Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

நித்ய – அநித்ய வஸ்து விவேகம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘ஸ’ மாதிரி ஆரம்ப ஸாதனையில் முதலில் – ஸாதனா சதுஷ்டயம் என்றேனே அதில் முதலாவதாக – சொல்வது நித்யாநித்ய வஸ்துவிவேகம் என்பது.

சாஸ்திரப்படி நமக்கான கர்மாக்களையெல்லாம் சுத்தமாகச்செய்து, அதை ஈச்வரார்ப்பணம் செய்து, அந்த ஈச்வரனிடம் பக்தி செலுத்தி, இவற்றாலே அந்தஃகரணத்தில் ஒரு பரிசுத்தியும், ஒன்றிலேயே ஸ்டெடியாக நிற்கும் சக்தியும் உண்டாவது முதல் ஸ்டேஜ். முதல் ஸ்டேஜ் என்றால் ஞானயோகத்தில் முதல் ஸ்டேஜ் இல்லை. ஒரு ஜீவனின் ஆத்யாத்மிக பரிணாமத்தில் முதல் ஸ்டேஜ். இது கர்ம யோகத்தைச் சேர்ந்ததே. இதற்கப்புறம் ஜீவனுக்கு இரண்டாவது ஸ்டேஜாக ஆரம்பிப்பதுதான் ஞானயோகத்தின் முதல் ஸ்டேஜ். அதில் முதல் விஷயமாக சொல்லியிருப்பதே ‘நித்யாநித்ய வஸ்து விவேகம்’. இப்போது நாமெல்லாரும் கர்மா பக்திகளால் உண்டாகக்கூடிய பக்வத்தைப் பெற்றுவிட்டதாக வைத்துக் கொண்டு, [சிரித்து] மனப்பால் குடித்துக்கொண்டோ, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டே அப்படி வைத்துக் கொண்டு, ஞான யோக வழி முறையை தெரிந்து கொள்ள ஆரம்பிக்கலாம். என்னென்னவோ மனப்பால், ஸ்வய ஏமாற்று பண்ணிக் கொள்ளத்தானே செய்கிறோம்? இப்படி நல்லதாகத்தான் ஒன்று இருந்துவிட்டுப் போகட்டுமே!

ஆத்மா விஷயமாக ஒருத்தன் ப்ரவர்த்திக்கணுமென்றால் [ஈடுபடவேண்டுமென்றால்] அதற்கு அடிப்படையாக இருக்க வேண்டியது என்ன? அந்த ஆத்மா ஒன்றுதான் நித்யமானது, மற்றதெல்லாம் அநித்யமானது என்று அறிவுதான். இந்த அறிவு இல்லாவிட்டால் ஒருத்தன் இந்த அநித்ய லோகத்திலே இப்போது ஸம்ஸாரியாக அவதிப்பட்டு கொண்டிருப்பது போலவே எப்பவும் இருந்து விடுவான். ஆகவே ‘இந்த லோகத்தில் நமக்கு ரொம்ப இன்பம் தருவது, பதவி, பெருமை முதலானதுகளைத் தருவது எல்லாமுங்கூட அநித்யந்தான்; அது எதுவுமே சாச்வத ஸெளக்கியத்தைத் தரவே தராது; சாச்வத ஸெளக்யத்தைத் தருகிற ஒரே பொருள் நித்ய வஸ்துவான ஆத்மாதான்’ என்ற ‘பேஸிக்’கான எண்ணம், நம்பிக்கை ரொம்ப அவச்யம். பல வஸ்துக்கள் அவ்வப்போது மனஸை இழுக்கலாம், மயக்கலாம். அவ்வப்போதும் புத்தியை உஷாராக வைத்துக் கொண்டிருந்து, ‘இது ஸந்தோஷம் தருகிறது என்று தோன்றுவதால் இதில் ப்ரவேசிக்கலாமா? இது கலப்பில்லாத சந்தோஷந்தானா? அப்படியே கலப்பில்லாததாயிருந்தால்கூட சாச்வதமாயிருக்குமா? ஒரு தரம் இதில் ப்ரவேசித்து விட்டால் அந்த ருசி சித்தத்தில் புகுந்து மறுபடி மறுபடி அதற்கு முயற்சி பண்ணும்படியான ஒரு கட்டைச் சித்தத்துக்குப் போடுந்தானே? சித்தம் சுத்தமாகி, ஒய்ந்து, சாந்தி பெறுவதற்கு ஒன்று உதவாதானால் அதிலே ப்ரவேசிக்கலாமா?’ என்றிப்படிப் பகுத்தறிந்து, எது சாச்வதம், எது அசாச்வதம் என்று சீர்தூக்கிப் பார்த்தால்தான் சாச்வதத்திற்கு எது வழியோ அந்த ஆத்ம மார்க்கத்தில் போகமுடியும்.

