காமனை வெற்றி வீரனாக்கிய கடாக்ஷ சக்தி : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அடுத்த [ஆறாவது] ச்லோகம் முழுக்கவும் மன்மதன் விஷயமாகவே பண்ணியிருக்கிறார். அத்வைதத்திலிருந்து காமத்தால் (இச்சையால்) த்வைதத்தைக் காட்டி அப்புறம் கருணையால் த்வைதத்தை அத்வைதமாக்குவதே அம்பாளின் லீலையில் மைய ஸ்தானமாயிருப்பதால் காமத்துக்கு ரூபகமான காமனுக்கு இங்கே முக்யம் ஜாஸ்தி! அவளுக்கே காமேச்வரி, காமாக்ஷி என்று திவ்ய நாமாக்கள் சொல்கிறோம்.

தநு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்சவிசிகா:

வஸந்த: ஸாமந்தோ மலய-மருத் ஆயோதந ரத: |

ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்

அபாங்காத் தே லப்த்வா ஜகதிதம் அநங்கோ விஜயதே | |

[ (ஹிமகிரிஸுதே) இமயமலையின் மகளே! [மன்மதனுடைய] (தநு:)வில் (பௌஷ்பம்) புஷ்பங்களாலானது. (மௌர்வீ) வில்லின் நாண் (மதுகரமயீ) தேனீக்களாலானது. (விசிகா:) அம்புகள் (பஞ்ச) ஐந்து [தான்]. (ஸாமந்த) [மன்மத மன்னனுக்கு அடங்கித் துணையாகவரும்] சிற்றரசன் (வஸந்த:) இளவேனிற் பருவம். (ஆயோதந ரத:) போர்த்தேர் (மலயமருத்) மலய மாருதமாகிய பொதியத் தென்றல். (ததா அபி) இவ்வாறெல்லாமிருந்தும் (தே) உனது (அபாங்காத்) கடைக்கண்ணிலிருந்து (காம் அபி க்ருபாம்) ஏதொவொரு அருளை (லப்த்வா) அடைந்தே (அனங்க:) உடம்பே இல்லாதவனான மன்மதன் (ஏக:) ஒருவனாகவே (இதம் ஜகத் ஸர்வம்) இவ்வுலகம் முழுவதையும் (விஜயதே) வெற்றி கொள்கிறான்.]

‘அடியோடு வலிவே இல்லாத உபகரணங்களை வைத்துக் கொண்டே மன்மதன் லோகம் பூராவையும் ஜயித்துவிடுகிறான். அந்த சக்தியை அவனுக்குத் தருவது எது என்றால் அம்பாளுடைய கடாக்ஷ லேசந்தான்’ என்ற விஷயம் இந்த ச்லோகத்தில் சொல்கிறார்.

என்ன உபகரணங்கள்? முதலில் ”தநு: பௌஷ்பம்”. அப்படியென்றால் ‘புஷ்பத்தாலான வில்’.

ஜகத்திலிருக்கும் ஜீவ ஸமூஹம் முழுதையும் ஜயிக்க வேண்டும் – அதாவது அவர்களைக் காமத்தின் வாய்ப்படுத்த வேண்டும் – என்று யுத்தத்திற்குப் புறப்படுகிறான் மன்மதன், தேரிலேறிக் கொண்டு. கையிலே தநுஸும் பாணமும் எடுத்துக் கொண்டு புறப்படுகிறான். அந்த தநுஸ் என்ன, பாணம் என்ன, கூட்டாளி யார், தேர் என்ன என்று பார்த்தால் சிரிப்பாக வருகிறது! அவை ஒன்றைவிட ஒன்று திராபையாக இருப்பதைப் பார்க்கிறோம்.

முதலில் தநுஸைப் பார்த்தால் அது புஷ்பங்களைக் கோத்துப் பண்ணியதாக இருக்கிறது. தநு: பௌஷ்பம்.

