திதிக்ஷை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘உபரதி’க்கு அடுத்தாற்போல் திதிக்ஷை. திதிக்ஷை என்றால் ஸஹிப்புத்தன்மை, பொறுமை; ‘பொறை உடைமை’ என்று திருக்குறளில் சொல்லியிருப்பது.

“அடுத்தாற்போல்” என்றால் உபரதியில் ஸித்தி பெற்றதற்கு அப்புறம் திதிக்ஷை என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. பல தடவை சொன்னதை – “worth any number of repitition” என்கிறார்களே, அப்படி எத்தனை தடவை சொன்னாலும் தகும் விஷயத்தை – மறுபடி சொல்கிறேன்: ஆத்ம ஞானத்தை ஸாதித்துக் கொள்ள அநேகம் பண்ணவேண்டியிருக்கிறது- விவேகம் பெற வேண்டியிருக்கிறது, வைராக்யம் பெற வேண்டியிருக்கிறது, இந்த்ரிய நிக்ரஹம் மனோநிக்ரஹம் பண்ண வேண்டியிருக்கிறது, அப்படி பண்ணி மனஸ் எல்லாவற்றிலிருந்தும் கழன்று பட்ட கட்டை மாதிரி ‘உபரதி’யில் ஆகுமாறு செய்ய வேண்டியிருக்கிறது. இன்னம் பலவும் பண்ண வேண்டியிருக்கிறதென்றால் இவற்றில் ஒன்றை ஆரம்பித்துப் பூர்ணமாக அதை முடித்துவிட்டு, அப்புறம் இன்னொன்றை ஆரம்பித்து முடிப்பது, அப்புறம் இப்படியே அடுத்து அடுத்து சொன்னவைகளைப் பண்ணுவது என்று நினைத்துக் கொண்டுவிடக் கூடாது. போலீஸ் உத்யோகத்திற்கு இன்னின்ன யோக்யதாம்சம் – இவ்வளவு வயஸாயிருக்க வேண்டும், இன்ன படித்திருக்க வேண்டும், இவ்வளவு ‘ஹைட்’ இருக்கணும், ‘வெய்ட்’ இருக்கணும், ரிஸர்வேஷன் கொள்கைப்படி இன்ன ஜாதியாயிருக்கணும், இப்படிப்பட்ட நடத்தை இருக்க வேண்டும் என்று யோக்யதாம்சங்கள் – வைத்தால் அவற்றில் ஒன்று ஆன அப்புறம் இன்னொன்று என்று அர்த்தம் பண்ணிக் கொள்வார்களா? அந்த வயஸு லிமிட்டை முதலில் பூர்த்தி பண்ணனும், அத்தனை வயஸான அப்புறம் படிக்க ஆரம்பித்து படிப்பு க்வாலிஃபிகேஷனைப் பூர்த்தி பண்ணணும், படித்து முடித்த அப்புறம் குறிப்பிட்ட ‘ஹைட்’டுக்கு உசரணும், ‘வெயிட்’ போடணும், அப்புறம் அந்த ஜாதியாகணும், அதற்கப்புறம் அந்த மாதிரியான நடத்தையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் எப்படியிருக்கும்? ஓரளவுக்கு அந்த மாதிரி தான், நித்யாநித்ய வஸ்து விவேகத்திலிருந்து முமுக்ஷுத்வம் வரையிலுள்ள யோக்யதாம்சங்களை ஒன்றுக்கப்புறந்தான் இன்னொன்று வருகிறதென்று நினைப்பதும்! பல க்வாலிபிஃகேஷன்கள் தேவையாயிருப்பதால் அவை அத்தனையையும் ஸாதனாங்கங்களாக (ஆசார்யாள்) சொன்னார். கூடிய மட்டும் – கூடிய மட்டுந்தான் முழுக்க இல்லை – எந்த ஆர்டரில் அபிவிருத்தி க்ரமமோ அந்த ஆர்டரில் நித்யாநித்ய வஸ்து விவேகத்தில் ஆரம்பித்து முமுக்ஷுத்வம் என்று கொண்டு போய் முடித்திருக்கிறார். ஆனால் அந்த ஆரம்பத்திலேயே முமுக்ஷுத்வம் உள்பட எல்லாமும் கொஞ்சம் கொஞ்சம் அப்யாஸம் பண்ணித்தானாக வேண்டும், ஒவ்வொன்றும் தூக்கலாக அப்யஸிக்கப் படும் கட்டத்திலும் அந்த ஒன்றோடேயே – அந்த ஒன்றுக்குள்ளேயே என்று கூடச் சொல்லலாம்- பாக்கி அத்தனையும் கொஞ்சம் கொஞ்சம் வரத்தான் செய்யும்.

