Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

சந்திர-ஸூர்ய மௌளீச்வரி : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

எடுத்த எடுப்பில் அம்பாளுடைய சேகரத்தை [சிரஸை] வர்ணிப்பதற்கு ஏற்கக் கவித்வ சிகரமாகக் கல்பனைகளைக் கொட்டியிருக்கிறார். தகதக என்று ஸூர்யனின் பிரகாசம் மாதிரியான கம்பீரமும், குளுகுளுவென்று சந்திரனைப் போன்ற மாதுர்யமும் கூடின கல்பனையையும் வாக்கையும் பார்க்கிறோம். ஸுர்ய-சந்திரர்கள் இரண்டு பேரையும் அம்பாள் சிரஸிலே சேர்ப்பதாகவே ச்லோகம் அமைந்திருக்கிறது. [ச்லோ 42]

கதைர் மாணிக்யத்வம் ககமநணிபி: ஸாந்த்ர-கடிதம்

கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்தயதி ய: |

ஸ நீடேயச்-சாயாச்-சுரண-சபலம் சந்த்ர-சகலம்

தநு: சௌநாஸீரம் கிமிதி ந நிபத்நாதி திஷணாம் ||

[ (ஹிமகிரிஸுதே) இமயமலையின் மகளே! (மாணிக்யத்வம்) ரத்னமாக இருக்கும் தன்மையை (கதை:) அடைந்துள்ள (ககநமணிபி:) [பண்ணிரண்டு] ஸூர்யர்களால் (ஸாந்த்ர-கடிதம்) நெருக்கமாக இழைக்கப்பட்ட (தே) உனது (ஹைமம் கிரீடம்) பொற் கிரீடத்தை (ய:) எவன் (கீர்த்தயதி) வர்ணிக்கிறானோ (ஸ:) அவன் (சந்த்ர சகலம்) [(அக் கிரீடத்திலுள்ள] சந்திரப் பிறையை (நீடேயச் சாயாச் சுரண) அக்கூட்டின் [கூடு போன்ற கிரீடத்தில் உள்ள மேற்படி ஸூர்யர்களான ரத்னங்களின்] சாயையினால் முலாம் பெற்று (சபலம்) நானாவண்ண விசித்ரம் கொண்ட (சௌநாஸீரம் தநு:) [இந்த்ர தநுஸ் எனப்படும்] வானவில் (இதி) என்ற (திஷணாம்) சிறந்த கருத்தை (கிம் ந நிபத்நாதி) எப்படிப் பொருத்தாதிருக்க இயலும்?]

ஆற்றொழுக்கு, தேனொழுக்கு என்று சொல்கிற மாதிரி லளிதமான வாக்குகளால் ரம்யமான அபிப்ராயங்களைச் சொல்வதை ஸம்ஸ்க்ருதத்தில் ‘வைதர்பீ ரீதி’ என்பார்கள். ‘விதர்ப தேசத்து Style’ என்று அர்த்தம். அந்தச் சீமையின் கவிவாணர்கள்தான் ஆதியில் இந்த ஸ்டைலில் தேர்ச்சி பெற்றிருந்திருக்க வேண்டும். “கௌடீ ரீதி” என்கிற ஸ்டைல் கௌடதேசமான வங்காளத்தில் தோன்றி ப்ரஸித்தி அடைந்திருப்பது. இதில் அபிப்ராயங்கள் எளிதில் புரியாததாக இருக்கும்; வாக்கும் ஆர்பாட்டமாக இருக்கும். ‘ஸெளந்தர்ய லஹரி’யில் இரண்டு ஸ்டைலையும் கலந்துதான் பண்ணியிருக்கிறார். ‘ஜனனி’ என்று முன் ச்லோகத்தில் ரொம்பக் கிட்டக்கே கொண்டு வந்து விட்டதால், அவளுடைய கம்பீரம், மஹிமை தெரியாமல் போக விடப்படாது என்ற மாதிரி இங்கே தடபுடலாக கொஞ்சம் கடபுடவென்றே ஆரம்பித்திருக்கிறார். அபிப்ராயமும் [ச்லோகத்தின் கருத்தும்] complicated-ஆகத்தான் [சிக்கலாகத் தான்] இருக்கிறது. லஹரி-பிரவாஹம் – அடித்துப் புடைத்துக் கொண்டு வருகிற மாதிரி இந்த ஸெக்ஷனின் ஆரம்பம் இருக்கிறது.

