ஸகலருக்கும் சொல்வதன் காரணம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

நாம் செய்யவேண்டியது கர்மாவின் பலனில் ஆசையை விடுவது, அப்படி விடப் ப்ரயத்தனம் பண்ணுவதுதான். அதுவே மஹா கஷ்டமாயிருக்கிறது. பலனை நினைக்காமல் பழைய கர்மா தீர்வதற்காகவே இப்போது ஸ்வதர்ம கர்மாவைப் பண்ணிக்கொண்டு போவது, அதனால் சித்த சுத்தி பெறுவது என்றால் லேசில் முடியவில்லை. இப்படிப் பண்ணுவதற்கே — ஞான மார்க்கத்தில் நிதித்யாஸனம் செய்வதற்கு வழியாக அல்ல; கர்ம யோக மார்க்கத்தில் பலனில் பற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டு வருவதற்கே — அநேக தத்வார்த்தங்கள் தெரிந்து கொண்டு தெளிவுபெற வேண்டியிருக்கிறது; அநேக அப்யாஸங்களைப் பயிற்சி பண்ண வேண்டியிருக்கிறது. கடைசியில் பார்த்தால், இதெல்லாம் ஞானயோகத்தில், அதாவது அத்வைத ஸாதனையில் போட்டுக் கொடுத்திருக்கும் அதே படிகளாக இருக்கிறது. ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு ச்ரவண, மனன, நிதித்யாஸனம் செய்வதற்கு முந்தி அந்த ஸாதனா க்ரமத்தில் பல படிகள் சொல்லியிருக்கிறதல்லவா? அதெல்லாம் கர்ம யோகத்தை ஸரியான முறையில் அநுஸரித்து முன்னேறுவதற்கும் அவச்யமாயிருக்கின்றன. ஆனால் அத்தனை ஆழம் போக வேண்டாம். மேல் மட்டங்களில் நீச்சல் போட்டால் போதும் என்கிற அளவில் அவச்யமாயிருக்கின்றன.

நாலாவது படிக்கிற பையனின் சரித்திர புஸ்தகத்திலும் மோஹஞ்சதரோவில் ஆரம்பித்து, வேதகாலம்1, புத்தர் காலம் மௌர்யர் காலம், குப்தர்காலம், துருக்கர் காலம், வெள்ளைக்காரர் காலம் என்று எல்லா பாடங்களும் இருக்கின்றன: எம்.ஏ. இன்டியன் ஹிஸ்டரி படிக்கிறவனுக்கும் இதே பாடங்கள் இருக்கின்றன. இரண்டுக்கும் எத்தனையோ வித்யாஸம் இருந்தாலும் அங்கே சொல்வது இங்கேயும் தேவைப்படுகிறது. அப்படித்தான் ஞானமார்க்க எம். ஏ., அப்புறம் பி.எச்.டிக்காரர்களுக்கான விஷயங்களே கர்ம மார்க்க ஸ்கூல் பசங்களுக்கும் சிறிய அளவில் கற்றுக் கொடுக்க வேண்டியவையாக இருக்கின்றன.

ஸ்விட்ஜர்லாண்டுக்குப் போய் பனியிலே சறுக்கி விளையாடுவது, ரம்யமான மலைக்காட்சிகளை நேரில் பார்ப்பது, நமக்கு எட்டாதவையாக இருக்கலாம். ஆனால் நல்ல கலர் போட்டோவில் அதையெல்லாம் பார்த்தாலே துளித்துளி நேரில் அநுபவித்த ஸந்தோஷம் உண்டாகிறது. அதோடு இப்படி பார்ப்பதே எப்போதாவது அங்கு நேரில் போகத்தான் வேண்டும் என்ற ஆசையையும் உண்டாக்கி அதைக் கார்யமாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் தூண்டிவிடுகிறது. ஸ்விட்ஜர்லாண்டுக்குப் போகலாம், போகாமலிருக்கலாம். போவதால் சாச்வதமான ஆனந்தம் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. ஆனால் சாச்வத ஆனந்தம் தருகிற ஆத்ம லோகத்துக்கு யாரானாலும் போகப் பிரயாஸைப் படத்தான் வேண்டும். போய்ச் சேருகிற காலம் எப்போதாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனாலும் போகத்தான் வேண்டும். அதுதான் பிறவி எடுத்த பயன்; இனிமேல் பிறவியே இல்லை என்று பண்ணிக் கொள்கிற பெரிய பயன். அதனால்தான் அதற்கான வழியை, அதிலே ஒரு ருசியை உண்டாக்க, ஒரு ஃபோட்டோவில் காட்டுகிற மாதிரியாவது இப்போதே பிடித்துக் கொஞ்சம் சொல்வது.

