குருவின் பிரியமும் தியாகமும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

சொல்ல வந்த விஷயம், ப்ரௌட ப்ரௌடமான அநுபூதி பெற்றதால் மாயை எவரைவிட்டு ஓடிவிட்டதோ அந்த மஹான் குருவாகி இருந்து காட்டும் ப்ரியமும், பண்ணும் த்யாகமும்.

அவர் இஹத்திலிருக்கும்போதே உள்ளூர பூர்ணாநுபவத்தில் இருப்பவர். “ஸ்வாந்தே ஸம்யக்-இஹ-அநுபூதம்” என்று இருக்கிறது. அப்படிப்பட்டவர் தன்னுடைய நிலையை வர்ணித்துப் பாடுவதாக ஆசாரியாள் ச்லோகங்கள் பண்ணியிருக்கிறார். அதற்குப் பேர் “ப்ரௌடாநுபூதி”.

பூர்ணாநுபவத்தில் திளைத்துக்கிடக்கும் ஒரு ஜீவன் முக்தர் எதற்காக தம்முடைய நிலையை வர்ணிக்க வேண்டும்? அது அவருக்கு அவசியமில்லை. அப்படிச் செய்வதால் அவருக்கு ஒரு லாபமில்லை. “யம் லப்த்வாசாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத:”1 என்றபடி, எதை அடைந்தபின் வேறெதையும் ஒருவன் லாபமாகவே நினைக்கமாட்டானோ அப்படிப்பட்ட ஸ்திதியிலுள்ள அவர் தமது நிலையை ‘பொயட்ரி’ பாடிக்கொள்வதில் ஒரு லாபமுமில்லை. அது ஒருவேளை அவருடைய உள்ளநுபவ ஆனந்தத்திலிருந்து அவரை கொஞ்சம் ‘டிஸ்ட்ராக்ட்’ பண்ணும் நஷ்ட ஸமாசாரமாக இருக்கலாமோ என்னமோ? ஜீவன்முக்தர் வெளியிலே என்ன செய்தாலும் உள்ளே டிஸ்ட்ராக்ஷன் இருக்கவே இருக்காதுதான். ஆனாலும் வெளிக்கார்யம் செய்வதால் அவருக்கு ஒரு லாபமுமில்லை என்பது நிச்சயம். வெளிக்கார்யம் அவர் எதற்காகச் செய்ய வேண்டும்? சரீரம் ஜீர்ணித்து விழுகிறபோது விழட்டும் என்று, பேசாமல் அவர் ஸமாதியிலேயே இருக்கலாம் தானே? பின்னே எதற்கு இந்த வர்ணனையில் இறங்கியிருக்கிறார்?

இதற்குக் காரணம், தாமே ப்ரௌட ப்ரௌட அநுபூதிமானாக இருந்தபோதிலும் கட்டுக் கட்டாக ஜீவன் முக்தவர்ணனை பண்ணும் ப்ரகரணங்களும், அது மட்டுமில்லாமல் அநேக வாத ப்ரதிவாதங்கள் பண்ணி இன்னம் பெரிய கட்டு கட்டான பாஷ்யங்களும் பண்ணிய ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். ஆட்டோபயாக்ராஃபிகல் நோட்டாக [ஸ்வய சரிதை குறிப்பாக], ஆனாலும் அப்படித் தெரியாமல் தம்முடைய விநயத்தினால் ஒளித்து, வேறே யாரோ ஞானியைப் பற்றிச் சொல்கிறாற்போலச் சொல்லியிருக்கிறார்:

“ஸச்சிஷ்ய போதாய”

“நல்ல சிஷ்யனுக்கு உபதேசிப்பதற்காக” என்று அர்த்தம்.

