Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வைராக்யம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

நித்ய – அநித்யங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, கொள்ள வேண்டியதைக் கொண்டு, தள்ளவேண்டியதைத் தள்ளணும். கொள்ளுவதைவிடத் தள்ளுவது ரொம்ப முக்யம். வாழ்க்கையிலேயே பொதுவாக இன்ன செய்யணும் இன்ன செய்யக்கூடாது என்றிருப்பதில் செய்யவேண்டியதைச் செய்யாவிட்டால்கூடப் பரவாயில்லை; செய்யக் கூடாததை செய்துவிட்டால் மஹாகஷ்டம் என்று பார்க்கிறோம். ஒரு ஜலதோஷம் வருகிறது. ‘கடுகுப் பொடி சாதம் சாப்பிடு, ஜஸ்கிரீம் சாப்பிடாதே’ என்று சொன்னால் கடுகுப்பொடி சாதம் சாப்பிடாவிட்டால்கூடப் பரவாயில்லை; ஐஸ்கிரீம் சாப்பிட்டாலோ கபம் ஒரேடியாகக் கட்டிக் கொண்டு ஜ்வரமே வந்துவிடுகிறது. இப்படி ஆகாததைச் சாப்பிட்டால் உடனே விபரீத பலன் உண்டாவதுபோல ஆகிறதை சாப்பிட்டால் உடனே அது நல்லது பண்ணுமா என்றால், பண்ணுவதில்லை. ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன் கபம் கட்டிக் கொள்கிற அந்த வேகத்தில் கடுகுப்பொடி சாப்பிட்டவுடன் ஜலதோஷம் விடுவதில்லை. காவேரியில் கரையோரத்தில் ஸ்நானம் செய்தால் ஸெளக்யமாயிருக்கும். அந்த ஜலம் உடம்புக்கும் நல்லது, உள்ளத்திற்கும் நல்லது பண்ணும். ஆனால் நீச்சல் தெரியாதவர் ஆழத்துக்குப் போகப்படாது. போனால் சுழல் இழுத்துக் கொண்டு போய்விடும். காவேரி ஸ்நானம் பண்ணாவிட்டாலும் பரவாயில்லை. அப்படியே ஸ்நானம் பண்ணினாலும் அப்போதைக்கு சுத்தமாக, மனஸும் தெளிவாக இருந்தாலும் விசேஷமாக தேஹாரோக்யமோ, புண்ய விசேஷமோ தெரிந்து விடுவதில்லை. ஆனால் ஆழத்துக்குப் போனாலோ நிச்சயமாகச் சுழல் இழுத்து ப்ராணாபத்தில் கொண்டுவிட்டு விடுகிறது. மஹாமாயை விளையாட்டில் இப்படிக் கெடுதல் செய்கிற சக்திகளுக்கே ஜாஸ்தி ‘பவர்’ இருக்கிறது.

ஆனபடியால் எது ஆத்மாபிவ்ருத்திக்கு உகந்தது, எது குந்தகம் பண்ணுவது என்று அலசிப் பார்த்து தெரிந்து கொண்ட பிறகு குந்தகம் பண்ணுகிறவைகளை ஒதுக்கித் தள்ளுவதற்கு முதல் முக்யத்வம் கொடுக்க வேண்டும்.

முன்னேயே சொன்னாற்போல, ‘பிறகு’ என்றால் ஒவ்வொரு படியாக முதல் படியை முடித்த பிறகு இரண்டாவதாக இந்த ஸாதனாங்கத்தைப் பின்பற்ற வேண்டுமென்று அர்த்தமில்லை. சேர்த்துச் சேர்த்து, கலந்து கலந்தே எல்லா அங்கங்களையும் அப்யஸிக்கும்படி இருக்கும். அதில் ஒவ்வொரு ஸமயத்தில் எந்த ஒன்று பிரதானமாயிருக்கிறதோ அதைப் படிவரிசையில் ‘பிறகு’ வருகிற படி மாதிரி சொல்வது.

ஒரு கரு குழந்தையாகிறதென்றால் முதலில் கால், அப்புறம் வயிறு, அப்புறம் (மார்)பு, தலை என்றா ஒவ்வொரு அங்கமாக வளர்கிறது? எல்லாந்தானே ஒருமிக்கச் சேர்ந்து சேர்ந்து வளர்கிறது? அப்படித்தான் side by side இந்த ஸாதனாங்கங்களும் – one after other இல்லை. அதில் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொன்றில் ஜாஸ்தி கான்ஸென்ட்ரேஷன்.

முதலில் நல்லது கெட்டதைச் சீர் பிரிக்கிறது. அப்படிச் சீர் பிரிக்கும்போதே கெட்டதைத் தள்ளுவதும் நல்லதைக் கொள்ளுவதும் கொஞ்சங் கொஞ்சம் அப்யாஸத்தில் வரும். அப்புறம் ஒரு மாதிரி இந்தச் சீர்ப்பிரிப்பு வேலை ஆடோமோடிக்காக ஆகிவிடும் – அத்தனை காலம் அதிலேயே பழகிவிட்டதால்! அப்போது தள்ளவேண்டியதைத் தள்ளுவதில் முக்யமாகக் கான்ஸென்ட்ரேஷனைத் திருப்ப வேண்டும்.

அதுதான் ஸாதன சதுஷ்டயத்தில் இரண்டாவது அங்கம். அதற்கு பேர் வைராக்கியம் என்பது.

விரக்தி என்றும் அதை சொல்வது:

ராகம், ரக்தி என்றால் ஆசை என்று அர்த்தம். ஆசையை விடுவது வைராக்யம், விரக்தி.

ஆத்ம ஞானத்திற்குப் பெரிய குந்தகம் புலனின்பங்கள் தான்; இந்த்ரியானந்தங்கள் என்பவை. ஒரு இன்பத்தைத் தேடிப் போகிறோமென்றால் அதற்குக் காரணம் அந்த இன்பத்தை அடையவேண்டுமென்ற ஆசைதானே? ஆசை இல்லாவிட்டால் அப்படித் தேடிப் போவோமா?

ஆகையால் ஆத்மாபிவிருத்திக்கு குந்தகம் பண்ணுவதைத் தள்ளுவது என்பது உலக போகங்கள் ஸகலத்திலும் – ஒரு சுண்டல் தின்னவேண்டும் என்பதிலிருந்து பாரத் ரத்னா பெறவேண்டும் என்கிறவரை – இருக்கிற ஸகல ஆசைகளையும் விடுவதான வைராக்யமேயாகும்.

ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள்!

ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்!

ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பம்

ஆசை விடவிட ஆனந்தமாமே!

என்று வைராக்ய பராகாஷ்டாவில் [உச்ச எல்லையில்] திருமூலர் ரொம்ப அழகாக சொல்லிவிட்டார். ஆசை அடியோடு போய்விட்டால் போதும், மோக்ஷம் ‘லபக்’கென்று அகப்பட்டுவிடும். “அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்று நம்மாழ்வாரும் பாடிவைத்திருக்கிறார்.

ஆசை – ‘த்ருஷ்ணை’ என்கிற தாஹம்; நாக்கு வறண்டால் ஜலம் குடிக்கணும் குடிக்கணும் என்று தாஹமெடுப்பது போல் சிற்றின்பங்களை அநுபவிக்கணும் அநுபவிக்கணும் என்ற தாஹம் 1– அது போனால்தான் நிர்வாணம் என்பதே புத்தர் ஒரே மூச்சாக உட்கார்ந்து கொண்டு கண்டுபிடித்தது என்று அந்த மதப் புஸ்தகங்களில் இருக்கிறது.

நாகரிக ஸமுதாயங்களில் பிறந்த எந்த மதமானாலும் அது ஆசைகளை அழிப்பதற்கு முக்யம் தராமலிருக்காது.