மன்மதனுக்குக் கரும்பு வில் என்று பிரஸித்தம். எல்லாருக்கும் இரும்பு வில் என்றால் இவனுக்குக் கரும்பு வில்! கொஞ்சம் ஜாஸ்தி வளைத்தாலும் ‘மளுக்’கென்று முறிந்துவிடும். ஆனால் ஆசார்யாளோ அதை விடவும் அதி பூஞ்சையான புஷ்பவில் என்கிறார். இரும்பளவு இல்லா விட்டாலும் கரும்பும் கனமானதுதான். அதனால் ஒரு போடு மண்டையில் போட்டால் போதும்! ‘அதற்காக ஆசார்யாள் இப்படிப் புஷ்பம் என்று மாற்றலாமா? ஒரு தேவதைக்கு கண்ணு, மூக்கு முதலான அங்கங்களைப் போலவே ஆயுதங்களும் part and parcel [அங்கமாகவே உள்ளடங்கியவை] ஆச்சே! ‘‘ஸாங்காயை ஸாயுதாயை” [அங்கங்களோடு, ஆயுதங்களோடு] என்று சேர்த்தே பூஜையும் நமஸ்காரமும் ஹோமமும் பண்ணுவது வழக்கமாச்சே! பின்னே ஏன் ஆயுதத்தை மாற்றிச் சொல்லியிருக்கிறார்? ‘பௌஷ்பம்’ என்பதன் ஸரியான ரூபம் ‘பௌண்ட்ரம்’ என்று இருக்குமோ? ‘புண்ட்ர இக்ஷு’ என்கிற நாமக் கரும்புதான் காமனுக்கும் காமாக்ஷிக்கும் தநுஸு. ‘ச்யாமாளா தண்டக’த்திலேயே அப்படித்தான் வருகிறது: புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்ப பாணஹஸ்தே. புண்ட்ரேக்ஷுவைத்தான் ‘பௌண்ட்ரம்’ என்று சொல்லி, அது தப்பாக ‘பௌஷ்பம்’ என்று வந்து விட்டதோ?’ – இப்படியெல்லாம் யோஜித்துக் கொண்டிருந்தேன். அப்புறம் ‘அமர’த்தில் என்ன சொல்லியிருக்கிறதென்று ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தேன். பார்த்தால் பௌஷ்பமே ஸரிதான்; ஆசார்யாள் மாற்றவில்லை; அப்படி நினைத்ததே அபசாரம்; அல்லது அவர் ‘பௌண்ட்ரம்’ என்று ஸரியாகச் சொல்லியும் ‘எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்கிறபடி யாரோ சுவடி எழுதியவர்தான் தப்புப் பண்ணி விட்டார் என்று நினைத்ததும் தப்பு – என்று தெரிந்தது. மன்மதனின் பல பேர்களை ‘அமரம்’ அடுக்கிக் கொண்டு போகும்போது ”புஷ்பதந்வா ரதிபதிர் – மகரத்வஜ ஆத்மபூ:” என்று வருகிறது. ‘புஷ்ப தந்வா’ தான் ஆசார்யாள் சொல்லும் ‘தநு: பௌஷ்ப’த்தை வைத்துக் கொண்டிருப்பவன். ‘அமர’த்தில் இக்ஷு [கரும்பு] பிரஸ்தாபமேயில்லை.

ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்கு இரண்டு மயில் சொல்வார்கள். குழந்தை நாளிலிருந்தே அவருக்கு மயில் வாஹனம் உண்டு. அப்புறம் சூரஸம்ஹாரம் பண்ணி அந்த சூரனையும் மயிலாக்கி வாஹனமாகக் கொண்டார். இப்படி இரண்டு மயில் அவருக்கு இருக்கின்றன. ஒருசில க்ஷேத்ரங்களில் அவருக்கு இடது பக்கத்தில் மயிலின் சிரஸும் வலது பக்கத்தில் தோகை வாலுமாக இருப்பதைப் பார்க்கிறோம். அதுதான் சூரனாயிருந்து மயிலான வாஹனம். சூர்மயில் என்றே சொல்வார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் ஸ்வாமிக்கு வலது பக்கம் மயில் சிரஸும் இடது பக்கம் தோகை வாலுமாகவே இருக்கும். அது ஆதியிலிருந்தே அவருக்கென்று ஏற்பட்ட தெய்விகமான மயில் என்பார்கள்1. இந்த மாதிரி மன்மதனுக்கும் இரண்டு தநுஸ் – இக்ஷுவால் ஆனது ஒன்று புஷ்பத்தால் ஆனது ஒன்று என்று தோன்றுகிறது.

