Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பிள்ளைக் கறி : அதன் உட்கிடைகள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

உத்யோகததை விட்டுவிட்டு (இவராக விடவில்லை) ராஜா விடும்படிப் பண்ணினான். ‘டிஸ்மிஸல்’ இல்லை. பெரிய ‘ஆன’ராகப் பண்ணினான்) அப்படி உத்யோகம் போய் அவர் ஊரோடு வந்து சிவதர்மம் பண்ண ஆரம்பித்த அப்புறந்தான் அவருக்குப் பிள்ளை சீராளன் பிறந்ததே. அதுவரை தாம்பத்தியத்திலே மனஸ் போகாமல் உள்ளே சிவோபாஸனை, வெளியிலே கத்தியைச் சுழட்டிக் கொண்டு யுத்தம் என்றே இருந்திருக்கிறார்.

வயஸுக் காலத்தில் பிறந்த அந்த அருமைப் பிள்ளையைத்தான் பைரவ யோகி வேஷத்தில் வந்த பரமசிவன் கேட்டவுடன் இவர் கொஞ்சங்கூட யோசிக்காமல் கறி சமைத்துப் போட்டது.

கேட்கிறதற்கே கொடூரமாயிருக்கிறதென்றாலும் இதில் அநேக ஸமாசாரங்கள் ஒன்றுக்கொன்று கோத்துக் கொண்டு போகின்றன. சிறுத்தொண்டர் ஜயித்த ஊர் வாதாபி. ஊருக்குப் பேர் தந்த அஸுரனைக் கறி பண்ணிப் போட்டான் அவனுடைய அண்ணா. அது தம்பிக் கறி; இது பிள்ளைக் கறி! அந்தக் கறியை அகஸ்தியர் ஜெரித்துக் கொள்ள சக்தி கொடுத்தது ஒரு கரி-கரிமுகர்! அவர்தான் சிறுத்தொண்டரின் ஊர்க்கோவிலை கணபதீச்சரமாக்கியவர். சிறுத்தொண்டர் பரஞ்ஜோதியாக வாதாபியில் ரத்த வெள்ளம் ஓடப் பண்ணினாரென்றால் அந்தக் கரிமுகரோ இவருடைய பிறந்த ஊரில் அஸுரன் ரத்தத்தைப் பெருக்கெடுத்தோடப் பண்ணி அதைச் செங்காட்டாங்குடியாக்கித் தாமும் கபிலராக ஆகியிருக்கிறார்! பைரவ யோகியாக வந்த ஸ்வாமிக்கு அந்தக் கோலத்திலேயே கணபதீச்சரத்தில் மூர்த்தம் இருக்கிறது. அவருக்கு ‘உத்தராபதீச்வரர்’ என்று பேர். சிறுத்தொண்டரிடம் அப்படித்தான் அவர் பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார். வடதேசத்தில் சக்ரவர்த்தியாக இருந்த ஹர்ஷவர்தனனுக்கு ‘உத்தராபதீச்வர’ப் பட்டமுண்டு. அவனுடைய ஆட்சிக் காலத்தில்தான் புலகேசி தென் தேசத்தில் சக்ரவர்த்தியாக இருந்து அந்த ஹர்ஷனையும் பின்வாங்கப் பண்ணி ‘தக்ஷிணாபதீச்வர’னாகத் தன்னைப் பிரகடனப் படுத்திக்கொண்டு பெருமைப்பட்டது. புலகேசியை த்வம்ஸம் பண்ணியவர் பரஞ்ஜோதி. அப்புறம் அதை அவர் அடியோடு மறந்து சிவனடியாராக இருந்தபோது அவரை சோதித்து அவர் பெருமையை ப்ரகடனம் பண்ணவவந்த ஸ்வாமி தமக்கு உத்தராபதீச்வரப் பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார்! ஸேநாதிபதியாக ஒரு தக்ஷிணாபதீச்வரனை ஜயித்தவர் பக்தராகி அந்த உத்தராபதீச்வரருக்கு யாரும் செய்ய முடியாத தொண்டு செய்து அருள் பெற்றிருக்கிறார்!……

சோள ஸீமையிலுள்ள திருச்செங்காட்டாங்குடியில் ‘உத்தராபதீச்வரர்’ என்ற ஹர்ஷனுடைய பட்டப் பெயர் இருக்கிறதென்றால், பல்லவ ராஜதானியான காஞ்சீபுரத்திலேயே அவனுடைய ராஜதானியை ஞாபகப்படுத்தும் இரண்டு சிவாலயங்கள் இருக்கின்றன. பிறவாத்தானம், இறவாத்தானம் என்று இரண்டு சிவாலயங்கள். அங்கேயுள்ள மூல மூர்த்திகளுக்குப் பிறவாத்தானேச்வர் என்றும் இறவாத்தானேச்வரர் என்றும் பெயர். ஹர்ஷவர்த்தனனின் ராஜதானிக்குத் ‘தானேசர்’ என்றே பெயர். ‘ஸ்தாண்வீச்வரம்’ என்பதன் கொச்சையே ‘தானேசர்’. பட்ட கட்டைக்கு ‘ஸ்தாணு’ என்று பெயர். பிறப்பு இறப்பும், எந்த அசைவும் இல்லாமலிருக்கும் ஈச்வரனுக்கும் ஸ்தாணு என்று பெயர். அந்த ஸ்தாணு ஈச்வரனையும் ஹர்ஷ ராஜதானியிலிருந்து பல்லவ ராஜதானி ஸ்வீகரித்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது….

