வாக்குவன்மை அருள்வது; சாக்தத்தில் சப்தத்தின் விசேஷம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இந்த [ஆனந்தலஹரி] ச்லோகங்களுக்கு நடுவே சிலதில் லலிதாம்பாள் ரூபத்திலில்லாமல், ஆனாலும் ஸ்ரீவித்யா தந்த்ரத்திற்கு ஸம்பந்தமான வேறு தேவதா ரூபங்களில் அம்பாள் அநுக்ரஹம் செய்வதைச் சொல்லியிருக்கிறது. அப்படி ஒன்று [ச்லோ.15] சொல்கிறேன்:

சரஜ்-ஜ்யோத்ஸ்நா-சுத்தாம் சசியுத ஜடாஜூட-மகுடாம்

வரத்-த்ராஸ-த்ராண-ஸ்படிக-குடிகா-புஸ்தக-கராம் |

ஸக்ருந்-ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே

மது-க்ஷீர-த்ராக்ஷா-மதுரிம-துரீணா: பணிதய: | |

[ (சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்) சரத்கால நிலவு போல் தூயவளும், (சசியுத ஜடாஜூட மகுடாம்) சந்திரனுடன் கூடிய ஜடாமுடியை மகுடமாயுடையவளும், (வர) வர முத்திரை, (த்ராஸ-த்ராண) பயத்திலிருந்து காப்பதான அபய முத்திரை, (ஸ்படிக-குடிகா) ஸ்படிக அக்ஷமாலை, (புஸ்தக கராம்) புஸ்தகம் ஆகியவற்றைக் கரத்திற் கொண்டவளுமாகிய (த்வா) உன்னை (ஸக்ருத்) ஒருமுறை (நத்வா) வணங்கினாலே (ஸதாம்) ஸத்துக்களான மேன்மக்களுக்கு (மது க்ஷீர த்ராக்ஷா) தேன், பால், திராக்ஷை ஆகியவற்றின் (மதுரிம துரீணா:) இனிமையை வகிக்கும் சிறப்புப் பொருந்தியவையான (பணிதய:) வாக்குகள் (கதமிவ) எவ்வாறு (ந ஸந்நிதததே) கைகூடாமற் போகும்? (எவ்வாறு வாக்குத்திறன் ஸித்தியாமலிருக்கும்?) ]

வீணை இல்லாத ஒருவித வாக்தேவி ஸ்வரூபமாக அம்பாளை [இங்கே] சொல்லியிருக்கிறது. வாக்தேவி என்றால் ஸரஸ்வதிதான்.

அம்பாள் விஷ்ணுவுக்கு ஸஹோதரி என்கிற மாதிரியே இன்னும் இரண்டு – ரொம்பப் பேருக்குத் தெரியாதது: லக்ஷ்மி ப்ரம்மாவுக்கு ஸஹோதரி, ஸரஸ்வதி பரமசிவனுக்கு ஸஹோதரி1. அண்ணா – தங்கை என்றால் ஒரே ஜாடை, ஒரே மாதிரி மனோபாவம், ஒரே மாதிரிக் கார்யம் பண்ணுவது என்றுதானே இருப்பார்கள்? அப்படி ஸரஸ்வதி பரமசிவன் மாதிரியே வெள்ளை வெளேரென்று இருக்கிறாள். ”சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்” என்றால் சரத் கால சந்திரிகை மாதிரி சுப்ரமாக, வெள்ளை வெளேரென்று இருப்பவள். சரத் காலத்தில்தான் அவளுக்கு ஸரஸ்வதி பூஜையும் பண்ணுகிறோம். ‘சரத்’தை வைத்துத்தான் அவளுக்கே ‘சாரதா’ என்று பேர் இருக்கிறது.

ஆசார்யாளுக்கு சாரதா நாமத்தில் விசேஷமான பிடிப்பு உண்டு. வித்வத்திலே சிகரத்துக்குப் போய் பாஷ்யம், ஸ்தோத்ரம், வாதம் என்று ஏராளமாகப் பண்ணியவராதலால் அவருக்கு ஸரஸ்வதி ரொம்பவும் முக்யம். அந்த ஸரஸ்வதிக்கு உள்ள அநேகம் பெயர்களில் சாரதா நாமத்தில் அவருக்குத் தனியான ஈடுபாடு! வெள்ளை வெளேர் என்று பரம பரிசுத்தத்தையும், ஹித சீதமாக இருப்பதில் அருளின் குளிர்ச்சியையும் காட்டுகிற பெயராக இருப்பதால் இருக்கலாம்! ‘ச’வும் ‘ஸ’வும் ஒன்றுக்கொன்று மாறி வருவதுண்டு. அப்படிப் பார்க்கும்போது ‘சாரதா’ என்பது ‘ஸாரதா’ என்றாகும். வடக்கே அப்படியும் சொல்கிற வழக்கமிருக்கிறது. ‘ஸார-தா’ என்றால் ‘ஸாரமான தத்வத்தை அநுக்ரஹிப்பவள்’ என்று அர்த்தம். ஞானந்தான் ஸார தத்வம். அதனாலும் ஆசார்யாளுக்கு அந்தப் பேரில் தனியான பிடிமானம் இருந்திருக்கலாம். ச்ருங்கேரியில் சாரதாம்பாள் என்றே அம்பாளை ப்ரதிஷ்டித்திருக்கிறார். அது சாரதா பீடம். த்வாரகையிலுள்ள ஆச்சார்யாளின் மடத்திலும் சாரதா பீடம் என்றே சொல்கிறது. நம் [காஞ்சி] மடத்துக்கும் சாரதா மடம் என்றே பேர். காமகோடி பீடம்; சாரதா மடம். அந்தப் பேரில் அவருக்குத் தனிப் பிடிப்பு இருந்தாலும், நம்முடைய ஸ்தோத்ரத்தில் ஒரு இடத்தில்கூட லலிதாம்பாள், த்ரிபுரஸுந்தரி முதலான பெயர்களையே சொல்லாததால் இந்தப் பெயரையும் சொல்லவில்லை போலிருக்கிறது! ஆனலும் ‘சரத்-ஜ்யோத்ஸ்நா’ என்று ஆரம்பத்திலேயே சாரதாவை ஞாபகப்படுத்திவிடுகிறார்!

ஈச்வரன் மாதிரியே அவள் சுத்த வெளுப்பு. அவர் மாதிரியே ஜடாமகுடம் தரித்துக் கொண்டிருப்பவள். அதோடு அதில் அவர் மாதிரியே சந்திர கலையையும் வைத்துக் கொண்டிருப்பவள். தானே சந்த்ரிகை மாதிரியான தாவள்யத்தோடு இருப்பவள் ஜடா மகுடத்திலும் சந்த்ரகலை வைத்துக்கொண்டிருக்கிறாள்: ”சசியுத ஜடாஜூட மகுடாம்”.