அவனுடைய அம்பும் புஷ்பத்தாலானதுதான். ”குஸுமேஷு:”என்பது ‘அமர’த்திலுள்ள அவன் பெயர்களில் ஒன்று. ‘குஸுமம்’: புஷ்பம். ‘இஷு’: அம்பு. ‘குஸுமேஷு:’ என்றால் புஷ்ப பாணக்காரன். நம்முடைய ச்லோகத்தில் ‘பஞ்ச விசிகா:‘ என்று வருகிறது. ஐந்து பாணங்கள் என்று அர்த்தம். எத்தனை பாணம் என்று கணக்குக் கொடுத்திருக்கிறதே ஒழிய எதனால் ஆனது என்று சொல்லவில்லை. ஸாதாரணமாக வீரர்கள் அம்பறாத்தூணியில் ஏகப்பட்ட பாணங்கள் வைத்திருப்பார்கள். இவனுக்கோ ஐந்தே பாணங்கள்தான்! அவையும் மெல்லிசான பூக்கள்! அந்த ஐந்து பூக்கள் அரவிந்தம் (தாமரை) , அசோகம், சூதம் (மா) , நவமல்லிகை, நீலோத்பலம் என்பவை என்று ‘அமர’த்தில் இருக்கிறது. ஐந்து பாணங்களை உடையவன் என்ற அர்த்தத்தில் ‘பஞ்சசரன்’ என்றும் மன்மதனுக்கு அதில் ஒரு பேர் சொல்லியிருக்கிறது.

காடின்யமே [கடினத்தன்மையே] இல்லாத புஷ்ப வில். ஐந்தே ஐந்து பாணங்கள்தான். அந்த பாணங்களும், ‘அம்பாகத் துளைத்தன’ என்று உபமானத்தில்கூடச் சொல்கிறோமே, அப்படித் துளைக்கக் கூடியவையா என்று பார்த்தால் நேர் மாறாயிருக்கிறது! ஸ்ருஷ்டியிலேயே ம்ருதுத் தன்மைக்குப் பேர் போன புஷ்பங்களே இவனுக்கு பாணங்கள்! குத்தித் துளைப்பதற்குப் பதில் எவருக்கும் பார்த்த மாத்திரத்தில் எடுத்து நம் அவயவங்களிலேயே ரொம்பவும் நுட்பமாயுள்ள கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் என்று தோன்றச் செய்கிற விசித்ரமான பாணம்!

வில்லில் அம்பைப் பூட்ட நாண் வேண்டுமே, அது என்ன என்று பார்த்தால் வரிசையாக தநுஸின் அடி நுனிகளைக் குறுக்கே சேர்க்கிற வண்டுகள், தேன்வண்டுகள். ”இவை மட்டும் கொஞ்சம் பயமுறுத்துகிறவைதானே? கொட்டினால் வலி தாங்க முடியாதே!” என்றால் இவை மன்மதனின் ‘டார்கெட்’டான [குறியான] ஆஸாமியைக் கொட்டுவதற்காக ஏற்பட்டவையல்ல. டார்கெட் ஆஸாமியிடம் வண்டு போய்விட்டால் மன்மதன் எப்படி நாண் இல்லாமல் பாணத்தை விடமுடியும்? பின்னே இவை எதற்கு இருக்கின்றனவென்றால் கரும்பு வில் — அல்லது புஷ்ப வில் — புஷ்ப பாணம் இவற்றின் ஸுகந்தத்தை ரஸித்துக்கொண்டு ரீங்காரம் செய்து கொண்டிருப்பதற்குத்தான்.

லோகத்திலுள்ள அத்தனை தித்திப்பு பக்ஷணத்திற்கும் அந்தத் தித்திப்பைத் தரும் வெல்லம் அல்லது சர்க்கரைக்கு மூலமான கரும்பாலான பரம மதுர வில் ………. ச்லோகத்தில் புஷ்பவில் என்றிருந்தாலும் கரும்பு வில் என்றுதான் வாயில் வருகிறது. அம்பாள் கையில் அதுதானே இருக்கிறது? காமனுக்கும் காமேச்வரிக்கும் ஒரே தநுஸ் என்பதால் இப்படிச் சொல்வதும் சரிதான். ருசிகளில் மாதுர்யம் மாதிரி உணர்ச்சிகளில் அன்பு என்பது. அன்புக்கு எதிரான த்வேஷத்திற்கு உறைப்பு ருசியை உபமானமாகச் சொல்கிறோம். ”அவர் ரொம்பவும் காரமாகப் பேசினார்” என்றால் த்வேஷமாகப் பேசினாரென்றுதானே அர்த்தம்? அதனால் ஒருத்தரிடம் சண்டைபோட்டு ஜயிக்கப் போகிறோமென்றால் மிளகாயால் ஆயுதம் பண்ணி எடுத்துக் கொண்டு போனால் பொருத்தமாயிருக்கும்! மன்மதனோ நேர்மாறாகக் கரும்பாயுதம் எடுத்துக் கொண்டு போகிறான்!