நம்முடைய ஆசார்யாளும் ஆசையை அழிப்பதான வைராக்யத்திற்கு ரொம்பவும் முக்யம் தந்திருக்கிறார். “அபரோக்ஷாநுபூதி”யில் ஸாதனை க்ரமத்தைச் சொல்லும் போது ‘வைராக்யாதி சதுஷ்டயம்’ [வைராக்யம் முதலானவை கொண்ட நான்கு அங்க அமைப்பு] என்று இதைத்தான் ‘சீஃபா’கக் குறிப்பிட்டிருக்கிறார் 2.

வைராக்யத்தை ஆசார்யாள் எப்படி டிஃபைன் பண்ணியிருக்கிறாரென்றால் –

தத்-வைராக்யம் ஜுகுப்ஸா யா தர்சந ச்ரவணாதிபி: |

தேஹாதி-ப்ரஹ்ம பர்யந்தே ஹ்யநித்யே போக்ய வஸ்துநி ||

என்று சொல்லியிருக்கிறார்.3

“அதுதான்டா வைராக்யம்!”- ‘தத் வைராக்யம்’ என்று ‘ட்ரமாடிக்’காக ஆரம்பித்திருக்கிறார்!

“எது?” என்றால், “பார்க்கிறது, கேட்கிறது முதலான எல்லாவற்றிலும் – இந்த மநுஷ்ய தேஹத்தால் பெறக்கூடிய இன்ப நுகர்ச்சி் பொருள்களிலிருந்து ப்ரஹ்ம லோகத்தில் பெறக்கூடிய இன்ப நுகர்ச்சிப் பொருள்கள் வரை அநித்யமான யாவற்றிலும் – வெறுப்புதான் வைராக்யம்”.

‘ஜுகுப்ஸா’என்றால் அருவருத்து ஒதுக்கத் தோன்றுவது, அதாவது வெறுப்பு. ‘ஜிஹாஸா’ என்றும் பாடபேதம். அர்த்தம் ஒன்றேதான்.

ஞானம் வந்துவிட்டால் அப்போது எல்லாவற்றிடமும் அன்பு ஏற்பட்டுவிடும். வெறுப்பு என்பதே இருக்காது. ஏனென்றால் அப்போது எந்தப் பெரிய, கெட்ட சபல வஸ்துவும் அவனைக் கலக்காது. ஆனால் அதற்கு முற்பட்ட நிலைகளில் அப்படியில்லை. நம்மைச் சறுக்கிவிடக் கூடிய ஸகல இன்ப நுகர்ச்சிப் பொருள்களையும் வெறுத்து ஒதுக்கினால்தான் ஆத்மாவை ரக்ஷித்துக் கொள்ள முடியும். பிற்பாடு அன்புருவம் ஆவதற்கே முதலில் வெறுப்புணர்ச்சி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்!

மநுஷ்யர்களிடம் வெறுப்பு இல்லை; இல்லவே இல்லை. அவர்களால் ஏற்படக்கூடிய பாச பந்தங்களிலேயே வெறுப்பு. அவர்கள் அளிக்கக்கூடிய அல்ப இன்பப் பொருள்களில் வெறுப்பு. வீட்டை விட்டு ஒடுவது அம்மாவிடம், அகமுடையாளிடம், பிள்ளை பெண்களிடம் வெறுப்பால் இல்லை; இல்லவே இல்லை. அவர்களால் நமக்கு ஏற்படும் பந்த பாசம் நம்மை ஆத்மவிஷயத்திலேயே தோய முடியாமல் ப்ரதிபந்தகம் செய்கிறதே என்பதால் அதனிடமே வெறுப்பு. “ஏன் வ்ரதம்னு வயிறு காயறே?” என்று அம்மா மணக்க மணக்க ஒரு சாப்பாட்டு தினுஸைக் காட்டி ஆத்ம க்ஷேமத்திற்கு ஹானி செய்கிறாளே; அகமுடையாளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால் மனஸ் சலிக்கிறதே; பிள்ளைக்காக லஞ்சம் கொடுத்தாவது இன்ஜினீயரிங் சேர்க்கணும்; பெண் இஷ்டப்படி டாக்டர் மாப்பிள்ளை பார்த்து அதற்கேற்க பெரிய எதிர்ஜாமீன் தரணும் – என்றிப்படி ஒவ்வொன்றும் கட்டிப் போடுகிறதே என்று வெறுப்பு. கார்யங்களில் வெறுப்பு, போக்ய வஸ்துக்களில் வெறுப்பே தவிர மநுஷ்யர்களிடம், பிராணி வர்க்கத்திடம் வெறுப்பு என்பது இல்லை. இங்கே நாம் பார்த்த ச்லோகத்திலும் ஸரி, “போக்ய வஸ்துநி ஜுகுப்ஸா” – போகப் பொருள்களில் வெறுப்பு – என்றுதான் இருக்கிறதே தவிர ஜீவன்களிடம் என்றில்லை. அதாவது, ஜீவர்களை ஒதுக்குவது அவர்களிடம் வெறுப்பால் இல்லை; அவர்களால் நமக்கு போக்யத்தில் பிடிப்பு ஏற்படுவதால் தான்.

நித்ய அநித்ய வஸ்து விவேகத்தால் இந்த்ரிய அநுபோக விஷயங்கள் யாவும் அநித்யம் என்று தெரிந்து கொண்டு அநித்யமான அவற்றிடம் வெறுப்புக் கொள்வதே வைராக்யம்: “ஜுகுப்ஸா …..ஹ்யநித்யே போக வஸ்துதி”.

‘அநித்யே’ என்றில்லாமல் ‘ஹ்யநித்யே’ என்று இருக்கிறது. ‘ஹி அநித்யே’ என்பது ஸந்தியில் ‘ஹ்யநித்யே’ என்றாயிருக்கிறது. ‘ஹி’ என்பது சொல்லும் விஷயத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காகப் போடுவது. தமிழில் ‘மாதோ’ என்று போடுகிற மாதிரி.

வெறுப்பை உண்டாக்கிக் கொண்டால்தான் மாயா பந்தத்தை உண்டாக்கும் விஷயங்களில் இறங்காமலிருப்போம். “அது பாட்டுக்கு இருக்கட்டும்” என்று இந்த விஷயத்தில் இருந்தோமானால் அது ஸாத்விகமாகாது; அசட்டுத்தனமே ஆகும். “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். எதனிடமும் பயப்படாத தீரனாக மனிதன் இருக்க வேண்டும் என்றுதான் அவர் திருக்குறள் உபதேசித்தது. ஆனாலும் அப்படி நிஜமாகவே ஒருவன் ஆகிறதற்கு முந்தி அசட்டுத் தைர்யத்தில் ஒன்று கிடக்க ஒன்று செய்துவிடக் கூடாது என்பதால், ‘இந்த லோகத்தில் பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்பட்டு ஒதுங்கித்தான் போக வேண்டும்; இல்லாவிட்டால் அது அசட்டுத்தனந்தான்’ என்கிறார். பேதைமை என்றாலும் அசட்டுத்தனம் என்றாலும் ஒன்றுதான். ஸகலத்திடமும் ப்ரேமையை முடிவாகச் சொல்ல வந்த ஆசார்யாளும், ஆரம்ப நிலைகளில் ஆத்மாபிவிருத்திக்கு உதவாத – அதற்கு ஹானி பண்ணுகிற – விஷயங்களில் அருவருப்பை, வெறுப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்.

