Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

அனைவருக்கும் அடிப்படை அத்வைத அறிவு : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இரண்டு சாராராக ஜன ஸமுதாயத்தைப் பிரித்து கர்மாக்காரன், ஞானக்காரன் என்று ஆசார்யாள் பாகுபடுத்தி, ஞானக்காரனுக்கே அத்வைத ஸாதனை என்று வைத்தார். ஸாதனை அவனுக்கே என்று வைத்தாலும் அந்த சாஸ்த்ரத்தைப் பற்றிய பொது அறிவு எல்லாருக்கும் — கர்மாக்காரனுக்கும் — இருக்க வேண்டுமென்றே அபிப்ராயப்பட்டார்.

அவர் பெயரை வைத்துக் கொண்டிருக்கும் நாம் அவர் மஹத்தான ஸித்தாந்தமாக ஸ்தாபித்திருக்கும் அத்வைத நிலையைப் பெறுவதற்காக வகுத்துக் கொடுத்திருக்கும் ஸாதனை பற்றி எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை இருக்கிறது என்றே பேச ஆரம்பித்தேன். ஸாதாரணமாக இந்த விஷயம் நான் பேசுவது இல்லை. வெறும் வாய் பேச்சாக ‘அத்வைதா, அத்வைதா’ என்று எங்கே பார்த்தாலும் முழங்குவதாக இருந்து, அதனாலேயே எல்லோரும் பேசி, எவருமே அநுஷ்டானத்தில் எடுத்துக் கொள்ளாமல், எல்லாரும் அத்வைதிகளாகிவிட்ட மாதிரி தப்பான, அசாஸ்த்ரீயமான ஸமத்வக் கொள்கை பரவி வருவதால், ‘நாமும் பொதுமக்களின் இந்த ப்ரமையை ஜாஸ்தியாக்க வேண்டாம்’ என்றே இந்த விஷயம் [நான்] பேசுவதில்லை. ஆனாலும் ஸமீபத்தில் ஆசார்யாள் ஜயந்தியாகி இங்கே பெரிய வித்வத் ஸதஸும் நடந்ததில்1 சில பேர் வந்து, “எங்களுக்கு அத்வைதம் சொல்லவே கூடாதா?” என்று விஞ்ஞாபனம் செய்து கொண்டதால் தான், அத்வைத ஸாதனை என்றால் அதில் எத்தனை கட்டுப்பாடு இருக்கிறது, அது யார் யாருக்கு எடுத்தது என்று தெரிவிப்பதற்காவாவது அதைப்பற்றி அத்வைத குரு என்றே பேர் வைத்துக் கொண்டிருக்கும் நாமும் பேசத்தான் வேண்டுமென்று நினைத்தேன். அப்படி விஞ்ஞாபனம் செய்தவர்களும் இப்போது இங்கே இருப்பதால், ஒத்திப்போட வேண்டாம் என்று ஆரம்பித்து விட்டேன்…

ஆத்மாவை பற்றிய நினைப்பு, அத்வைத சாஸ்திரத்தின் ஆதாரக் கோட்பாடுகள் எல்லாருக்கும் தெரிய வேண்டியதே என்று ஆசார்யாளும் நினைத்தது “பால போதம்” என்று அரிச்சுவடி ரூபத்தில் அவர் எழுதியிருப்பதில் கூட வெளியாகிறது என்று சொன்னேன்.

“ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா” என்பது பொது ஜனங்களுக்கான அவருடைய இன்னொரு ப்ரகரணம். சராசரி க்ருஹஸ்தனை உத்தேசித்தே எழுதிய இதுவும் கேள்வி-பதில் ரூபத்தில் (‘ப்ரச்னம்’: கேள்வி, ‘உத்தரம்’: பதி்ல்: இரண்டிலும் அநேகம் சேர்ந்து ராகமாலிகை மாதிரி ப்ரச்னோத்ர மாலிகை ரூபத்தில்) அமைந்திருக்கிறது. அதில்,”இருந்தும் செத்தவன் யார்?” என்று ஒரு கேள்வி: “கோ ஹத:?” அதற்குப் பதில் “க்ரியா ப்ரஷ்ட:2 அதாவது ‘தனக்குரிய கர்மாவைச் செய்யாமல் விலகியவன்’. ‘ஸகல கர்மாநுஷ்டானத்தையும் விட்டுவிட்டு ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு ஆத்ம விசாரம் செய்பவன்தான் பிறவிப் பயனைப் பெற்றவன். மற்றவர்கள் ஆத்மஹத்தி செய்து கொண்டவர்களே. அதாவது இருந்தும் செத்தவர்களே’ என்று ‘விவேக சூடாமணி’ முதலான முழு ஞான நூல்களில் சொன்ன அதே ஆசார்யாள், இங்கே கர்மாதான் மநுஷ்யன் செய்ய வேண்டியது, செய்யாவிட்டால் அவன் ‘இருந்தும் செத்தவன்’ என்பதால் இந்த நூல் ‘ஆவரேஜ்’ மநுஷ்ய ஸமூஹத்தை உத்தேசித்தே செய்ததென்று தெரிகிறது. ‘ஒருவன் துக்கமில்லாமலிருப்பது எதனால்?’ என்று அதில் ஒரு கேள்வி வருகிறபோதும், ‘கீழ்ப்படிதலுள்ள பெண்டாட்டியால் என்று பதில் சொல்லியிருப்பதால்3; அப்புறம், “மித்ரம் கிம்?” — “பார்யா” 4: ‘ஒருத்தனுக்கு உண்மையான ஸ்நேஹிதர் யார் என்ற கேள்விக்கு ‘பத்னிதான்’ என்றும் சொல்வதால் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் க்ருஹஸ்தர்களுக்கான உபதேசமாக பண்ணிக்கொண்டு போகிறாரென்று நன்றாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட புஸ்தகத்திலும் ஆசார்யாள் அத்யாத்ம ஸமாசாரங்களைச் சொல்லாமல் விடவில்லை. அதை ரொம்பவும் நயமாக பண்ணியிருக்கிறார். அதாவது ஞானிக்கான தர்மத்தை, அவனுடைய நிலையைச் சொல்கிற இடங்களில், “இது உனக்கு இல்லேடாயப்பா; ‘அதாவது நீ இப்பவே இப்படி இருக்கணும்னு இல்லை. இது ஆத்ம ஸாதனையிலேயே இறங்கிவிட்டவனுக்குத்தான் பொருந்துவது” என்று சொல்லாமல் சொல்கிற முறையில் ஞானிக்கே உரித்தான ஒரு லக்ஷணத்தைச் சொல்லியிருப்பார். ஸகலருக்குமான பொது விஷயங்களைச் சொல்கிற இடத்தில் அப்படி ஒரு லக்ஷணமும் சொல்லாமல் வெறுமே உபதேசம் மாத்திரம் பண்ணியிருப்பார். உதாரணம் காட்டினால் புரியும்.

[உதாரணமாக] எடுத்தவுடன் முறைப்படி குருவைப் பற்றிச் சொல்லிவிடுகிறார் – கேள்வி பதிலாகத்தான். அப்புறம்5 முதல் கேள்வியே “த்வரிதம் கிம் கர்த்தவ்யம் விதுஷாம்?” என்பதுதான். “அறிந்தவர்கள் விரைவாகப் பண்ண வேண்டியது என்ன?” என்று அர்த்தம். “அறிந்தவர்” என்று இங்கே லக்ஷணம் கொடுத்திருப்பதைக் கவனிக்க வேண்டும். ‘வித்வான்’ — அறிந்தவர். அதற்குப் பன்மை ‘வித்வாம்ஸ:’ அதற்கு ஆறாம் வேற்றுமை ‘விதுஷாம்’ “அறிந்தவர்களுடைய அவஸர காரியம் என்ன?” என்று கேள்வி. Common man -ஐ பற்றிக் கேள்வியில்லை. அறிந்தவரான மேன்மக்களைப் பற்றியே கேள்வி. “அறிந்தவர் அவஸர உணர்ச்சியோடு செய்ய வேண்டியதென்ன?” என்று கேள்வி. பதில் : “ஸம்ஸார ஸந்ததிச்-சேத:“- ‘ஸம்ஸாரத் தொடர் கதையை முறித்துப் போடுவது!’ செத்துச் செத்துப் பிறக்காமல் மோக்ஷமடைவது என்று அர்த்தம். மோக்ஷ மார்க்கத்தைக் ‘காமன் மானு’க்கும் எடுத்த எடுப்பிலேயே ஞாபகப்படுத்திவிட வேண்டுமென்று ஆசார்யாள் அபிப்ராயப்பட்டிருப்பது இதிலிருந்து தெரிகிறதோல்லியோ? ஆனாலும் உடனே அதற்கு அவன் அவஸரப்படவேண்டியதில்லை என்பதால் அப்படி அவஸரப்பட வேண்டியவர் அறிந்தவரான வித்வானே என்றும் பாகுபடுத்திக் காட்டியிருக்கிறார்.