இப்படிப் பகுத்தறிந்து சீர்தூக்கிப் பார்ப்பதற்குத்தான் விவேகம், விவேகம் என்று பெயர்.

நித்யம் எது, அநித்யம் எது என்று பகுத்தறிந்து சீர்தூக்கிப் பார்ப்பதற்கு நித்யாநித்ய வஸ்து விவேகம் என்று பெயர். இதுதான் ஆத்ம ஸாதனையில் முதல் படி.

அநித்ய வஸ்துக்களைப்பற்றி நமக்கே நன்றாகத் தெரியும். நமக்கு நன்றாகத் தெரிகிற எல்லாமுமே அநித்ய வஸ்துக்கள்தான்! நித்ய வஸ்து மனோ, வாக்கு கடந்ததானாலும் ஒரு மாதிரி ஸூசகமாக அதை ஆத்ம சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றிலிருந்து நித்ய வஸ்துவான ஆத்மாவைப் பற்றியும் அடிப்படை அறிவு பெற வேண்டும். நித்ய சாந்தியும் நித்ய சௌக்கியமும் தருவதான அதைப் பற்றிய நினைப்பைக் கொண்டே தற்கால சாந்தி ஸெளக்கியங்களை மட்டும் தரக்கூடிய அநித்ய வஸ்துக்களைத் தள்ள வேண்டும்.

இந்த ஆரம்ப நிலையில் அப்படியே ஒதுக்கி தள்ளிவிட வேண்டுமென்றில்லை. நித்ய வஸ்துவான ஆத்மாவாக இல்லாவிட்டாலும் நம்மை அந்த நித்யத்திடம் கொண்டு சேர்க்க ஸஹாயம் செய்வதாக அநித்ய வஸ்துக்களிலேயே அநேகம் உண்டு. ஆத்ம சாஸ்த்ரங்கள், அதைப் பற்றிப் பெரியோர்கள் செய்யும் உபதேசம், பரிசுத்தமான பாவத்தை உண்டாக்கும் புண்ய ஸ்தலங்கள், புராணம், ஸ்தோத்ரம் முதலானவை — என்றிப்படிப் பல இருக்கின்றன. இதுகளும் ஆத்மா இல்லைதான். இதெல்லாங்கூட அடிபட்டுப் போன ஸ்திதியில்தான் ஆத்ம ஸாக்ஷாத்காரம் உண்டாவது. எந்தக் கார்யமும் எண்ணமுமில்லாமல் ஆத்மா ஒன்றாக மாத்திரம் இருப்பது தான் நித்யாநுபவமே தவிர மற்ற எதுவுமேயில்லை; அது ஒன்றுதான் பரம ஸத்யாநுபவமே தவிர வேறே எதுவுமில்லை. ஸ்வாமியே நேரே நின்று தரிசனம் கொடுத்தால்கூட, ஸாக்ஷாத் அம்பாள் மடியில் போட்டுக்கொண்டு தட்டிக் கொடுத்தால்கூட, அதெல்லாமும் ஆத்மாநுபவமான நித்ய ஸத்யாநுபவம் இல்லைதான். ஆனால் இதெல்லாம் அதற்கு ரொம்பக் கிட்டே கொண்டுவிடக் கூடியவை. இப்படி ரொம்பக் கிட்டேயிருப்பதிலிருந்து ரொம்ப ரொம்ப ஆத்மாவுக்குத் தள்ளி தூரத்தில் நம்மைக் கொண்டு விட்டு விடுவதாகவும் அநேக ஸெளக்கியங்கள், அதாவது அப்போதைக்கு நாம் ஸெளக்கியமாக நினைப்பவை இருக்கின்றன. அவற்றில், இந்த ஆரம்பப் படியிலுள்ளபோது நல்லதாக இருப்பதையே விவேகத்தினால் தேர்ந்தெடுத்து அவற்றைக் கொண்டே நித்ய வஸ்துவிடம் சேர வழி செய்து கொள்ள வேண்டும். ‘அநித்ய த்ரவ்யங்களைக் கொண்டு நித்யத்தை அடைந்தவனானேன்’ என்று யமதர்மராஜா நசிகேதஸிடம் சொன்னாற்போல1!