சதுர்புஜையாக இருக்கிறாள். இரண்டு ஹஸ்தங்களில் வராபய முத்ரை – ”வர த்ராஸ த்ராண” என்று சொல்லியிருக்கிறது. ‘அபயம்’ என்பதற்குப் பதில் ‘த்ராஸ த்ராணம்’ என்று மோனையழகோடு போட்டிருக்கிறார். ‘த்ராஸம்’ என்றால் பயம்தான். ‘த்ராணம்’ ரக்ஷிப்பது பயத்த்லிருந்து ரக்ஷிப்பதென்றால் அபயந்தானே?

”உன்னைத் தவிர எல்லா தேவதைகளும் அபய வரத முத்ரை காட்டுகின்றன” என்று முன்னாடி சொன்னாரல்லவா? அதனால்தான் அப்புறம் லலிதாம்பாளுக்கு வேறான ஒரு ரூப பேதத்தை இங்கே சொல்லும்போது வராபயம் காட்டும் ஸாரஸ்வத [ஸரஸ்வதியின் தொடர்புள்ள] ரூபமாக வர்ணித்திருக்கிறார். வீணை, கிளி என்றிப்படி அந்த ஹஸ்தங்களில் வைத்துக் கொள்ளாமல் வரம், அபயம் காட்டும் ரூபமாகச் சொல்லியிருக்கிறார்.

அப்புறம் ஸரஸ்வதிக்கே உரிய அக்ஷமாலை, புஸ்தகம் இரண்டையும் சொல்லியிருக்கிறார்…. ”ஸரஸ்வதிக்கே உரிய” என்றதற்கு ஒரு ‘அமென்ட்மென்ட்’ [திருத்தம்] – அவளுடைய ஸஹோதரரான ஈச்வரன் தக்ஷிணாமூர்த்தியாக உள்ளபோது அவருக்கும் இந்த இரண்டும் உண்டு, ”ஸ்படிக குடிகாம், புஸ்தக கராம்” என்பதில் ‘ஸ்படிக குடிகா’ என்பது ஸ்படிக அக்ஷமாலையைக் குறிப்பிடுவது.

அக்ஷமாலை என்பது அக்ஷர மாலைதான். ‘அ’விலிருந்து ‘க்ஷ’வரையிலான 51 அக்ஷரங்களில் அக்ஷரத்திற்கு ஒன்றாக 51 மணிகளைக் கோத்துப் பண்ணியதே ‘அக்ஷ’ மாலை.

சாக்த சாஸ்திரத்தில் ஒரு முக்யமான ஜீவ நாடியாக இருக்கிற ஒரு விஷயம் சொல்லவேண்டும். அதுதான் அக்ஷரங்களுக்கு அதிலுள்ள முக்யத்வம்; அந்த அக்ஷரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையான சப்தம் என்ற தத்வத்துக்கு உள்ள முக்யத்வம். வைப்ரேஷனால்தான் ஸ்ருஷ்டி என்று பார்த்தோம். ஆகாச தத்வத்தில் அந்த வைப்ரேஷன் ஸூக்ஷ்மமான சப்தங்களாக இருந்து, அவற்றிலிருந்தே ஸ்ருஷ்டி, அவற்றிலிருந்தே மந்த்ரங்களும், மந்த்ரமயமான வேதமும் என்றும் சொல்லியிருக்கிறேன். ஆகாசத்திற்கான ஸூக்ஷ்ம சக்தியான தன்மாத்ரையே சப்தந்தான் என்றும் சொன்னேன். ஆனபடியால், ஸ்ருஷ்டி லீலையும், ஸ்ருஷ்டி மறுபடி மூலத்தில் லயிப்பதும் ஆன இவல்யூஷன்-இன்வல்யூஷன்களே சாக்த சாஸ்திரத்தின் முதுகெலும்பாக இருப்பதால், அதில் ஓடுகிற ப்ராண நாடி மாதிரியான முக்யத்வத்தை சப்த தத்வம் பெற்றிருக்கிறது. சாக்தத்தில் ஒரு பக்கம் அர்த்த ப்ரபஞ்சம், அல்லது வஸ்து ப்ரபஞ்சம் சொல்லி அதில் சிவ தத்வம், சக்தி தத்வம், ஸதாசிவ தத்வம், ஈச்வர தத்வம், சுத்த வித்யா தத்வம் என்று ஐந்தை வைத்து பரப்ரஹ்மத்திலிருந்து ஸ்தூல பூத ஸ்ருஷ்டி வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது. அதே மாதிரி, அதற்கு ஏர்வையாகவே சப்த ப்ரபஞ்சம் என்றும் வைத்து அதில் சப்தத்தின் அதி ஸூக்ஷ்மமான ‘பரா’ என்ற தத்வத்தில் ஆரம்பித்து, அதையும் சேர்த்து ஐந்து விதமான சப்த தத்வங்களைச் சொல்லியிருக்கிறது. பராவுக்கு அப்புறம் பச்யந்தி, மத்யமா என்று இரண்டு. மநுஷ்யக் காதுக்குக் கேட்காததாகவும், மநுஷ்யன் வாயால் சொல்ல முடியாததாகவும் உள்ள சப்த மூலமே பரா. அந்த அதி ஸூக்ஷ்ம தத்வம் ஒருமுகப்பட்டு சித்தே [சிறதளவு] ஸ்தூலமான சப்தமாக ஆகும்போது ‘பச்யந்தி’ எனப்படுகிறது. ஒரு நோக்கமுமில்லாமல் கேவல [வெறும்] சப்தமாயிருந்த ‘பரா’ வெளிப்படப் பேசிக் கேட்கக்கூடிய சப்தமாக ஆகவேண்டுமென்ற நோக்கத்தோடு கொஞ்சம் இறுகுகிற நிலைதான் ‘பச்யந்தி‘. ‘பார்க்கிறது’ என்று அர்த்தம். ‘நோக்கம்’ என்பது நோக்குவது, பார்ப்பது என்பதைக் குறிப்பதுதான். எந்த நோக்கமும் இல்லாத ‘பரா’வுக்கு நோக்கம் வந்து நோக்குகிறபோது ‘பச்யந்தி’ ஆகிறது! தமிழில் ‘பைசந்தி’ என்பார்கள். அதற்கப்புறம், மநுஷ்ய யத்னத்தின் மீது இல்லாமல் தானாகவே அது சப்தமாக எழும்பும். அந்த நிலையில் அதற்கு ‘மத்யமா’ என்று பெயர். ஸூக்ஷ்ம சப்தத்திற்கும் ஒரு மநுஷ்யன் வாயால் எழும்புகிற ஸ்தூல சப்தத்திற்கும் மத்தியில் அது இருப்பதால் ‘மத்யமா’ என்று பெயர். இப்படித் தானாகவே உண்டாகும் சப்தத்திற்கு ‘அநாஹத சப்தம்’ என்றும் பேர். ‘அடிக்கப் படாமல் உண்டான ஒலி’ என்று அர்த்தம். ‘ஆஹதம்’ – அடிக்கப்பட்ட; ‘அநாஹதம்’ – அடிக்கப்படாத.