லோகத்தில் பரம மதுரம் கரும்பு. லோகத்தில் பரம ம்ருது புஷ்பம். ஒரு மரம் இருந்தால் அதன் பட்டை ஒரே கரடு முரடு. கொஞ்சம் தேய்பட்டால் நம் கையில் ரத்தமே வந்துவிடும். சிலதில் முள் வேறே! துளிர் மெல்லிசாக, கோமளமாக இருந்தாலும் அதில் அஹிதமாகக் கொஞ்சம் பிசுக்கும் இருக்கும். முற்றினால் மழமழப்பு எல்லாம் போய்ச் சருகாகிக் குத்துகிறது. பிஞ்சைப் பார்த்தால் சொர சொர, காய் கொஞ்சம் மழ மழவாகவும், பழம் நல்ல மழ மழவாகவும் இருந்தாலும் கைக்குக் கனமாயிருக்கின்றன. காம்பிலிருந்து வரும் பாலின் கசகசப்பு வேறே அஹிதமாக இருக்கிறது. புஷ்பந்தான் பரம சுத்தம், பரம லேசு, பரம ம்ருது, பரம அழகு என்று எல்லாமாகவும் இருக்கிறது. ஒரு மநுஷ்யன் என்ன காட்டாளாயிருந்தாலும் அவனுடைய கண் மட்டும் எப்படி நுட்பமாக, ஒரு தூசி பட்டால்கூடச் சிவக்கிற அளவுக்கு மென்மையாக இருக்கிறதோ, அப்படி முண்டும் முடிச்சுமாக வஜ்ரம் பாய்ந்திருக்கிற ஆல் மாதிரி விருக்ஷத்தில் கூடப் புஷ்பமானது பதர் மாதிரி லேசாக, ம்ருதுவாக இருக்கிறது. அப்படிப்பட்ட புஷ்பத்திலே ஐந்து மன்மதனுக்கு பாணாயுதம் என்றால் வேடிக்கைதானே?

ஐந்து பாணம் எதற்கென்றால் ஐம்புலன்களில் ஒவ்வொன்றையும் இழுக்கத்தான். அரவிந்தம், அசோகம், சூதம், நவமல்லி, நீலோத்பலம் ஆகியவற்றில் எதெது எந்தெந்த இந்திரியத்திற்கு உருவகம் என்றுகூடச் சொல்வதுண்டு. அம்பாள் கையிலுள்ள இதே பஞ்ச பாணங்களை ஸஹஸ்ர நாமத்திலும் பஞ்சேந்திரிய ஸம்பந்தப்படுத்தித் தான் சொல்லியிருக்கிறது, “பஞ்ச தந்மாத்ர ஸாயகா” என்று. தன்மாத்ரை என்பவை பஞ்ச இந்த்ரியங்களால் அநுபவிக்கப்படும் ஐந்து ஸூக்ஷ்ம பூதங்களான சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்கிறவை.

ஐந்து பாணங்கள் ஐம்புலனைக் குறிப்பதென்றால் அந்த பாணத்தைத் தொடுத்துப் பிரயோகிப்பதற்கு ஆதாரமாகவுள்ள தநுஸ் எது? பஞ்சேந்திரியங்களுக்கும் ஆதாரமான மனஸ்தான்! “மநோ ரூபேக்ஷு கோதண்டா” [மனத்தின் உருவமான கரும்புவில்லை உடையவள்] என்று முதலில் சொல்லிவிட்டு அப்புறந்தான் ஸஹஸ்ரநாமம் ”பஞ்ச தந்மாத்ர ஸாயகா” என்கிறது.