ஆத்மாவுக்கு ரொம்ப தூரத்தில், ஆத்மாபிவிருத்திக்கு ஒரே குந்தமாக இருக்கும் வெறும் இந்திரிய ஸெளக்யங்கள், வ்ருதாவாகச் சவுடால் பேசுகிற ஸெளக்யம், தூங்கு மூஞ்சியாக ஒன்றும் பண்ணாமலிருக்கும் ஸெளக்யம் முதலியவற்றிலிருந்து அஸல் ஞான மார்க்க ஸாதகன் பூராவாகத் தப்பித்துக் கொண்டிருப்பான். ஆனால் நமக்கு இவற்றிலிருந்து ஆரம்பித்தே நித்ய – அநித்யங்களைப் பாகுபடுத்திப் பார்த்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விவேகம் தேவைப்படுகிறது. ஸினிமா, தீனி, திருப்பித் திருப்பி காபி சாப்பிடத் தோன்றுவது, கிரிக்கெட் காமென்டரி கேட்டுக்கொண்டேயிருப்பது, அச்சுபிச்சு நாவல்களைப் படிப்பது, காரசாரமாக பாலிடிக்ஸ் பேசுவது – இப்படி எத்தனையோ ஸமாசாரங்கள் நம்மை பலமாகக் கவர்ந்தபடி இருக்கின்றன. இதெல்லாம் லவலேசமாவது ஆத்மாபிவிருத்திக்கு ப்ரயோஜனப்படுமா, இவற்றுக்கு இத்தனை முக்யம் கொடுக்கலாமா என்ற நினைப்பு எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி நித்ய வஸ்துவில் சேர்க்க உதவுவது எது, உதவாதது எது என்று கறாராக சீர்தூக்கிப் பார்ப்பதுதான் நித்யாநித்ய வஸ்து விவேகம். ‘கறார்’ என்று ஏன் சொன்னேனென்றால், நமக்கு இஷ்டமான ஒன்றைப் பண்ணுவதற்கும் நம் மனஸ் எப்படியாவது ஏதாவது நியாயம் கல்பிக்கப் பார்க்கும்; ஸமாதானம் சொல்ல பார்க்கும். அதற்கு இடம் கொடுக்காமல் சீர்தூக்கிப் பார்க்கும் ஜட்ஜ்மென்ட் சக்தியான விவேகம் என்பதைக் கறாராக வைத்துக் கொண்டு மார்க் போட வேண்டும். ஃபெயிலைப் பாஸ் என்று தூக்கிப் போடாமல் நிஜமாகப் பாஸ் பண்ண வேண்டும்.

இப்போது சொன்னது ஸாமான்ய தசையிலுள்ள மெஜாரிட்டி ஜனங்களுக்கானது. ஆத்ம ஸாதனை ஒன்றே பண்ணிப் பக்வம் பெற்றவர்கள் ஸினிமா, காபி, கிரிக்கெட் இத்யாதிகளின் கவர்ச்சியிலிருந்து விடுபட்டவர்களாக இருப்பார்களானாலும் அவர்களுக்கும் ஏதாவது ஸ்வல்பமான இந்திரிய ஸெளக்ய இழுப்புக்கள் இருக்கும். நம் ஸ்திதியில் நல்லதாகவும், ஆத்ம வழியில் போவதற்கு ஸஹாயமாகவும் உள்ள சில விஷயங்கள்கூட அவர்களுக்கு அவச்யமில்லாமலிருக்கும். அவற்றையும் அவர்கள் கறாராக கவனித்துத் தள்ளிவிட வேண்டும். ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஒன்றுதான் வேண்டியது; அதில்லாவிட்டால் மீனைத் தூக்கிக் கரையில் போட்ட மாதிரிதான் என்ற தாபத்தோடு பாக்கி எல்லாவற்றையும் – கர்ம யோகிகளுக்கு ரொம்ப நல்லதாக இருக்கும் ஸமூஹஸேவை, ஏன் க்ஷேத்ராடன தீர்த்தாடனம், பக்தி உபாஸனையே கூடத்தான்; அம்பாள் மடி வரைக்கும் சொன்னேனே- அத்தனையும் அநித்யந்தான் என்று அவன் கழித்துக் கட்டிவிட்டு ஏதெது மாத்திரமே ஆத்மாவில் முழுக்கத் தோய்ந்து நிற்க உதவுமோ அதை மட்டும் தேர்ந்தெடுக்கும் விவேகத்தைப் பெற வேண்டும். ‘ஆத்மா ஒன்றுதான் வேண்டும். பாக்கியெல்லாம் அநாத்மாதான். அத்தனையையும் தள்ளிவிட வேண்டும்’ என்ற தீவிரத்தைப் பெற வேண்டும்.