பின்னாடி ஒரு இடத்தில்6கஸ்மாத் உத்வேக: ஸ்யாத்?” என்று ஒரு கேள்வி. “எதைப் பார்த்து நடுங்கணும்?” அதுதான் கேள்வி. உத்வேகம் என்றால் ‘நடுங்குவது” ‘பயப்படுவது’. அதுதான் அதற்கு அர்த்தம். இப்போது, ‘கூடுதலான வேகம்’ அல்லது ‘ஒரு உந்தலின் மேல் ஏற்பட்ட வேகம்’ என்ற அர்த்தத்திலே பலபேர் ‘உத்வேகம்’, ‘உத்வேகம்’ என்று எழுதுகிறார்கள். அது தப்பு. உத்வேகம் என்றால் நடுங்குவது, துடிப்பதுதான். “நடுங்குதற்குரியதெது?” என்று கேள்வி. பதில்: “ஸம்ஸார அரண்யத: ஸுதிய:” — ஸம்ஸாரக் காடுதான் பயந்து நடுங்க வேண்டியது என்கிறார். அப்படிச் சொல்லும்போதே இப்படிப்பட்ட நடுக்கம் எல்லாருக்கும் வராது என்பதால்தான் “ஸுதிய:” என்று லக்ஷணம் கொடுத்துச் சொல்கிறார். “ஸுதிய:” என்றால் ‘உயரறிவு பெற்றவர்கள்’. உசந்த ஞானம் ஸம்பாதித்துக் கொள்ளத் தகுதியடைந்தவர்கள்தான் ஸம்ஸார வாழ்க்கையை ஒரு பயங்கரக் காடாக நினைத்து நடுங்கி, அதிலிருந்து விடுபட்டு ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள முடியும் என்பது தொக்கி நிற்கிறது. ஆனால் ‘காமன் மானு’ம் அப்படி உயரறிவாளன் பண்ணுவானென்று தெரிந்தாவது வைத்துக் கொள்ள வேண்டுமென்று தான் இப்படி ஒரு கேள்வி பதிலைச் சேர்த்திருக்கிறார்.

‘அறிந்த’ வித்வான் ஸம்ஸாரத்தை முறிக்கணும், ‘உயர்ந்த புத்தியுள்ள’ ஸுதீ ஸம்ஸார அரண்யத்திற்கு பயப்படணும் என்பதை ஆவரேஜ் மநுஷர் – நம்மைப் போன்றவர்கள் – தெரிந்துகொண்டால் போதும் என்று ஆசார்யாள் நினைத்தது மட்டுமில்லை; ஸம்ஸார விஷயமாக நாம் ஸகலருமே பண்ணவேண்டிய ஒன்றையும் அவர் சொல்லியிருக்கிறார். ரஸமான முறையில் சொல்லியிருக்கிறார்.

கிம் ஸம்ஸாரே ஸாரம்?7 என்று கேள்வி: “ஸம்ஸாரத்தில் ஸாரமாக இருப்பது என்ன?”

பதில்: “பஹுசோபி விசிந்த்யமாநம் இதம் ஏவ” – “திரும்பத் திரும்ப இதையே நினைத்துக் கொண்டிருப்பதுதான்.”

“எதை?”

“இப்போ கேள்வி கேட்டியே, ‘ஸம்ஸாரத்தில் என்ன ஸாரம் இருக்கு?’ன்னு, அதையே நினைச்சு அப்படியே திருப்பித் திருப்பிக் கேட்டுண்டு இரு. பிறவி எடுத்த பயனே இந்தப் பிறவி எடுத்ததாலே ஏதாவது பயணுண்டா என்று அடிக்கடி விசாரிச்சுப் பார்த்துண்டு இருக்கிறதுதான். அதைத்தான் ‘இதம் ஏவ பஹுசோபி விசிந்த்யமானம்’னு சொன்னது.”

இப்படிக் கேட்டுக் கொண்டே இருந்ததால், அதாவது அறிவால் ஆராய்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தால் ஸம்ஸாரத்தில் ஸாரமேயில்லை என்று தெரியும். எது ஸாரமோ அந்த ஆத்மாவைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுண்டாகும். அந்த ஸமயத்தில், ” ‘கிம் ஸம்ஸாரே ஸாரம்?’ என்று நாம் கேட்டுக் கொண்டிருந்ததால் தானே இப்போது இந்த உத்தமமான விஷயத்திற்கு ஆர்வப்பட முடிந்திருக்கிறது? நாம் ஸம்ஸாரியாக இருந்துகொண்டு, அப்படி இருப்பதோடேயே நம் வாழ்க்கை நிறைந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த ஸமயத்தில் அந்தக் கேள்விதானே நம் கண்ணைத் திறந்துவிட்டுக் காப்பாற்றிற்று? ஆனபடியால் ஸம்ஸாரத்தில் ஏதாவது ஸாரமிருக்குமானால் அது அந்தக் கேள்விதான்; இடைவிடாத கேள்விதான்” என்று தெரியும்.