இப்படிச் சொன்னால், ”அப்படீன்னா இப்போ நாமவாயிட்டுப் பேசறதெல்லாம் அடிச்சு உண்டாகிற சப்தமா என்ன?” என்று கேள்வி வரும். ஆமாம், நாம் எழுப்பும் சப்தம், வாத்யங்கள் எழுப்பும் சப்தம், இன்னும் காதுபடக் கேட்கிற எந்த சப்தமாயிருந்தாலும் அதெல்லாம் அடிக்கப்படுவதால் உண்டாகிறவைதான். வைப்ரேஷனாலேயே சப்தம். வைப்ரேஷன் என்பது ஹ்ருதயம் அடித்துக் கொள்கிற (heart-beat என்கிற) மாதிரியான ஒன்றுதான். அதோடு காற்று பல தினுஸாகத் தொண்டைக் குழலில் அடித்தும், நாக்கு உதட்டில், பல்லில் அடித்துந்தான் நாம் பேசுகிற, பாடுகிற சப்தங்கள் எழும்புகின்றன. ஹார்மோனியம், ஃபிடில், புல்லாங்குழல், நாயனம் எல்லாமும் காற்று அடித்து மோதி சப்தம் உண்டாக்குபவைதான். அதோடு, புல்லாங்குழலில் விரலாலேயே த்வாரங்களை மூடித் திறப்பதும் அடிக்கிற மாதிரிதானே? வீணையில் தந்திகளை விரலால் மீட்டுவதும் அடிதான். இதெல்லாம் ‘செல்ல அடி’ என்று வேண்டுமானால் சொல்லலாம்! ஃபிடிலில் bow ஒரு தினுஸாக [தேய்ப்பது போல] அடிக்கிறது! ம்ருதங்கம், கடம், கஞ்ஜிரா என்றால் நன்றாக மாக்கு மாக்கு என்றே அடி வாங்கித்தான் சப்தம் கொடுக்கின்றன! கையால் அடித்தால் போதாது என்றே தவில், முரசு, பேரிகை முதலியவற்றுக்குக் கொட்டுக் கொம்பு வேறு வைத்துக் கொண்டு அடிக்கிறார்கள்! ஜாலராவில் ஒரு பாதியும் இன்னொரு பாதியும் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்கின்றன! இதெல்லாம் ஆஹதம். இப்படியில்லாமல் தானாகவே எழும்புவது அநாஹத த்வனி. அதுதான் மத்யமா.

பரா, பச்யந்தி, மத்யமா என்ற மூன்றுக்கப்புறம் நல்ல ஸ்தூல “சப்தமாக” நாமும் யத்னம் பண்ணி வாயைக் கொண்டு எழும்பும் வாக்கு. அதற்கு ‘வைகரி’ என்று பெயர். நாலாவதாக உள்ள இதிலேயே வெறும் சப்தமாக மட்டும் உள்ள ‘த்வனி’, இன்ன சப்தம் என்று நிர்ணயமான ‘வர்ணம்’ என்று இரண்டு இருப்பதால் நாலு என்பதே ஐந்தாகி விடுகிறது. வர்ணம் என்பதே அக்ஷரம். இப்படி ஐம்பத்தோரு நிர்ணயமான, ஸ்பஷ்டமான அக்ஷரங்கள்.

ஒரு குழந்தை அதுபாட்டுக்கு என்னென்னமோ சப்தம் போடுகிறது. அதில் க, ங, ச, ஞ என்கிற மாதிரியான நிர்ணயமான அக்ஷர ரூபங்களில்லை. வெறும் சப்தமாக மாத்திரம் இருக்கிறது. அதுதான் த்வனி. நம்மையே எடுத்துக் கொண்டாலும் நாம் அழுகிறபோது, சிரிக்கிறபோதெல்லாம் ஏதோ சப்தங்கள் எழுப்புகிறோம். ‘குய்யோ, முறையோ’ என்று அழுவது, ‘கடகட’ என்று சிரிப்பது என்கிறோம். ஆனால் வாஸ்தவத்தில், ‘கு-ய்-யோ’ என்றோ, ‘க-ட’ என்றோ உள்ள அக்ஷரங்களைச் சொல்லி நாம் அழுது சிரிப்பதில்லை. த்வனி மாத்திரந்தான் எழுப்புகிறோம்.

‘பரா’விலிருந்து வைகரியின் இரண்டு ரூபங்கள் வரையில் சப்த தத்வங்கள் ஐந்து. அர்த்த ப்ரபஞ்சத்தின் ஐந்து தத்வங்களில் ஒவ்வொன்றுக்கும் ‘=’ போடுவதாக சப்த ப்ரபஞ்சத்தின் இந்த ஐந்தும் இருக்கின்றன.

அதைவிடவும் இதுதான் [அர்த்த ப்ரபஞ்சத்தை விடவும் சப்த ப்ரபஞ்சந்தான்] முக்யமானது என்று கூடச் சொல்லலாம் — இந்த வைப்ரேஷன்களால்தான் அந்த அர்த்த ப்ரபஞ்ச வஸ்துக்களே உண்டாவதால்.

முடிவாக உண்டாகிற ஸ்தூல லோகத்திலுள்ள ஸ்தூல வஸ்துக்களுக்கு என்ன பேர் சொல்லுகிறோம்? ‘பதார்த்தம்’ என்றே சொல்கிறோம். பாமர ஜனங்களுங்கூட ”கடைக்குப் போயி பதார்த்தம் வாங்கியாந்தேன்” என்கிறார்கள். ஸ்தூல வஸ்துவைப் பதார்த்தம் என்பது இதிலிருந்து தெரிகிறது. ‘பத அர்த்தம்’ என்றால் ‘சொல்லின் பொருள்’ என்றே அர்த்தம். பதம், சொல் என்பது சப்த ப்ரபஞ்சந்தான். அதிலிருந்து பொருள் உருவில் [ஸ்தூலமான] வஸ்துவாக உண்டாவதுதான் ‘அர்த்தம்’. அர்த்த ப்ரபஞ்சம் என்பது சப்தமாகிற சொல்லுக்கு உள்ளே இருக்கிற ‘அர்த்தம்’ தான் — ‘மீனிங்’ தான்!