நித்யாநித்ய வஸ்து விவேகம் என்பதையே ஆத்மாநாத்ம வஸ்து விவேகம் அல்லது விவேசனம் என்றும் சொல்வதுண்டு. விவேசனம் என்றாலும் விவேகம்தான். [அதாவது] விஷயங்களை நல்லது எது, கெட்டது எது என்று பகுத்துப் பார்த்து எடுத்துக் கொள்ளும் திறமை. ஆத்ம- அநாத்மாக்களைப் பகுத்துப் பார்ப்பதொன்றுதான் முடிவாக அத்வைத சாஸ்திரத்தில் ஒரே விவேகம்! ‘விவேக சூடாமணி’யை ‘ஆத்மாநாத்ம விவேக சூடாமணி’ என்றே சொல்கிற வழக்கமுண்டு. அதிலே மங்களாசரணம் – ‘கடவுள் வாழ்த்து’ மாதிரியான முதல் ச்லோகம் – ஆனவுடன் டெக்ஸ்டின் ஆரம்ப ச்லோகத்திலேயே ஸாதனாமார்க்கத்தைச் சொல்கிறபோது எல்லா மார்க்கத்தவர்களுக்கும் பொதுவான வைதிக தர்ம ஆசரணையையும், வேத வித்வத்தையும் முதலில் சொல்லி, அப்புறம் ஞான மார்க்கக்காரர்களுக்கேயான வழியாக “ஆத்மாநாத்ம விவேசனம்” என்ற ஒன்றை மாத்திரமே சொல்லி, அப்படியே ஸ்வாநுபூதி, முக்தி என்ற கொண்டுபோய் முடித்து இதற்கே முக்யத்வம் தந்திருக்கிறார்2. அந்தப் புஸ்தகத்தில் பிற்பாடும் [ஆசார்யாள்] எது நித்யம், எது அநித்யம் என்று முடிவு செய்யும் விவேகத்தை ‘ஹையஸ்ட் லெவ’லில் ‘டிஃபைன்’ பண்ணியிருக்கிறார்.

ப்ரஹ்ம ஸத்யம் ஜகந்-மித்யேத்-யேவம் ரூபோ விநிச்சய : |
ஸோ(அ)யம்நித்யாநித்ய வஸ்து-விவேக : ஸமுதாஹ்ருத : || 3

“ப்ரஹ்மம் ஒன்றுதான் ஸத்யம், ஜகத் என்பது நிஜம் போலத் தெரிந்தாலும் பொய்யாய்ப் போய்விடும் மித்யைதான் என்ற நிச்சய புத்தி ரூபத்தில் உள்ளது எதுவோ அதுவே நித்யாநித்யா வஸ்து விவேகம் என்று ப்ரகடனம் பண்ணப் பட்டிருக்கிறது” என்ற அர்த்தம். “ஸமுதாஹ்ருத:” என்றால் ப்ரகடனம் பண்ணப்பட்டிருக்கிறது. யாரால், அல்லது எதில் என்றால் வேதத்தில்தான். உண்மையான விஷயங்களை ப்ரகடனம் செய்யும் ‘அதாரிடி’ அது ஒன்றுக்குத்தான் உண்டு. அதையேதான் ஆசார்யாள் பின்பற்றியதால், ‘வேதத்தில்’ என்று சொல்லாவிட்டாலும் அதுதான் என்று புரிந்து கொள்வார்கள் என்பதால் சொல்லாமல் விட்டிருக்கிறார்.