அதாவது ஆத்ம சிந்தனை எப்போதும் கொஞ்சமாவது இருந்து கொண்டிருக்க வேண்டும் என்று [ச்லோகத்தின்] அர்த்தம். இங்கே வித்வான், ஸுதீ என்கிறார்போல லக்ஷணை எதுவும் கொடுக்காததால் இது ஸகல ஜனங்களுக்குமான உபதேசம். கர்மாவை விட்டால் இருந்தும் செத்தவனாகிவிடும் ‘காமன் மானு’ங் கூட ஸம்ஸார விடுதலையைப் பற்றி அவ்வப்போது நினைத்தபடியே இருக்க வேண்டும் என்று ஆசார்யாள் அபிப்ராயப்படுகிறார்.

இங்கே ‘ஸம்ஸாரத்தில் ஸாரமென்ன என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கணும்’ என்றவர் கொஞ்சம் தள்ளி8 “ராப்பகல் நினைக்கவேண்டியது என்ன?” என்றே ஒரு கேள்வி கேட்கிறார். “கா அஹர்நிசம் அநுசிந்த்யா?

பதில் “ஸம்ஸார அஸாரதா” – “ஸம்ஸாரம் ஸாரமற்றது என்பதுதான்.”

‘ஸோபான பஞ்சகம்’ என்று ஆசார்யாள் அநுக்ரஹித்திருக்கிறார். அவர் சரீர யாத்திரையை முடித்து ப்ரஹ்ம நிர்வாணம் அடைய உத்தேசித்திருப்பதாக பக்தர்களுக்குத் தெரியவந்தபோது “எங்களை யெல்லாம் விட்டு விட்டுப் போகிறீர்களே! எத்தனையோ உபதேசம் தாங்கள் கட்டுக்கட்டாக எழுதி வைத்தாலும் நாங்கள் அதைப் படிக்க ஸாவகாசப்படுமோ படாதோ? அதனால் அவதாரத்தை முடிக்கு முன் எல்லாவற்றையும் சுருக்கி ஒரு உபதேசம் அநுக்ரஹிக்க வேண்டும்” என்று ப்ரார்த்தித்துக் கொண்டார்கள். அப்போது அவர் சொன்னதுதான் “ஸோபான பஞ்சகம்”. “உபதேச பஞ்சகம்” என்றும் அதற்கு இன்னொரு பேர் சொல்வதுண்டு. ஸோபானம் என்றால் படி வரிசை. அடிப்படியில் நம் மாதிரி ஸாமான்ய ஜனங்கள் எங்கே ஆரம்பிக்க வேண்டுமென்பதிலிருந்து பரப்ரஹ்மத்திலேயே ப்ரதிஷ்டையாகிவிடும் உச்ச ஸ்தானம் வரையில் அதில் டைரக்ஷன் வரிசையாய்க் கொடுத்துக் கொண்டு போயிருக்கிறார். ஆரம்பம் “வேதோ நித்யம் அதீயதாம் ததுதிதம் கர்மஸ்வநுஷ்டீயதாம்“, – ‘வேதத்தை தினமும் அத்யயனம் பண்ணி அதில் சொல்லியிருக்கும் கர்மாக்களையெல்லாம் அனுஷ்டியுங்கள்” என்பது. ஆகவே கர்ம மார்க்கத்தில் போக வேண்டியவனுக்கே இந்த உபதேசம் என்று தெரிகிறது. ஆனால் இந்த உபதேசத்திலேயே ‘ஆத்மேச்சையை (ஆத்ம ஸம்பந்தமான ஆர்வத்தை) வளர்த்துக்கோ! வீட்டை விட்டு ஒடு! குருவிடம் வேதாந்த மஹாவாக்ய உபதேசம் வாங்கிக்கோ!’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போய், “பரப்ரஹ்மத்திலேயே ப்ரதிஷ்டையாயிடு!” என்று முடித்திருப்பதால் தற்போது கர்மாவுக்குத்தான் அதிகாரியாயிருப்பவனுங்கூட ஞானயோகத்தைப் பற்றிய எல்லா விஷயமும் தெரிந்தவனாயிருக்கவேண்டுமென்பதே ஆசார்யாள் கருத்து என்று தெரிகிறது.