இன்னொரு காரணமும் உண்டு. மிகப் பெரும்பாலானவர் அத்வைத ஸாதனைக்கு இப்போதே அதிகாரிகளாக இல்லாவிட்டாலும் அவர்களிலும் எல்லோரும் ஒரே கீழ்ப்படியில்தான் இருப்பார்கள் என்றில்லை. கொஞ்சங் கொஞ்சம் சித்த சுத்தி, விவேகம், வைராக்யம் உள்ளவர்கள், ஒரளவுக்கு நன்றாகவே விவேக வைராக்ய த்ரிகர்ண சுத்தி உள்ளவர்கள் என்று பல தரமானவர்கள் இங்கேயே இருக்கலாம். அவர்களுக்கு ஸாதனை க்ரமத்தை தெரிந்து கொள்வதே, “நாம் இன்னும் கொஞ்சம் ப்ரயாஸை எடுத்துக்கொண்டு நம்மை நன்றாக ஸரிப் பண்ணிக்கொண்டு அந்த வழியில் போக வேண்டும்” என்ற ஆர்வத்தைத் தூண்டிவிடலாம். “இப்படி ஒரு வழி” என்று சொல்வதாலேயே ‘அது என்ன’? சும்மா தெரிந்து கொள்வோமே!’ என்பதில் ஆரம்பித்து, ‘அதில் போகத்தான் முயற்சி செய்வோமே!’ என்று முடிவு பண்ணும் வரையில் பலதரப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தில் கவனத்தைத் திருப்பியதாகிறது. மந்த்ரங்கள் மாதிரியோ கொஞ்சம் தப்பாக பண்ணினால்கூட இசகுபிசகாகி விபரீதத்தில் கொண்டுவிடும் குண்டலினீ முதலான யோகங்கள் மாதிரியோ உள்ள விஷயங்களைப் பொதுவில் எல்லோருக்கும் சொல்லாமல் ரஹஸ்யமாகத்தான் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும். ஞானயோகம் அப்படியெல்லாமில்லாததால் எல்லாருக்கும் சொல்வதால் மஹா தப்பு என்றில்லை.

இங்கே ஒன்று முக்கியமாகச் சொல்லணும். ஞான யோகத்தையே ஸாதனை என்று எடுத்துக் கொள்கிறவனுக்குத்தான் ஸந்நியாஸாச்ரமத்தை ஆசார்யாள் சொன்னாரே தவிர, அந்த யோக்யதாம்சம் இல்லாதவர்களும் (ஸாதனையாக அதை அப்யஸிக்கக்கூடாதென்றாலும்) ஆத்ம விஷயங்களைத் தெரிந்துகொண்டு கொஞ்சமாவது ஆத்ம சிந்தனையோடு இருக்கவேண்டுமென்று அவரும் அபிப்ராயப்பட்டிருக்கிறார்.

