ஹேரம்பர் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘ஹேரம்பர்’ என்பது அடுத்த பெயர். எனக்குத் தெரிந்தவரையில் அந்த வார்த்தைக்கு தாது பிரித்து யாரும் இதுவரை ‘கன்வின்ஸிங்’காக அர்த்தம் சொல்லவில்லை. நான்தான் ஸரியாகத் தெரிந்து கொள்ளவில்லையோ என்னவோ? பாஸ்கர ராயர் என்று மஹான்கள் கோஷ்டியில் வைத்து மரியாதை செய்யவேண்டிய ஒரு மந்த்ர சாஸ்த்ர மஹாபண்டிதர். அவருடைய லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யம் ரொம்பவும் ப்ரக்யாதி வாய்ந்தது. அப்படிப்பட்டவர் கணேச ஸஹஸ்ர நாமத்திற்கும் பாஷ்யம் செய்திருக்கிறார். அதில் ஹேரம்ப நாமத்திற்கு என்ன பாஷ்யம் செய்திருக்கிறாரென்று பார்த்தேன். ‘ஹேரம்பர்’ என்றால் சைவ தந்த்ர ப்ரவர்த்தகர் [சைவ ஆகமத்தைத் தோற்றுவித்தவர்] என்றும், அபரிதமான சௌர்யம் [சூரத்தன்மை] படைத்தவர் என்றும் அந்த பாஷ்யத்தில் அர்த்தம் பண்ணியிருக்கிறது. பாஷ்யகாரர் மஹா பெரியவர் தானென்றாலும், நிஜத்தைச் சொல்ல வேண்டுமானால், அதைப் படிப்பவருடைய குறையாலோ என்னவோ, அந்த இரண்டு அர்த்தமும் எப்படி அந்தப் பேருக்குக் கிடைக்கிறது என்று தெளிவுபடவில்லை! ஆராய்ச்சியாளர்களானால், தமிழ் ‘எருமை’ தான் ‘ஹேரம்ப’ ஆயிற்று என்கிறார்கள்!

ஸம்ஸ்க்ருதத்தின் பெருமை எல்லா வார்த்தைகளுக்கும், பெயர்களுக்கும் அவற்றின் அக்ஷரங்களை நன்றாக தாது பிரித்து அர்த்தம் சொல்ல முடிவது தானென்றாலும் அப்படியில்லாத exception-களும் இருக்கின்றன. “இன்ன காரணத்தால் இப்படிப் பெயர்” என்று தாது பிரித்துச் சொல்ல முடிவதை ‘யௌகிகம்’ என்பார்கள்; Etymological-ஆக derive பண்ணக்கூடியது ‘யௌகிகம்’. அப்படியில்லாமல், “என்ன காரணமோ தெரியாது, ஆனால் இந்த வார்த்தைக்கு இப்படித்தான் அர்த்தம்; இந்தப் பேர் இன்ன பேர்வழியைத்தான் குறிப்பிடுகிறது” என்று இருப்பவை ‘ரூடி’. ‘ஹேரம்ப’ என்ற வார்த்தை இந்த ‘ரூடி’யில் வருவதாகவே தோன்றுகிறது.

பஞ்ச பாண்டவர்கள் வனவாஸத்திற்கு முந்தி இந்த்ரப்ரஸ்தத்திலிருந்து ஆட்சி நடத்தினபோது தர்மபுத்ரர் ராஜஸூய யாகம் பண்ண ஆசைப்பட்டு, அதற்கு முன்னால் நாலு திசை ராஜாக்களையும் ஜயித்துக் கொண்டு வருவதற்காகத் தம்பிகளை அனுப்பினார். அப்போது தக்ஷிணத்திற்குப் போய் அங்கே இருந்த ராஜ்யங்களை ஜயித்தவன் ஸஹாதேவன். அவன் ஜயித்த அந்த ராஜ்யங்களில் ஒன்றுக்கு ஹேரம்பம் என்று பாரதத்தில் பேர் கொடுத்திருக்கிறது. ஒருவேளை அதுதான் பிற்கால மைஸூரோ என்னவோ? மைஸூர் என்பது மஹிஷூர் – மஹிஷ ஊர் – என்பதன் திரிபுதான். மஹிஷம் [என்றால்] எருமை. ‘ஹேரம்ப’ த்திற்கு எருமை ஸம்பந்தம் சொல்கிறார்களே! அந்த ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் ஸஹாதேவனிடம் தோற்றுப் போனார்கள். ஆனாலும் அவர்கள் தங்களைப் பற்றி ரொம்பவும் தற்பெருமை அடித்துக் கொள்கிறவர்களென்று தெரிகிறது. அதனால் பெருமை பீற்றிக் கொள்பவர்களை ஹேரம்பர் என்று சொல்வதுண்டு என்று தெரிகிறது. அந்த தேசத்திலே விக்நேச்வரருடைய எந்த ரூப பேதம் ரொம்பவும் பூஜிக்கப்பட்டதோ அதற்கே ஹேரம்ப கணபதி என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

இது வெறும் guess தான். தப்பாகவும் இருக்கலாம். முடிவாக என்ன தோன்றுகிறதென்றால், “அர்த்தம், கிர்த்தம் பார்க்காதே! ஹேரம்ப என்ற சப்தம் காதுக்கு நன்றாக இருக்கோ, இல்லியோ? என்னை மாதிரியே அதிலே காம்பீர்யம், மாதுர்யம் இரண்டும் இருக்கோ, இல்லியோ? என்னை அப்படிக் கூப்பிட்டால் பொருத்தமாக இருக்கோ, இல்லியோ? பின்னே கூப்பிட்டுவிட்டுப் போயேன்! டிக்ஷனரி பார்ப்பானேன்?” என்று விக்நேச்வரரே சொல்லி இப்படிப் பேர் வைத்துக் கொண்டாற்போலிருக்கிறது!

ஹேரம்ப நாட்டு வாஸியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாரத தேசம் முழுக்கவே ப்ரஸித்தமாகி விட்டவர் ஹேரம்பர். பாலகணபதியில் ஆரம்பித்து ஷோடச கணபதிகள் என்று பதினாறு மூர்த்திகள் இருப்பதிலும் ஹேரம்ப கணபதி இருக்கிறார்; நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஷோடச நாமாக்களிலும் அந்தப் பேர் இருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is சூர்ப்பகர்ணர்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  சிங்கம் பூஜிக்கும் யானை !
Next