இப்படிப் பார்த்துக் கொண்டே போனால் நன்றாக கன்ஃபார்ம் ஆகிறது — ஸாங்க்யர், யோகி என்று பகவான் நன்றாகப் பிரித்து வைத்ததுபோலவே ஆசாரியாளும் ஞானத்திற்கு அதிகாரி வேறே, கர்மத்திற்கு வேறே என்று எல்லை கட்டி வைத்திருந்தாலும் கர்மத்திற்கு அதிகாரியான பெரும்பாலருங்கூட ஞானத்தைப் பற்றி ஒரு அடிப்படை அறிவு பெற்றிருக்கவேண்டுமென்று நினைத்தார் என்று. பகவானுங்கூடத்தான் (இம்மாதிரியே நினைத்திருக்கிறார்). அர்ஜுனனை அவர் கர்ம யோகத்திற்கு அதிகாரியாகத் தான் நினைத்தார். “கர்மண்யேவ அதிகாரஸ்-தே” என்று அவர் அவனிடம் சொன்னது9 அநேகமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம். சண்டை போடமாட்டேன் என்று ஸந்நியாஸியாக ஒடிப்போகத் தயாராக இருந்த அவனை அவர் இழுத்துப் பிடித்து வைத்து “போடு சண்டை” என்று கர்மத்திலேயே ஈடுபடுத்தியிருக்கிறார். ஆனாலும் அப்போது அவனுக்கு உபதேசித்த கீதையிலேயோ கர்ம யோகத்தை மாத்திரம் சொல்லாமல் ஸவிஸ்தாரமாக ஞான யோகத்தையுந்தானே சொல்லியிருக்கிறார்? ஆரம்பமே ரொம்ப abstract -ஆக ஸாங்க்ய யோகத்தில்தானே இருக்கிறது?

[சிரித்து] இத்தனையும் எனக்கு ‘ஜஸ்டிஃபிகேஷன்’!10

ஸங்கீதத்தில் கரை கண்டவர்கள் ஸ்வரங்களை எடுத்துக் கொண்டு எந்தெந்த ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களை எப்படிப் பிடிக்க வேண்டும், இழைக்க வேண்டும், ந்யாஸம் விந்யாஸம் செய்ய வேண்டும் என்று அலசிப் பார்த்து முடிவு பண்ணுகிறார்கள். ஆரம்ப சி்க்ஷை கற்றுக் கொள்கிற குழந்தைக்கும் அதே ஸ-ரி-க-ம-ப-த-நி தான் பாடமாயிருக்கிறது. இழைக்கிறது, நீட்டுகிறது எல்லாம் சொல்லிக் கொடுக்காமல் மொட்டை மொட்டையாகப் பிடித்தாலே போதும் என்று ஆரம்பிக்கிறார்கள். ச்ருதி தப்பாமல் ஸ்வரஸ்தானங்களில் நின்றுவிட்டாலே போதும் என்று அந்த ஸ்டேஜில் வைத்துக் கொள்வது. இதில் ஆரம்பித்துத்தான் கடைசியில் அந்த ஸ்வர ஸூக்ஷ்மங்களில் புகுந்து ந்யாஸம், விந்யாஸம் செய்வது வரை போவது. அந்த ந்யாஸ், விந்யாஸம் மாதிரி நம் வாழ்க்கையின் கடைசியில் ஸந்நியாஸம். அதிலே எந்த தத்வ ஸூக்ஷ்மங்களையும் அப்யாஸ ஸூக்ஷ்மங்களையும் அலசியும் அநுபவித்தும் தெரிந்து கொள்ள முடியுமோ அதையேதான் பால சிக்ஷை ஸ-ரி-க-ம-ப-த-நி மாதிரியாவது இப்போதே ஸகலரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவச்யமாயிருக்கிறது.


1 1965 சங்கர ஜயந்தி சென்னை தண்டையார்பேட்டையில் நடந்தது. அதற்கு ஒருசில தினங்களுக்குப்பின் ஒரு பிற்பகல் ஒரு சிறிய கூட்டமாகவே அடியார்கள் திரண்டிருந்தபோது ஸ்ரீசரணர்கள் அருளியதே இப் பேருரையின் இப் பகுதியும், மற்றும் கணிசமான பகுதிகளாகும்.

2 ச்லோ.5௦.

3 ச்லோ.31.

4 ச்லோ.49.

5 ச்லோ.3

6 ச்லோ.19

7 ச்லோ.5

8 ச்லோ.16

9 கீதை II.47

10 பொதுப் பிரசங்கத்தில் அத்வைத ஸாதனை பற்றிச் சொல்வதற்கு நியாயம் காட்டுவதை குறிப்பிடுகிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பக்தியோக விஷயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  நித்ய-அநித்ய வஸ்து விவேகம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it