KS பஞ்சமி விரதம்

KS பஞ்சமி விரதம்

நம்முடைய இந்து சமயத்தில் ஒவ்வொரு விரதங்களையும், பூஜைகளையும்

தம்பதிகளாகச் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தனியாக அல்லது

ப்ரம்மசாரியாகவோ, தனியாக கன்னிப் பெண்ணோ அல்லது தனியாக மனைவியை

இழந்த கணவனோ, பூஜை, விரதங்கள் முதலியவை செய்வது விசஷமாகச்

சொல்லப்படவில்லை. பெண்களுக்காக சுமங்கலியாகவோ அல்லது விதவைகளாக

இருக்கும் போதோ சில விரதங்களைச் செய்ய அறநூல்கள் கூறுகின்றன.

வரலக்ஷ்மி விரதம், காரடையான் நோன்பு போன்றவைகள் குடும்ப

க்ஷேமத்திற்காகவும், பதியினுடைய க்ஷேமத்திற்காகவும் மனைவியினால்

விசேஷமாகச் செய்ய சொல்லப்பட்டிருக்கிறது.

KS பஞ்சமி என்னும் விரதமானது சுமங்கலிகள் ஆனாலும், விதவைகள்

ஆனாலும் ஸ்திரீகளுடைய மாதாந்திர தீட்டு நின்றவுடன் செய்ய வேண்டும் என்று

அறநூல்கள் கூறுகின்றன. மாதாந்திர தீட்டு காலங்களில் வீட்டில் உள்ள

பொருள்களை தொடுவதோ, மற்றவர்களை தொடுவதோ, அவர்களிடம் பேசுவதோ,

அல்லது காரியங்களைச் செய்வதோ கூடாது. அப்படிச் செய்வதினால் பலவித

தோஷங்களும், பாவங்களும் சம்பவிக்கும். இந்த உண்மையை நமது

விஞ்ஞானிகள் கூட ஒப்புக்கொள்கிறார்கள். இந்தச் சமயத்தில் வீட்டில் உள்ள துளசி

மாடத்தில் துளசி செடியைத் தொட்டால் அந்தச்செடி கருகி, பட்டுப் போய் விடுவது

நடைமுறை உண்மை. இந்த விரதமானது பகவானை குறித்து செய்யும் விரதம்

அல்ல. சப்த ரிஷிகளைக் குறித்து செய்யக்கூடிய விரதம்.

அருந்ததியோடு கூடிய சப்த ரிஷிகளின் பூஜை முக்கியமானது. ஒரு சிலர்

ஒரு தடவை செய்து முடித்து விடுவார்கள். ஏழு வருஷங்கள் செய்து

இவ்விரதத்தை முடிப்பதும் உண்டு. ஏழு ப்ரதிமைகள் (பொம்மை)

வெள்ளியிலேயோ அல்லது தங்கத்திலேயோ ரிஷிகளின் ப்ரதிமையை செய்து

பூஜையில் வைத்து பூஜிக்கவேண்டும். பதினாறு உபசாரங்களினால் முறைப்படி

பூஜை செய்து விட்டு ஏழு பிராம்மணர்களுக்கு தானமாக அளித்தவிட வேண்டும்.

கஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விச்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, அருந்ததியோடு

கூடிய வஸிஷ்டர். இந்த ஏழு ரிஷிகளையும் பூஜிக்க வேண்டும். முதல் தினத்தில்

ஒரு வேளை சாப்பிட்டு விட்டு, இரவு சாப்பிடாமல் மறுநாள் காலை பூஜை முடித்து

விட்டு பிறகு தனது வீட்டிலுள்ள எல்லா பந்துக்களுடன் உணவு உட்கொள்ள

வேண்டும். இப்படி இந்த பூஜை செய்வதன் மூலம் இந்த லோகத்திலும், மறு

பிறவியிலும் கூட பாவ சம்பந்தம் இல்லாமல் மாதாந்திர தீட்டு உட்பட அத்தனை

தோஷங்களும் நிவிர்த்தியாகி நல்ல கதியை அடையக் கூடிய லோகங்களை

அடைகிறார்கள்.

பூஜை செய்ய வேண்டிய முறைகளை குடும்ப வாத்தியார் மூலமாக அறிந்து

கொண்டு ஒரு வருஷமோ, அல்லது மூன்று வருடமோ அல்லது ஏழு

வருடங்களோ பூஜை செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is மஹாளய பட்சம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  ஆவணி அவிட்டம்
Next