இன்னொன்று (சொல்ல வேண்டும்) விவேகம், வைராக்யம், சமம் என்றிப்படிப் பல அங்கம் சொன்னதில் எந்த ஒன்றிலுமே ஒருத்தன் கடைசியான ஸாக்ஷாத்காரம் அடையும் வரையில் பூர்ண ஸித்தி அடைந்ததாகவும் இருக்காது. ஒவ்வொன்றிலும் கொஞ்சம் பாக்கி சாக்கி பூர்ணத்வத்துக்கு ஒரு படி கீழே இருக்கத்தான் செய்யும். ஏனென்றால் இவற்றில் எந்த ஒன்றிலாவது பூர்ண ஸித்தி என்றாலே அது கையோடு கையாக மற்றதுகளையும் இழுத்துக் கொண்டு வந்து அதுகளும் ஸித்திக்கும்படிப் பண்ணிச் சடேரென்று கடைசியான ஸாக்ஷாத்கார ஸித்திக்கே ஏற்றிவிடும்.

ஸாதனை அத்தனையும் பண்ணுவது மனஸு பூர்ணமாக சுத்தமாகி, அப்படியே அழி(வு)ப்பட்டுப் போவதற்காகத்தான்; மனஸு அழிபட்டுப் போவதென்றால் ஆசை – விஷயவாஸனை – அழிபடுவதுதான். ஸாதனையின் முடிவு நிலையில்தான் இப்படி ஆசைகளும் விஷய வாஸனைகளும் அடியோடு அழிந்துபோய், உடனேயே ஸாக்ஷாத்காரம் ஏற்படும் என்று நான் சொன்னது கூட சரியில்லை. ஸாக்ஷாத்காரம் ஏற்பட்டால் தான் உடனே விஷய ருசிகள் அடியோடு அழியும். அதாவது ஸாக்ஷாத்காரந்தான் முதலில்; அப்புறம், அப்புறம் என்றால் ரொம்ப காலத்திற்கு அப்புறமில்லாமல், உடனேயே – ஆனாலும் ஸாக்ஷாத்காரத்திற்கு பிறகுதான் – விஷய ருசி பூர்ணமாக நசிப்பது. கீதா வாக்யம் இப்படித்தான் ஸ்பஷ்டமாக இருக்கிறது1. “ஒவ்வொரு இந்த்ரியத்திற்கும் ஆஹாரமாக இருக்கப்பட்ட விஷயங்களை அவற்றுக்குக் கொடுக்காமல் ஒருத்தன் இருந்து விட்டால், அந்தப் பழக்கத்தால் விஷயங்கள் அவனை விட்டுப் போய்விடும். (அதாவது ஸ்தூலமாக அவன் அவற்றை அநுபவிப்பது நின்று போய்விடும் என்று தாத்பர்யம்.) ஆனாலும் அநுபோக ரஸம் – ருசி கண்ட பூனை என்ற மாதிரி, அவன் பெற்ற அநுபவ ருசி – உள்ளுக்குள்ளே இருந்துகொண்டு தானிருக்கும். இது எப்போது விலகும் என்றால் பரம் பொருளை இவன் எப்போது தர்சிக்கிறானோ, அதாவது ஆத்மாவை எப்போது ஸாக்ஷாத்கரிக்கிறானோ அப்போது தான்’ என்று [பகவான்] சொல்லியிருக்கிறார்.

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந: |

ரஸவர்ஜம் ரஸோப்யஸ்ய பரம் த்ருஷ்டவா நிவர்ததே ||

“பரம் த்ருஷ்ட்வா”- பரமனைப் பார்த்தாலே, பரம தத்வத்தை அநுபவித்தாலே; “ரஸ: அபி நிவர்ததே”- அநுபவ ருசியும் நிவிருத்தியாகும்.

விஷய ருசியும் போய் மனஸ் அழிந்தால்தான் பரமதத்வ அநுபவம் என்று ஒரு பக்கம் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் அந்த அநுபவம் வந்தால்தான் இந்த ருசி போகிறதென்றால், “பைத்தியம் தெளிஞ்சால் கல்யாணம் ஆகும், கல்யாணமானால் பைத்தியம் தெளியும்” என்கிறார்போல் அல்லவா இருக்கிறது? இல்லை ருசியை அழித்து, மனஸை அழித்து, ஆத்ம தர்சனம் செய்ய இவனால் முடிந்த ப்ரயாஸை அத்தனையையும் ஸாதனை என்ற பேரில் இவன் பண்ணிப் பாடுபடத்தான் வேண்டும். ஆனாலும் முழுக்க அழிக்கப் பண்ண முடியாது. அப்போது தான், இவன் முழு முயற்சியும் பண்ணிய நிலையில், ஈச்வரன் பரம கருணையோடு இவனுக்கு ஆத்மாநுபவத்தைக் கொடுத்து, அதனாலேயே ருசியையும், ருசி காணும் மனஸையும் சேர்த்து அழிப்பது. முழுக்க இவன் ஸாதனையாகவே இருந்துவிட்டால் ஈச்வரனின் அநுக்ரஹ சக்திக்கு என்ன பெருமை? ஆகையால் கடைசிவரை இவன் தானாக முழுமை அடையாமல்தான் எல்லா ஸாதனாங்கங்களையும் அப்யஸித்தபடி இருக்க வேண்டும் என்றாகிறது.