ஒவ்வொரு புஷ்பமும் ஒவ்வொரு இந்திரிய ரூபமாக இருப்பது மட்டுமில்லை. எந்த ஒரு புஷ்பத்திலுமே பஞ்ச தன்மாத்ரைகளும் ஸம்பந்தப்பட்டு விடுகின்றன. புஷ்பமிருந்தால் அங்கே வண்டு வந்துவிடும். பஞ்ச தன்மாத்ரைகளில் புஷ்பத்துக்கே நேராக இல்லாத ஒன்றே ஒன்றையும் அது பூர்த்தி பண்ணிவிடுகிறதென்று நான் நினைக்கிற வழக்கம். ஸ்பர்சத்திற்கு ம்ருதுவாகவும், ரூபத்தில் அழகாகவும், ரஸமான தேனைத் தருவதாகவும், நல்ல கந்தம் வீசுவதாகவுமுள்ள புஷ்பம் சப்த ஸெளக்யத்தை மட்டும் தருவதில்லையல்லவா? அந்தக் குறையைத்தான் அதைத் தேடி வரும் வண்டு தன்னுடைய ரீங்கார சப்தத்தால் பூர்த்தி பண்ணுகிறதென்று நான் நினைக்கிற வழக்கம். “அடி! கொல்லு!” என்ற அவசப்தங்களைப் போட்டுக் கொண்டு போகிற சண்டைக்காரனாக இல்லாமல் ரீங்கார ஸங்கீதம் பாடும் வண்டு நாணோடு சண்டைக்குப் போகிறான்!

தநு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயி பஞ்ச விசிகா:” — இப்படி தநுஸா, அதன் நாணா, அம்பா எதுவுமே வழக்கமாக எப்படி இருக்கணுமோ அதற்கு வித்யாஸமாக, உக்ர அம்சமேயில்லாமல், வலுவேயில்லாமல் இருக்கின்றன. ஒரு வேளை … சில சோப்ளாங்கி ராஜாக்கள் அவர்களுக்குக் கப்பம் கட்டிக்கொண்டு, ஆனாலும் நல்ல பலிஷ்டர்களாக உள்ள ஸாமந்தர் என்ற குறுநில மன்னர்களின் பலத்திலேயே தாங்களும் வெற்றிவாகை சூடிக் கொண்டு போவதுண்டு. அப்படி இந்தக் காமராஜாவுக்கு அஸிஸ்டென்டாக யாராவது முரட்டு பலிஷ்டன் இருப்பானோ என்று பார்த்தால், அங்கேயும் ஏமாற்றந்தான்!

வஸந்த: ஸாமந்த:

மன்மதனின் ஸாமந்தன், அஸிஸ்டென்டு, கூட்டாளி யாரென்றால் வஸந்தன் என்பவன். வஸந்த காலமே ஒரு ஆக்ருதி எடுத்துக்கொண்டு ஜனங்களுக்குக் காமத்தைத் தூண்டிவிட்டு மன்மதனுக்கு ஸேவை பண்ண வஸந்தன் என்ற பெயரில் கூட்டாளியாகக் கூட வருவதாகச் சொல்வார்கள். குளிருமில்லாமல், வெயிலுமில்லாமல் பரம ஹிதமாக இருக்கப்பட்ட ‘இளவேனில்’ என்பதன் மூர்த்தியாக இருப்பவன் அவன். அவன் வந்துவிட்டால் இலையுதிர்ந்த விருக்ஷங்களெல்லாம் பச்சென்று ட்ரெஸ் போட்டுக்கொண்டு நிழல் கொடுக்க ஆரம்பித்துவிடும். ஏகமாகப் பூக்கவும் ஆரம்பித்து விடும். ‘புஷ்ப ஸமயம்’ என்றே வஸந்த ரிதுவுக்கு ஒரு பேர். வெயிலும் உக்ரமில்லாமல், குளிரும் கடுமையாயில்லாமல் கண்ணுக்கும் மூக்குக்கும் விருந்தாக இருக்கிற ரிது அது. இந்த குணங்களோடு ஒருவன் சண்டைக்காரனுக்குக் கூட்டாளியாகப் போனால் ரொம்ப வேடிக்கைதானே? ஆக்நேயாஸ்த்ரம், அல்லது உடம்பெல்லாம் ஜில்லிட்டு மரத்துப் போகும்படியாகச் செய்கிற ஸ்தம்பனாஸ்த்ரம் போடுவது சத்ருக்களின் வழக்கம். இங்கேயோ பரமஸெளக்யமான சீதோஷ்ணத்தைப் பரப்பும் வஸந்தன் சத்ரு பக்ஷத்தில் கூடப் போகிறான்!

