Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

எந்த உபாஸனையிலும் யோகாநுபவ, ஞானாநுபவ, ப்ரேமாநுபவங்கள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

”குண்டலிநீ கிட்டேயே போக மாட்டேன் என்கிறாரே, நம்மையும் போகவிட மாட்டேன் என்கிறாரே! பின்னே, இந்த உசந்த அநுபவங்களெல்லாம் நமக்கு எப்படிக் கிடைக்கும்? இதையெல்லாம் சொல்லாமலாவது இருக்கப்படாதா?” என்றால் –

அப்படி [குண்டலிநீ] யோகமாகத்தான் பண்ண வேண்டுமென்றில்லை. எந்த வழியில் போனாலும், குண்டலிநீ யோக வழிமுறைகளைப் பின்பற்றாமல் எந்த உபாஸனையில் போனாலும் அதிலேயே ஒருமுகமாக, ஸின்ஸியராக, நம்பிக்கை விச்வாஸங்களோடு பண்ணிக் கொண்டு போனால் ஒரு நிலைக்கு உயரும்போது ச்வாஸகதிகள் யோக ஸாதனையில் எப்படி ஆகுமோ அப்படித் தானாகவே மாறிவிடும். நமக்கு அது தெரியக் கூடத் தெரியாது. ஆனாலும் தானாகவே மாறிவிடும். இன்னும் உசந்த நிலையில் உபஸனா லக்ஷ்யத்திலே நாம் தன்மயப்படும்போது ச்வாஸம் கும்பகமாக அப்படியே நின்றும் விடும். ஸாதாரணமாக லௌகிக ப்ரவருத்திகளில் நாம் இருக்கிறபோது இடது நாஸியிலேயே மூச்சு வருவதாக இருக்கும். அதுவே ஒரு உத்ஸவத்தில் தர்சனம் பண்ணி ஒருவிதமான ஸந்தோஷம் அடைகிறபோதோ, ஒரு மஹானின் ஸந்நிதியில் மனஸு சாந்தப்பட்டு இருக்கிற போதோ மூச்சைக் கவனித்தால் வலது நாஸியில் வருவதாகக் தெரியும். இன்னும் உசந்த நிலையில் இரண்டு நாஸியிலும் ஸமமாக – அதற்கும் மேலே போனால் கும்பகமாக அப்படியே [மூச்சு] நின்றுவிடுவதாக, ஆனாலும் மூச்சடைப்பாகத் திணறாமல் ஹாயாக, லைட்டாக இருப்பதாக – இப்படியெல்லாம் ச்வாஸகதி தன்னால் மாறத்தான் செய்யும். அதில் முடிவாக – அல்லது அத்வைத முடிவுக்கு முந்தின நிலையாக – ச்வாஸ சலனம் உச்சி நாடிகளில் முட்டி அம்பாள் பாதத்தைத் தொட்டு அம்ருத ரஸதாரையைப் பொழியவும் வைத்துவிடும். லோக வாழ்க்கையிலேயேகூட ரொம்பவும் ஸந்தோஷம் ஏற்பட்டால் மூச்சடங்கி மூர்ச்சை போடுகிறோமே அது கும்பகத்தின் ரஸாபாஸம்தான். அப்படியே, ”உச்சி குளிர்ந்து போச்சு!” என்கிறோமே, அதுவும் அந்த அம்ருதத்திலே லேச லேசம் [துளியிலும் துளி] உச்சி நாடியில் துளிப்பதால்தான்!

பக்தி மார்க்கத்திலேயும் அத்தனை உத்தமாநுபவங்களும் உண்டு என்பதற்காகச் சொன்னேன்.

வேறே ஸாதனைகளில் போகாமல் பக்தி வழியிலேயே ”காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்று அப்படியே போனவர்களின் பாட்டுக்களைப் பார்த்தால் – நம் தமிழ் நாட்டுச் சிவனடியார்கள், விஷ்ணு பாகவதர்கள்தான் என்றில்லை, மஹாராஷ்டிரம், பெங்கால், வடதேசம், இன்னும் ஸூஃபிகள், கிறிஸ்துவ பக்திமான்களின் பாட்டுகளில்கூட ஒரே யோகாநுபவமாகவும், ஞானாநுபவமாகவும் அங்கங்கே flash பண்ணிக்கொண்டு போவதைப் பார்க்கிறோம்.