தேலவோகத்திலிருந்து தடதடவென்று வந்த கங்கை ஈச்வரனுடைய சிரஸில் சேர்ந்த பிறகு வேகத்தைக் குறைத்துக் கொண்ட மாதிரி, அம்பாளுடைய சிரஸு ஸம்பந்தமான வர்ணனை முடிந்த அப்புறம் அடுத்த ச்லோகங்களின் style தணிந்து சாந்தமாகிறது.

ஸூரிய சந்திரர்களை அம்பாளின் சிரஸில் சேர்த்திருப்பதாகச் சொன்னேன். அவள் சந்திரசேகரி என்ற விஷயம் முன்னாடியே சொல்லியிருக்கிறது. ஸூர்யசேகரி என்பது புது விஷயம்! அதிலும் ஒரு ஸூர்யன் மாத்ரமில்லை; பன்னிரண்டு ஸூர்யர்களையும் தலையில் வைத்துக் கொண்டிருக்கிறாள் என்கிறார்.

சந்திரசேகரன் என்று ப்ரஸித்தமாயுள்ள ஸ்வாமிக்கும் ஸூர்யசேகரன் என்று பெயரிருக்கிறது. பாநுசேகரன் – தற்காலத்து ‘பாநுஷேகர்’ என்ற பெயருக்கும் அந்த அர்த்தந்தான். உதய ஸூர்ய ரச்மி லிங்கத்தின் தலையில் விழுகிற தினுசில் அநேக க்ஷேத்ரங்களில் இருக்கிறதல்லவா? அப்போது ஸ்வாமி ஸூர்யசேகரனாயிருப்பதாகச் சொல்லலாம்.

தலைஞாயிறு என்றே பெயரோடு தஞ்சாவூர் ஜில்லாவிலேயே இரண்டு சிவக்ஷேத்ரங்கள் இருக்கின்றன. ஒன்று வைத்தீச்வரன் கோவிலுக்கு மேற்கே இருப்பது. தேவாரத்தில் அதற்குக் கருப்பறியலூர் என்று பெயர். இன்னொரு தலைஞாயிறு திருத்துறைப்பூண்டி தாலுகாவில் இருப்பது. அங்கே சிவலிங்க சிரஸில் ஸூர்ய கிரணம் இருப்பதாலேயே ‘தலை ஞாயிறு’ என்று பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.

‘நபோமணி’, ‘ககனமணி’ என்றெல்லாம் சொன்னால் ஆகாசத்தில் மணி மாதிரிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஸூர்யன் என்று அர்த்தம். “ககனமணிபி:” என்று இந்த ச்லோகத்தில் plural-ல் (பன்மையில்) சொல்கிறார்.

நம்முடைய பூலோகமும் நவக்ரஹங்களும் ஒரு ஸூர்யனைச் சுற்றி வருவதால், universe (விச்வம்) என்பதிலேயே ஒரு ஸூர்யன்தான் உண்டு என்றில்லை. இன்னும் எத்தனையோ ஸூர்யர்கள், நக்ஷத்ர மண்டலங்கள் உண்டு. த்வாதச ஆதித்யர்கள் என்பதாகப் பன்னிரண்டு ஸூர்யர்கள் இருப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. விச்வாகாரிணியான அம்பாளுடைய சிரஸில் உள்ள கிரீடத்தில் ரத்னகற்களாக இழைக்கப் பட்டிருப்பதெல்லாம் அந்த எல்லா ஸூர்யர்களுந்தான் என்கிறார். “ஸாந்த்ர கடிதம்” என்றால், ‘நெருக்கமாக இழைக்கப்பட்ட’ என்று பொருள். இப்படி அவள் ஸூர்யசேகரியாக இருப்பதைத்தான் முதல் வரி சொல்கிறது.

வர்ணனை ஆரம்பத்திலேயே இவ்வளவு கண்ணைக்கூசும் – கண்ணைப் “பறிக்கும்” என்றே சொல்ல வேண்டும் – பிரகாசத்தை, உஷ்ணத்தைச் சொன்னதற்கு மாற்றாக அடுத்த வரியில் அம்பாளைக் குளிச்சியாக ‘ஹிமகிரிஸுதே!‘ என்கிறார்.

