திருக்கிறார் என்று புரிகிறது. அவருடன் சுவாமிகள்

சரளமான இந்தியில் உரையாடி, ஆசி வழங்கி பிரசாதம் தந்து அனுப்புகிறார்.

அந்தத் துறவி அமர்ந்த இடத்தில் நம்மை உட்காரச் சொல்லிப் பணிக்கிறார்.

அதற்குள் வெளியூரிலிருந்து வந்துள்ள சில உயர் கல்வியாளர்களிடம் சுமார்

15 நிமிடங்கள் இந்தியிலும் தமிழிலும் மாறி மாறிக் கல்விப் பணித் திட்டங்கள்

குறித்து உரையாடுகிறார்.

சுவாமிகள் தான் அமர்ந்திருந்த சிறிய மரப்பீடத்திலிருந்து தன்

அருட்பார்வையைத் திருப்பி நம்மை ஆசீர்வதிக்கிறார்.

பயோடேட்டா

எந்த உள் நோக்கமும் இல்லாமல் நகைச்சுவை உணர்வோடு போடப்பட்ட

'பயோடேட்டா' பகுதியின் தன்மையை நமக்குத் தெரிந்த வரையில் விளக்கிச்

சொல்லத் துவங்குகிறோம்.

எந்தச் சமயத்திலும் சுவாமிகள் கோபப்படுவாரோ என்கிற பதை பதைப்பு

நமக்கு. ஆனால் பரம கருணையோடு, சற்றும் கோபப்படாமல் சொல்வதைக்

கேட்கிறார்கள். ஆனால் அந்த விளக்கத்தை அவர்கள் அங்கீகரித்தார்களா

என்பதை அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை.

சமயம்

"வேடிக்கையாகப் போடுவதற்குச் சமய சந்தர்ப்பம் கிடையாதா? மகா

சுவாமிகள் மறைந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஒவ்வொருவரும் இன்னமும்

அந்தச் சோகம் மாறாமல் கண்ணீருடன் நிற்கிறோம். அப்படிப்பட்ட சமயத்திலோ

வெளியிடுவது? எனக்கு அடையாளம், புன்னகை என்று போட்டிருக்கிறீர்கள்.

இப்படிப் பட்ட சமயத்தில் புன்னகை எங்கிருந்து வரும்? புன்னகை எங்கோ போய்

விட்டதே?"

இப்படி 'பயோடேட்டா' வாசகங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு

விமரிசித்தார்கள்.

சுவாமிகளின் உணர்வைப் புரிந்து கொண்ட நாம் அவர்கள் சொன்ன

அறிவுரைகளை ஏற்றுக் கொண்டோம்.

படம் எடுத்துக்கொள்ள அனுமதி வேண்டியபோது அருள்கூர்ந்து அனுமதி

தந்தார்கள்.

பின்னர் ஸ்ரீ மடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்த விவரங்களையும், மகா

சுவாமிகள் எவ்வாறு அவரை அந்தப் பீடத்தில் அமர்த்தினார் என்ற

வரலாற்றையும் ஒரு பேட்டியின் மூலம் விளக்கி ஆசிர்வதித்தார்கள். பிரசாதம்

தந்து கருணைப் பார்வையுடன் விடை கொடுத்தார்கள். அந்தப் பேட்டியின்

விவரம் இது -

முதல் தரிசனம்

நான் விழுப்புரத்தில் படித்தூக கொண்டிருக்கும் போது ஆசார்ய ஸ்வாமிகள்

(மகா ஸ்வாமிகள்) ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில்

கும்பாபிஷேகத்ததுக்காக வந்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் நான்

அவர்களை முதன் முறையாகத் தரிசித்தேன். 'ஒவ்வொரு குடும்பதிலிருந்தும் ஒரு

மாணவன் வேதம் படிப்பதற்கு வரவேண்டும்', என்று சொன்னார்கள். அதன்படி

என்னுடைய பெற்றோர் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளை வணங்கி, "என் பையனுக்குப்

பூணூல் போட்டு வைக்க வேணும். இவனையும் வேதம் படிப்பதற்குத் தயார்

செய்ய வேண்டும்," என்று தெரிவித்துக் கொண்டார்கள்.