மொத்தத்தில் பல ஸப்ஜெக்ட்களை எப்படி ஒரே ஸமயத்தில் கையோடு கையாக படித்துக் கொண்டே போய், கடைசிப் பரீக்ஷை வரையில் ஒவ்வொன்றிலும் பாக்கி சாக்கியும் வைத்துக் கொண்டு, பரீக்ஷையின் போது எல்லாவற்றையும் கம்ப்ளீட் பண்ணி எழுதி ஒவ்வொன்றிலும் பாஸ், எல்லாவற்றிலும் சேர்த்து மொத்தமாகவும் பாஸ் என்று வாங்குகிறோமா, அப்படித்தான் ஆத்ம ஸாதனையின் பல அங்கங்களை அப்யாஸம் செய்வதும்.

ஒன்றுக்கு அப்புறம் இன்னொன்று மாதிரி சொன்னது ரொம்ப ஆரம்பத்தில் அவை இன்னவென்று பிரித்துக் காட்டி ஸரியாகப் புரிய வைப்பதற்காகத்தான். ஸங்கீதம் பாலசிக்ஷையில் ஸ-ரி-க-ம-ப-த-நி என்று ஒரு ஸ்வரத்திற்கு அப்புறம் இன்னொன்று என்பதாக வரிசை பண்ணிக் கொடுத்திருப்பது அந்த ஆரம்ப நிலையில் ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடுவதற்காகத்தான். ஆனால் அஸல் பாட்டு, ஆலாபனை என்று வரும்போது இந்த வரிசை ஒன்றில்தான் ஸ்வரங்கள் போகணுமென்றில்லாமல் மேல் ஸ்வரங்களும் கீழ் ஸ்வரங்களும் கலந்து கலந்துதானே வருகின்றன?

‘உபரதி’ என்று மனஸ் எல்லாப் பிடிப்பையும் விட்டு விட்டு ஓய்ந்து போய்விட்ட அப்புறம் திதிக்ஷை என்ற பொறுமையை அப்யஸிக்கணும் என்று நினைத்துக் கொண்டால், “மனஸ்தான் ஏற்கெனவே பட்ட கட்டையாக ஓய்ந்து உட்கார்ந்து விட்டதே! அதற்கப்புறம் பொறுத்துக் கொள்ள என்ன இருக்கிறது? தூங்குகிறவனிடம் ‘பொறுமையாயிரு’ என்று சொல்கிற மாதிரியல்லவா இருக்கிது?” என்ற கேள்வி எழும்பத்தான் செய்யும். ‘அப்புறம் அப்புறம்’ என்பதையெல்லாம் ‘அதோடுகூட, அதோடுகூட’, ‘ப்ளஸ், ப்ளஸ்’ என்று அர்த்தம் செய்து கொண்டாலே ஸரியாக வரும். எல்லா ஸப்ஜெக்ட்களையும் கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்துச் சேர்த்துப் படித்துக் கொண்டே போக வேண்டும் என்ற உதாரணத்தை மறக்கக் கூடாது….

உபரதிப் பாடத்தை ஓரளவுக்கு நன்றாகப் படித்து வெற்றிக் கண்டால், ஸாதாரணமாக வாழ்க்கையில் ஏற்படுகிற நார்மல் ஸுக துக்கங்களில் இப்போது நாம் ரொம்பவும் பாதிப்படைவது போலில்லாமல் மனஸ் விலகி வெறிச்சென்று இருக்கும். அப்படி இருக்கும்போது நார்மல் என்பதற்கு வித்யாஸமாக அப்நார்மலாகவோ ஸப்நார்மலாகவோ ஸுக துக்கங்கள் நேர்ந்தால் அப்போது உபரத நிலையில் தடுமாற்றம் ஏற்பட்டு மனஸு பாதிப்புக்கு ஆளாகத்தான் பார்க்கும். இந்த இடத்தை நினைத்துத்தான் “திதிக்ஷஸ்வ” – “பொறுத்துக் கொள்” என்று ஆசார்யாள் – அவருக்கு முன்னேயே உபநிஷத் ரிஷி – – வைத்தார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். “திதிக்ஷஸ்வ” என்பது பகவான் வாக்கு. கீதோபதேச ஆரம்பத்திலேயே அர்ஜுனனைக் கூப்பிட்டு, “திதிக்ஷஸ்வ பாரத!” – “பொறுத்துக்கோப்பா!” என்றிருக்கிறார்.2

சீதோஷ்ணம் என்று ஒரு வார்த்தை சொல்கிறோம். அது வாஸ்தவத்தில் சீதம், உஷ்ணம் என்ற இரண்டு வார்த்தை சேர்ந்தது. சீதம் -குளிர்; உஷ்ணம் – சூடு, இது ஒரு இரட்டை; த்வந்த்வம், pair என்பது – எதிரெதிராக உள்ள ஜோடி. இதே மாதிரி ஸுக-துக்கம். “சீதோஷ்ணங்களைப் பொறுத்துக் கொள். ஸுக துக்கங்களைப் பொறுத்துக் கொள்” என்று பகவான் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார்.