“பால போத ஸங்க்ரஹம்” என்று ஒரு சிறிய உபதேச நூல் அவர் அருளியிருக்கிறார். ‘ஸங்க்ரஹம்’ என்றால் சுருக்கம். ‘பாலபோதம்’ என்ற பேரே அது குழந்தைகளுக்கானது என்று தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கான போதனை ‘பாலபோதம்’. எட்டு வயஸுக் குழந்தையாயிருக்கும்போதே அந்தக் காலத்தில் உபநயனம் ஆகியிருக்குமல்லவா? அப்புறம் குருகுல வாஸத்தில் அத்யயனம் பண்ணும் காலத்தில் முதல் மூன்று, நாலு வருஷம் வரைகூட, அதாவது பிரம்மச்சாரிக்கு பதினொன்று, பன்னிரண்டு வயஸாகும் வரைகூட குழந்தை என்று சொல்லலாமல்லவா? இம்மாதிரிக் குழந்தைகளுக்கு ஆசார்யாள் சுருக்கமாகத் தரும் உபதேசந்தான் ‘பால போத ஸங்க்ரஹம்’. ஒரு சின்ன பையனுக்கு அவனே கேள்வி கேட்டு ஒரு குரு பதில் சொல்வது போல அந்த நூல் மூலம் ஆசார்யாள் உபதேசிக்கிறார். என்ன உபதேசமென்றால் பரம வேதாந்தமான அத்வைத உபதேசம்! அத்வைத வித்யையின் முக்ய பாயின்ட் அவ்வளவையும் ஸங்க்ரஹமாக அதில் கொடுத்து விடுகிறார். அத்வைத ஸாதனையின் அங்கங்கள் என்ன என்றும் அதிலே சொல்லியிருக்கிறார். இதிலிருந்து தெரிகிறதல்லவா, ரொம்பப் பக்வப்பட்டு யோக்யதாம்சங்களெல்லாம் ஸம்பாதித்துக் கொண்டு, உடனே ஞான வழியை ப்ராக்டிஸ் பண்ணக் கூடியவருக்கு மட்டுந்தான் அத்வைத ஸம்பந்தமான விஷயங்களைச் சொல்லலாமென்று ஆசார்யாள் நினைக்கவில்லை என்று? முடிவான பரம ஸத்யமான அந்தத் தத்வம் இன்னவென்று ஒரு அவுட்லைனாகக்கூட தெரியாதவர்களாக யாருமே இருக்கப்படாது என்பதே அவருடைய அபிப்ராயமென்று தெரிகிறதல்லவா? அதில் நேராக அப்யாஸம் என்று ஒருவன் இறங்குவது எப்போது வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; ஆனால் அந்த அப்யாஸ முறை — அதாவது ஸாதனை க்ரமம் — என்னவென்று எவரும் அறிந்திருக்க வேண்டும் என்றே அவர் நினைத்திருப்பதாகத் தெரிகிறது.

ஆசார்யாள் என்றாலே உடனே அத்வைதம் என்று ஸகலரும் நினைக்கிறோம். ஆனாலும் அவருடைய பெருமை அதை அவர் ஸகலருக்கும் வைக்காததுதான்; தாம் வெகு அழகாக, கெட்டியாக அத்வைத ஸித்தாந்தத்தை நிர்மாணித்துவிட்டோம் என்பதால் அதை எல்லாருக்கும் உடனடி அநுஷ்டானமாக அவர் வைத்து விடவில்லை. மநுஷ்ய நேச்சரைப் புரிந்துகொண்டு ரொம்பவும் ‘ஸிம்பதி’யோடு கர்மாவுக்கென்று ஒரு சாராரை வைத்துவிட்டு, மற்றவர்களுக்கே அத்வைதத்தை வைத்தார்…..


1 மோஹஞ்சதரோ நாகரிகமும் வேத நாகரிகந்தான் என்பதே ஸ்ரீசரணர்களின் கருத்து. ஆயினும் தற்காலச் சரித்திர நூல்கள் கூறும் காலக் கிரமப் பிரிவினையை மனத்தில் கொண்டே இவ்வாறு மொழிந்துள்ளார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is இருவேறு சாராருக்கு இருவேறு வழிகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  பக்தியோக விஷயம்
Next