மன்மதன் ஏறிப் போகிற ரதம் என்னவென்று பார்த்தால் இன்னும் சிரிப்பு வருகிறது!

மலய மருத் ஆயோதந ரத:

‘ஆயோதன’ — யுத்தத்திற்கான; ‘ரத:’ — ரதம்; ‘மலய மருத்’ — மலய பர்வதம் என்கிற பொதிய மலையிலிருந்து வீசுகிற காற்று. அதாவது சந்தன வாஸனையோடு குளுகுளு வென்று வீசுகிற தென்றல். விஷ gas-களைப் பரப்பிக் கொண்டு வருவதற்குப் பதில் இந்த சண்டைக்காரன் ரொம்பவும் ரம்யமான மந்த மாருதத்தையே ரதமாக்கிப் பரப்பிக்கொண்டு போகிறான். ‘மந்தம்’ என்பதால் அதுவும் உக்ரமில்லை, வலிவானதில்லை என்று தெரிகிறது2.

ஆயுதங்கள் கண்ணுக்காவது வில்லு, அம்பு என்ற ஸ்தானத்தில் தெரிந்தன. ஸகாவான வஸந்த ரிதுவும், ஏறி வருகிற தென்றல் தேரும் கண்ணுக்கே தெரியவில்லை! மொட்டை மொட்டையாய் நிற்கிற மரங்கள் குப்பென்று துளிர்ப்பதையும், மல்லியும் மாம்பூவும் மணக்க ஆரம்பிப்பதையும் பார்த்துத்தான் வஸந்தன் வந்ததைப் புரிந்து கொள்ள வேண்டும். ஹிதமாக நம் மேலே படுவதைக் கொண்டுதான் மந்த மாருதத் தேர் வந்திருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலே முட்டி மோதி அரைத்துக் கொண்டு போகிற ‘டாங்க்’குக்குப் பதில் இப்படி ஒரு சத்ருவாஹனம்!

எல்லாவற்றையும்விடப் பெரிய விசித்ரம், – அந்த யுத்த வீரன் இருக்கிறானே, மன்மதன், அவன் எப்படி இருக்கிறான்?

அநங்க:

அவன் அனங்கனாக இருக்கிறான். மதனன், மன்மதன், மாரன், கந்தர்பன், காமன் என்றிப்படி அவனுக்கு அநேகம் பேர் இருந்தாலும் ஆசார்யாள் அர்த்த புஷ்டியோடுதான் இந்த இடத்தில் அனங்கன் என்ற பேரைப் பொறுக்கி எடுத்துப் போட்டிருக்கிறார்.

அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்? ‘அனங்கன்’ என்றால் ‘அன் + அங்கன்’, அதாவது அங்கமில்லாதவன். ரூபமே இல்லாதவன் மன்மதன். பரமேச்வரன் அவனை பஸ்மீகரம் பண்ணியதற்கப்புறம் அம்பாள் அவனுக்கு மறுபடி ஜீவன் கொடுத்தாலும் ரூபம் கொடுக்கவில்லை. அகத்துக்காரர் பண்ணியதை அப்படியே மாற்றிப் பண்ணினதாக இருக்க வேண்டாமென்று அவனுடைய ஜீவனை மாத்திரம் உயிர்பித்துக் கொடுத்து விட்டு உருவத்தை மறுபடி ஸ்ருஷ்டித்துக் கொடுக்காமல் நிறுத்திக் கொண்டாள். அவனுடைய பத்னியான ரதியிடம் பரிதாபத்தினால் அவளுக்கு மட்டும் அவன் ரூபத்தோடு தெரியும்படி அநுக்ரஹித்தாள். ரூபமில்லாமலே லைட், ஸவுன்ட் முதலிய force-கள் — காற்றுகூட — இருப்பது போல அவனையும் ஒரு force-ஆக வைத்தாள்.

யுத்தவீரன் என்றால் நல்ல புஷ்டியாக, கரணை கரணையாகக் கைகாலும், வாட்டசாட்டமான உடம்பாகவும் இருப்பான். மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு, பார்த்தாலே பயப்படும்படி இருப்பான். நம் கதையில் பார்த்தால் அப்படியெல்லாம் இல்லாதது மட்டுமில்லை. ஆஜாநுபாஹுவாக இல்லாவிட்டாலும் சோனியாகக்கூட ‘மன்மதன்’ என்று காட்டவே ஒரு உருவமில்லாமலிருக்கிறான்! ‘உருவிலி’ என்றே சொல்லப்படுபவனாக இருக்கிறான்!