கீதையில் அங்கங்கே இப்படி இன்னும் அநேக த்வந்த்வங்களைச் சொல்கிறார். “நீ” அவற்றைக் கடந்த த்வந்த்வாதீதனாக இரு. கார்யம் ஸித்தியானாலும் ஸரி, ஆகாவிட்டாலும் ஸரி, ஸித்தி – அஸித்திகள் இரண்டிலும் ஸமமாயிரு” என்கிறார்3. ஸமமாயிருப்பது என்றாலும் பொறுத்துக் கொள்வது என்றே அர்த்தம். இந்த ‘ஸித்தி – அஸித்தி’ ஜோடியைக் கடைசி அத்யாயத்திலும் சொல்கிறார். ஸித்தி-அஸித்தி என்பது வெற்றி-தோல்வியைத்தான். “ஸித்த்யஸித்யோர் நிர்விகார:கர்த்தா ஸாத்விக உச்யதே”4 – “வெற்றி தோல்விகளில் மாறுபாடு அடையாமலிருக்கும் ஜீவனையே ஸாத்விகன் என்பது” என்கிறார்.

ஆரம்பத்தில் சொன்ன சீதோஷ்ண, ஸுகதுக்கங்களை த்யான யோகம் உபதேசிக்கும்போதும் சொல்லி, கூட ‘மாநோபமாநயோ:’ என்று மான – அவமானம் என்ற இன்னொரு ஜோடியையும் சேர்க்கிறார்5. பல இடங்களில் ‘சுப-அசுப’ எதிரெதிர் ஜோடியைச் சொல்லியிருக்கிறார்6. புண்ய-பாபங்களையே சுப-அசுபம் என்பது. ப்ரியம்- அப்ரியம், இஷ்டம் – அநிஷ்டம், லாபம் – அலாபம், ஜயம் அபஜயம் என்று பல ஜோடிகளை அங்கங்கே சொல்லி7 இவை எல்லாவற்றிலும் ஸமமாயிருக்க வேண்டும் என்கிறார்.

இவற்றில் இப்போது கெட்டதாகத் தோன்றுவதைப் பொறுத்துப் பொறுத்துப் பழகி அப்புறம் அவற்றிடம் அசட்டையாக, உதாஸீனமாக ஆகிவிட வேண்டும். கடுங்குளிர், கடும் உஷ்ணம், துக்கம், அவமானம், அசுபம், அப்ரியம், அபஜயம் ஆகியவற்றில் இப்பேர்ப்பட்ட திதிக்ஷையை அப்யஸிக்க வேண்டும். இப்போது நல்லதாகத் தோன்றும் ஹித உஷ்ணம், ஹித சீதம், ஸுகம், மரியாதை, சுபம், ப்ரியம், ஜயம் ஆகியவற்றிலுந்தான் திதிக்ஷை வேண்டும். இல்லாவிட்டால் இரண்டையும் சேர்த்துச் சேர்த்து பகவான் சொல்ல மாட்டார். இரண்டிலும் ஒரே மாதிரி பாவம், ஸமமாயிருக்க வேண்டுமென்றால், இரண்டையும் சட்டை பண்ணாமல் உதாஸீனமாயிருக்க வேண்டுமென்று அர்த்தம்.