ஆசார்ய ஸ்வாமிகள்,, "காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில்

கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அங்கே அழைத்து வந்து விடு.

அங்கேயே இந்த மாணவனுக்கு வேத பாடத்தை ஆரம்பித்து வைக்கலாம்," என்று

ஆருளாசி வழங்கினார்கள்.

இதுதான் முதல் சந்திப்பு.

ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு அடுத்த முகூர்த்த வேளையில் ஸ்ரீ

ஸ்வாமிகளுடைய பூர்வாசிரம கடைசி சகோதரர் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்

அவரை வைத்து அந்த அம்மன் சன்னதியிலேயே ஸ்வாமிகள் பூஜை செய்யும்

சன்னதியிலேயே - வேத பாட சிட்ஷையை ஆரம்பித்து வைத்தார்கள்.

திருவிடை மருதூர்

பிறகு திருவிடை மருதூருக்கு என்னை அனுப்பி வைத்தார்கள், என்னுடைய

ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகளுடன் சிதம்பரத்துக்கு சென்று ஸ்ரீ

நடராஜப் பெருமானைத் தரிசித்துவிட்டு- திருவிடைமருதூர் போய்ச் சேர்ந்தேன்,

என் பெற்றோர் விழுப்புரத்திலேயே தங்கிவிட்டார்கள்

பதின்மூன்றாம் வயதில்

என்னுடைய 13வது வயது வரை திருவிடைமருதூரில் வேதம் படித்து

வந்தேன். ஆசார்ய சுவாமிகள் காஞ்சிபுரம் யாத்திரையை எல்லாம் முடித்துக்

கொண்டு திரும்பவும் திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார்கள்.

சுமார் ஒரு வருடகாலம் ஆசார்ய சுவாமிகள் அங்கே தங்கயிருந்தார்கள்.

நான் வேதம் படிப்பதைப் பூர்த்தி செய்கிற நேரம். அப்படிப்பட்ட வேளைகளில்

என் பெயர், மற்றும் ஊர், படித்த படிப்பு பற்றி எல்லாம் அடிக்கடி விசாரிப்பார்கள்.

ஒருநாள் சுவாமிகள் திருவிடைமருதூருக்கு அருகில் உள்ள வேதாந்தபுரம்

என்ற ஊருக்குச் சென்றிருந்தார்கள். அங்கே ஸ்ரீ போதேந்திர சுவாமிகள் என்ற

பெயர் கொண்ட பெரிய மகானின் சமாதி உள்ளது. காஞ்சி காமகோடி பீடத்தை

அலங்கரித்த பெரியவரின் சமாதி அது. ஆசார்ய சுவாமிகள் அங்கு அடிக்கடி

சென்று விடுவார்கள். நானும் சுவாமிகளுடன் சென்றேன்.

சுவாமிகளின் எண்ணம்

அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஆச்சார்ய சுவாமிகள், திடீரென்று ஒரு

நாள், 'ஸ்ரீ மடத்துக்கு வருகிறாயா?' என்று என்னிடம் கேட்டார். 'நான்தான்

உங்களுடன் வந்து கொண்டிருக்கிறேனே,' என்ற சொன்னேன்.

'அப்படி அல்ல, என்னைப்போல நீயும் வருகிறாயா?' என்று கேட்டார்.

அப்போதுதான் சுவாமிகளின் மனத்தில் என்ன இருந்தது என்று புரிந்து

கொண்டேன். 'என் பெற்றோர்களைக் கேட்க வேண்டும்,' என்று சொன்னேன்.

உடனே என் பெற்றோர்களையும் ஊரிலிருந்து வரவழைத்தார்கள்.

அவர்களையும் கேட்டார்கள்.