அம்பாள் தினுஸு தினுஸாக என்னென்னவோ மாயா விசித்ரங்கள் பண்ணுவதில், பஞ்சபூத தத்வங்களாகக் குண்டலிநீ சக்ரங்களில் உள்ளபோது எப்படியிருக்கிறாளோ அதற்குக் தலைகீழாக அவற்றிலே சப்தத்தின் ஐந்து பரிணாமங்களாக உள்ளபோது இருக்கிறாள். அடி மூலாதார சக்ரத்தில் ரொம்பவும் ஸ்தூலமான ப்ருத்வீ தத்வமாகவும், அப்புறம் அப், தேஜஸ், (குண்டலிநீ சக்ர க்ரமத்தில் ப்ருத்வியை அடுத்துத் தேஜஸும் அதற்கப்புறம் அப்பும் வரும்.) வாயு என்றும் ஸூக்ஷ்மமாக ஆகிக் கொண்டே போய், நெஞ்சாங்குழியிலுள்ள விசுத்தி சக்ரத்தில் ஆகாசமாக அங்கே இருக்கிறாள். இங்கே, சப்த ப்ரபஞ்சத்திலோ, மூலாதாரத்தில்தான் ஆகாசத்தில் இருக்கும் பரா வாக்காக இருக்கிறாள். அது அதி ஸூக்ஷ்மம். நெஞ்சாங் குழியிலேயே ஸ்தூல சப்தமான வைகரி ஆகிறாள்!

வெளிப்படப் பேசிக் கேட்கிற ஸ்தூல சப்தம் என்பதால் இது மட்டம் என்று ஆகாது. இந்த ஐம்பத்தோரு அக்ஷரங்களுக்கு மாத்ருகைகள் என்றே பேர். மாத்ருகை என்றால் தாயார்தான். பெரிய அந்தஸ்து அம்மாவாக, மஹா ராஜ்ஞியாக இருந்தால் ‘மாதா’. அவளே நம்மோடு ஸமானமாகக் கலந்து பழகும் அன்பான குட்டியம்மாவாக வந்தால் ‘மாத்ருகா’.

”மாத்ருகா வர்ணரூபிணி” என்பதாக அந்த மஹா ராஜ்ஞியையே இந்த வர்ணங்களின் உருவமாக ஸஹஸ்ர நாமம் காட்டிக் கொடுக்கிறது. ”ஸர்வ வர்ணாத்மிகே!” என்று ச்யாமளா தண்டகத்தில் காளிதாஸன் சொல்கிறார்.

சாக்த தந்த்ரத்தில் ரொம்பவும் முக்யத்வம் கொண்ட சப்த ப்ரபஞ்சத்திற்குத்தான் அக்ஷமாலையும், புஸ்தகமும் அடையாளமாயிருக்கின்றன. 51 மாத்ருகைகளுக்காக அத்தனை மணி கோத்தது அக்ஷமாலை.

நாமாவாக இல்லாமல் பீஜம் என்ற சுத்தாக்ஷரங்களாலேயேதான் ஸ்ரீவித்யா மந்த்ரங்களெல்லாம் அமைந்திருக்கின்றன. அதாவது ஸாக்ஷாத் பரதேவதை இப்படி சப்த ரூபம் கொண்டிருக்கிறாள். அதோடு, [மந்த்ர ஜபம் என்ற அப்பியாஸத்தில்] இந்த பீஜாக்ஷரங்களை அநுஸந்தானம் பண்ணுகிறவனுக்குள்ளும் அந்த சப்த ரூபத்தில் ப்ரஸன்னமாகி அநுக்ரஹம் செய்கிறாள். பெரிய அநுக்ரஹம் அந்த சப்தங்களினால் உண்டாகும் நாடி சலனத்தாலேயே குண்டலிநீ யோகம் தரக்கூடிய ஸாக்ஷாத்காரத்தைக் கொடுப்பது. அது தவிர, நாம் ப்ரார்த்திக்கும் இதர காமிதார்த்தங்களையும் [விரும்பிய பொருட்களையும்] மந்த்ர அப்யாஸத்தாலேயே பெறுகிறோம். இதெல்லாம் மட்டுமில்லை. அவளுடைய இந்த சப்த ரூபத்தை ஜபித்தாலே அவயங்களோடு கூடிய அவளுடைய கேசாதிபாத ஸ்வரூபத்தின் தர்சனமுங்கூடக் கிடைத்துவிடுகிறது. இப்படி இஹ-பரங்களில் ஸகலத்தையும் ஸாதித்துத் தருவதாக சப்த ப்ரபஞ்சத்தில் அவள் லீலை நடக்கிறது. இதுவரை சொன்னதெல்லாம் வெறும் அக்ஷரங்கள் குறித்தே.

அந்த அக்ஷரங்களையே பல தினுஸாகச் சேர்த்துப் பதமாக்கி, வாக்கியமாக்கித்தான் நாம் பேசுவது எழுதுவது எல்லாம். காவ்யம், ஸ்தோத்ரம், சாஸ்த்ரம் — வேதம் முதற்கொண்டு எல்லாமே — இப்படி உண்டானதுதான். அதற்கெல்லாம் அடையாளம் [வாக்தேவியின் ஒரு கரத்திலுள்ள] புஸ்தகம்.

ஸ்ரீவித்யா மந்த்ரத்தில் ‘கூடங்கள்’ என்று மூன்று பிரிவுகள் [கூறுகள்] உண்டு. அதில் முதலாவதற்கு ‘வாக்பவம்’ என்றே பேர். அப்படியென்றால் ‘வாக்கிலிருந்து உண்டானது’ என்று அர்த்தம். முழு மந்த்ரமும் அம்பாளின் முழுஸ்வரூபம். அதில் அவளுடைய முகம் ‘வாக்பவ’ கூடம். முகத்திலுள்ள வாயால்தானே பேசுவது?

இதற்கு இவ்வளவு முக்யத்வம் கொடுத்திருக்கிறது. சாக்த சாஸ்திரங்களிலும் ஸ்தோத்ரங்களிலும் அவள் பக்தர்களுக்கு விசேஷ வாக்குவன்மை கொடுத்துக் கவிகளாக்குவாள் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கும். இந்த ஸெளந்தர்ய லஹரியிலேயே அப்படி நிறைய வருகிறது. இதற்கென்ன இவ்வளவு முக்யத்வமென்றால்:

வேறு எந்த ப்ராணி வர்க்கத்திற்கும் இல்லாமல் மநுஷ்ய ஜாதி ஒன்றுக்குத்தானே வாக் சக்தி என்று ஒன்றைப் பராசக்தி கொடுத்திருக்கிறாள்? அவளுடைய special gift என்றால் அது முக்யமானதுதானே? நல்லறிவு இருந்தால், அது [பேசும் திறன்] நம்மைப் பரம ச்ரேயஸில் சேர்க்கவே கொடுக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொண்டு அந்த வகையில்தான் அதை ப்ரயோஜனப்படுத்திக் கொள்ளத் தோன்றும். அவள் கொடுத்த வாக்கை அவள் விஷயமாகவே ப்ரயோஜனப்படுத்தி அவளையே அடைய வேண்டும் என்பதுதான் வாக்கின் பரம லக்ஷ்யம்.