கெட்டதை ஸஹித்துக் கொள்வது, பொறுத்துக் கொள்வது என்றால் புரிகிறது. கார்யத்தில் பண்ண முடியாவிட்டாலும் அர்த்தம் புரிகிறது! நல்லதை ஸஹித்துக் கொள்வதென்றால் [என்னவென்று] புரியவில்லை. கேட்டால் வேடிக்கையாகக்கூட இருக்கிறது. ஆனால் ஸாதனையில் ஓரளவுக்கு ஜயித்தால் புரியும். நல்லதென்று தோன்றுவதெல்லாங்கூட வேண்டாமே என்று தோன்றும். ஒரு மந்த மாருதம் வீசுகிறது, உடம்புக்கு ஹிதமாயிருக்கிறது என்றால், “எதற்காக இப்படி ஒரு சரீர ஸெளக்யம் தெரிய வேண்டும்? மந்தமாருதமோ, சண்ட மாருதமோ இரண்டும் பொருட்டில்லை என்றுதானே இருக்க வேண்டும்? எப்படி இருக்கிறதோ, அப்படி இருந்து விட்டுப் போகட்டும் என்று நாம் பழக்கிக் கொள்கிறபோது, எதற்காக இப்படி மந்தமாருதம் என்று ஒன்று வீசி அதில் ஸெளக்யமிருக்கிறது என்று தனியாகப் பிரித்து காட்டி அதை நாம் சட்டை பண்ணி சந்தோஷப்படும்படி இருக்க வேண்டும்?” என்று தோன்றும். இப்படியே பணம் காசு வந்தால், மநுஷ்யர்கள் ரொம்பவும் ப்ரியத்தைக் காட்டுபவர்களாக வந்தால், ‘தரித்ரமேதான் இருந்துவிட்டுப் போகட்டுமே! அப்ரியமாக, கரித்துக் கொட்டுபவர்களாகவேதான் ஜனங்கள் இருக்கட்டுமே! நாம்தான் பொறுத்துக் கொள்ள பழகுகிறோமே! அதிலிருந்து வித்யாஸமாக இப்போது நடப்பானேன்? நடந்தால் மறுபடி நல்லது கெட்டது என்று வித்யாஸ எண்ணங்களும் ஏற்படத்தானே இடம் கொடுத்துப் போகிறது?” என்று தோன்றும். அதாவது கெட்டது வேண்டாம் என்று இப்போது தோன்றுகிற மாதிரி, ஸாதனையில் ஓரளவுக்கு முன்னேறிய அப்புறம் இப்போது நாம் நல்லது என்று நினைப்பதும் வேண்டாமே என்று தோன்றும். ‘நடக்கிறபடி நடக்கட்டும்” என்று, வேண்டாததை சஹித்துக் கொள்வதுதானே திதிக்ஷை? நல்லது என்று ஒன்று வேண்டாம் என்று தோன்றும் நிலையில் அந்த ‘வேண்டாம்’ எண்ணத்தைப் போக்கிக் கொண்டு அதையும் சட்டை பண்ணாமலிருப்பதுதான் நல்லதை ஸஹித்துக் கொள்வது! நல்லதில் திதிக்ஷை புரிகிறதல்லவா? நல்லது- கெட்டது என்று வித்யாஸம் பார்க்காமல் எத நடந்தாலும் அதில் கருத்து செலுத்தாமல் விலகி இருக்கலாம் என்று நாம் நினைத்தாலும், நம்முடைய பூர்வ கர்மாவுக்காக நல்லதுகள் பிடிவாதமாக நடக்கலாம். எதிர்பார்க்காமல் பணம் வந்து கொட்டலாம். ப்ரியமாக பந்து மித்ரர்கள் வந்து சேரலாம். இப்படி இன்னும் அநேகம் நடக்கலாம். அப்போது, “இதெல்லாம் வேண்டாமே! இப்படி அநுகூலமான விஷயங்களாக இல்லாமல், ப்ரதிகூல நிலைமையிலிருந்தும் நாம் மனஸை ஸந்தோஷமாக, த்ருப்தியாக வைத்துக் கொண்டால்தானே ச்லாக்யமாயிருக்கும்? அதோடு நல்லதாகத் தோன்றுகிறவை நம்மை மாயையில் இழுக்கிறவைதானே? அதனால் இவை வேண்டியதில்லை’ என்று நினைக்காமல் நல்லதையும் பொறுத்துக் கொள்ள, நல்லதிலும் திதிக்ஷையைக் காட்ட இடமிருக்கிறதென்று புரிகிறதா?

திதிக்ஷையை “ஸர்வ து:காநாம் ஸஹநம்” [எல்லா துக்கங்களையும் ஸஹித்துக் கொள்வது] என்று ஆசார்யாள் “விவேக சூடாமணி”8. “அபரோக்ஷாநுபூதி”9இரண்டிலும் ஒரே போல ‘டிஃபைன்’ செய்திருக்கிறார். அதனால் அது நமக்குத் துக்கமாகத் தோன்றுவதை ஸஹித்துக் கொள்வதாக மட்டுமே ஆகும்; ஸுகத்தையும் சட்டை பண்ணாமல் இருப்பதைக் குறிக்காது என்று நினைத்து விடக்கூடாது. தற்போது நாம் ஸுகம் என்று நினைப்பதில் வாஸ்தவத்தில் ஸுகமில்லை. ஞானம் ஒன்றுதான் ஸுகம். அத்வைத ஞானம் ஒன்றில் விளைவதுதான் ஸுகம். த்வைத லோக அநுபவம் அத்தனையுமே அந்த ஞானத்திற்கு மாறானதால் துக்கந்தான். இதிலே நமக்கு இப்போதே துக்கமாகத் தெரிவதாவது, “போதும் இந்த உலக உழப்பறிசல்” என்று நம்மை ஞானப் பக்கம் போகச் செய்யும். ஸுகாநுபவமோ இன்னும் நன்றாக உலகத்தோடேயேதான் கட்டிப்போடும். ஆகையால் அந்த ஸுகத்தை ஸுகமாக நினைக்காத, அதாவது அதுவும் துக்கமே என்று நினைக்கிற மனப்பான்மை வரவேண்டும். அதற்கும் அப்புறம் தற்போது துக்கம் என்று நினைப்பதை ஸஹித்துக் கொள்வதைப் போலவே ஸுகம் எனப்படும் துக்கத்தையும், ‘அது பாட்டு நடந்து விட்டுப் போகட்டும்; அதனால் நாம் பாதிக்கப்படக்கூடாது’ என்று அசட்டை மனப்பான்மையால் ஸஹித்துக் கொள்ள வேண்டும். அந்த ஸ்டேஜில் தற்போதைய ஸுகமும் துக்கமாகி விடுவதால்தான் ஆசார்யாள் ‘து:காநாம் ஸஹநம்’ என்று மாத்திரம் சொன்னது. நம்முடைய ஸ்டேஜில் ஸுக-துக்கம் என்ற இரட்டையை, த்வந்த்வம் என்பதை, ஒருபோல ஸஹித்துக் கொள்வதே திதிக்ஷை என்பதுதான் கீதாதி சாஸ்திரங்களிலிருந்து பெறப்படும் உண்மை. அதாவது, ஸுகத்தை – நல்லதாகத் தோன்றுவதையும் – ‘போய்ட்டுப் போறது’ என்று பொறுத்துக் கொள்ள வேண்டும்.