ஞானி எப்பேர்ப்பட்ட நிலையிலிருக்கிறான் என்று ஸத்தான சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்து. அதனாலேயே அவர்களும் அதற்கான ப்ரயாஸை எடுக்க உத்ஸாஹப்படுத்தும் பொருட்டே, ஸ்வயமாக எதனாலும் எந்தப் பயனையும் பெறுவதற்கில்லாத ஞானி, தன்னுடைய உசந்த மௌன ஸ்திதியைவிட்டு வர்ணிப்பில் இறங்குகிறாராம்! எல்லா உணர்ச்சியும் மரத்துப்போனவிட்டும், ஸத்சிஷ்யர்களாகக் கூடிய ஜீவ குலத்தின் பொருட்டாக அவரிடம் ப்ரேமை யுணர்ச்சியும் தியாகவுணர்ச்சியும் மாத்திரம் இருக்கும்படி ஈச்வரன் வைத்திருக்கிறானென்று தெரிகிறது. தாய் தந்தையர் போலவே ப்ரேமையும் தியாகமும் குருவிடம் இருப்பது தெரிகிறது.

“ஸச்சிஷ்ய போதாய ஸத்யம் ஸம்ஸ்ருதவான்” என்று சொல்லியிருக்கிறார். போதனை, உபதேசம் – வாயால் பண்ணுவது. அதற்கு முந்தி அவர் அநுபூதி நிலையை நன்றாக ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும் – அதாவது – ‘ஸம்ஸ்மரணம்’ செய்யவேண்டும். ஏனென்றால் இவர் வாய் மட்டும் அடைத்துப்போன மௌனி இல்லை; மனஸும் மௌனமாகிவிட்டவர்; ஒன்றையும் எண்ணாதவர்; எண்ணத்தை உற்பத்தி செய்வதும், ஞாபகம் என்று முன்பு நடந்தவைகளைப் பதிவு செய்து வைத்துக் கொள்வதுமான மனஸு என்பது இவரிடம் செயலற்றுப்போய்விட்டது. அப்படிப்பட்ட அதீத நிலையிலுள்ளவர் முதலில் எண்ண லோகத்திற்கு வந்து தனக்கும் ஒரு நிலை இருந்ததென்றும் வைத்துக் கொண்டு அதில் ஸாக்ஷாத்காரத்தை உரசிக் கொண்டு மனஸ் அடியோடு அடைத்துப் போகிறதற்கு just முந்தி எப்படியெப்படியெல்லாம் feel பண்ணினோம் என்பதை ஞாபகப் படுத்திக் கொள்ளவேண்டும்.

நினைவுகளை விடுவது நமக்கு எவ்வளவு கஷ்டமோ, அத்தனை கஷ்டம் ஞானிக்கு நினைப்பூட்டிக் கொள்வது! கஷ்டப்பட்டாவது நாம் நினைவுகளை விட்டால் மஹத்தான லாபம் பெறுகிறோம்; ஆகையால் கஷ்டப்படலாம்தான். ஆனால் ஞானி கஷ்டப்பட்டு நினைப்பூட்டிக் கொள்வதாலோ அவனுக்கு எந்த லாபமுமில்லை. ஆனாலும் அப்படிச் செய்கிறான் எதற்காக? ஸச்சிஷ்ய போதாய!

முதலில் மனஸை வேலை செய்யவிட்டு, ஸத்ய ஸாக்ஷாத்கார ஸ்திதியை ஸ்மரிக்கக்கூடிய அளவுக்கு நன்றாக ஸ்மரிப்பது, அதாவது நினைவூட்டிக்கொள்வது. அப்புறம் இன்னம் ஒரு படி இறங்கி வாயையும் வேலை செய்யவிட்டு ஸத்சிஷ்யனுக்கு அதை எடுத்துச் சொல்லி போதிப்பது, உபதேசிப்பது.

தான் கண்டுகொண்டது போதாது, சிஷ்யனையும் கண்டு கொள்ளச் செய்யவேண்டும் என்ற பரம கருணை வாய்ந்தவராக இருப்பதாலேயே எதுவும் வேண்டாத ஞானி இப்படி உபதேசத்தில் இறங்கி தேசிகராகிறார்.

‘கண்டுகொள்வது’, ‘பரம கருணை’ என்று சொன்னதில் ஐதரேய பாஷ்யம் நினைவு வருகிறது.2


1 கீதை vi. 22

2 ஐதரேய உபநிஷத் I. 3. 13-14 ஸ்ரீசங்கர பாஷ்யம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஞானியின் ' வெள்ளரிப்பழ முக்தி '
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  குரு உபதேசமின்றி ஞானமில்லை
Next