மனஸிலே தைக்கும் விதத்தில் இதற்கு ஒரு உபமானம் சொல்வார் – ரொம்ப அருவருப்பை உண்டாக்கும் உபமானமாகவே ‘பால போத ஸங்க்ரஹம்’, ‘அபரோக்ஷாநுபூதி’ ‘ஸர்வ வேதாந்த ஸித்தாந்த ஸார ஸங்க்ரஹம்’ 4 என்ற மூன்று புஸ்தகங்களிலும் அந்த ஒரே உபமானத்தைச் சொல்லியிருக்கிறார்: “யதைவ காகவிஷ்டாயாம்” என்று ‘அபரோக்ஷாநுபூதி’யிலும், ‘பால போத ஸங்க்ரஹ’த்திலும்; “காகஸ்ய விஷ்டாவத் அஸஹ்ய புத்தி:” என்று ‘ஸர்வ வேதாந்த ஸித்தாந்த ஸார ஸங்க்ரஹ’த்தில். காக்கையின் எச்சத்தில் எப்படி அருவறுப்பான வெறுப்பு உண்டாகுமோ அப்படி போக்ய வஸ்துக்களில் உண்டாக வேண்டும் என்று உபமானம். மரத்தடியில் உட்கார்ந்து வன போஜனம் பண்ணிக் கொண்டிருக்கிறோம். பல தினுஸு சித்ரான்னம், வ்யஞ்ஜனங்கள் பரிமாறியிருக்கிறது. அப்போது மேலே மரக்கிளையில் உட்கார்ந்திருக்கும் ஒரு காக்கையின் எச்சம் நேரே நம் இலையில் வந்து விழுந்தால், “சீ” என்று எப்படி அருவருப்படைந்து அந்தண்டை ஓடி விடுவோம்? அப்புறம் காக்காயை விரட்டி விட்டு வேறே இலையில் ஸரியாகப் பரிமாறிச் சாப்பிடக் கூப்பிட்டால் கூட ஓக்காளித்துக் கொண்டு சாப்பாடு உள்ளே போகாமல்தான் ஸ்ட்ரைக் பண்ணும்! அந்த மாதிரி வெறுப்பு விஷய போகங்களில் உண்டாவதுதான் வைராக்யம் என்று சொல்லியிருக்கிறார். அது நன்றாகத் தீவிரமாகிறபோது வனபோஜன விருந்து என்பதே காகவிஷ்டையாகத்தான் வெறுப்புத் தட்டும்! ஆசார்யாளே சொல்லியுள்ளபடி வியாதிக்கு மருந்து மாதிரி பசி நோய் தீர ஏதோ பிக்ஷையில் கிடைப்பதை அன்றன்றும் தின்று தொலைக்கணும்5 என்றில்லாமல் விருந்துச் சாப்பாடு என்ன என்று வெறுப்புத் தட்டும்.

ஏதோ இந்த மநுஷ்ய தேஹத்தால் அநுபவிக்கும் இந்த லோகத்து இன்பங்கள் தானென்றில்லை. ப்ரஹ்ம லோகத்திற்குப் போய் அங்கே திவ்ய தேஹத்தால் அநுபவிக்கக் கூடிய மஹா போகங்களில்கூட இப்படிப்பட்ட வெறுப்பு- ஜுகுப்ஸா – உண்டாக வேண்டும் : “தேஹாதி ப்ரஹ்ம பர்யந்தே”

ப்ரஹ்மம் என்கிற நிர்குணமான, அரூபமான ஸத்ய தத்வம் ஒன்றுதான் வேண்டியதே தவிர, ப்ரஹ்மா என்கிற ரூபமுள்ள ஒரு ஸ்வாமி அவருடைய ப்ரஹ்ம லோகத்தில் அளிக்கக்கூடிய போகங்களையும் ஒதுக்கித் தள்ளத்தான் வேண்டும்.

ஸாதன சதுஷ்டயத்தில் ‘வைராக்யம்’ என்பதைச் சொல்லும்போது இதைத் தெளிவு செய்வதாக அதற்கு நீளமாக அடைமொழி போட்டு “இஹாமுத்ரார்த்த போக விராகம்” 6 அல்லது “இஹாமுத்ர பல போக விராகம்” 7 என்றே ஆசார்யாள் சொல்லுவார்.

‘இஹ’ + ‘அமுத்ர’ = ‘இஹாமுத்ர’. ‘இஹ’ என்றால் இப்போது நாமிருக்கும் இந்த லோகம்; ‘இகவுலகம்’ என்பதில் வருவது. ‘அமுத்ர’ என்றால் ‘இங்கே’ என்று கிட்டக்க இல்லாமல் ‘அங்கே’ என்று ‘எங்கேயோ’ இருக்கும் பித்ரு லோகம், இந்த்ர லோகம் முதலியன. பலவிதமான தேவர்கள் உள்ள பல லோகங்களும், உச்சத்தில் ப்ரஹ்மா இருக்கும் ப்ரஹ்ம லோகமும் அதில் அடங்கும். ‘இவ்வுலகம்’, ‘அவ்வுலகம்’ என்பதில் – பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்று திருவள்ளுவர் கூடச் சொல்வதில் – இவ்வுலகத்தைத் தான் ‘இஹ’ என்றது; அவ்வுலகத்தை ‘அமுத்ர’ என்றது. அந்த ப்ரஹ்ம லோக அநுபவங்கள்கூட ஆத்மாநுபவமில்லை; அங்கே பெறும் ஆனந்தங்கள்கூட ஆத்மானந்தமாகாது. ப்ரஹ்மலோக ஆனந்தமும் ப்ரஹ்ம கல்ப்பப் பிரளயத்தோடு அழிந்து போவதுதான்; ஆத்மானந்தம் போல சாச்வதத்திலும் சாச்வதமானதல்ல. அதோடு அங்கேயும் ஜீவாத்ம பரமாத்ம பேதத்துடன் கூடிய ஆனந்தமே கிடைக்குமாதலால் அது ஐக்கியமாயிருப்பதன் ஸாக்ஷாத்காரப் பேரானந்தத்தில் கடுகத்தனைகூட இருக்காது. ஆகையால் ‘இஹ அமுத்ர’ங்களில் ஒருவன் பெறக்கூடியதான ‘அர்த்த’ங்களின், அதாவது ‘வஸ்து’க்களின்; ‘போக’த்தில்: அவ்வஸ்துக்களை ‘அநுபோகம்’ பண்ணுவதில்; ‘விராகம்’ அதாவது ‘வைராக்யம்’ தான் இஹாமுத்ரார்த்த போக விராகம். இதையே இன்னொரு விதத்தில் இம்மை, மறுமைப் பலன்களை அநுபவிப்பதில் வைராக்யம் என்னும் போது ‘இஹாமுத்ர பல போக விராகம்’ என்கிறார். ‘அர்த்தம்’என்றால் வஸ்து; பலன் – வஸ்துவிலிருந்து நாம் பெறுவது.

வைராக்யசாலிகளை ‘வீதராகர்’ என்பது.“வீதாராகிணம் விநத யோகிநம்” என்று ‘வாதாபி கணபதி’ பாட்டில்கூட வருகிறது. முண்டகோபநிஷத்தில் ரிஷிகளை ஞானத்தினால் த்ருப்தி கண்டவர்கள். ஆத்மாவை ஸாதித்துக் கொண்டவர்கள், வீதராகர்கள் என்று சொல்லி, முடிவாக ப்ரசாந்தர்கள் என்று வர்ணித்திருக்கிறது8.