வாக்கின் உயர்வு எதில் என்றால், ஒருத்தன் தான் மாத்திரம் உசந்த அநுபவங்களைப் பெறுவது என்றில்லாமல் பிறத்தியாருக்கும் அவை கிடைக்கும்படிப் பண்ணும் மிக உயர்ந்த தொண்டு அதனால்தான் நடக்கிறது. ”சேர வாரும் செகத்தீரே!” (‘காகம் உறவு” எனும் தாயுமானவர் பாடல்) என்று தன்னுடைய ஒரு குழந்தை மற்ற குழந்தைகளையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு திவ்ய அநுபவங்களை, திவ்யமான அழகுகளை, உசந்த எண்ணங்களை ‘ஷேர்’ பண்ணிக் கொள்ள வழியாகவே அம்பாள் வாக் சக்தி, கவித்வ ப்ரதிபை முதலியவற்றை வழங்குகிறாள். இதைவிட என்ன புண்யம் உண்டு? அதனால்தான் இதை special gift என்று விசேஷித்துச் சொல்வது.

ஸாதனா மார்க்கம் என்று ஒரு குரு போட்டுக் கொடுக்கும்போது அதில் எத்தனையோ கடினமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த ஸாதனை லக்ஷ்யத்தையே ஒரு கவியோ ஸகல ஜனங்களும் ஸெளக்யமாக, ஸந்தோஷமாகப் பெறும்படி ஸ்வராஸ்யமுள்ளதான பொருளில் பாட்டாக்கிக் கொடுத்து விடுகிறான்! இப்படி ஒரு அநுக்ரஹம் – தனி ஆஸாமியின் உடைமையாயில்லாமல், எல்லோருக்குமான ஸோஷலிஸ உடைமையாக – வாக்கைக் கொண்டு அம்பாள் பண்ணுவிக்கிறாள் என்பதாலேயே அதைப் போற்றிப் போற்றிச் சொல்வது.

லலிதாம்பிகையாகவே அதைப் பண்ணுவிப்பவள், வாக்தேவி என்றே உள்ள தனி ரூபத்தில் பண்ணுவதாக இந்த ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார்.

வராபயமும், ஜப மாலையும், சுவடியும் வைத்துக் கொண்டிருக்கும் அந்த வாக்தேவியை ஸாது ஜனங்களாயிருப்பவர்கள் ஒரு தரம் நமஸ்கரித்துவிட்டாலே போதும் – ”ஸதாம்” என்றால் ‘ஸாது ஜனங்களுக்கு’ என்று அர்த்தம். ”ஸக்ருந்நத்வா” (இது ஸக்ருத் நத்வா எனப் பிரியும்) என்பதில் வரும் ”ஸக்ருத்” என்பதற்கு ஒரு தடவை — ஒரே தடவை — என்று அர்த்தம். ”நத்வா” – நமஸ்கரித்தால். ஒரே தடவை நமஸ்கரித்துவிட்டால் போதும்? யார் என்பது முக்யம்! யாரானாலும் ஒரு தரம் நமஸ்கரித்தாலே போதும் என்று சொல்லவில்லை. ஸாதுக்களாக, அதாவது உயர்ந்த சீலங்களுள்ளவர்களாக, இருப்பவர்கள்தான் ஒரு நமஸ்காரம் பண்ணினாலும் போதும். அவர்களுக்கு ”மது க்ஷீர த்ரக்ஷா மதுரிம துரீணா: பணிதய:”…. மாதுர்யத்திற்குப் பேர் போன மூன்றைச் சொல்கிறார் – தேன், பால், த்ராக்ஷை என்று. அவை மதுரமாயிருப்பது மட்டுமில்லை; ஸுலபமாக முழுங்கி ஸுலபத்தில் ஜீர்ணம் செய்துகொண்டு நிரம்பப் புஷ்டி பெற இந்த மூன்றுக்கு மிஞ்சி இல்லை. அந்தராத்மாவுக்குள்ளே முழுங்கி ஜீர்ணித்து, பாரமார்த்திகமாகப் புஷ்டி பெறச் செய்கிற வாக்குக்கு இப்படி உபமானம் கொடுத்திருக்கிறார். ஸாது ஜனங்களுக்கு தேன் போலும், பால் போலும், த்ராக்ஷை போலும் மதுரமான வாக்கை வர்ஷித்துக் கவிபாடும் சக்தி வாக்தேவியை ஒரு தரம் நமஸ்காரம் பண்ணினாலே அவள் அநுக்ரஹத்தால் உண்டாகிவிடுகிறதாம்.

”அவர்களுக்கு அப்படிப்பட்ட வாக்சக்தி உண்டாகிறது” என்று அப்படியே fact-ஆகச் சொல்லிவிடாமல், கவி நயத்தோடு ”எப்படி உண்டாகாமல் இருக்க முடியும்?” — ”கதமிவ ந ஸந்நிதததே:?” என்று கேள்வி ரூபத்தில் கேட்டிருக்கிறார்.

கொஞ்சம் வார்த்தை விளையாட்டும் பண்ணியிருக்கிறார். ”ஸக்ருந்நத்வா நத்வா” என்று ‘நத்வா’வை இரண்டு தரம் திருப்பி சப்தாலங்காரம் பண்ணியிருக்கிறார். இரண்டு ‘நத்வா’வுக்கும் வெவ்வேறே அர்த்தம். இரண்டில் ஒரு ‘நத்வா’வுக்கு ‘நமஸ்காரம் பண்ணி’ என்று அர்த்தம். இது ஒரே வார்த்தை. இன்னொரு ‘நத்வா’வோ ‘ந’ என்ற ஒற்றை அக்ஷரமாகவும் ‘த்வா’ என்ற வார்த்தையாகவும் பிரியும். ‘ந’, ‘த்வா’ என்று இங்கே இரண்டு வார்த்தை சேர்ந்து ‘நத்வா’ ஆகியிருக்கிறது. ‘ந’ என்றால் நெகடிவ், இல்லை என்ற அர்த்தம் கொடுப்பது. ‘வாக்வன்மை உண்டாகாமல் இருக்குமா?’ என்று நெகடிவ்வாகச் சொல்லும்போது, ‘ஸந்நிததே’ என்பதுடன் இந்த ‘ந’ சேர்ந்தே அந்த அர்த்தத்தைக் கொடுக்கிறது. வசன நடையில் பின்னாடி ‘ந ஸந்நிதததே’ என்று வரவேண்டிய ‘ந’வை முன்னாடி ‘ஸக்ருத்’தோடு சேர்த்து ‘ஸக்ருந்ந’ என்று போட்டு வார்த்தை விளையாட்டுப் பண்ணியிருக்கிறார்! ‘த்வா’ என்றால் ‘உன்னை’. ‘த்வா நத்வா’ : ‘உன்னை நமஸ்கரித்தால்’.