பாக்கியம்

'சுவாமிகள் வேதம் படிப்பதற்கு பையனை விட வேண்டும் என்று

சொன்னீர்கள். அப்படியே செய்தோம். இப்போது ஸ்ரீ மடத்திலேயே

சுவாமிகளாகச் சேர்க்க விருப்பம் கொண்டிருக்கிறீர்கள். தங்கள் சித்தம், எங்கள்

பாக்கியம்," என்று என் பெற்றோர் தெரிவித்தனர்.

ஆகவே, ஆசார்ய சுவாமிகள் எப்போது என்னை விழுப்புரத்திலே

கண்டார்களோ, அப்போது என்னை இந்தப் பீடத்திற்கு வாரிசாக

வைக்கவேண்டும் என்ற எண்ணம் உதித்து விட்டது என்பது புரிந்தது.

பதினான்காம் வயதில்

என்னுடைய பதினான்காம் வயதில் ஸ்ரீ மடத்துக்கு நான் வர வேண்டும்

என்று சுவாமிகள் தீர்மானித்தார்கள். அப்போதிலிருந்தே ஸ்ரீ மடத்தில் கற்க

வேண்டிய பாடங்களை யெல்லாம் கற்கும்படி ஏற்பாடு செய்து விட்டார்கள்.

பின்னர் திருச்சிக்குச் சென்று அங்கு அருகில் உள்ள

திருவானைக்கோவிலில் படித்தேன். அங்கேயும் ஸ்ரீ மடத்துக்கு வேண்டிய

பாடங்களையே கற்றேன்.

பதினேழாம் வயதில்

பதினேழு வயது வரை இம்மாதிரியான பாடங்களையே கற்று வந்தேன்.

சுவாமிகள் ஒரு நாள் என்னை அழைத்து, 'அகில இந்திய யாத்திரை சென்று வா',

என்று உத்தரவிட்டார்கள். என் பெறறோருடன் ரயில் மூலமாக இந்தியாவில்

எல்லா ஊர்களுக்கும் ஷேத்திரங்களுக்கும் சென்று வந்தேன்,

பதினெட்டு வயது முடிந்தவுடன் "என்னுடனேயே கொஞ்சநாள் இரு" என்று

காஞ்சிபுரத்திலேயே தன்னுடன் வைத்துக் கொண்டார்கள். ஒராண்டு காலம்

அவ்வர்று கழிந்தது.

பத்தொன்பதாம் வயதில்

எனக்குப் பத்தொன்பது வயது தொடங்கியதும், காஞ்சிபுரத்திலேயே

என்னைச் சுவாமிகளாகத் தயாராக்கினார்கள்.

இப்படித்தான் பெரிய ஆசார்ய சுவாமிகளுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு,

ஸ்ரீ மடம் வரைக்கும் வந்து என்னையும் சுவாமிகளாக ஆக்கிய வரை நேர்ந்த ஒரு

நிலை.

பெயர் சூட்டல்

எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பதற்காக, சன்னியாச ஆசிரமம்

ஏற்றுக்கொள்வதற்கு முதல் நாள் புலவர்களையும் பண்டிதர்களையும் கூட்டி

என்னையும் கூடவே வைத்துக் கொண்டு ஆசார்ய சுவாமிகள் ஆலோசனை

செய்து கொண்டிருந்தார்கள்.

சந்திரசேகரன், மகாதேவன் என்கிற பெயர்கள் ஐந்தாறு தலை முறையாக

இந்தப் பீடத்தில் மாற்றி மாற்றிச் சூட்டப்பட்டு வந்தன.

அதன் தொடர்பாக இருக்கலாமா, அல்லது முற்றிலும் புதிதாக வேறு பெயரா

என்பது பற்றித்தான் ஆலோசனை.

நான் ஸ்ரீ மடத்துக்கு மாசி மாதத்தில் வந்து சேர்ந்தேன். அடுத்த சித்திரை,

வைகாசி மாதங்களில் பெரியவர்களுடைய பிறந்த தினம். அவர்களுடைய

அறுபது ஆண்டு நிறைவு பெறுகிற ஆண்டாகவும் அமைந்தது. அந்த ஆண்டின்

பெயர் ஜெய.