வைராக்ய வெறுப்புக்கே ‘நிர்வேதம்’ என்று ஒரு பேர். லோக விஷயங்களில் பூர்ணமாக உதாசீனம் ஏற்பட்டால் அதுவே நிர்வேதம். இந்த உணர்ச்சிதான் சாந்த ரஸம் என்பதற்கே காரணமாகிறதென்று அலங்கார சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது. அது இருக்கட்டும். ‘வைராக்யம்’ மாதிரியே இன்னொரு வார்த்தை ‘நிர்வேதம்’ என்று சொல்ல வந்தேன். வீதராகர்களைச் சொன்ன அந்த உபநிஷத்தில் இதைப்பற்றியும் வருகிறது9. அங்கே ஆசார்யாள், ‘வித்’ என்கிற தாதுவுக்கு முன்னாடி ‘நி’ சேர்த்துக்கொண்டு உருவாயிருக்கும் இந்த ‘நிர்வேதம்’ என்ற வார்த்தைக்கு ‘வைராக்யம்’ என்று ‘அர்த்தம் என்றே பாஷ்யம் பண்ணியிருக்கிறார்: “வைராக்யார்த்தே” என்று. கர்ம மார்க்கத்தில் ரொம்பவும் உயர்வாகச் சொல்பவை இஷ்டா- பூர்த்தம் என்கிற யஜ்ஞங்களும் ஸமூஹப் பணிகளுமாகும்’. ஆனால் அதெல்லாமுங்கூட பிற்பாடு ஞான யோகத்தில் கொண்டு விட்டுவிட்டு விலக வேண்டிய ‘ப்ரிலிமினரி’களே [பூர்வாங்கங்களே], கர்ம யோகத்தைச் சேர்ந்தவையே என்று புரிந்து கொள்ளாமல் அவையே லக்ஷ்யத்தில் சேர்ப்பவையென்று நினைப்பவர்களை அந்த உபநிஷத்தில் வடிகட்டின அசடுகள் – ‘ப்ரமூடர்’: ஸாதாரண ‘மூடரில்லை’, மஹா மூடரான ‘ப்ரமூடர்’- என்று முதலில் சொல்லியிருக்கிறது 10. அப்புறம் இரண்டு மந்த்ரம் தள்ளி, ‘ஒருத்தன் புத்திசாலி ப்ராஹ்மணனானால் அவன் எத்தனை உசந்த கர்மாவாலும் பெறக்கூடிய ஸ்வர்காதிகள் அநித்யம் என்று பரீக்ஷித்துப் புரிந்து கொண்டு, கார்யமில்லாத ப்ரஹ்மத்தைக் கார்யத்தால் அடையமுடியாது என்ற அறிவைப் பெற்று, நிர்வேதம் பெற வேண்டும்; அதாவது வைராக்யமடைய வேண்டும். அப்புறம் ப்ரஹ்ம நிஷ்டரான ஒரு குருவிடம் போய் உபதேசம் பெற்றுத் தானும் ப்ரஹ்ம ஞானம் பெற வேண்டும்’ என்று வருகிறது.

கர்மயோகம் முதல் ஸ்டேஜ், ப்ரஹ்ம ஞானத்திற்காக ஸந்நியாஸியாகி உபதேசம் வாங்கிக் கொள்வது மூன்றாவது ஸ்டேஜ் என்று பார்த்தோம். நடுவே இரண்டாவது ஸ்டேஜில் வருவதுதான் ஸாதன சதுஷ்டயம் என்றும், அதில் இரண்டாவது அங்கமாகச் சொல்லப்பட்டிருப்பது வைராக்யம் என்றும் பார்த்தோம். இங்கேயோ முதல் ஸ்டேஜான கர்மாவைச் சொல்லி, அப்புறம் இந்த வைராக்யம் ஒன்றை மாத்திரம் சொல்லி, ‘டக்’கென்று மூன்றாவதான ஸ்டேஜான ப்ரஹ்மஞானோபதேசத்திற்குப் போயிருக்கிறது. இதிலிருந்து வைராக்யம் ஒன்றை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டாலே ஸாதன சதுஷ்டயத்தின் ஸகல அங்கங்களும் அதிலேயே கரைந்து ‘ஆடோமேடிக்’காக வந்து விடும் என்று ஆகிறது.

ஆசார்யாள் இந்த உபநிஷத்துக்கு பாஷ்யம் பண்ணும் போது, இதற்குப் பல மந்த்ரங்கள் முன்னாடி எது லௌகிகமான அபரவித்யை, எது ஆத்யாத்மிகமான பரவித்யை என்ற விஷயம் வரும்போதே11, ‘ப்ரஹ்ம ஞானத்தைக் கொடுக்கும் ப்ரஹ்ம வித்யையை எவரும் படித்து அர்த்த ஞானம் ஸம்பாதித்துவிடலாம்; ஆனால் அநுபவ ஞானம் ஸம்பாதிக்கணுமென்றால் வைராக்யத்தோடு குருவை ஆச்ரயித்து உபதேசம் பெற்றால்தான் முடியும்’ என்று சொல்லியிருக்கிறார். – ‘குர்வாபிகமநாதி லக்ஷணம் வைராக்யம்’ என்று வைராக்யம் ஒன்றை மாத்ரமே’ குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.

வைராக்யம் என்பது “தர்சன-ச்ரவணாதிபி:ஜுகுப்ஸா’: “பார்க்கிறவை கேட்கிறவைகளில் வெறுப்பு” என்று ஆசார்யாள் லக்ஷணம் கொடுத்திருப்பதைப் பார்த்தோம். ‘பார்க்கிறவை, கேட்கிறவை’ என்று இரண்டு அவர் சொல்கிறாரென்றால் க்ருஷ்ண பரமாத்மா, ‘கேட்க வேண்டியவை, கேட்டவை’- ச்ரோதவ்யஸ்ய ச்ருதஸ்ய ச – என்று இரண்டு சொல்கிறார்.12 ஏற்கெனவே என்னென்னவோ அக்கப்போரெல்லாம் தெரிந்துகொண்டு மூளையில் திணித்து வைத்துக் கொண்டிருக்கிறோமே, அதுதான் ‘கேட்டவை’. இன்னும் ‘அதைத் தெரிஞ்சுக்கணும், இதைத் தெரிஞ்சுக்கணும்’ என்று துருதுருத்துக் கொண்டிருக்கிறோமே, அதெல்லாந்தான் ‘கேட்கவேண்டியவை’. இந்த இரண்டிலும் ‘நிர்வேதம்’ வருவதைப் பற்றி பகவான் சொல்கிறார். இதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போதும் நிர்வேதம் என்றால் வைராக்யம் என்றே அர்த்தம் கொடுத்திருக்கிறார். மோஹச்சேற்றில் அழுக்காகிக் கிடக்கும் புத்தி அந்தச் சேற்றுக் குட்டையை விட்டு வெளியில் வந்தால் அப்போது கேட்டது, கேட்க வேண்டியது எல்லாவற்றிலும் வைராக்யம் வரும் என்று இங்கே பகவான் சொல்லியிருக்கிறார். மோஹத்தால் அழுக்கடைவது என்பதை ஆசார்யாள் ‘ஆத்மாநாத்ம விவேக அறிவு குழம்பிப் போவது’ என்றே ஸ்பஷ்டமாக விளக்கியிருக்கிறார். அதுதான் சதுஷ்டயத்தில் முதலில் சொன்னது. அடுத்தது வைராக்யம். பகவானும் இந்த ச்லோகத்தில் இந்த ஆர்டரிலேயே சொல்லியிருக்கிறார்!

ராகம், அதாவது ஆசை. இல்லாமலிருப்பது வைராக்யம். அப்படியிருப்பவன் வைராகி. பைராகி, பைராகி என்று வடக்கத்தி ஆண்டிப் பண்டாரங்களைச் சொல்கிறோமே அது வைராகிதான். அதாவது ஸந்நியாஸம் என்றாலே வைராக்யந்தான் என்ற அளவுக்கு ‘ஈக்வேட்’ பண்ணியிருக்கிறோம். ராகத்தை விட்டவன் வைராகி. விடாமல் ஆசைவயப்பட்டிருப்பவன் ராகி. ராகமுடையவன் ராகி. இப்படி ஆசைவயப்பட்டிருப்பவனை உபநிஷத்தில் ‘காமயமானன்’ என்று சொல்லியிருக்கிறது.13 ஆசைகளால் ஒருவன் அழிக்கப்பட்டே விடுவதால், ஹதமே செய்யப்பட்டுவிடுவதால் ஆசைக்காரனை ‘காமஹதன்’ என்றும் உபநிஷத்துக்கள் சொல்லும்.14 இதேபோல அசைவாய்ப்படாதவனை ‘அகாமயமானன்’ என்றும் ‘அகாமஹதன்’ என்றும் சொல்லும்.