கவீந்த்ராணாம் சேத: கமல-வன பாலாதபருசிம்

பஜந்தே யே ஸந்த: கதிசித்-அருணாம்-ஏவ பவதீம்

விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ச்ருங்கார லஹரீ-

கபீராபிர்-வாக்பிர்-விதததி ஸதாம் ரஞ்ஜநமமீ || (ச்லோ. 16)

[ (கவீந்த்ராணம்) பாவேந்தர்களுடைய (சேத: கமலவன) சித்தமாகிய தாமரைக் காட்டிற்கு [அதனை மலர்த்தும்] (பால ஆதப ருசிம்) இளஞ் சூரிய ஒளியாக இருப்பவளும், (அருணாம் ஏவ பவதீம்) [சிவந்தவள் என்று பொருள்படும்] அருணா என்றே கூறப்படுபவளுமான உன்னை (யே கதசித் ஸந்த:) எந்த ஒரு சில சான்றோர்கள் (பஜந்தே) வழிபடுகிறார்களோ (அமீ) அவர்கள் (விரிஞ்சி ப்ரேயஸ்யா:) ப்ரம்மாவின் ப்ரிய பத்னி (யான ஸரஸ்வதி) யின் (தருண-தர) இளமை நலமிக்க (ச்ருங்கார லஹரீ) பிரேமப் பிரவாஹமான (கபீராபி: வாக்பி: ) ஆழமிக்க சொற்களால் (ஸதாம்) நன்மக்களுக்கு (ரஞ்ஜனம் விதததி) உவகையூட்டுகிறார்கள்.]

வெள்ளை வெளேரென்ற ஸத்வ ஸ்வரூபமான வாக்தேவியைச் சொன்னவர் அடுத்த ச்லோகத்தில் அவளுக்கே செக்கச் செவேல் என்று இருக்கும் ரஜோகுண ஸ்வரூபத்தைச் சொல்கிறார். ஸூர்யோதயத்திற்கு முன் கிழக்குத் திசை செக்கச் செவேலென்று இருப்பதை அருணோதயம் என்கிறோம். அருணம் என்றால் அந்தச் சிவப்பு நிறந்தான். ஸூர்யனுடைய ரத ஸாரதி அந்த நிறமானதால் அவனுக்கு அருணன் என்று பெயர். முதலில், ரதத்தின் முன்னே உட்கார்ந்திருக்கும் அவன் தெரிகிறான். அதுதான் அருணோதயம். அப்புறம் ரத மத்தியிலிருக்கும் ஸூர்ய பகவானும் தெரிவது ஸூர்யோதயம். இங்கே ‘அருணா’ என்ற சிவப்பு நிற ஸரஸ்வதீ ரூப பேதத்தைச் சொல்கிறார். இப்படி த்யானிப்பவர்களுக்கு அவள் ச்ருங்கார ரஸ ப்ரதானமான வாக் தாரையை அருள்கிறாள் என்கிறார். ச்ருங்காரமும் ரஜோ குணத்தைச் சேர்ந்ததுதான். அதையும் சிவப்பாகவே உருவகப்படுத்துவது வழக்கமாதலால் அருணாம்பாள் இப்படி அநுக்ரஹிப்பது பொருத்தமாகவே இருக்கிறது.

ஆனால் இது ப்ராக்ருதமான [உலக இயற்கைப் படியான] ச்ருங்காரமில்லை; காமேச்வர-காமேச்வரி தாம்பத்தியம் என்று சொன்ன தத்வார்த்தமான ச்ருங்காரம். அதை ஸரியானபடி புரிந்துகொண்டு ஸந்தஷோப்படக் கூடியவர்கள் யாரென்றால் ஸாது ஜனங்கள். முந்தின ச்லோகத்தில் வெள்ளை ஸரஸ்வதியை ஒரு தரம் நமஸ்கரித்தே ஸாது ஜனங்கள் கவித்திறமை பெறுவதாகச் சொன்னார். அவர்கள் பாடும் கவியும் வெள்ளையாக – ஸாத்விகமாக – ஞான, வைராக்யங்களில் சேர்ப்பதாக இருக்கும். அந்த ஞான வைராக்யங்களையே ச்ருங்காரமாக அநுபவிக்கும் ஒரு ஸ்திதியும் உண்டு. அது அந்த ஸாது ஜனங்களுக்கே கைவருவது. ஆகையால் அவர்கள் மகிழும்படி இந்தச் சிவப்பு ஸரஸ்வதி உபாஸகர்கள் பாடுகிறார்கள். போன ச்லோகத்தில் ”ஸதாம்” (‘ஸாது ஜனங்களுக்கு’) மது, க்ஷீர, த்ராக்ஷாரஸங்களுக்கு ஸமானமான வாக்கு ஸித்திப்பதைச் சொன்னார். இந்த ச்லோகத்தில் ”விததி ஸதாம் ரஞ்ஜனம் அமீ” என்று அதே ஸாது ஜனங்களுக்கு இந்தச் சிவப்பு ஸரஸ்வதி உபாஸகர்கள் தங்கள் கவிதை ஸ்துதிகளால் ஸந்தோஷமுண்டாக்குகிறார்கள் என்கிறார். அங்கே கவியாக இருந்தவர்கள் இங்கே ரஸிகர்கள்.