வேதத்தின் அந்தமாக, முடிவாக, இருப்பதால் வேதாந்தம் எனப்படுகிற உபநிஷத்துக்களில் இந்த விஷயம் நிறைய இருக்கிறது. அவை ஏற்பட்டிருப்பதே அநித்ய லோகத்தில் மாட்டிக்கொண்டுள்ள ஜீவர்களை நித்ய வஸ்துவில், சேர்க்கத்தானே? நசிகேதஸ் போன்ற ஒரு சின்னப் பையனிலிருந்து ஆரம்பித்து இந்திரன் வரையில் பல பேர் அநித்யத்தை அநித்யம் என்று புரிந்து கொண்டு நித்ய தத்வத்தை தெரிந்து கொண்ட கதைகள் கடோபநிஷத்து, சாந்தோக்யோபநிஷத்து முதலியவற்றில் வருகின்றன. யமதர்மராஜா கொடுக்க வந்த அத்தனை பஹுமானங்களையும், “இதெல்லாம் அநித்யம். அப்புறம் ஒருநாள் உன் கைக்கே திரும்பி வரப்போகிறவைதானே?” என்று குழந்தை நசிகேதஸ் தள்ளிவிட்டு நித்யமான ஆத்ம தத்வோபதேசம் ஒன்றையே அவனிடம் வற்புறுத்தி வேண்டிப் பெற்றிருக்கிறான். “நித்யோ அநித்யாநாம்” – ‘அநித்ய வஸ்துக்களுக்கிடையிலுள்ள ஒரே நித்ய வஸ்து’ என்று யமதர்மராஜா ஆத்மாவை வர்ணித்து அதைக் கண்டுகொண்டுள்ளவர்களுக்குத்தான் சாச்வத சாந்தி; வேறே எவருக்கும் இல்லை என்று உபதேசிக்கிறான்4. செல்வமெல்லாம் அநித்யம். இம்மாதிரி அநித்ய வஸ்து எதைக் கொண்டும் நித்ய தத்வத்தை அடையமுடியாது என்றும் அதில் வருகிறது5. சாந்தோக்ய கதையில்6 அஸுர ராஜனான விரோசனன், தேவராஜனான இந்த்ரன் இரண்டு பேரும் ஆத்மா எது என்று ஆராய்கிறார்கள். அஸுரன் தேஹமே ஆத்மா என்று முடிவு பண்ணி விடுகிறான். “அஸுர வேதாந்தம்”! இந்த்ரனோ ஜாக்ரத்- ஸ்வப்ன- ஸுஷுப்தி (என்கிற விழிப்பு – கனவு – தூக்கம் ஆகியவை)களிலுள்ள அநுபவங்களைப் படிப்படியாக அஸத்யமென்று தள்ளி நிஜமான ஆத்மாவை தெரிந்து கொள்கிறான். இங்கே அவன் அப்படித் தள்ளுவதும் நித்யாநித்ய வஸ்து விவேசனந்தான். தைத்திரீயத்தில் ப்ருகு அன்னமய கோசத்திலிருந்து ஒவ்வொன்றையும் முதலில் ப்ரம்மமாக நினைத்து அப்புறம் இல்லையென்று புரிந்து கொண்டு கடைசியில் ஆனந்தமய கோசத்திற்கும் ஆதாரமான ஆத்மாதான் ப்ரஹ்மம் என்ற ஸரியான ஞானத்தை அடைந்ததாக இருக்கிறது. இதையே, இன்னொரு தினுசில் சொன்னால் பஞ்ச கோசங்களையும் அநித்யமென்று விவேகத்தினால் பகுத்துணர்ந்து தள்ளி ஆத்மாவையே நித்ய வஸ்துவாகத் தெரிந்து கொண்டார் என்கலாம்.

நேதி நேதி“- “ப்ரஹ்மம் இப்படியில்லை. இப்படியில்லை; அது பிடிபடுகிற எதுவுமில்லை, இன்னொன்றைப் போய் பற்றிக் கொள்கிறது இல்லை, கட்டுப்படுகிறது இல்லை, கஷ்டப்படுகிறது இல்லை, அழிகிறது இல்லை” என்று ப்ருஹதாரண்யகத்தில் வருகிறது.7 இங்கே எது எதுவாக அது இல்லை என்று இருக்கிறதோ அப்படி இருப்பவைதான் லோக வஸ்துக்கள். அதாவது பிடிபடுவதாக, சிதைந்து போவதாக, பாக்கி சொன்ன எல்லாமாகவும் இருப்பவையே லோக வஸ்துக்கள். ஆகவே ‘நேதி, நேதி’ பாகுபாடு பண்ணுவதென்பது அநித்யமான லோக வஸ்துக்களை அப்படிப் புரிந்துகொண்டு தள்ளி, மிஞ்சுகிற ஏக வஸ்துவான ஆத்மாவையே பற்றிக் கொள்வதாகவே ஆகிறது. “அந்யத் ஆர்தம்” “பாக்கியெல்லாம் நசித்துப் போகிறவை”, அதாவது ஆத்மாவைத் தவிர மீதி அத்தனையும் அழிந்து போகிறவை என்று ப்ருஹதாரண்யகத்தில் பல மந்திரங்களில் வருவதும்8 நித்யத்தை அநித்யத்திலிருந்து பிரித்துக் காட்டுவதுதான்.