ராகம், காமம் இரண்டுக்கும் ஆசை என்று ஒரே அர்த்தம் பண்ணி இப்படி [அவ்விரண்டையும்] ஒன்றாகச் சொல்வது. ஆனால் அதுகளுக்குள் கொஞ்சம் வித்யாஸமும் உண்டு. “காம-ராக விவர்ஜிதம்” என்று கீதையில் ஒரு இடத்தில் பகவான் சொல்லியிருக்கிறார்15. “காமமும் ராகமும் இல்லாத” என்று அர்த்தம். இப்படி இரண்டு வஸ்துக்களாகச் சொன்னதால் காமம் வேறு, ராகம் வேறு என்று தெரிகிறது. என்ன வித்யாஸம்? இந்த மாதிரி நமக்குப் புரியாத இடங்களில் நம்முடைய ஆசார்யாள் தம்முடைய மஹாமேதையால் நமக்குப் புரியப் பண்ணி பரமோபகாரம் பண்ணுவார். இங்கே, ‘காமம் என்பது இதுவரை அடையாத விஷயங்களில் ஏற்படும் த்ருஷ்ணை, அதாவது தாஹம். ராகம் என்பது அடைந்த விஷயங்களில் ஏற்படும் பற்று’ என்று பிரித்துக் காட்டியிருக்கிறார். அவ்வளவு மைன்யூட் வித்யாஸங்கள் இங்கே வேண்டாம். காமம், ராகம் இரண்டுமே ஆசை என்று வைத்துக் கொண்டால் போதும்.

வைராக்யமில்லாதவன் ‘காமயமானன்’, வைராக்யமுள்ளவன் ‘அகாமயமானன்’ என்று உபநிஷத் சொல்கிறது. அவர்களைப் பற்றி என்ன சொல்கிறதென்றால் – காமயமானன் கர்மாவே எல்லாம் என்று நினைத்துக் கர்மாநுஷ்டானம் பண்ணி, அதன் பலனைப் பரலோகத்தில் அநுபவித்துவிட்டு, அது தீர்ந்தபின் இங்கேயே மறுபடியும் பிறந்து செக்குமாடு மாதிரி. மீளவும் கர்மத்திலேயே சுற்றுகிறான்; அகாமயமானனான வைராக்யசாலியோ ஆசையில்லாத ‘அகாம’னாக, ‘நிஷ்காம’னாக (ஆசை வேண்டாம் என்று இவன் உதறும் போது ‘அகாமன்’; அப்புறம் இப்படி அவன் முயற்சி பண்ணி தள்ளுவது என்றில்லாமல் ஆசைகள் தானே ஒட்டம் பிடிக்கும் போது ‘நிஷ்காமன்’, இப்படி அகாமனாக, நிஷ்காமனாக) அதற்கப்புறம் ‘ஆப்தகாம’னாக, அதாவது தான் ஆசைப்பட்டதை அடைந்தவனாக…. இப்படி உபநிஷத் சொல்லிக் கொண்டு போகும்போது, ‘அகாமயமானனுக்கு ஆசை ஏது? எதை ஆசைப்பட்டு அவன் அடைவது?’ என்ற கேள்வி வருகிறது. அதை அடுத்தாற்போல் வரும் அடைமொழி தெளிவு பண்ணுகிறது……. அகாம, நிஷ்காம, ஆப்தகாமனாக இருப்பவனை அடுத்தாற்போல ‘ஆப்தகாமன்’ என்று சொல்லியிருக்கிறது; அதாவது ஆத்மா ஒன்றுக்குத்தான் அவன் ஆசைப்படுவது! அதை அடைந்த போது ஆப்தகாமனாகிறான். இப்படி அகாமனாக, நிஷ்காமனாக, ஆப்த காமனாக, ஆத்மகாமனாக இருக்கும் வைராக்யசாலியோ செத்தபின் அவனுடைய ப்ராணன் பரலோகம் எதற்கும் போவதென்பதில்லை; இங்கே உயிர் வாழும்போதே அவன் ப்ரஹ்மமாக இருந்து உடம்பு செத்து விழுந்த பின்னும் ப்ரஹ்மத்திலேயே அடக்கமாகி விடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது16. காமமில்லாமலிருப்பதை, அதாவது, வைராக்யத்தைத்தான் அப்படிப் பட்ட ப்ரஹ்மாநுபவத்துக்கு யோக்யதாம்சமாகச் சொல்லியிருக்கிறது.

ஆழ்ந்த வேத அறிவு பெற்ற ‘ச்ரோத்ரியன்’ என்பவனாக மாத்திரமில்லாமல், ஆசைவாய்ப்பட்டு அழிந்த போகாத அகாமஹதனாகவும் இருக்கிறவனுக்குத்தான் இந்த ப்ருத்வி முழுதையும் கட்டியாள்பவனின் ஆனந்தத்தை நூறு நூறு மடங்காகப் பெருக்கிக் கொண்டே ஒவ்வொரு மேல் லோக ஆனந்தமாகக் கிடைத்துக் கொண்டே போய் முடிவில் ப்ரஹ்மானந்தம் ஸித்திக்கும் என்று தைத்திரீய, ப்ருஹதாரண்யகங்களில் [ஒன்றுக்கொன்று சற்று மாறுபாட்டுடன்] சொல்லப் பட்டிருக்கிறது17. இங்கேயும் காமத்தை ஹதம் செய்வது, அதாவது வைராக்யமாயிருப்பதையே முக்யமான யோக்யதாம்சமாக வைத்திருப்பதைக் காட்ட வந்தேன்.

கீதையிலும் பகவான் “அப்யாஸம், வைராக்யம்” என்ற இரண்டைத்தான் மிக முக்யமானதாக வற்புறுத்தியிருக்கிறார்18. ஓடிக்கொண்டேயிருக்கும் மனஸை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைப்பதற்கு விடாமல் பயிற்சி பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும். விடாமுயற்சி, விடாப் பயிற்சி – அதுதான் ‘அப்யாஸம்’. மனஸை நிலை நிறுத்துவதற்கு அத்யாவசியமான இன்னொன்று வைராக்யம் என்று பகவான் சொல்லியிருக்கிறார்.

உபதேசம் ஆரம்பித்து ஸ்திதப்ரஜ்ஞ லக்ஷணம் சொல்லும்போது முதல் லக்ஷணமாக, ” ப்ரஜஹாதி யதா காமாந் ஸர்வாந் பார்த்த மநோகதான்”19 என்பதே வைராக்யந்தான். கடைசி அத்யாயத்தில், கர்ம மார்க்கத்தில் ஸித்தி பெற்ற அப்புறம் ஞான ஸித்திக்காக என்னென்ன செய்யணும் என்று சொல்லும்போதும், “நித்யம் வைராக்யம் ஸமுபாச்ரித:” : “இடைவிடாமல் வைராக்யத்தை அப்யஸிக்க வேண்டும்” என்கிறார். 20

பார்க்கிறது, கேட்கிறது எல்லாவற்றிலும் வெறுப்பு வைராக்யம் என்று ஆசார்யாள் [விவேக சூடாமணியில்] சொல்லியிருக்கிறார்; இதில் ‘பார்க்கிற’தைத் தள்ளி, ‘கேட்கிறது, கேட்கவேண்டியது’ என்று பகவான் [கீதையில்] சொல்லியிருக்கிறார் என்றேன். இங்கே அதே கீதையில் “நித்யம் வைராக்யம் ஸமுபாச்ரித:” என்பதில் வரும் ‘வைராக்ய’த்திற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும் போதோ, “பார்க்கிறது, பார்க்காதது ஆகிய இரண்டு விஷயங்களிலும் ஆசைத் தாஹமில்லாமலிருப்பது வைராக்யம் – “த்ருஷ்டாத்ருஷ்டேஷு விஷயேஷு வைத்ருஷ்ண்யம்” என்கிறார். அதென்ன பார்க்காததில் ஆசை என்றால் ஸ்வர்க்கபோகம், இந்திர பதவி மாதிரியான விஷயங்களில் ஆசைதான். வைதிக கர்மாநுஷ்டானத்தை அதுவே முடிவான ஸாதனம் என்று நினைத்துப் பண்ணினால் இப்படிப்பட்ட தேவலோக ஸெளக்யங்கள் கிடைக்கும். அது இப்போது நம் கண்ணுக்குத் தெரியாததால் “அத்ருஷ்டம்” என்றே சொல்லப்படும். ‘த்ருஷ்டம்’ என்றால் பார்க்கக்கூடியது; கூடாதது அத்ருஷ்டம்.