ரக்தஜ்யோதிஸாக ஆயிரம் உதய ஸூர்யகாந்தியோடு இருக்கிற காமேச்வரியை, முதலிலேயே ஏகப்பட்ட ஸூர்யர்களைச் சொல்லி விட்டதால், பச்சைப் பசேல் என்ற ஹிமகிரி குமாரியான பார்வதியாகச் சொல்லிக் கூப்பிடுகிறார். ஏறக்குறைய ஸ்தோத்ரம் முடிகிற இடத்தில் [ச்லோ-96] பார்வதியாக ஆவிர்பவிப்பதற்குப் பூர்வாவதாரத்தில் தக்ஷன் பெண்ணாக வந்தபோது அவளுக்கு இருந்த ‘ஸதி’ என்ற பேரைச் சொல்லி, “தவ ஸதி ஸதீநாம் அசரமே” என்று கூப்பிடுகிறார். ஸதி தக்ஷணின் யஜ்ஞகுண்டத்தில் சரீரார்ப்பணம் பண்ணினவள். ஆனால் சாம்பலாக முடிந்து போகாமல், நேர்மாறாக ஜீவ ஸாரமான பச்சை நிறத்தில் பச்சென்று பார்வதியாக அவதாரம் செய்தாள்! அக்னி குண்டத்திலிருந்து நேரே ஐஸ் மலைக்குப் போய் அங்கே பசுமையாக ரூபம் எடுத்துக் கொண்டாள்! சமணர்களோடு வாதம் பண்ணினபோது ஞானஸம்பந்தர் அக்னியில் போட்ட தேவார ஏடு எரிந்துபோகாமல் பச்சோலையாக வெளியில் வந்ததும் இந்த மாதிரிதான்! இங்கே அம்பாளை ஆசார்யாள் ரொம்பவும் உஷ்ணத்துக்கு அப்புறம் ‘பனி மலையின் பெண்ணே!’ என்றவுடன் ஜில்லென்றாகிவிடுகிறது! அதற்க்கப்புறம் அம்ருததாரையாக சீதகிரணங்களைப் பொழியும் ‘சந்த்ர சகலம்‘ என்ற பிறைச் சந்திரனைச் சொல்லி நன்றாகத் தாபசமனம் செய்து விடுகிறார்.

அம்பாளுடைய கிரீடத்தில் ‘சந்த்ர சகலம்’ இருக்கிறது. அந்தக் கிரீடம் தங்கத்தாலானது. ‘ஹைமம் கிரீடம்‘ என்று இருக்கிறது. ‘ஹேமம்’ என்றால் தங்கம். ‘ஹைமம்’ தங்கத்தாலானது. ‘ஹிமம்’ என்றால் பனி. இவள் ஹிமகிரிஸுதாவாக இருக்கிறாள். கேநோபநிஷத்திலே பிரம்ம வித்யா ஸ்வரூபிணியாக வந்து இந்திரனுக்கு உபதேசம் செய்யும் அம்பாளை ‘ஹைமவதி’ என்று சொல்லியிருக்கிறது. அதற்கு ஹிமகிரிஸுதா என்றும், ஹேமகாந்தியோடு ப்ரகாசிக்கிறவள் என்றும் இரண்டு அர்த்தமும் ஆசார்யாள் பண்ணியிருக்கிறார். இங்கே ஸெளந்தர்ய லஹரி முதல் ச்லோகத்திலேயே உபநிஷத் ஸம்பந்தம் காட்டிவிடவேண்டுமென்று ஹிமகிரி, ஹேமம் இரண்டையும் பிரஸ்தாபித்திருக்கிறார! அது மட்டுமில்லை. அங்கே இந்த்ரனுக்குத்தானே உபதேசித்தாள்? இங்கேயும் “தநு: சௌநாஸீரம்” என்பதாக வானவில்லை அந்த இந்த்ரனின் தநுஸாகவே சொல்கிறார்.

“ஹைமம்-ஹிம” என்று அடுத்தடுத்துப் போட்டிருக்கிறார்; ‘சபலம்’-‘சகலம்’ என்று அடுத்த வரியில் வருகிறது. எதுகை, மோனை முதலிய அணிகளை இப்படி ஸ்தோத்ரம் பூராவும் ஏராளமாகக் கொட்டியிருக்கிறார்.