வஸந்தனுக்கு ரூபமில்லையென்றாலும் ‘நேச்ச’ரின் செழுமையிலிருந்து guess பண்ணிக் கொள்ளலாம். மலய மாருதத் தேரையும் மேலே படும் தென்றலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இதையெல்லாம் அங்கமாகச் சேர்த்துக் கொண்டு மூலமான அங்கியாக இருக்கிறானே, அவனைத் தான் ஒரு விதத்திலும் guess-ம் பண்ண முடியாமல் முழு அனங்களாக இருக்கிறான். தெரிந்து கொள்ள முடியாமலே உள்ளே புகுந்துகொண்டு ஆட்டுவிக்கிற அதிஸூக்ஷ்ம force!

எத்தனை வேடிக்கை? சரீரமே இல்லாமலே ஒருத்தன் சக்தியே இல்லாத உபகரணங்களைக் கொண்டே ஸர்வ லோகத்தையும் ஜயிக்கிறானே!

திரிபுர ஸம்ஹார காலத்தில் பரமேச்வரனுக்கு ரொம்ப பலமான, சக்தி வாய்ந்த மேரு, தநுஸ், வாஸுகி நாண், ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவே அம்பு, ஸூர்ய சந்திரர்கள் ரத சக்ரம், பூமி தேர்த்தட்டு, ஸாரதியாக ப்ரம்மா என்று ஜமா சேர்ந்தது. அப்படியிருந்தும் அதொன்றையும் ப்ரயோஜனப்படுத்திக் கொள்ளாமலே அவர் ஒரு சிரிப்புச் சிரித்தார். அவ்வளவுதான்! கையை காலைத் தூக்கி குஸ்தி, மல்லு போடவில்லை. சும்மா சிரித்தார். ‘பராசக்தியை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும் எனக்கா ஸஹாயம் தேவை என்று இதுகளெல்லாம் வந்திருக்கின்றன?’ என்று நினைத்துச் சிரித்துக் கொண்டார். உடனேயே த்ரிபுராஸுரர்கள் பஸ்மமாகி விட்டார்கள்!

சக்தி வாய்ந்த உபகரணங்கள் இருந்தும் அவற்றை அவர் ப்ரயோஜனம் செய்து கொள்ளாமலே ஜயித்தார். சக்தியே இல்லாத உபகரணங்களை வைத்துக்கொண்டு மன்மதன் ஜயிக்கிறான். இரண்டிற்கும் காரணம் ஒன்றே தான்! ஒரே அம்பாள்தான்! ஸ்வாமிக்கு உள்ளேயே அவள் பராசக்தியாக இருந்துகொண்டு [வெற்றியை] ஸாதித்துக் கொடுத்தாள். இங்கே மன்மதனுக்கு அவள் தன் சக்தியில் லவலேசம் கடாக்ஷத்தால் அநுக்ரஹித்தே ஜகத் முழுவதிலும் அவனை ஜயசாலியாக்கியிருக்கிறாள்.

ஒரே திராபையான உபகரணங்களை வைத்துக் கொண்டும், அவனே உடம்பில்லாத அனங்கனாக இருந்த போதிலும், “ததாபி” — இப்படியெல்லாம் இருந்த போதிலும், “ஏக:” — தான் ஒருவன் மாத்திரமாக இருந்து கொண்டே — பேருக்கு வஸந்தன் என்று ஒரு கூட்டாளி இருந்தாலும் வேறே ஸேனை, ஆனை, குதிரை எதுவுமில்லாமல், மன்மதன் ஒருவன் மாத்திரமாக இருந்து கொண்டே, “காமபி க்ருபாம்‘ ‘ — என்னவென்றே சொல்லத் தெரியாத உன் க்ருபையில் ஏதோ கொஞ்சத்தை …… ”உன்” என்பது அம்பாளை; “ஹிமகிரிஸுதே!” என்று கூப்பிட்டு, ”உன்னுடைய க்ருபையில் ஏதோ கொஞ்சத்தை” என்கிறார். அந்தக் க்ருபையை அவளுடைய கடாக்ஷத்தின் மூலம் மன்மதன் பெறுவதை “தே அபாங்காத் லப்த்வா” என்கிறார். “அபாங்காத் தே” என்று ச்லோகத்தில் வருவதை, “தே” – ‘உன்னுடைய’, “அபாங்காத்” – ‘கடாக்ஷத்தால்’ என்று அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். அம்பாளுடைய கடாக்ஷத்தால் ஏதோ கொஞ்சம் க்ருபை பெற்றே மன்மதன் தனியொருவனாக, த்ராபை உபகரணங்களை வைத்துக் கொண்டும் “ஜகதிதம்” — “இதம் ஜகத்” – இந்த ஜகத்தை, “ஸர்வம்” — ஜகத்து பூராவையும், “விஜயதே” — ஜயித்து விடுகிறான்.