இப்படி மூன்று விதமாக வைராக்யத்தைப் பற்றிப் பார்க்கிறோம் – ஒன்று: பார்க்கிற, கேட்கிற எல்லாவற்றிலும் ஆசையை விடுவது; இரண்டு: கேட்டதில் கேட்கப் போவதில் ஆசையை விடுவது; மூன்று: பார்ப்பதில் பார்க்காததில் ஆசையை விடுவது.21 எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் ‘ஸர்வான் பார்த்த மனோகதான்’ என்று பகவான் சொன்னாற்போல ஒரு மநுஷ்ய மனஸில் இடம் பெறக்கூடிய அத்தனை ஆசைகளையும் தொலைத்து முழுகுவதுதான் வைராக்யம்.

அது ஸாதனையில் ரொம்பவும் முக்யமான அங்கம்.

பர்த்ருஹரி என்பவர் ரொம்பப் பெரியவர். அவர் துறவறத்தைப் பற்றி, துறவியைப் பற்றி ரொம்பவும் உணர்ச்சியோடும், காம்பீர்யத்தோடும் ஒரு சதகம் (நூறு ச்லோகங்கள்) செய்திருக்கிறார். அதற்குப் பேர் ‘ஸந்நியாஸ சதகம்’ என்று வைத்திருக்கலாம். ஆனால் அப்படி வைக்காமல் ‘வைராக்ய சதகம்’ என்றே வைத்திருக்கிறார். வைராக்யம் இருந்து விட்டால் போதும், அதுதான் ஸந்நியாஸம் என்ற அபிப்ராயம் இதிலிருந்தும் தெரிகிறது.

ஆமாம், ‘ஸந்-ந்யாஸம்’ என்றாலே என்ன? பூர்ணமாகத் துறப்பது’தானே? ஆசை என்ற ஒன்றைத் துறந்தால்தானே பாக்கி அத்தனையையும் துறக்க முடியும்? ஆகையால் ஸந்-ந்யாஸம், துறவு என்றாலே வைராக்யம் என்றாகியிருப்பதில் ஆச்சர்யமில்லை.

தமிழில் தர்மங்களைச் சொன்ன மஹாபெரியவர் திருவள்ளுவர். அவர் துறவு பற்றிச் சொல்லியிருக்கும் அதிகாரத்தில், பற்றற்றானான பரமாத்மாவையே பற்றிக் கொண்டு ஸகல பற்றுகளையும் விடுவதைத் துறவாகச் சொல்லியிருக்கிறார். ஆசையால், ராகத்தால் வருவதுதான் பற்று. அல்லது ஒன்றோடு நமக்குத் தொடர்பு, அதாவது பற்று உண்டானால் அதனிடம் ஆசை உண்டாகிவிடுகிறது- “ஸங்காத் ஸஜ்ஜாயதே காம:” என்று பகவான் சொன்னாற்போல்.22 ஆகக்கூடி ராகமும் பற்றும் பரஸ்பரம் காரிய காரணங்களாக இருக்கின்றன. ஆனதால் “பற்று விடற்கு” என்று திருவள்ளுவர் சொல்வது வைராக்யம் உண்டாவதைத்தான். அதைத்தான் அவர் துறவு என்றே வைத்து, அந்த (‘பற்று விடற்கு’ என்ற) வார்த்தையோடேயே அந்த அதிகாரத்தை முடித்திருக்கிறார். அப்புறம் இதே துறவறவியலிலேயே “அவா அறுத்தல்” என்றே ஒரு அதிகாரம் – பத்துக் குறள்கள் – பண்ணியிருக்கிறார். ‘அவா அறுத்தல்’ என்றாலும் வைராக்யம் என்றாலும் ஒன்றுதான்.

செல்வத்தையெல்லாம் திக்காரம் பண்ணிவிட்டுப் புறப்படுவதுதான் வைராக்யம். அப்படிப்பட்ட அந்த வைராக்யத்தையே பெரிய செல்வம், அதற்கு ஸமானமாக இஹ உலகிலும் ஒன்றுமில்லை, தேவலோகத்திலும் இல்லை என்று அழகாக சொல்லியிருக்கிறார்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

ஆண்டும் அஃது ஒப்ப (து) இல்

இதே அபிப்ராயத்தை (ஸதாசிவ) ப்ரஹ்மேந்த்ராளும் சொல்லியிருக்கிறார். ஸந்நியாஸியையே ஒரு ராஜாவாக உருவகப்படுத்தி அவர் சொல்லும்போது அவன் ‘ஸ்வீக்ருத வைராக்ய ஸர்வஸ்வன்’ என்று சொல்லியிருக்கிறார்.23 “வைராக்யம் என்ற சொத்து முழுவதையும் ஆர்ஜிதம் செய்துகொண்டவன்” என்று அர்த்தம்! அவரே அப்படியிருந்தவர்தான். பர்த்ருஹரி, திருவள்ளுவர், ப்ரஹ்மேந்தராள் முதலானவர்கள் தாங்களே உயர்ந்த வைராக்யசாலிகளாக இருந்ததால்தான் அவர்கள் வைராக்யத்தைப் பற்றிச் சொல்வது நம் மனஸையும் தொடுகிறது. அப்போதைக்காவது! வைராக்யத்தை ஸாதிப்பது நமக்கு மஹா கஷ்டமாயிருந்தாலும், அப்படி ஸாதித்துவிட்டால் நாமெல்லாரும் பெரிய ஸொத்துக்களாக நினைப்பவைகளையும் குப்பையாக நினைக்கும்படியான எப்பேர்ப்பட்ட ஆத்மானந்த ஸொத்தை அநுபவிக்க முடியுமென்பதை இந்த அநுபவசாலிகளின் வாக்கிலிருந்து அறிந்து கொள்கிறோம். நம்முடைய ஆசார்யாளும் – சொல்லவே வேண்டாம் – எட்டே வயஸில் வீட்டை விட்டு, ஊரை விட்டு, உயிராக நினைத்துச் செல்லம் கொடுத்துக் கொண்டிருந்த அம்மாவை விட்டுப் பரம வைராக்யத்தோடு ஓடியவரல்லவா? அவரும், “ஒரு கோவணாண்டியைப் போல பாக்யவான் எவன் உண்டு?” என்று ப்ரதி ச்லோகத்திலும் முத்தாய்ப்பு வைத்து ஒரு பஞ்சகம் பாடியிருக்கிறார்24. “பஜகோவிந்த”த்திலேயும், ” கஸ்ய ஸுகம் ந கரோதி விராக:?” -வைராக்யம் எவனுக்குத்தான் பேரானந்தத்தை உண்டாக்காமலிருக்கும்?” என்று கேட்கிறார்.

வைராக்யம் என்றாலே இன்னொருத்தர் நினைவு வராமலிருக்காது. பட்டினத்தார்தான்! குபேரனின் அம்சமாகப் பிறந்து கடல் வாணிபமெல்லாம் பண்ணிய ஐச்வர்யவான். ஆனால் வளர்ப்புக் குழந்தையாக இவரிடம் வந்து சேர்ந்த சிவாம்சமான பிள்ளை, “காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!’ என்று ஓலை எழுதி வைத்துவிட்டு மறைந்து போன அப்புறம் அதைப் பார்த்தாரோ இல்லையோ, ஸகல ஐச்வர்யத்தையும் விட்டு விட்டு கோவணான்டியாகப் புறப்பட்டு விட்டார்.