சந்திரனுடைய நிலையை அனுசரித்து வரக்கூடிய சாந்திரமான முறைப்படி

மாசி மாதக் கடைசியிலிருந்து ஸ்ரீ ராமநவமியைத் தொட்டு, தெலுங்கு வருஷப்

பிறப்பிலிருந்தே ஜெய வருஷம் வந்துவிடும். சூரிய சஞ்சார முறைப்படி தமிழ்

வருடப் பிறப்பு, பதினைந்து நாட்கள் தள்ளி வரும்.

இந்தச் சூழலில் பெயர் சூட்டல் பற்றிய ஆலோசனையில் 'ஜெய' என்கிற

பெயர் நினைவில் நின்றது.

'ஜெய' ஆண்டுக்கு மற்றொரு சிறப்பு உண்டு. பெரியவர்கள் பிறந்த ஆண்டு

அது. ஆகவே ஜெய என்கிற பெயரை முன்வைதது எனக்கு ஜெயேந்திர சரஸ்வதி

என்ற பெயர் சூட்டினார்கள்.

அந்த ஆண்டு தெலுங்கு வருஷப் பிறப்பு, ஸ்ரீ ராம நவமி விழாக்கள்

எல்லாம் விமரிசையாக நடந்தன. ஸ்ரீராமநவமியை விசேஷமாகக்

கொண்டாடுவார்கள். பத்து நாட்கள் வேள்விகள் நடத்திப் பூஜை செய்து ஸ்ரீராம

பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெறும். ஸ்ரீ மடத்திலும் விசேஷப் பூஜை

நடைபெற்றது. தற்போதுள்ள பெரியகாஞ்சி மடத்திலேயே ஸ்ரீராம நவமி

விழாவின் போது பட்டாபிஷேக தினத்தன்று, ஸ்ரீராமருக்கு அபிஷேகம் செய்கிற

இடத்திலேயே என்னையும் உட்கார வைத்தார்கள். அந்த ஜலம் விழும்

இடத்திலேயே நானும் உடர்கார்ந்திருந்ததேன். பெரிய சுவாமிகள் தன்

கையினாலேயே ஸ்ரீ ராமருக்கு அபிஷேகம் செய்கிற போது அடியேன் அங்கே

உட்கார்த்தி வைக்கப்ட்டு அந்த ஜலம் என் தலையில் விழும்படியாகச் செய்தார்கள்.

பட்டினப் பிரவேசம்

ஆசாரிய சுவாமிகள் ஸ்ரீராம பட்டாபிஷேக ஜலத்தை என்றைக்குக் தன்

கருணையால் என் தலைமீது விழச் செய்தார்களோ, அன்றைக்கே ஸ்ரீமடத்தின்

பீடாதிபதியாக என்னையும் ஆக்கி விட்டார்கள். ஸ்ரீமடத்துக்கு வந்து பத்துப்

பதினைந்து தினங்களுக்குள் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் செய்த கையோடு

பெரியவர்கள் தன் திருக்கரங்களால் எனக்கும் பட்டாபிஷேகம் செய்வித்து அன்று

மாலையே காஞ்சயின் நான்கு ராஜ வீதிகளிலும் பட்டினப் பிரவேசம் என்று

சொல்லுவார்கள் - என்னை ஊர்வலமாக வரச் செய்தார்.

அதாவது நான் வந்த பதினைந்து நாளுக்குள்ளேயே ஸ்ரீமடத்தின் முழுப்

பொறுப்பையும் எனக்குக் கொடுத்துவிட்டார்கள்.