அது கொஞ்சம் நன்றாகப் பக்குவப்பட்ட அப்புறம். அதற்கு முன் ஸ்டேஜிலும், கீழ் நிலையிலும் இன்னொரு விதத்தில் “நல்லதில் திதிக்ஷை”யை அப்யஸிக்க வேண்டும். [அது] என்னவென்றால் நல்லது என்பது நடக்கும்போது ஆனந்தத்தில் நம் மனஸ் பொங்குகிறது. அதுவும் மனக்கொந்தளிப்புதானே? கெட்டதிலும் துக்கத்திலும் ஒரு விதமாக மனஸு கொந்தளித்து ஸமநிலை கெடுகிறது என்றால் நல்லதில், ஸுகத்திலுந்தான் இன்னொரு தினுஸில் சாந்தமாய் அடங்கியில்லாமல் கூத்தாடுகிறது. இதுவும் கூடாது. மனஸ் ஆட்டமே இல்லாமல் ஆனால்தான் ஆத்ம தர்சனம் கிடைக்கும். ஆகையால் நல்லது என்பதில் ஏற்படும் ஸந்தோஷமான கொந்தளிப்பையும் அடக்க வேண்டும். இதுவும் ஒரு விதத்தில் ‘பொறுத்துக் கொள்வது’தான். பொறுத்துக் கொள்வது என்பதைத் தாங்கிக் கொள்வது என்றும் சொல்கிறோம். இங்கிலீஷிலும் “for-bearance” என்கிறார்கள். பாரத்தை பாரமாக நினைக்காவிட்டால் தாங்கிக் கொள்ள முடிகிறது என்று அர்த்தம். பாரம் வைக்காத போது தராசு முள் ஸம நிலையில் இருக்கிறது. தராசின் இரண்டு தட்டில் ஒன்று நல்லது, மற்றது கெட்டது என்பது வைத்துக் கொண்டால், எந்தத் தட்டில் பாரத்தை வைத்தாலுந்தானே முள் அப்படியும் இப்படியும் ஆடிவிட்டுக் கோணலாக நிற்கிறது? அப்படி, கெட்டதுகளால் உண்டாகும் அநுபவம் என்ற பாரம் மாத்திரமில்லாமல் நல்லதுகளால் உண்டாகிற உணர்ச்சி பாரமுந்தான் மனஸை ஆடப் பண்ணிக் கோணிப் போக வைக்கிறது. அப்படி ஆடவிடக் கூடாது. நல்லது என்பதன் பாரத்தையும் பாரமாக நினைக்காமல் தாங்கிக் கொள்ள வேண்டும், அதாவது பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் நல்லதிலும் திதிக்ஷை.

நல்லது, நல்லது என்று இங்கே சொன்னதெல்லாம் ஆத்மாவுக்கு அந்தரங்கமாக நல்லதை அல்ல; லோக வாழ்க்கையில் நல்லதாகத் தெரிவதைத்தான்; அப்படித் தெரிந்து இதிலேயே கட்டிப் போட்டு ஆத்மாவின் பக்கம் போகவிடாமல் பண்ணுபவைகளைத்தான்.

கெட்டது என்பதிலேகூட இல்லாத ஒரு பெரிய கெடுதல் இந்த நல்லதாகத் தோன்றுகிறவற்றில்தான் இருக்கிறது. என்னவென்றால் நல்லது என்பதில் உண்டாகும் ஸுகம் நமக்குப் பிடித்தமானதாக இருப்பதால் அது மறுபடி மறுபடி கிடைக்க வேண்டும் என்ற அவா, பற்று உண்டாகி அது வேறு மனஸை ஸதா அலைக் கழிக்கிறது. அந்த அவாவுக்கு ‘ஸ்ப்ருஹா’ என்று பெயர். அது ஏற்படாமல் தடுப்பதும் திதிக்ஷையின் ‘பொறுத்துக் கொள்வதில்’ சேர்ந்ததுதான்.

து:கேஷு அநுத்விக்நமநா: ஸுகேஷு விகித ஸ்ப்ருஹ: என்று சொன்னபடி10 துக்கம் ஏற்பட்டால் மனஸ் தவிக்காமலும், ஸுகங்கள் ஏற்படும்போது ஸ்ப்ருஹா உண்டாகாமலும் இருப்பதே திதிக்ஷை.