வீடு நமக்குத் திருவாலங் காடு விமலர் தந்த

ஓடு நமக்குண்டு

என்று வீட்டை விட்டு, ஒரு ஓட்டை பிக்ஷா பாத்ரமாக எடுத்துக் கொண்டு கிளம்பிய வைராக்யசாலி அவர். அப்புறம் அந்த மாதிரி ஒரு ஓட்டை உடைமையாக வைத்துக் கொண்டிருப்பதுகூடத் துறவறத்துக்கு இழுக்கு என்று அதையும் போட்டு உடைத்தாராம்.

ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, (உற்றுப் பெற்ற)

பேரும் சதமல்ல ……

என்றெல்லாம் அவர் நிறைய பாடி வைத்திருப்பதைக் கேட்டாலே, ப்ரஸவ வைராக்யம், ச்மசான வைராக்யம் மாதிரி, அப்போதைக்காவது எவருக்கும் ஒரு விரக்தி ஏற்படும்.

பர்த்ருஹரி சொன்னேனே, அவரும் இவருக்கச் சிஷ்யராக வந்து சேர்ந்தவர்தான் என்று கதை உண்டு. பர்த்ருஹரி என்பதை பத்திரகிரி என்கிறார்கள். மரியாதையாக பத்திரகிரியார் என்பது. உஜ்ஜயினியில் ராஜாவாயிருந்த பத்திரகிரியார் ஆண்டியாகித் திருவிடைமருதூர் கோவில் மேலக் கோபுர வாசலில் பிக்ஷை வாங்கிக் கொள்வதற்காக ஒரு ஓடு மட்டும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாராம். குருவான பட்டினத்தாருக்கும் சேர்த்து பிக்ஷை வாங்கி வந்து கொடுப்பாராம். பட்டினத்தார் கீழ்க் கோபுர வாசலில் உட்கார்ந்திருப்பாராம். குபேராம்சமானவரும், உஜ்ஜயினி ராஜ்யாதிபதியாகயிருந்தவருமான இரண்டு பேர் அப்பேர்ப்பட்ட வைராக்யத்தோடு ஆண்டிகளாக இருந்திருக்கிறார்கள்! அப்படியும் பத்திரகிரியாருக்கு வைராக்யம் போதவில்லை என்றே பட்டிணத்தார் நினைத்தாராம்! ஏனென்றால் பிக்ஷை வாங்குவதற்குத் திரு ஓடு வைத்திருந்தாரல்லவா? அதனால்! பட்டினத்தாரிடம் ஒரு ஏழை போய் அன்னம் யாசித்தானாம். கோவிலிலிருந்த மஹாலிங்க ஸ்வாமியே தான் அப்படி ஏழை ரூபத்தில் போனது என்பார்கள். அவனிடம் பட்டினத்தார், “நானே ஒண்ணுமில்லாதவன். என்னை வந்து கேக்கிறியே! மேலக் கோபுர வாசல்ல ஒரு குடும்பி இருக்கான். அவனைப் போய்க் கேளு. நான் இப்படிச் சொன்னதாகச் சொல்லிக் கேளு” என்றாராம். அவன் அப்படியே பத்திரகிரியாரிடம் போய்க் கேட்டானாம். ‘நம்மைக் குடும்பி என்றாரா குருநாதர்?’ என்று க்ஷணம் நினைத்தவுடன் அவருக்கு புரிந்து விட்டதாம். ஒரே உடைமையாக அவரிடமிருந்த ஓட்டையும் போட்டு உடைத்து விட்டாராம்!

இன்னும் ஸ்வாரஸ்யமாக இந்தக் கதையில் வருகிற ஸமாசாரமெல்லாம் நான் சொல்லவில்லை. அதிலே போனால் ஸாதனை ஸமாசாரம் சொல்லி முடிக்கப் போது இருக்காது. வைராக்யத்தைப் பற்றிச் சொல்லும்போது இப்படிப்பட்ட உதாரண புருஷர்களைச் சொன்னால் இன்னும் கொஞ்சம் ஆழமாக இறங்கலாம் என்பதால் கொஞ்சம் சொன்னேன்.

“ஓடு நமக்குண்டு” பாடியவரே அப்புறம் ஓடு வைத்துக் கொண்டவனும் ஸம்ஸாரிதான் என்ற அளவுக்குப் போன மாதிரி ப்ரஹ்மேந்த்ராள் வாழ்க்கையிலேயும் ஒரு ஸம்பவம் சொல்வதுண்டு. கையையே மடித்துத் தலையணையாக வைத்துக் கொண்டு, ஆகாசமே போர்வை, கட்டாந்தரையே மெத்தை, விரக்தி என்பவளே பத்னி என்று சயனித்துக் கொண்டிருக்கும் துறவி ஆனந்த பரவச ஸமாதி என்ற நித்ரையில் ஆழ்ந்திருக்கிறாள் என்று அவர் பாடியிருக்கிறார்.25அதில் பாடினபடி அவரே அப்படி ஏதோ ஒரு வயற்காட்டில் திறந்த வெளியில் கையை மடித்து அதிலே தலைவைத்துப் படுத்துக் கொண்டிருந்தாராம். நடுமத்யான வேளை. அப்போது அந்தப் பக்கம் உழவு வேலை செய்யும் சேரிப் பொம்மனாட்டிகள் சிலபேர் போனார்களாம். அதிலே ஒருத்தி ப்ரஹ்மேந்திராளை அந்த மாதிரிப் பார்த்ததும் பரிஹாஸமாகச் சிரித்துவிட்டு, “சன்னாஸியாமே சன்னாசி! தலைக்கொஸரம் கேக்கற நல்ல சன்னாஸிடீயம்மா!” என்று கூட வந்தவர்களிடம் சொல்லிக் கொண்டே போனாளாம். ப்ரஹ்மேந்த்ராளுக்குச் சுரீலென்று தைத்ததாம். ‘ஆகக்கூடி தனக்கும் மற்ற அவயங்களைவிடத் தலையை உயர்த்தி வைத்துக் கொண்டாலே ஸெளக்யம் என்ற எண்ணம் போகவில்லையல்லவா? அது போகாதவரையில் நான் என்ன ஸந்நியாஸி? அம்பாளே தான் அந்தப் பஞ்சமப் பெண் வாய் வழியாக உபதேசித்து விட்டுப் போயிருக்கிறாள்!’ என்று நினைத்து, தலைக்கு வைத்துக் கொண்டிருந்த கையை எடுத்துவிட்டு, அப்படியே கிடந்தாராம்.

அந்தப் பொம்மனாட்டிகள் திரும்பிப் போகிற வழியில் மறுபடி அங்கே வந்தார்களாம். அப்போது முதலில் பரிஹாஸம் பண்ணின அவள் அதேமாதிரி மறுபடி சிரித்தாளாம். “சாமியாருன்னா அவங்களுக்காகவே எப்படி இருக்கணும்னு தெரியவேணாம்? ஊர்லே போறவங்க, வரவங்க பேச்சையெல்லாம் கேட்டுப் பண்றவங்க இன்னா சாமியாருங்க?’ 26 என்றாளாம்!

அன்றிலிருந்துதான் ப்ரஹ்மம் என்றால் ப்ரஹ்மமாகவே, ஸதாசிவ ப்ரஹ்மமாக அவர் ஆனாராம்.