பாக்கியம்

காஞ்சிபுரம் நகரப் பகுதியில் இருப்பதால் நிறையக் கூட்டம் சேருகிறது

என்பதால் பக்க்ததில் பாலாற்றங்கரை அருகே ஒரிக்கை என்ற கிராமத்தில் பெரிய

கொட்டகையாக நிர்மாணித்து, பிரத்யேகமாக இரண்டு வீடுகளையும் அமர்த்தி

அங்கயே பூஜை செய்யவும் நான் மேற்கொண்டு படிக்க வேண்டிய

பாடாந்திரங்களுக்கும் பெரிய சுவாமிகள் ஏற்பாடு செய்து விட்டார்கள்.

அந்தச் சமயத்தில்தான் பெரிய சுவாமிகளுக்கு அறுபது பிராயம்

பூர்த்தியானது. சஷ்டியப்த பூர்த்தி என்று அதைச் சொல்லுவார்கள்.

அந்தச் சஷ்டியப்தப் பூர்த்தி வைபவத்தையும் நானே பெரிய

சுவாமிகளுக்குச் செய்யம் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

அவர் சன்னியாசியாக இருந்தாலும் இந்த அறுபது ஆண்டு நிறைவு

விழாவை விசேஷ முறையில் வேள்விகள் நடத்தி, வேத விற்பன்னர்கள்

முன்னிலையில் ஒரு புனிதமான நிகழ்ச்சியாகக் கொண்டாடினோம். எதற்காக

இதைச் சொல்லுகிறேன் என்றால் ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தன்று என் தலையிலே

அவர் ஜலம் விட்டார்கள். அவருடைய சஷ்டியப்த பூர்த்தி விழாவின்போது

எலலாக் கலசங்களையும் வைத்துப் பூஜை பண்ணி ஹோமங்கள் செய்து அந்த

ஜலத்தை அவருக்கு அபிஷேகம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

அப்படி அவருடைய அறுபதாம் ஆண்டு விழாவை ஒரு வைபவமாகக்

கொண்டாடினோம். அன்று முதல் அவரோடு இணைந்து பாடம் படிப்பது- பூஜை

செய்வது, மடத்தை நிர்வாகம் செய்வது போன்ற எல்லா விஷயங்களிலுமே

கூடவே இருந்து, பேச்சுக் கொடுத்து 1970ம் ஆண்டு வரை அவர் கூடவே இருந்து

ராத்திரி வரை எல்லாம் செய்திருக்கிறேன்.

தனிமை

1970ம் ஆண்டு முதல் அவர் கொஞ்சம் தனிமையாக இருக்க வேண்டும்

என்ற விரும்பி சில கோயில்களிலே அல்லது குளத்தங்கரைகளிலே ஆசிரமம்

வைத்துக் கொண்டிருந்தார்கள்.

1976ம் ஆண்டுக்கும் பிறகு ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு கொஞ்சம்,

மகாராஷ்டிரம் கொஞ்சம் என்று 1980ம் ஆண்டு வரை 4 வருடங்கள் கொஞ்சம்

தனியாக யாத்திரை செய்தார்கள். 1980ம் ஆண்டு சதாராவில் நான் அவர்களைப்

பார்த்த பொழுது, 'தங்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. இனி யாத்திரை

எல்லாம் செய்ய வேண்டாம். திரும்பி வந்து விடுங்கள்,' என்று அவரிடம்

பிரார்த்தித்துக் கொண்டேன். அதன்படி அவர்களும் காஞ்சிபுரத்தை 83ம் ஆண்டு

வந்தடைந்தார்கள்.

83ம் வருடம்

அதற்குள் நான் தனியாக இருந்து மடத்தினுடைய பூஜைகள், காரியங்கள்

எல்லாவற்றையும் நிர்வகிக்க வேண்டியது சிரமமாக இருந்ததனால், பெரியவரின்

அனுமதியோடு பாலபெரியவரையும் தயாராக்கி, சிஷ்யராக்கி, கூட

வைத்துக்கொண்டு பெயரிவரையும் அழைத்துக் கொண்டு 83ம் ஆண்டு வந்து

சேர்ந்தோம்.