பகவத் கீதையில் பகவான் உபதேச ஆரம்பத்திலேயே9 ஆத்மா ஒன்றுதான் நித்ய வஸ்து, அர்ஜுனன் எதைக் கொல்லுவதா என்று பின்வாங்குகிறானோ அந்த தேஹம் அநித்யமே; தேஹத்துக்கான எல்லா அநுபவமும் நிலையில்லாமல் வருவதும் போவதுமாக இருப்பவைதான்- ஆகமாபாயிந:அநித்யா:” என்று சொல்கிறார். நித்யமாய், நாசமற்றதாய், அளவிட முடியாததாய் இருப்பது ஆத்மா தான்: ‘ நித்யஸ்யோக்தா : சரீரிண : அநாசிநோ (அ)ப்ரமேயஸ்ய ‘ என்று விஸ்தாரம் பண்ணிக்கொண்டு போகிறார். அப்புறம் ‘அநித்யம் அஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் ‘ 10 – “அநித்யமான, துன்பமான இந்த லோகத்தில் ஜன்மம் அடைந்துவிட்டாய். கடைத்தேற என்னை வழிபடு” என்கிறார். “என்னை” என்றால்? அவர் தானே ப்ரஹ்ம ஸ்வரூபம், ஆத்ம ஸ்வரூபம்? ‘ அஹமாத்மா சூடாகேச ஸ்ரவபூதாயச ஸ்தித :’11 [எல்லா ப்ராணிகளின் ஹ்ருதயத்திலும் நான் ஆத்மாவாக நிலை பெற்றிருக்கிறேன்] என்று அவரே சொல்லியிருக்கிறாரே! ஆகையால் அவரை வழிபடுவதென்றால் ஆத்மாநுஸந்தானம் பண்ணுவதுதான். “லோகத்தில் எல்லாம் அநித்யம், நித்யமான ஆத்மாவைப் பிடிச்சுக்கோ!” என்பதுதான் அவர் சொல்வதன் தாத்பர்யம். ‘ க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்’ என்று கீதையின் பதின்மூன்றாவது அத்யாயத்திற்குப் பேர். க்ஷேத்ரம் என்ற தேஹம், க்ஷேத்ரஜ்ஞன் என்பதாக அந்த உடலுக்குள்ளே உள்ள அறிவுமயமான ஆத்மா இவைகளைப் பாகுபடுத்தும் யோகம் அது. நித்ய அநித்யங்களைப் பிரித்துணரும் விவேகம்தான் இந்த க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம். க்ஷேத்ரம் என்பதைப் பஞ்சபூதங்கள், இந்திரியங்கள், இந்திரியங்கள் தேடிப் போகிற விஷயங்கள். இச்சை, துவேஷம், ஸுக-துக்கம் முதலானவற்றால் ஆனதாக ஸ்வாமி டிஃபைன் பண்ணும்போது 12 அநித்ய வஸ்துக்களையே பிரித்து அப்படிக் காட்டியிருப்பதாகத் தெரிகிறது. அதே மாதிரி நித்ய வஸ்துவைத் தான் அவர் க்ஷேத்ரஜ்ஞன் என்கிறார் என்பதும், “அதுவே ஸர்வ லோகத்தையும் வியாபித்து விளங்குவது. உள்ளும் புறமுமாக, அசைவதும் அசையாததுமாக, தூரமாகவும் கிட்டேயும் இருப்பது அது” என்றெல்லாம் அவர் சொல்வதிலிருந்து13 தெரிகிறது. அப்புறம் க்ஷேத்ரம், க்ஷேத்ரஜ்ஞன் என்பவற்றைப் பாகுபாடு பண்ணிக் கொண்டு போகும் பகவான், “ப்ரக்ருதி – புருஷப் பாகுபாடறிந்தவன் மறு ஜன்மா இல்லாதவனாகிறான்”, அதாவது மோக்ஷம் அடைகிறான் என்கிறார்.14 திடீரென்று வேறே இரண்டு பேரைச் சொல்கிறாரே என்றால் ப்ரக்ருதிதான் க்ஷேத்ரம். புருஷன்தான் க்ஷேத்ரஜ்ஞன் என்று இந்த context-ல் தெளிவாகத் தெரியும் படிதான் சொல்லியிருக்கிறார்.