இங்கே ப்ரேமாநுபவத்தையும் சொல்லணும். இச்சாசக்தி, காமேச்வர-காமேச்வரி என்றெல்லாம் மூல தத்வத்தைப் பற்றிச் சொன்னது ரொம்ப ஸூக்ஷ்மமான, பரிசுத்தமான ச்ருங்காரத்தைச் சேர்ந்தது. காமம், காமம் என்று பேர் இருக்கிறதே என்று நமக்கு என்னவோ போலிருந்தாலும் — குரு, ஸந்நியாஸி என்று இருந்து கொண்டு ஏதோ கொஞ்சம் சொல்வதுகூட அஸப்யம் [பொதுவில் கூறுவதற்கு ஒவ்வாதது] போலிருந்தாலும் — வாஸ்தவத்தில் அதில் தத்வார்த்தமாக ஒரு தோஷமுமில்லை. ஒரு சாந்தமான ஆதாரத்தோடேயே சக்தி பின்னிக் கொண்டு ஸகல ஸ்ருஷ்டியும் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தான் அப்படி ‘ஸிம்பாலிக்’காகத் தெரிவித்திருக்கிறது. இதிலே தோஷமே இல்லை என்பதால்தான் ஸாதனாந்தத்திலே [ஸாதனை முடிவிலே] அநேக மஹான்களுக்கு யோகாநுபவ, ஞானாநுபவங்களைப் போலவே இந்த ச்ருங்காராநுபவமும் ஏற்படும்படியாக அம்பாள் பண்ணியிருக்கிறாள்! மூல தத்வத்தின் இவல்யூஷனில் முதலிலே இச்சையும், ச்ருங்கார ஜோடியும் வருகிறார்களென்றால், ஸாதனாந்தத்தில் ஜீவனின் இன்வல்யூஷனிலும் அநேக மஹான்களுக்கு ஐக்யத்திற்கு முன் ஸ்டேஜில் நாயிகா பாவம் ஏற்பட்டிருக்கிறது! அது சக்தியோடு ஐக்யமாகிவிட்ட நிலை. அப்போது [நாயகனான] சிவனோடு ஐக்யமாக வேண்டுமென்ற தாபம் உண்டாகிறது. அந்தத் தாபத்திலேயே, ”நான் ஒன்றும் பண்ணிக் கொள்வதற்கில்லை. உன் இச்சைதான்” என்று சரணாகதி பண்ணுவது. அப்புறம் சிவனோடு சேரவேண்டும் என்ற இச்சையும் போய் சிவனின் இச்சை மாத்திரமே நிற்கிறது. அதாவது ஜீவன் பிரயாஸைப் பட்டுச் செய்துகொண்ட இன்வல்யூஷன் சிவனுடைய முதல் இவல்யூஷனில் ஸங்கமித்து விடுகிறது. அந்த இடத்தில் அந்த ஒரு ஜீவனைப் பொறுத்தமட்டில் சிவனே இவல்யூஷனில் விரியாமல், இன்வல்யூஷனில் குவிந்து அவனை உள்ளுக்குள்ளே வாங்கிக் கொண்டு விடுகிறான். ஸாதாரணமாக ஒரு பிரவாஹத்திலே ஒன்றைப் போட்டால் அலையடித்து, அலையடித்து அதை வெளியிலேதான் ஓரத்திற்குத் தள்ளுமானாலும், அந்தப் பிரவாஹத்திலேயே ஒரு சுழல் சுழித்துக் கொள்கிறபோது போடும் வஸ்துவை அது உள்ளுக்கு வாங்கிக் கொள்கிற மாதிரி இங்கே நடக்கிறது.