அப்போது முதல் அவர் ஸ்ரீ மடத்திலேயே தங்கி, எல்லோருக்கும் அருள்

பாலித்துக் கொண்டிருந்தார்க்.ள மற்ற மடங்களுடைய பீடாதிபதிகளுக்கும்

பெரியவருடைய நிலைக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. வெறும்

பீடத்தில் உட்கார்ந்து கொண்டு பீடாதிபதியாக இருந்து ஆசீர்வாதம் செய்வது

மட்டும் அல்லாமல், தனிமனிதனுடைய வாழ்க்கையிலே எத்தனை சுக துக்கங்கள்

இருந்தாலும், அவற்றிலும் பங்கு கொண்டு, அவர்களுக்கும் ஆசீர்வதித்து,

அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு பெருமை பெரியவருக்கு

உண்டு.

ஆகவேதான் இன்றைக்குக் கூடப் பலரும் விம்மி அழுதுகொண்டு

கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்த

ஒருவரை இழந்துவிட்ட நிலையிலே அவர்களெல்லாம் வருத்தப்படுகிறார்கள்.

தனிச்சிறப்பு

பொதுவான ஒரு பீடாதிபதியாக இருந்திருந்தால், சாமான்யமாக

இருந்திருக்கும் ஆனால் தனிப்பட்ட மனிதனுடைய ஆயிரக்காணக்கானவர்

வாழ்ககையிலே அவர் ஊன்றிப் போயிருருந்த காரணத்தால், அத்தனை

பேருக்கும் மனத்தில் பாதிப்பு ஏற்பட்டதனால், இது ஒரு நாடு தழுவிய துக்கமாக

இருக்கிறது. இது எந்த ஒரு பீடாதிபதிக்கும் இல்லாத தனிச் சிறப்பாக இருக்கிறது.

வழிகூட்டி

அந்தப் பழக்கங்களெல்லாம் அவரிடம் இருந்து வந்ததால், என்னுடைய

வாழ்க்கையிலே நானும் பொதுமக்களோடு இணைந்து, பழகி,

கஷ்டப்படுகிறவர்கள், துன்பப்படுகிறவர்கள், பின்தங்கியவர்கள் எல்லோரும்

வருத்தப்படும் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு வேண்டிய நன்மையைச் செய்ய

ஆர்வமும் ஊக்கமும் ஏற்பட்டது. அதற்கு வழிகாட்டி பெரியவர்.

அந்த வழியிலே நின்றுஅதை வளர்ந்தவன் என்ற முறையிலே நான் இருந்த

பணிகளைச் செய்தேன்,

அவர் எது செய்தாலும் சங்கல்பம் செய்வார். சங்கல்பம் 'இச்சா' சக்தி

என்பார்கள். அதுபோல் இச்சா சக்தியாக, சங்கல்ப மூர்த்தியாக விளங்கினார். நான்

கிரியா சக்தியாகச் செய்து காட்டினேன். இதுதான் எங்கள் இரண்டு பேருக்கள்

இருந்த ஒரு நிலை.

அப்படி, இந்தப் பீடத்திலே வெறும் பீடாதிபதியாக இல்லாமல், பொது

மக்களுக்காகவே, ஜனங்களுக்ககாகவே, தர்மத்திற்காகவே, ஆஸ்திகத்திற்காகவே,

ஆன்மிகத்திற்காகவே அதை வளர்ப்பதற்காக ஏற்பட்டது இந்தப் பீடம். அந்த

வகையில் அவர்கள் போட்ட விதை, அவர்கள் வளர்த்த செடி இன்று மரமாக

வளர்வதற்கு நான் உறுதுணையாக இருந்து இந்தப் பணிகளைச் செய்து

வருகிறேன்.