அப்படியானால், இங்கே கவிகளாக இருப்பவர்கள் யாரென்றால், அவர்கள் அந்த ஸாதுக்களிலேயே இன்னும் மேலே போன ஸாது ச்ரேஷ்டர்கள்தான். வெள்ளை ஸரஸ்வதியிடமிருந்து பொதுவான காவ்ய சக்தியைப் பெறுபவர்கள் பொதுப்படையான எல்லா ஸத்துக்களுமாவர். ‘ஸதாம்’ என்று பொதுவாக அங்கே சொன்னார். இங்கேயோ அதிலேயே ச்ருங்காரமாக யார் பாடுகிறார்கள் என்னும்போது ”கதிசித் ஸந்த:” – ‘யாரோ சில ஸத்துக்கள்’ – என்கிறார். அதாவது, ஸத்துக்களிலும் உசந்த நாயிகா பாவ நிலைக்குப் போன ஒரு சில பேரே என்று அர்த்தம். பரம பக்குவம் வாய்ந்த ஸாதுக்களே அந்த பாரமார்த்திகமான ச்ருங்காரத்தை முறைப்படிக் கையாள முடியும். மற்ற ஸாதுக்களே அதை முறைப்படி கேட்டு ஸந்தோஷப்பட முடியும். அவர்கள் பெறும் ஸந்தோஷத்திற்கு ‘ரஞ்ஜனம்’ என்று வார்த்தை போட்டதில் ச்லேஷை [சிலேடை] இருக்கிறது. ‘ர’ என்றாலே சிவப்புதான். சிவப்பாக உள்ள அக்னி. காமாக்னி என்றே சொல்லும் ப்ரேமை இரண்டுக்கும் ‘ர’ என்று பேர். ‘ரம் + ஜனம்’ என்றால் சிவப்பை உண்டாக்குவது, தழல் மாதிரி ஒரு பிரேமையை உண்டாக்குவது என்று அர்த்தம். நல்ல பக்குவ ஸ்திதியைக் காட்டும் செம்மை அது. ஒரு பழம் நன்றாகப் பழுத்தால் சிவப்பாகிறதல்லவா? அப்படி. ‘செம்மை செய்தல்’ என்றாலே நன்றாகப் பக்குவம் பண்ணி முழுமையாக்குவது தானே? அப்படிப்பட்ட மனச் செம்மையை உண்டாக்கும் ஆனந்தமே ‘ரம்+ஜன’மான ரஞ்ஜனம். சிவப்பு ஸரஸ்வதியின் அருள் பெற்றுப் பாடும் பரம பக்குவம் வாய்ந்த கவிவாணர்கள் அதனால் மற்ற ஸாது ஜனங்களும் செம்மையான ஸந்தோஷம் பெற வைக்கிறார்கள். அவள் ‘அருணா’ என்றால் இவர்களும் ‘ரம்’மை ஜனிக்கச் செய்கிறார்கள்! ச்ருங்கார ஸஹரியாகக் கவிதை செய்து பாடுகிறார்கள். அந்த ச்ருங்கார லஹரிக் கவிதையை ”கபீராபி: வாக்பி: ” என்கிறார் அப்படியென்றால் ‘ஆழமுள்ள வாக்குகள்’ என்று அர்த்தம். அதாவது ஆழ் பொருள் கொண்டது. மேல் மட்டத்தில் பார்த்தால் வெறும் ச்ருங்கார அலையாக இருக்கும்; ஆழத்தில் போய்ப் பார்த்தால் ஒரே தத்வ முத்தும் பவளமாக இருக்கும்.

ஸாக்ஷாத் காமேச்வரிக்கே அருணா என்று பெயருண்டு. ”அருணாம் கருணா-தரங்கிதாக்ஷீம்” என்றுதான் அவளுடைய த்யான ச்லோகமே. ஆனால் இங்கே ஆசார்யாள் சொல்வது காமேச்வரிக்குரிய தநுர்-பாண-பாசாங்குசங்களோடு நாலு ஹஸ்தங்களும் ஸரஸ்வதிக்குரிய அக்ஷமாலை, புஸ்தகம், வராபயம் [வரம் அபயம்] ஆகியவை கொண்ட நாலு ஹஸ்தங்களுமாக மொத்தம் எட்டுக்கையுள்ள அருண ஸரஸ்வதி என்று பெரியவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அடுத்த ச்லோகத்தில் [ச்லோ. 17] வாக்தேவதைகள் புடைசூழ இருப்பவளான ஸாக்ஷாத் லலிதா த்ரிபுரஸுந்தரியையே த்யானம் செய்தால் எப்பேர்ப்பட்ட ஸாரஸ்வதமான ஸித்தி உண்டாகும் என்று சொல்கிறார்.

வாக்தேவி என்று ஏக வசனத்தில் [ஒருமையில்] சொன்னால் ஸரஸ்வதி ஒருத்தி மட்டுமே. வாக் தேவதைகள் என்று பஹு வசனத்தில் [பன்மையில்] சொன்னால் எட்டு பேர். ‘அ’ முதலான பதினாறு உயிரெழுத்துக்களுக்கு ஒரு வாக்தேவதை; ka, kha, ga, gha, ங-வுக்கு ஒருத்தி; இப்படியே ‘ச’ வர்க்கத்திற்கும் ‘ஞ’வுக்கும் ஒருத்தி; ‘ட’ வர்க்கத்திற்கும் ‘ண’வுக்கும் ஒருத்தி; ‘த’ வர்க்கத்திற்கும் ‘ந’வுக்கும் ஒருத்தி; ‘ப’ வர்க்கத்திற்கும் ‘ம’வுக்கும் ஒருத்தி; ய, ர, ல, வ-வுக்கு ஒருத்தி; ச (sa), ஷ, ஸ, ஹ, ள, க்ஷ-வுக்கு ஒருத்தி – என்று 51 அக்ஷரங்களுக்குமாக எட்டு வாக்தேவதைகள். அதிலே முதலாமவளாக ‘அ’ வரிசைக்கு இருப்பவளுக்கு வசிநி என்று பெயர். அதனால் அந்த எட்டுப் பேரை ‘வசிந்யாதி தேவதைகள்’ என்பார்கள். இவர்கள்தான் அம்பாளே உத்தரவிட்டதன் மேல் லலிதா ஸஹஸ்ரநாமத்தைப் பாடியவர்கள். ஸ்ரீசக்ரத்தில் ஏழாவது ஆவரணத்திலுள்ள எட்டுக் கோணங்களில் இந்த எட்டுப் பேரும் அம்பாளைச் சுற்றி உட்கார்ந்திருப்பார்கள்.