ஸுக துக்கம் முதலிய எல்லா த்வந்த்வ அநுபவங்களிலிருந்தும் விடுபட உதவுவது திதிக்ஷை. த்வந்த்வம் போவது என்றால் த்வைதம் போவது. அதாவது அத்வைதம். த்வந்த்வம் போனால் ஸம்ஸார பந்தமே போய் மோக்ஷத்திற்கு வழி திறக்கிறது. “நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத் ப்ரமுச்யதே” 11: ‘த்வந்த்வம் போனவன் பந்தத்திலிருந்து ஸுலபமாக விடுபட்டு விடுகிறான்’ என்று பகவான் பரம லக்ஷ்யத்தையே திதிக்ஷையின் முடிவான பலனாகக் காட்டியிருக்கிறார்.

உபநிஷத் பாஷ்யத்தில் [திதிக்ஷையுடன் கூடியவனான] திதிக்ஷு பற்றி இதை ‘கன்ஃபர்ம்’ செய்வதாக, “திதிக்ஷு : த்வந்த்வ ஸஹிஷ்ணு:” – “எதிரெதிரான இரட்டைகளை ஸஹித்துக் கொள்பவன் திதிக்ஷு” என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்12. இரட்டை போனால் ஒற்றைதானே? ஒற்றை என்பது ஏக ஆத்மாதானே?

நேராக துக்கமாகத் தோன்றுவதோ, அல்லது ஸுகம் மாதிரித் தோன்றி உண்மையில் துக்கமாக இருப்பதோ எதுவானாலும் அதனால் சிந்தைப் படக்கூடாது; அதாவது விசாரப்படக்கூடாது, புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. இந்த துக்க ஸுகங்கள் நேராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாமென்று எதிர் உபாயங்களைத் தேடவும் கூடாது. பேசாமல் ஸஹித்துக் கொண்டிருக்க வேண்டும் – இதுவே ஆசார்யாள் உபதேசம்.

ஸஹநம் ஸர்வது:காநாம் அப்ரதீகார பூர்வகம்|

சிந்தா விலாப ரஹிதம் ஸா திதி்க்ஷா நிகக்யதே13 ||

“அப்ரதீகார பூர்வகம்”- மாற்று உபாயம் தேடக்கூடாது. ‘ப்ரதீகாரம்’ என்றால் மாற்று நடவடிக்கை. துக்கத்தை (ஸுகத்தையும் அதிலேயே சேர்த்தாயிற்று) மாற்றுவதற்கு எதிர் நடவடிக்கை நினைக்கக்கூடாது. அது பாட்டுக்கு நடந்து விட்டுப் போகட்டும் என்று அலக்ஷ்யமாக விட்டுவிட வேண்டும். “சிந்தா விலாபரஹிதம்”- சிந்தை, கவலை கூடாது; ப்ரலாபிக்கக் கூடாது; அழப்படாது; இவ்விதத்தில் “ஸர்வ து:காநாம் ஸஹநம்” எல்லாத் துக்கங்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் திதிக்ஷை என்று சொல்லப்படுவது: “ஸா திதிக்ஷா நிகத்யதே”. “அதுதான் திதிக்ஷை” என்று ஆசார்யாள் சொல்லாமல் “அவள் தான் திதிக்ஷை” என்று பெண்பாலில் சொல்லியிருக்கிறார்! “திதிக்ஷா” என்பது பெண்பால் வார்த்தை.

‘நித்யாநித்ய வஸ்து விவேக’த்தைச் சொல்லும்போது “ஸோயம் நித்யாநித்ய வஸ்துவிவேக:”, “அவன்”- “ஸோ (அ) யம், ஸ: அயம்”- என்று ஆண்பாலில் சொன்னார். “விவேக:” என்ற வார்த்தை ஆண்பாலாகவே இருக்கிறது. ஸாதாரணமாக ஒன்றை ஆராய்ந்து பார்த்துச் செய்வது புருஷ குணமாகவே சொல்லப்படுவதால் அப்படி வைக்கப் பட்டிருக்கிறதோ என்னவோ? ஸ்த்ரீகளுக்குச் சபல புத்தி அதிகம்; ஆய்ந்தோய்ந்து பார்க்க மாட்டார்கள்; பின்னாடி ‘பெண் புத்தி பின் புத்தி’ என்று வருத்தப்படுவார்கள் என்று சொல்வது வழக்கம். நடைமுறை எப்படி இருந்தாலும் இப்படி ஒரு எண்ணமும், வசனமும் பொதுவாக இருந்து வருவதால் அப்படி [விவேகத்தை ஆண்பாலாக] வைத்திருக்கலாம்.

வைராக்யத்தை ‘வைராக்ய’ என்று [ஆண்பாலில்] சொல்லாமல் ‘வைராக்யம்’ என்று ஒன்றன்பாலாக – ‘ந்யூடர் ஜென்ட’ராக ஆண் – பெண் என்றில்லாத ஜடமாகச் சொல்வது. இது எடுப்பாக தெரியும்படி [ச்லோகத்தை] ஆரம்பிக்கும்போதே ‘தத் வைராக்யம்’- “அது வைராக்யம்” என்று ஆசார்யாள் போட்டிருக்கிறார். வைராக்யத்தில் மனஸ் மரத்து, மரமாக, ஜடமாகப் போய்விடணுமென்று காட்டுவதாகத் தோன்றுகிறது!