பணிகள்

இந்த மரமானது காயாகக் காய்த்துப் பழமாகக் கனிவதற்கு, வந்து

கொண்டிருக்கும் வேளையிலே திடீரென்று அவர் உடல் மறைந்து,

லட்சக்கணக்கானவர்கள் பாதிப்படைந்தது ஒரு புறம் இருக்க, சொந்த முறையில்,

அவர் இருக்கிறார்கள் என்ற பலத்திலே நான் பல பணிகைளச் செய்தேன். அவர்

நினைத்ததை என்னால் செய்ய முடிந்தது.

ஆகவே, ஒரு தனிமனிதனுடைய வாழ்க்கையிலே எவ்வளவு சுக துக்கங்கள்

வந்தாலும், அவற்றையும் போக்க முயற்சி செய்வது என்பதுதான் இந்தப்

பாரம்பரியத்தில் வந்த ஒரு விசேஷம்.

எத்தனையோ மகான்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம்

பிடாதிபதியாக இல்லை. பல பீடாதிபகள் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம்

மகான்களாகவும் இல்லை. பலர் மகான்களாகவும் இருந்திருக்கிறார்கள்

பீடாதிபதிகளாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், துயரங்களைத்

துடைத்தெறிந்து மக்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலே மேம்படுத்திக் கொடுத்து

குறைவு. நம்முடைய பெரியரவர்கள் தான், மடாதிபதியாகவும் இருந்து,

மகாத்மாகவும் இருந்து, தனிமனிதர்கள் வாழ்ககையிலும் ஓர் உயர்ந்த நிலையை

உண்டாக்கியர், அந்தப் பாரம்பரியத்தைக் காத்து வர நாங்களும் முயற்சி

எடுத்ததனால், அதே முறையிலே வளர்த்துக் கொண்டுவருகிறோம்.

குரு அனுக்கிரகம்

ஆகவே பொதுமக்கள் அனைவரும், நம்முடைய பாரம்பரியத்தையும்,

நம்முடைய சம்பிரதாயத்தையும், நம்முடைய நிலையையும் மறவாமல் எப்படி

அநாதியாக ஒரு கடவுள் இருக்கிறாரோ, பாரம்பரியமாக ஒர் கடவுள்

இருக்கிறாரோ, அதுபோல் பாரம்பரியமாக ஒரு பீடம் உண்டு. பாரம்பரியமாகப்

பீடாதிபதிகள் வருகிறார்கள் என்ற உணர்வோடு நாமெல்லாம் குரு பக்தி செய்து,

குரு அனுக்ரகத்தின் மூலமாக நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்திக் கொள்ள

வேண்டும்.

நடுநிலை

ஓரளவு உயர்ந்த நிலை அடைந்தவர்களைப் பற்றிச் சிலருக்குப் பலவிதமான

கருத்துக்கள் எல்லாம் தோன்றி, பலவிதமான சர்ச்சைகளெல்லாம் வருவது

இயற்கை. எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் சரி, சமயத் துறையாகட்டும், வேறு

துறையாகட்டும் எந்தத் துறையானாலும், ஒரளவு வளர்ந்த மனிதன் பற்றிச் சர்ச்சை

செயவது, பேசுவது என்பது பழக்கமாகிவிட்ட உலகம். அதனால் இன்றைக்கும்

ஒரு சிலருக்கு அப்படி எழுத வேண்டும். இப்படி எழுதவேண்டும். பேச

வேண்டும் என்று இருக்கலாம். ஆனால் அதைப்படிப்பவரோ, கேட்பவரோ

அதற்கு இடம் கொடுக்காமல், நம்முடைய பாரம்பரியம், நம்முடைய தெய்வீகம்,

நம்முடைய ஆன்மீகம், நம்முடைய குரு என்ற அந்த ஒரு உணர்வோடு

இருந்துகொண்டு, நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு தீயவை எல்லாம்

விட்டுவிட்டு, நடுநிலைப் பாதையில் நிற்க வேண்டுமாய் அனைவரையும்

ஆசீர்வதிக்கிறோம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is உஷா பத்திரிகைக்கு அளித்த பேட்டி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  ஜோதிடச் சுடர்ஒளி பத்திரிகைக்கு அளித்த பேட்டி
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it