ஸூர்யர்களை மாணிக்கங்களாக இழைத்த அம்பாளுடைய தங்க கிரீடத்தில் சந்திரகலை இருக்கிறது. நாம் பார்க்கிற சந்திரன் ஸூர்யனைவிட மஹா சின்னது. ஆனால் இங்கேயோ ஸூர்யர்கள் கிரீடத்தில் சின்னச் சின்ன கல்லு என்றால், அந்தக் கிரீடத்திலேயே பெரிசாகப் பூசணிப் பத்தை மாதிரியான பிறைச் சந்திரன் இருக்கிறது! சந்திரன் அம்ருதம், பனி இரண்டையும் பெருக்குகிறவன். பனியை உற்பத்தி பண்ணுவதால் அவன் ‘ஹிமகரன்’. நாலஞ்சு ச்லோகம் தள்ளி [46)] “ராகா ஹிமகர” என்று வருகிறது. அது பூர்ணிமை. இது மூன்றாம் பிறை – வளைந்து வில் ரூபத்திலுள்ள பிறை. அதன் நிலா பனித்திவலைகளாகப் பரவியிருக்கிறது. ஸூர்ய மணிகளின் ஒளி அந்தப் பனிப்படலத்தில் படுகிறது. “நீடேயச்சாயா” என்பதில் ‘நீடம்’ என்றால் பக்ஷிக்கூட்டின் ரூபத்திலுள்ள கிரீடம். அதிலுள்ள மணிகளின் “சாயா” என்பது ஸூர்ய ப்ரகாசம். ஸூர்ய ப்ரகாசம் பனிப் படலத்தின் மேலே பட்டவுடன் என்ன ஆகிறது? நீருண்ட மேகத்தின் மேலே ஸூர்ய வெளிச்சம் பட்டவுடன் என்ன ஆகும்? வானவில் தோன்றுமோல்லியோ? ஸப்த வர்ணமும் சேர்ந்த அந்த வான வில்லுக்கு ஸமானமாக வர்ண விசித்ர அழகுக்கு எதுவுமில்லை. அம்பாளின் கிரீடத்திலுள்ள பனி நிலாவின் மேலே ஸூர்ய மணிகளின் வெளிச்சம் பட்டு முலாம் ஏற்றியதும் – “சுரணம்” என்றால் முலாம் போடுவது; அப்படி போட்டவுடன் – refraction-ல் [ஒளிச் சிதறலில்] அந்த வில்லு ரூபமான பிறை ஸப்தவர்ணமும் பெற்று – “சபலம்” என்றால் ‘வர்ண விசித்ரம்’ – ஸப்த வர்ண பேதங்களையும் பலபலவென்று கொட்டுகிறது. அதாவது அது வானவில் மாதிரி ஆகிவிடுகிறது.

‘சந்திரன் ஸ்வய ப்ரகாசமில்லாத ஒரு ஸாடலைட். ஸூர்ய வெளிச்சம் பட்டுத்தான் அது நிலா என்ற சந்திரிகையைப் பெறுகிறது. ஸன்லைட் பட்டுத்தான் ஸாடலைட்டில் மூன்லைட் உண்டாவது’ என்பது ஸயன்ஸ் பாடம். கவிதை சொல்லும் பாடலிலோ ஸ்வப்ரகாசமான சந்த்ரகலை மேலே ஸூர்ய வெளிச்சம் பட்டு அது வானவில்லாகி வர்ண ஜாலம் பண்ணுகிறது! ஸாக்ஷாத் அம்பிகையின் சிரஸிலே பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகும் குளுமையும் கொண்ட வானவில்லாகப் பிறைச் சந்திரனைக் காட்டி இப்படியொரு அதீத கல்பனை மஹாகவியான ஆசார்யாள் கொடுத்திருக்கிறார்! ஆனால் இது ஏதோ தமக்குத்தான் உதித்த அபார கல்பனை என்று நினைக்காமல், ‘உன் கிரீட மணி ஒளிகள் சந்திரனில் சேர்ந்து விசித்ர வர்ணங்களை உண்டாக்குவதை வர்ணிக்கிற எவன்தான் அதை வானவில்லோடு பொருத்தி உவமை சொல்லாமலிருப்பான்?’ என்று கேட்கிறார். சௌனாஸீரம் தநு : இதி திஷணாம் கிம் ந நிபத்நாதி ? ‘ என்று நாலாம் வரியின் prose order . ‘வானவில் என்ற அபிப்ராயத்தை எப்படிக் கவிதையில் பொருத்தாமலிருக்க முடியும்?’ என்று அர்த்தம். : கீர்த்தயதி என்று இரண்டாம் வரியில் சொல்வதற்கு ‘எவன் வர்ணித்தாலும்’ என்று அர்த்தம். பெரிய கவியோ, சின்ன கவியோ எவனானாலும் தன் வர்ணனையில் இந்தக் கருத்தைச் சொல்லாமலிருக்க முடியாது என்கிறார். ‘ஸெளந்தர்ய லஹரி’ ஆரம்பத்திலேயே இப்படித் தம்மைக் குறைத்து அடக்கிக்கொண்டு பேசும் ஆசார்யாள் முடிவு வரையில் இந்த விநய ஸம்பத்தை வெளிப்படுத்திக் கொண்டு போகிறார்.