இங்கேதான் அவர் விஷயத்தையே – நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நித்யாநித்ய வஸ்து விவேகத்தையே – கிட்டித்து ஸாரமாக கொடுத்திருக்கிறார். ஸாங்க்ய சாஸ்த்ரத்தில் புருஷன் என்பதுதான் அத்வைத சாஸ்த்ரத்தில் ஆத்மா என்றும் ப்ரஹ்மம் என்றும் சொல்லும் ஸத்ய தத்வம். அதில் ப்ரக்ருதி என்பதுதான் இதில் மாயை. கொஞ்சம் வித்யாஸமுண்டென்றாலும் முக்காலே மூணுவீசம் அந்த இரண்டு (ப்ரக்ருதியும் புருஷனும்) தான் இந்த இரண்டும் (மாயையும் ஆத்மாவும்). மாயையால்தான் அநித்ய ப்ரபஞ்சம் முழுவதும் தோன்றுவது. ஆத்மாதான் நித்ய ஸத்யம் என்பது தெரிந்ததே. ஆகையால் நித்யாநித்ய வஸ்து விவேகம் என்பது அடிப்படையில் மாயா கார்யத்தை ஆத்மாவிலிருந்து பிரித்து உணர்வதுதான். ஆத்மாநாத்ம விவேசனம் என்பதில் அநாத்மா என்பது மாயைதான். ஆனபடியால் ப்ரக்ருதி-புருஷப் பாகுபாட்டை அறிவதென்பது எது அநாத்மா, எது ஆத்மா எந்று விவேசனம் பண்ணுவதுதான்.

ஆத்மஞானியான பின் அநாத்மா என்றே ஒன்று கிடையாது என்றாகிவிடும். அது பிற்பாடு நடப்பது. அத்வைதானந்தத்தில் அப்படியே மதம் பிடித்த மாதிரி ஊறிப் போய், கர்வம் என்றுகூட விஷயம் தெரியாதவர்கள் நினைக்கும்படி அவ்வளவு ராஜரீகமாக ஒரு ஞானி தன்னுடைய நிலையைச் சொல்லிக் கொள்வதாக “ப்ரௌடாநுபூதி” என்று ஆசார்யாள் எழுதியிருக்கிறார். (சிரித்து) தலைப்புக்கு ஏற்றாற்போல, அநுபூதி பற்றி proud-ஆகச் சொல்லிக் கொள்கிறாற்போலவே இருக்கும்! அதிலே ஸாக்ஷாத் ஆசார்யாளே, “ஆத்ம-அநாத்ம விவேசனங்கிறதே பேத்தல். அநாத்மா-ன்னு ஒண்ணு உண்டா என்ன? அப்படி உண்டு-ன்னா இருக்கிற அந்த வஸ்துவை எப்படிப் பொய்னு தள்ளறதாம்?” என்று ஒரே அடியாக அடித்திருக்கிறார்15. ஆனாலும் அது அநுபூதி கண்டவருடைய வார்த்தை! காண வேண்டியவருக்கோ, ‘ஆத்மா-ன்னு ஒண்ணு இருக்கா என்ன? அநாத்மாதானே, ஸர்வ வ்யாபகமா இருக்கிறதாத் தெரியறது?’ என்பதல்லவா கேள்வியாயிருக்கிறது! ஞான நிலையை அடையாத அப்படிப்பட்டவர்களெல்லாரும் அதை அடைய ப்ரயத்னம் செய்யும்போது முதலில் எது நித்யமான வஸ்து, எது அநித்ய அநாத்ம வஸ்து, எது எது அநித்யமாய் இருந்தாலும் நித்யத்தில் கொண்டு சேர்க்க உதவுவது, எது எது அநித்யச் சகதியிலேயே இன்னும் ஆழகாகப் புதைப்பது என்று நல்ல விழிப்போடு பாகுபடுத்தி சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டேதானிருக்க வேண்டும்.

ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம்

நித்யாநித்ய விவேக விசாரம்

என்று ‘பஜகோவிந்த’ த்தை முடிக்கிற இடத்தில் (கடைசி ச்லோகம் பலச்ருதி மாதிரி; அதற்கு முந்தைய ச்லோகத்தில்) இந்த ஆத்ம அநாத்மப் பாகுபாட்டை ரொம்பவும் கருத்தாகப் பண்ணவேண்டுமென்று உபதேசித் திருக்கிறார்.