மூலத்தில் ப்ராம்மண ஜாதிக்காரரான பரஞ்ஜோதி யுத்தக்களத்தில் எத்தனைப் பேர் தலையைச் சீவியிருக்கிறார்! அதற்குப் பரிஹாரம் மாதிரிதான் அவர் ஸொந்தப் புத்ரனை ஹத்தி செய்யும்படி ஈச்வரன் மாயமாகக் கேட்டிருக்கிறார்! அர்ஜுனனுக்கு பகவான் சொல்ல வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே முதலில் பரஞ்ஜோதி ஸ்வதர்மத்திற்காக – ஸொந்த ஆசாபாசங்களுக்காக இல்லை; மாமாத்ர ஜாதி என்று ஆகிவிட்ட பின் ஏற்பட்ட ஸ்வதர்மத்திற்காக – சத்ரு ஸைன்யத்தை ஹதம் பண்ணினார். அப்புறம் சிவனடியார் பணியே ஸ்வதர்மமாகிவிட்ட சிறுத்தொண்டரானபோது, சிவனே பைரவ யோகியாய் வந்தபோது கொஞ்சங்கூட ஸொந்தப் பாசமில்லாமல் ஏக புத்ரனையே அவருக்கு நைவைத்தியமாக்கினார். பைரவர் கேட்டது குறிப்பாக இவர் பிள்ளையை இல்லை. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாயுள்ள ஐந்து வயஸு நர பசு வேண்டுமென்றுதான் கேட்டார். சிறுத்தொண்டரேத்தான் அந்த நிபந்தனைக்கு ஏர்வையாயிருந்த [பொருத்தமாயிருந்த] தன் பிள்ளைச் சீராளனையே கறி சமைத்துப் போட்டார் – சொல்வதற்கே என்னவோ போல்தானிருக்கிறது. அப்படிப்பட்டதைக் கார்யத்திலேயே ஸொந்தத் தகப்பனாரும், அடியார் பணியில் அவருக்குக் கொஞ்சங்கூடப் பின்தங்காத தாயாரும் சேர்ந்து பண்ணினார்கள் என்னும் போதுதான் நிஜபக்தியின் ஸ்வரூபம் தெரிகிறது.

புத்ரனின் மாம்ஸமென்று சொல்லாமலே பைரவருக்கு அவர்கள் பரிமாறினார்கள். அவரும் ஒன்றும் தெரியாத மாதிரி, “கூட உட்கார்ந்துகொண்டு சாப்பிடுவதற்கு உம்ம பிள்ளையைக் கூப்பிடும்” என்றார். “அவன் இப்போது உதவான்” என்று மட்டும் அதற்குச் சிறுத்தொண்டர் பதில் சொன்னார். “அப்படியானால் நானும் இங்கே சாப்பிடாமல் போகிறேன். நான் சாப்பிட வேண்டுமானால், அவனைக் கூப்பிடும்” என்று பைரவர் பொய்க் கோபத்தோடு சொன்னார்; வேறே வழியில்லாமல் ஸதிபதிகள் வெளிப்பக்கம் போய்க் கூப்பிட்டார்கள். உடனே இத்தனை நாடகமும் ஆடின பரமேச்வரனின் அநுக்ரஹத்தால் அந்தப் பிள்ளை மேனி குலையாமல் நிஜமாகவே ஒடி வந்துவிட்டான்; பைரவர் மறைந்து ரிஷபாரூடராக, அம்பாளோடும் பாலஸுப்ரம்மண்யரோடும் ஸோமாஸ்கந்தராகக் காட்சி கொடுத்தார் – என்று கதை போகிறது. ஸதிபதிகள் சேர்ந்து பிள்ளையை அரிந்து சமைத்துப் போடவேண்டுமென்று சொன்ன ஸ்வாமியும் முடிவிலே ஸதிபதிகளாக, பிள்ளையான குமார ஸ்வாமியையும் சேர்த்துக்கொண்டு வந்ததாகப் பெரிய புராணத்தில் இருக்கிறது.*

மூத்த பிள்ளை விக்நேச்வரர் ப்ராயச்சித்தமாக சிவபூஜை பண்ணியதால்தான் ஸ்வாமி அந்த ஊரில் கோவில் கொண்டதே. இதைச் சொல்லும்போது இன்னொரு பொருத்தம்கூடத் தெரிகிறது. சிறுத்தொண்டர் சீராளனின் சிரஸைச் சீவின மாதிரியேதான் பூர்வத்தில் ஸ்வாமியும் அம்பாள் படைத்த பிள்ளையின் சிரஸைத் சீவியிருக்கிறார்!……

‘கபிலர்’ என்ற பேருக்கு அர்த்தம் சொல்ல ஆரம்பித்தது, விக்நேச்வரர் சிவப்பு, ஊரையே சிவப்பாக்கி, செங்காட்டாங்குடியாக்கி, அங்கே வாதாபியிலிருந்து வேறே வந்து உட்கார்ந்து கொண்டார் என்ற கதை, ஆராய்ச்சி எல்லாம் ரொம்ப தூரம் போய்விட்டது!


* ………………………………..மலை பயந்த

தையலோடும் சரவணத்துத்

தனயரோடும் தாம் அணைவார்” (பெ. பு. 3743)

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is படைத்தலைவர் பக்தித் தொண்டரானார்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  வாதாபி விக்கிரஹம் : வெவ்வேறு கருத்துக்கள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it