சிவனின் ஆரம்ப இச்சை, ஜீவனின் கடைசி இச்சை இரண்டும் ச்ருங்காரமாக ஸிம்பலைஸ் ஆகிறது! இதுவும் எல்லா தேசத்து, எல்லா மதத்து மஹான்களின் பாடல்களைப் பார்த்தாலும் தெரிகிறது. ஸூஃபிக்கள், கிறிஸ்துவ மிஸ்டிக்குகள் ஆகியவர்கள் வாக்கிலேயும் திருக்கோவையார் (மாணிக்கவாசகர்) , மீராபாயி போன்றவர்களின் பாட்டுக்களுக்கு அப்படியப்படியே ‘பாரலல்’கள் [இணைகள்] அகப்படுகின்றன! யோகாநுபவம், ஞானாநுபவம், ப்ரேமாநுபவம் எல்லாருக்கும் பொதுவாக ஏற்படுகிறது……

சிவன், ஜீவன் [ஆகியவர்களின்] இச்சை என்றாலும் அந்த சித்தசலனமும் அம்பாள் கார்யந்தான்! உள்ளுக்குள்ளே போன அப்புறந்தான் சிவமாக இருப்பதே தவிர, உள்ளுக்குள்ளே அவன் வாங்கிக் கொள்வதாகச் சொல்வதும் அவள் கார்யந்தான்……

பக்தியிலேயே உசந்த யோகாநுபவங்களும் உண்டாவதைச் சொன்னேன். யோக ஸாதனை, தாந்த்ரிக ஸாதனை என்று போகாமல், ”நம் சக்திக்கு அதெல்லாம் அப்பாற்பட்ட விஷயம். ஏதோ, ‘அம்மா பராசக்தி, நீதான் கதி!’ என்று கிடப்போம்” என்று நாம் அன்போடு நினைத்து பக்தி பண்ணிக் கொண்டிருந்தால் ‘ஏதோ பெரிய ஸாதனை பண்ணுகிறோமாக்கும்!’ என்ற தற்பெருமை ஏற்பட இடமிருக்காது. தழைந்து கிடக்கிறவனை அந்தத் தாயாரே தூக்கி என்னென்ன உச்சி அநுபவமோ எல்லாம் கொடுப்பாள்.

ஸஹஸ்ராரத்திலே [ஸஹஸ்ர தள கமலம் என்று முன்னர் கூறியது] ப்ராண சக்தி சேருகிறபோது அங்கே பூர்ண சந்திர ப்ரகாசம் வீசுகிறது; அம்ருத தாரை கொட்டுகிறது என்று சொன்னால், அந்த அநுபவம் நமக்கு இல்லையா என்று ஏன் அழணும்? ‘பரிணத சரச்சந்த்ர வதநா‘ என்று [ச்லோ. 7-ல்] பார்த்தோமல்லவா? அப்படிப்பட்ட அம்பாளுடைய பூர்ண சந்த்ர முகத்தை ஸுலபமாக அப்படியே நினைத்தபடி இருந்தாலே போதும்; அதிலிருந்து பெருகுகிற கடாக்ஷாம்ருதம், மந்தஸ்மிதாம்ருதம் [புன்னகை யமுதம்] ஆகியவற்றை நினைத்துக் கொண்டிருந்தாலே போதும், நினைத்ததை நிஜமாகக் கொடுத்து, உள்-சந்த்ரன், உள்-தாரை எல்லாமும் ஸித்திக்கப் பண்ணிவிடுவாள்.

சக்தி, ஸாமர்த்யம் உள்ளவர்கள் அப்படி [குண்டலிநீ யோகத்தில்] போய்க்கொள்ளட்டும். நமக்கு எளிசாக ஒரு பக்தி, ‘அம்மா’ என்று ஒரு பிடிவாத நம்பிக்கை போதும். அவர்களுக்குக் கிடைப்பவையெல்லாம் நமக்கும் அவளே கிடைக்கப் பண்ணுவாள். ஒரு ஸ்டேஜுக்கு அப்புறம் நாமும் அந்த வழியில் போயுங்கூட அந்த அநுபவங்களைப் பெறும்படியாகவும் அவள் பண்ணலாம். இன்னொரு பக்கத்திலே கடினமான யோக ஸாதனைகள் பண்ணினவர்களை, ”போதும் இதெல்லாம்!” என்று பேசாமல் கிடக்கும்படியும் பண்ணலாம்.