விவேகத்தில் சீர் தூக்கிப் பார்க்கும் கார்யம் நிறைய இருக்கிறது. அதன் விளைவாக ஆசையில்லாமல் பட்ட கட்டை மாதிரி இருக்கும் மனநிலைமையே வைராக்யத்தில் முக்யமாக இருக்கிறதே தவிரக் கார்யம் அதிகமாக இல்லை. நிறையக் கார்யம் பண்ணுவதற்கு பௌருஷம், ஆண்மை, தேவைப்படுவதால் “ஸ:” – “அவன்” என்று ஆண்பாலில் ஸ்பஷ்டமாகக் குறிப்பிட்டார். கார்யமில்லாமல் கட்டை மாதிரி இருப்பதை “தத்”- “அது” என்றார்.

சமம், தமம் என்ற வார்த்தைகள் “சம:”, “தம” என்று ஆண்பாலில் இருக்கின்றன. அடக்குவது என்பதுதான் இரண்டிற்கும் நேர் அர்த்தம் என்று சொன்னேனல்லவா?அதற்கேற்றாற்போல் அந்த வார்த்தைகளும் ஆண்பாலாக இருக்கின்றன!

‘சமம்’ இன்னது என்று சொன்னபின் இதுவே “மநஸ:சம உச்யதே” ‘மனத்தின் சமம் எனப்படுகிறது’ என்று முடித்திருக்கிறார். “சமமுச்யதே” [சமம் உச்யதே] என்றிருந்தால்தான் [சமம் என்பது] நியூடராகும்; “சம உச்யதே” என்பதால் ‘சம:’- ‘சமன்’ என்று ஆண்பால்தான் ஆகிறது. ஆனாலும் விவேகத்தைச் சொல்லும்போது ஸ்பஷ்டமாக ‘ஸ:’ – ‘அவன்’ என்று போட்டது போல் இங்கே போடவில்லை. இங்கே ‘சம’த்தை வெறுமே மனவடக்கம் என்று டிஃபைன் பண்ணாமல், “தன்னுடைய லக்ஷ்யத்தில் அடங்கியுள்ள நிலை” – “ஸ்வலக்ஷ்யே நியத அவஸ்தா”- என்றிருக்கிறார். சிந்தனை ஓட்டத்தை மனஸ் அடக்கும் ஆண்மை வாய்ந்த கார்யத்துக்கு அப்புறம், லக்ஷ்யமான ஆத்மாவில் அடங்கியிருக்கும் அமைதி நிலைமையைச் சொல்கிறார். அதனால் ரொம்பவும் பௌருஷத்தைக் காட்டும் ப்ரயோகம் வேண்டாம் என்று “அவன்” போடவில்லை போலிருக்கிறது!

ஆனால் “தம”த்தைச் சொல்கிறபோதோ “ஸ தம: பரிகீர்த்தித:” “அவன் தமன் எனப் போற்றப்படுகிறான்” என்று அழுத்தமாக ஆண்பால் ப்ரயோகம் பண்ணியிருக்கிறார். இந்த்ரியங்கள் அறுத்துக்கொண்டு ஓடும்போது இழுத்துப் பிடித்து அடக்குவதற்கு நிரம்ப ஆண்மை வேண்டுந்தானே?

“உபரதி” என்பது பெண்பால். செயல் துடிப்பு ஆண்மை என்றால் ஒரு செயலுமில்லாமல் ஓய்ந்து போய்ச் சும்மா இருப்பது பெண்பாலாகத்தானே இருக்க வேண்டும்? அதனால் “உபரதிருத்தமா” [உபரதி: உத்தமா] ‘உத்தமியான உபரதி’ என்று சொல்லியிருக்கிறார். ‘உத்தம:’ என்று சொன்னால்தான் உத்தமன் – ஆண்பால். ‘உத்தமா’ என்றால் உத்தமி என்றே அர்த்தம்.

அப்புறம் அடுத்த ‘திதிக்ஷா’ வை “ஸா”- “அவள்” என்று ஸ்பஷ்டமாகப் போட்டுப் பெண்பாலாகத் தெரிவித்திருக்கிறார். பொறுத்துக் கொள்வது பெண்களின் – தாய்க்குலம் என்பதன் – தனிச் சிறப்பு. ‘பொறுமைக்கு பூமாதேவி’ என்று ஸ்த்ரீ தேவதையைத்தானே சொல்கிறோம்?


1 II.59

2 கீதை II.14

3 கீதை IV.22

4 கீதை XVIII.26

5 கீதை VI.7.

6 கீதை II.57; IX.28; XII.17

7 கீதை XIV.24; XIII.9; II.38.

8 ச்லோ. 24

9 ச்லோ. 7

10 கீதை II.56

11 கீதை V.3

12 ப்ருஹதாரண்யக பாஷ்யம் IV.4.23

13 விவேக சூடாமணி, 24 (அ) 25

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is உபரதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ச்ரத்தை
Next