இவர்களே வாக்கைப் பிறப்பிக்கும் தாயார்களாதலால் ”ஸவித்ரீபி: வாசாம்” என்று [ச்லோகத்தை] ஆரம்பிக்கிறார். சந்திரனின் நிலவு பட்டால் உருகுகிற ஒரு வித ஸ்படிகம் இருப்பதாகவும் அதற்குச் சந்திரகாந்தக் கல் என்று பேர் என்றும் புஸ்தகங்களில் இருக்கிறது. அந்தச் சந்திர காந்த ஸ்படிகம் மாதிரி, உள்ளுக்குள்ளே நிலா டால் அடிக்கும் ஸ்படிக வர்ணத்தில் அந்த வாக்தேவதைகள் இருக்கிறார்கள். ஒரு ச்லோகத்தில் ‘சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்’ என்றார்; இன்னொன்றில் ‘அருணாம்’ என்றார்; இங்கேயோ நடுவே அருணாவான அம்பாள் வீற்றுக் கொண்டிருக்க, சுற்றி சரத் ஜ்யோத்ஸ்நா மாதிரியான வாக் தேவதைகள் சூழந்து கொண்டிருப்பதைச் சொல்கிறார்! இப்படி ராணியான அம்பாளை சேடிகளான வாக் தேவதைகளோடு சேர்த்து த்யானிப்பவன் – ”ஸஞ்சிந்தயதி ய:” – ‘எவன் நன்கு சிந்திக்கிறனோ அவன்’ – மஹா காவ்யங்கள் எழுதகக்கூடிய அளவுக்கு ஸாஹித்ய கௌசல்யம் [இலக்கிதயத் திறமை] பெற்று விடுகிறான். மஹான்களுடைய சொல்லோட்டத்துக்கு உள்ள சுவை (தமிழ்ப் புலவர் பாஷையில் சொல்லிவிட்டேன்!) அவனுடைய வாக்குக்கு ஏற்பட்டுவிடுமாம்! ”மஹதாம் பங்கி ருசி” என்கிறார். ருசி, சுவை, taste என்று எந்த பாஷையிலும் சாப்பாட்டிற்குச் சொல்வதையே இலக்கியத்திற்கும் சொல்லியிருக்கிறது!

நாக்கால் அறியக்கூடிய ருசியை மாத்திரம் சொல்வானேன் என்று மூக்கால் அறியக்கூடிய வாஸனையையும் இங்கே ஆசார்யாள் சேர்த்துக்கொள்கிறார். ‘மது, க்ஷீரம், த்ராக்ஷை போன்ற மாதுர்ய ருசியோடு வாக்கு இருக்கிறது என்கிற மாதிரி எதன் வாஸனையோடு அது இருப்பதாகச் சொன்னால் சிறப்பாயிருக்கும்?’ என்று யோசித்து, ‘எட்டு வாக்தேவதைகளையும் கூட்டி ஒரே வாக்தேவியாக ஸரஸ்வதி இருக்கிறாளே, அவளுடைய வதன கமலத்திலிருந்து எப்பேர்ப்பட்ட திவ்ய பரிமளம் எழும்பும்? – அந்தப் பரிமளத்திற்கு ஒப்பான ஒரு இன்ப உணர்ச்சியை இந்த மஹாகவியின் வாக்கும் உண்டாக்கி விடும்’ என்று ச்லோகம் பண்ணிவிட்டார்: ”வசோபி: வாக்தேவீ வதந கமலா மோத மதுரை:”. ஸரஸ்வதி சுத்த ஸத்வ மூர்த்தி, அத்தனை கலைகளுக்கும் ஆச்ரயமாயிருக்கப்பட்டவள். அப்படிப்பட்டவள் வாயைத் திறந்தாலே திவ்ய பரிமளம் வீசும்; தாம்பூலம், ஜின்டான் மாத்திரை போட்டுக் கொள்ளாமலே வீசும்! பூ வைத்துக் கொள்ளாமலே அம்பாளுடைய கேசம் வாஸனை அடிக்கும் என்கிறாற் போல – அந்த ஸமாசாரத்திற்கு அப்புறம் வருகிறேன்2 – ஏலக்காய், ஜாதிபத்ரி எதுவும் போட்டுக் கொள்ளாமலே வாக்தேவியன் வாய் வாஸனை வீசும். அந்த வாஸனையை இந்த மஹாகவியின் வாக்கும் அதைத் யாரார் சொல்கிறார்களோ அவர்களுடைய வாய்க்குக் கொடுத்துவிடும் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். ஸரஸ்வதியின் வாயிலுள்ள இயற்கை மணம் இவனுடைய சொல்லுக்கு இருப்பதால் அதைச் சொல்கிறவர்களின் வாயும் அப்படி மணக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். ”வள்ளால்! உன்னைப் பாடப் பாட வாய் மணக்குதே!” என்று வள்ளலார் என்றே சொல்லப்படுபவரும் பாடியிருக்கிறார்.

அம்பாள் வாக்சக்தியை அநுக்ரஹிப்பதைப் பிற்பாடு ‘ஸெளந்தர்ய லஹரி’ ஸெக்ஷ்னிலும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார் – அவளுடைய ஸ்தன்ய பானம் [பாலூட்டு] அபார கவித்வத்தைத் தருகிறதென்று ஒரு இடத்தில் [ச்லோ. 75]; ப்ரம்மாவே அஸூயைப் படுகிற அளவுக்கு அவள் ஒரு பக்தனுக்கு ஸரஸ்வதி கடாக்ஷத்தை அருள்கிறாளென்று ஒரு இடத்தில் [ச்லோ. 99]; ஊமைக்குக் கூடக் கவிபாடும் ஸாமர்த்யத்தை அவளுடைய பாத தீர்த்தம் தருகிறதென்று ஒரு இடத்தில் [ச்லோ. 98] – இப்படியெல்லாம் அம்பாள்-பக்தர்கள் ஸாரஸ்வதமாகப் பெறும் அநுக்ரஹத்தைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறது. ஆசார்யாள் தாம் கண்டுகொண்ட திவ்ய ஸெளந்தர்ய தர்சனத்தை இந்த ஸ்தோத்ர வாக்குகளால் சொல்லி மற்றவர்களோடு ‘ஷேர்’ பண்ணக் கொள்ளும்போது அதிலுள்ள பரமானந்தத்தை, இப்படியொரு பரோபகாரம் பண்ணுவதில் பரம ஸந்துஷ்டியை அடைந்திருப்பார். அதனால்தான் தம்முடைய ஸ்தோத்ரத்தைப் படிப்பவர்களும் அவளை பக்தி பண்ணி இந்த வாக் ஸித்தியைப் பெற்று, ஸ்தோத்ரம் பாடி, பெரிய பரோபகாரம் பண்ணட்டும் என்று நினைத்து அம்பாளின் வாக் ப்ரதான அநுக்ரஹத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறாரென்று தோன்றுகிறது.


1“தெய்வத்தின் குரல்”, ஐந்தாம் பகுதியில் “குருமூர்த்தியும் த்ரிமுர்த்திகளும்” என்ற உரையில் ‘ப்ரம்மாவை உள்ளடக்கி த்ரிமூர்த்தியர் ஏற்பட்ட காரணம்‘ என்ற பிரிவு பார்க்க.

2“துநோது த்வாந்தம்” எனத் தொடங்கும் 43-வது ச்லோகத்தில் ‘ஸஹஜம் ஸௌரப்யம்’ என்பதை விளக்கும் இடத்தில்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is கால ஸ்வரூபமாக
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அம்பாளின் தாடங்கம்
Next