ஸந்நியாஸி என்றால் எப்பேர்ப்பட்ட வைராக்யத்துடன் இருக்க வேண்டும் என்று பாமர ஜனங்களும்கூட அத்தனை நன்றாகத் தெரிந்து கொண்டிருந்திருக்கிறார்கள்! அப்படிப்பட்ட தேசத்தில்தான் இப்போது காபி இல்லாமல் முடியாது, ஓவல்டின் இல்லாமல் முடியாது என்று சொல்கிற ஸந்நியாஸிகளும் ஏற்பட்டிருக்கிரார்கள்! கேட்டால், “நாங்கள் ஸந்நியாஸத்திற்கும் மேலே போன அதிவர்ணாச்ரமிகள்!அந்த பஞ்சம ஸ்திரி சொன்னாற்போல நாங்கள் என்ன பண்ணனும், பண்ணவேண்டாம் என்பது எங்களுக்கே தெரியும்” என்பார்கள்!

இந்த மாதிரிப் புரளி பண்ணாமல் நிஜமாக ஆத்மஞானம் அடைய வேண்டுமென்றால் அதற்கு வைராக்யம் ரொம்ப, ரொம்ப அவச்யம். “பட்டென்று ஒரு வைராக்யம் மட்டும் வந்துவிட்டால் போதும், என்றைக்கு அப்படி வருகிறதோ, அன்றைக்கே ஸந்நியாஸியாக வீட்டை விட்டுப் புறப்பட்டுவிடு: யதஹரேவ விரஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத்: 27 என்று சொல்லியிருக்கிறது.

இதொன்றும் சாச்வதமான ஆனந்தமாக இல்லையே என்ற வெறுப்பிலே மட்டும் வீட்டையும் கர்மாவையும் விட்டு ப்ரயோஜனமில்லை. அது ஒரே வறட்சியாகத்தான் போகும். சாச்வத ஆனந்தமாகவுள்ள ஆத்மாவைப் பற்றிய சிந்தனையோடுகூடச் சேர்த்தே இந்த வெறுப்பையும் ஏற்படுத்திக் கொண்டால்தான் ஸரியான ஸாதனையாகி அந்த நித்யானந்தத்தில் கொண்டு சேர்க்கும். ஸித்தியான அப்புறம் வெறுப்பும் அடியோடு மறைந்து ப்ரேம மயமாயிருக்க முடியும். அதாவது நித்யாநித்யங்களைப் புரிந்து கொண்டு அந்த விவேகத்தோடு வைராக்யத்தை அப்யஸிக்க வேண்டும். விவேகமில்லாத வைராக்யமும் ஸரி வராது; வைராக்யமில்லாத விவேகமும் ஸரி வராது என்று சொல்வார்கள். இரண்டும் சேர வேண்டும்.

முதலில் நித்யாநித்ய வஸ்து விவேசனம் செய்தது, அநித்யம் அத்தனையையும் வைராக்யத்தால் வெறுத்து அந்தண்டை தள்ளுவதற்குத்தான். ஆக, வைராக்யம் வருவதற்காகத்தான் அந்த முதல் படி. அதனால்தான் வைராக்யத்திற்கே ‘இம்பார்ட்டன்ஸ்’ கொடுத்து அதையே (ஆசார்யாள்) ‘அபரோகக்ஷா’நுபூதி’யில் முதலாகச் சொன்னது. ‘விவேக சூடாமணி’யிலும் பின்னால் ஒரு இடத்தில் “அநித்ய வஸ்துக்களில் அத்யந்த வைராக்யந்தான் மோக்ஷத்திற்கு முதல் காரணம் – மோக்ஷஸ்ய ப்ரதமோ ஹேது:” என்று இரண்டையும் கோர்த்து ஒன்றாக்கிச் சொல்லியிருக்கிறார்.28

ஸாதன சதுஷ்டயத்தில் முதலில் சொல்லப்பட்டது இந்த இரண்டுந்தான்.

மூன்றாவதற்குப் போகலாம்.

விவேகம், வைராக்யம் நம்மில் யாருக்கும் வராவிட்டாலும், அவை வருவதற்காக நாம் விசேஷமாக ஒன்றும் பண்ணாவிட்டாலும் இந்த இரண்டு பெயர்களாவது நமக்கு நன்றாக தெரிந்தவையாயிருக்கின்றன. விவேக-வைராக்யம் என்று சேர்த்துச் சொல்கிறோம். இனிமேல் வரப்போகும் (ஸாதனாங்கங்களின்) பேர்கள்கூட ரொம்பப் பேருக்குத் தெரியுமா என்று கேள்வியாயிருக்கிறது!


1 தாஹம் எனப் பொருள்படும் த்ருஷ்ணைக்கு அழகான தமிழ்ச்சொல் ‘வேட்கை’.

2 ச்லோ. 3

3 ‘விவேக சூடாமணி’ ச்லோ. 21

4 ‘ஸர்வ வேதாந்த ஸித்தாந்த ஸார ஸங்ரஹம்’ என்பது ஸதாநந்தர் என்பவர் எழுதியதென்றும் கருத்துள்ளது.

5 “பசி எனும் வியாதிக்கு மருந்துபோல் தினந்தோறும் பிக்ஷை கொள்ளவும்” – ‘ஸோபான பஞ்சகம்’ : ச்லோ. 4

6 ப்ரஹ்மம ஸுத்ரம். I.1-1.பாஷ்யத்தில்

7 விவேக சூடாமணி, 19

8 III.2.5

9 I.2.12

10 I.2.10

11 I.1-5

12 கீதை II.52

13 உதாஹரணமாக ‘ப்ருஹதாரண்யகம்’, IV.4.6

14 ‘தைந்திரீயம்’, ஆனந்தவல்லி 8; ‘ப்ருஹதாரண்யகம்’, IV.3.33

15 VII.11

16 ப்ருஹதாரண்யகம் IV.4.6

17 தைத்திரீயம், ஆனந்தவல்லி 8; ப்ருஹதாரண்யகம் IV.3.33

18 VI.35

19 II.55 இம் மேற்கோள் மனத்தில் புகுந்துள்ள ஆசைகள் அனைத்தையும் அடியோடு விலக்குவதைக் குறிப்பிடும்.

20 XVIII.52

21 கீதை பதின்மூன்றாம் அத்யாயம், எட்டாம் ச்லோகத்தில் ‘வைராக்யம்’ என்று வருவதற்கு ஆச்சார்யாள் பாஷ்யம் செய்கையில், “சப்தம் முதலானவற்றில், பார்க்கப்படுவனவும் பார்க்கப்படாதனவுமான போகங்களில் ஆசையற்ற பான்மை” என்று விளக்கமளித்துள்ளார். ‘சப்தம்’ என்பது கேட்கப்படுவதை குறிப்பது. சப்தம் ‘முதலானவற்றில்’ என்பதால் அடுத்து ஸ்ரீசரணர்கள் கூறுவதற்கேற்ப ‘மனஸில் இடம் பெறக்கூடிய அத்தனை’யுமே கூறப்பட்டு விட்டதாகச் கொள்ளலாம்.

22 கீதை II.62

23 ஆத்ம வித்யா விலாசம், ச்லோ. 17.

24 “கௌபீன பஞ்சகம்” என்றும் “யதி பஞ்சகம்” என்றும் வழங்குவது.

25 ஆத்மாவித்யாவிலாசம் – 46

26 ஸ்ரீசரணர்கள் அற்புத நடிப்பாற்றலுடன் கூறியதை அச்செழுத்தில் வடித்துத் தர இயலவில்லை.

27 ஜாபாலோபநிஷத் IV. (ஸந்நியாஸத்தைக் கூறும் வேறு சில உபநிஷத்துக்களிலும் இம் மந்திரம் இடம் பெறுகிறது.)

28 ச்லோ 69. (வேறு பாடப்படி ச்லோ.71) இனிவரும் அடிக்குறிப்புகளில் ‘வேறு பாடப்படி’ என்பதை ‘அல்லது’ என்பதன் சுருக்கமான ‘(அ)’ மூலம்குறிப்பிட்டுள்ளோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is நித்ய-அநித்ய வஸ்து விவேகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  'ஆறு ஸம்பத்துகள்'
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it