நாம் அவ்வளவு புத்திசாலித்தனத்தோடு பண்ணுவோமோ மாட்டோமோ என்று ஆசார்யாளே எதெல்லாம் அநாத்மா என்று பெரிசாக லிஸ்ட் கொடுத்திருக்கிறார், ‘ நாத்மஸ்ரீ விகர்ஹணம் ‘ என்கிற ப்ரகரணத்தில். அதன் ஒவ்வொரு ச்லோகத்திலும் முதல் மூன்று வரிகளில் ஒவ்வொன்றும் ” தத: கிம்?” என்று முடியும். “அதனாலாவதென்ன? அதனால் என்ன ப்ரயோஜனம்?” என்று அர்த்தம். ஒவ்வொரு வரியிலும் நாம் பெரிசாக நினைப்பதான ராஜகௌரவம், ஸம்பத், ஆடை அலங்காரம், தேஹ ஸெளந்தர்யம், புஷ்டி போன்ற ஒன்றைச் சொல்லி ” தத : கிம்?” போட்டிருப்பார். இப்படி ப்ரதிச்லோகத்திலும் முதல் மூன்று வரிகள். நாலாவது வரியில் “ஒருத்தனால் தன்னுடைய ஆத்மா ஸாக்ஷாத்கரிக்கப்படாமலிருந்து விட்டால்” – ” யேந ஸ்வாத்மா நைவ ஸாக்ஷாத்க்ருதோ (அ) பூத் ” என்பது திரும்பித் திரும்ப வரும். “ஒருத்தனால் ஆத்மா ஸாக்ஷாத்கரிக்கப்படாதபோது ராஜகௌரவத்தால் என்ன ப்ரயோஜனம்? ஸம்பத்தால், அணி பணிகளால், அழகால், புஷ்டியால் என்ன ப்ரயோஜனம்?” என்று சேர்த்து அர்த்தம் பண்ணிக் கொள்ளுமாறு ச்லோக அமைப்பு. தான் நிஜத்தில் யார் என்றே தெரியவில்லையாம்; அப்படித் தெரியாதவனுக்கு ராஜகௌரவம், ஸம்பத்து, அது, இது என்று சேர்த்து கொள்வதில் என்ன அர்த்தம் என்று தாத்பர்யம். “அந்த ஆஸாமி யார் என்றே தெரியாது. ஆனாலும் அவனுக்கு கௌரவம் பண்ணப்போகிறோம். பணமுடிப்புக் கொடுக்கப் போகிறோம்” என்றால் எத்தனை பைத்தியக்காரத்தனமாய் இருக்கும்? அப்படித்தான் இதுவும் என்று காட்டுகிறார். ஆத்மாவான தன் உண்மை நிலையே தெரியாதவனுக்கு எதனால் என்ன ப்ரயோஜனம்? ஆத்மாவை ஒருவன் தெரிந்து கொண்டு விட்டாலும் இதெல்லாம் துச்சம்தான். இதெல்லாவற்றையும் துச்சமாகத் தள்ளினால்தான் ஒருவன் ஆத்மாவைத் தெரிந்து கொள்ளவே முடியும். ஆக, எந்த நிலையிலும் கௌரவம், ஸம்பத், அலங்காரம், ஸெளந்தர்யம், புஷ்டி, இன்னம் என்னென்னதையெல்லாம் பெரிசாக நினைக்கிறோமோ அதெல்லாம் வேண்டாடது தான். இதெல்லாம் அநாத்மா என்று ஒதுக்குவதுதான் “அநாத்மஸ்ரீ விகர்ஹணம்”. ஸ்ரீ என்றால் எல்லோருக்கும் தெரிந்த அர்த்தம் – லக்ஷ்மி, மங்கள வஸ்து, செல்வம். இன்னொரு அர்த்தம் விஷம்! விஷத்தைக் கண்டத்தில் வைத்துக் கொண்டிருப்பதாலேயே பரமசிவனை ஸ்ரீகண்டன் என்பது. இப்போது செல்வமாகத் தெரிகிற இன்பங்களை அநாத்மா என்ற விஷமாகத் தெரிந்துகொண்டு கண்டனம் பண்ணுவதே அநாத்மஸ்ரீ விகர்ஹணம். இது ஆத்மாநாத்ம விவேகம் என்னும் நித்யாநித்ய வஸ்து விவேகத்தின் இன்னொரு பேர்தான்.


1 கடோபநிஷத். II.10

2 “ஆத்மாநாத்ம விவேசநம் ஸ்வநுபவோ ப்ரஹ்மாத்மநா ஸம்ஸ்திதி: முக்தி:”

3 விவேக சூடாமணி, ச்லோ. 20

4 கடோபநிஷத். V.13

5 II.10

6 எட்டாம் அத்யாயம், கண்டங்கள் 7-லிருந்து 12 முடிய.

7 IV.2-4: IV.4-22 ஆகிய இரு இடங்களில்

8 III.4-2; III.5-1 முதலியவை

9 இரண்டாம் அத்யாயம், உபதேசத் தொடக்க ச்லோகங்கள் பார்க்க.

10 IX. 33

11 X.20

12 XIII.5-6

13 XIII.13,15

14 XIII.23

15 ச்லோ. 13

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அனைவருக்கும் அடிப்படை அத்வைத அறிவு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  வைராக்யம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it