மழைக்கு அதிபதி இந்த்ரன். அவனுடைய வஜ்ராயுதம் போடு போடென்று போடுவதுதான் இடி. அவன் கை வில்லுதான் வானவில். அதை ‘இந்த்ர தநுஸ்’ என்றே சொல்வது. இங்கே ‘சௌநாஸீரம் தநு:’ என்று அதைத்தான் சொல்லி இருக்கிறார். ஸேனையிலே முதலாக, front-ல், நின்று யுத்தம் செய்வதால் இந்த்ரனுக்கு ‘சுநாஸீரன்’ என்று பேர் – ‘அமர’த்திலேயே இருக்கிறது. அவனுடைய தநுஸே “சௌநாஸீரம் தநு:”

நிர்குண பிரம்மத்திலிருந்து பராசக்திப் பிரபாவத்தால் இத்தனை ஸ்ருஷ்டி விநோதமும் வந்திருப்பதையே refraction-ல் சுத்த வெளுப்பு நானா வர்ணங்களாகப் பரிணமிப்பதோடு ஒப்பிடலாம். அம்பாள் ஸெளந்தர்யத்தை வர்ணிக்க ஆரம்பிக்கும் முதல் ச்லோகத்திலேயே இந்த அபிப்ராயமும் வந்துவிடுகிறது!

இங்கே சொல்வது refraction இல்லை, reflection [பிரதிபலிப்பு] தான் என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். ஸூர்ய ஒளி சந்திரப் பிறையில் பட்டு அதன் பனிக் கசிவில் பல வர்ணங்களாகப் பிரிந்தது என்று எடுத்துக் கொள்ளாமல், பல ஸூர்யர்களும் பல்வேறு கலர்களில் இருப்பதாகவும், அவை எல்லாம் கண்ணாடி மாதிரி உள்ள சந்திரகலையில் பிரதிபலித்து (reflect-ஆகி) அதை இந்திர தநுஸாக்கிவிடுகிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.

இப்படி ஸ்வரூப வர்ணனையின் முதல் ச்லோகத்திலேயே லோக வாழ்க்கை பூராவுக்கும் ஸத்துத் தரும் சந்திர ஸூர்யர்களை அம்பாளின் சிரஸிலே காட்டி சந்த்ர-ஸூர்ய மௌளீச்வரியாக தர்சனம் பண்ணி வைக்கிறார். த்ரிலோக சக்ரவர்த்தினியாகக் கிரீடம் தரித்துக் கொண்டு சந்திர ஸூர்யர்களை அதிலேயே வைத்துக் கொண்டிருக்கிற ராஜ கம்பீரமான தர்சனம்! ஆனால் அப்போதும் தாயார் என்ற நினைப்பும் வரும்படியாகத்தான் முன் ச்லோகம் ஒன்றிலேயே [ச்லோ-34] “சசி மிஹிர வக்ஷோருஹ யுகம்”: ‘சந்திர ஸூர்யர்களால் லோகத்துக்குப் பாலூட்டுகிறாள்’ என்று போட்டிருக்கிறார்.

இங்கே ஒன்றுக்குப் பதில் அநேக ஸூர்யர்களைச் சொல்லியிருந்தாலும் அவற்றின் பிரகாசமும் முடிவாகப் போய்ச் சேருகிற சந்திரனுக்குத்தான் சிறப்பு! அதாவது ஜகன்மாதாவை சந்திரமௌளீச்வரியாக தரிசனம் பண்ணி வைத்திருப்பதே சிறப்பு.

கைலாஸத்தில் ஆசார்யாளுக்கு ஈச்வரன் தந்த பஞ்ச லிங்கங்களுக்கு சந்திரமௌளீச்வரர் என்றே பெயர். அதே ஸமயத்தில் அவர் பெற்றுக்கொண்டதுதான் ‘ஸெளந்தர்ய லஹரி’ என்றும், அதில் நந்திகேச்வரர் உருவிக் கொண்டதைப் பூர்த்தி செய்யவே அவர் இந்த 42-ம் ச்லோகத்திலிருந்து நூறு வரை செய்து முடித்தார் என்றும் முன்னே கதை சொன்னேன். சந்திரமௌளீச்வரர் ஈச்வர ஸ்வரூபம் என்பதுபோல இந்த ஸ்தோத்திரமும் அம்பாளுடைய ஸ்வரூபமே என்று சொன்னேன். ஆகையால் அவளைச் சந்திரமௌளீச்வரியாக வர்ணிப்பதிலேயே ஆரம்பிப்பது ரொம்பவும் பொருத்தமாயிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பல நிலைகளில் சிவ சக்திகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  இருட்டைப் போக்கடிக்கும் கறுப்பு
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it