நாடிகளிலே அம்பாள் அம்ருத ரஸம் பெருக வைப்பதாகச் சொன்ன ச்லோகத்தை எப்படி முடித்திருக்கிறாரென்பதைக் கவனிக்க வேண்டும். ப்ராண சக்தியை சிரஸுக்கு ஏற்றி அங்கே ரஸ தாரையை உண்டாக்குகிறவள், அப்படியே அத்வைதமாக ஜீவனை ஐக்யப்படுத்தி விடுகிறாள் என்று முடிக்காமல், மறுபடி அந்த ப்ராண சக்தி ரூபத்தில் சிரஸிலிருந்து சக்ரம் சக்ரமாக இறங்கி வந்து மூலாதாரத்தில் சக்தியெல்லாம் மங்கிச் சுருட்டிக்கொண்டு தூங்கிப் போகிறாளென்று முடித்திருக்கிறார்….

சுருட்டிக் கொண்டு படுத்திருப்பதிலிருந்துதான் ‘குண்டலிநீ’ என்ற பெயரே வந்தது. ஒரு குண்டலம் எப்படி வளையமாக இருக்கிறதோ, அப்படி ஒரு ஸர்ப்பமானது தூங்கும்போது உடம்பைச் சுருட்டிக்கொண்டுதான் படுக்கும். நாம் கையை காலை நன்றாக நீட்டிக் கொண்டாலே ஹாயாகத் தூங்குவதாக இருக்கிறது. அப்பப்போ கொஞ்சம் புரண்டு, சுருண்டு, கிருண்டு படுத்துக்கொண்டாலும், ”அடிச்சுப் போட்டாப்பல தூக்கம்” என்னும்போது நன்றாக உடம்பை நீட்டிக் கொண்டுதான் கிடப்போம். ஆனால் ஒரு பூனையிலிருந்து ஆனைவரை எதைப் பார்த்தாலும் உடம்பை ஒரு மாதிரி வளைத்துக்கொண்டு முன்னங்காலில் மூஞ்சியை வைத்துக் கொண்டுதான் தூங்குகின்றன. இதற்கு உச்சத்தில் ஒரு ஸர்ப்பம் நித்ரை பண்ணும்போது ஒரே சுருட்டாகச் சுருட்டிக்கொண்டு குண்டலாகாரமாகவே படுக்கும். பராசக்தியின் சக்தியில் ரொம்ப ரொம்ப அல்ப பாகமே நம்மெல்லாரிடமும் வெளிப்பட்டு பாக்கி அத்தனையும் செயல் படாமலிருப்பதால் நம்முடைய மூலாதாரத்தில் அவள் இப்படிச் சுருட்டியடித்துக்கொண்டு தூங்குகிற ஸர்ப்பமாகவே இருப்பதாக வைத்து, குண்டலிநீ என்று சொல்வது. காற்றைக் குடித்துக்கொண்டே பாம்பு உயிர் வாழ்வதாக ஐதிஹ்யம். அதனால் ‘பவநாசி’ என்றே அதற்கு ஒரு பேர். [‘பவனம்’-காற்று; ‘அச்’-உண்பது.] மூச்சுக் காற்றைக் குடித்தே நாம் உடம்பில் ப்ராண சக்தியைத் தக்கவைத்துக் கொள்வதால் அதையும் ஸர்ப்பமாகச் சொல்வது.

அந்த விஷயங்கள் இருக்கட்டும். கிட்டத்தட்ட அத்வைதாநுபவமாக அம்ருதாஸ்வாதம் [அமுதத்தை ருசிப்பது] நடப்பதைச் சொன்னவர், தடதடவென்று ஒரே இறக்காக இறக்கி வெறும் பாமர ஜீவன்களாக நாம் இருக்கிற நிலையில் தூங்கும் ஸர்ப்பமாக அம்பாள் ஆவதைச் சொல்லி முடித்திருக்கிறார். என்ன தாத்பர்யம்? ‘நாம் பண்ணும் பெரிய யோக ஸாதனை’ என்கிற நினைப்பு உள்ள மட்டும் அம்ருதாஸ்வாதம் பண்ணிய யோகிகளையுங்கூட அவள் உருட்டித் தள்ளி விடலாம். ஆகையால் குண்டலிநீ யோகம் என்றே போனாலுங்கூட “நானில்லை; நீ!” என்கிற சரணாகதிதான் முடிவில் பூட்டைத் திறக்கும் சாவி!

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is குண்டலிநீ ரூபத்தில்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸ்ரீசக்ரம் :அதன் சிறப்புக்கள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it