இப்படி ஸ்ருஷ்க்கு அநுக்ரஹம் பண்ணுவது ஸப்ரபஞ்சத்தைச் சேர்ந்த மாயா கார்யம். இதற்கு கடாக்ஷலேசம் போதும். த்ரிபுர ஸம்ஹாரம் என்பது ஸ்தூல-ஸூக்ஷ்ம-காரண சரீரங்களை நிராகரணம் பண்ணி [நிராகரித்து] மஹா காரணமான ப்ரஹ்மமாக நிற்பது. அது நிஷ்ப்ரபஞ்சத்தில் சேர்க்கும் கார்யம். அதற்கு அவளே உள்ளே பூர்ணசக்தியாக இருந்து நடத்திக் கொடுத்தால்தான் முடியும். த்ரிபுர தஹனம் பண்ணியவர் இந்தக் காமனையுமே தஹனம் பண்ணினாரென்றால் அதற்குக் காரணம் அவரிடம் இருந்த பரிபூர்ண சக்தி விலாஸத்திடம் இவன் பெற்றிருந்த துளிப்போர அநுக்ரஹ சக்தி எடுபடாமல் அமுங்கிப் போனதுதான்.

காமன் ஜயித்ததை, அவனை அம்பாள் ஜயிக்க வைத்ததை, சொல்லும்போது அதோடு விட்டுவிடக்கூடாது. அவனை நாம் ஜயித்தாக வேண்டும்; காம ஜயம் பண்ணியாக வேண்டும். ஈச்வரன் விஷயத்தில் அதற்கும் அம்பாளே உள்ளே நின்று சக்தி கொடுத்திருக்கிறாள் என்பதையும் இங்கே நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு வேண்டியது அந்த அநுக்ரஹந்தான். ஆக்கின சக்திதான் அழிக்கவும் முடியும் என்பதற்காகத்தான் இங்கே ஆசார்யாள் ஆக்கின சக்தியைச் சொல்வது.

அவனுக்கு சக்தியே இல்லாத உபகரணங்களை அவள் தந்திருப்பதும் உயர்ந்த தாத்பர்யத்தின் மேலேதான். அவற்றை வைத்துக்கொண்டும் ஜயித்தால்தான் அவனுக்கு அம்பாள் பிச்சையால்தான் ஜயிக்கிறோம் என்ற அடக்கம் இருக்கும். இல்லாவிட்டால் அஹம்பாவம் வந்துவிடும் என்ற கருணையாலேயே இந்த மாதிரி ஸாமக்ரிகளைக் கொடுத்தது.

அனங்கனான அவன் ஒரு காலத்தில் ஸர்வாங்க ஸுந்தரமான சரீரம் பெற்றிருந்தவன்தான். “மன்மதன் மாதிரி” என்று இன்றைக்கும் வசனம் இருப்பதற்குக் காரணம் அன்றைக்கு அவன் அழகிலே முதலான சரீரம் பெற்றிருந்ததுதான். அந்த அஹம்பாவம் அவனுக்கு அப்போது இருந்தது. அப்போது தேவர்கள் சூரபத்மாஸுரனிடம் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஈச்வரனுக்கு ஒரு புத்ரன் உண்டானால்தான் சூரனைக் கொல்ல முடியுமென்பதால், அப்போது தக்ஷிணாமூர்த்தியாகத் தபஸ்விக் கோலத்திலிருந்த ஈச்வரனுக்குப் பர்வத ராஜகுமாரியாக அவதரித்திருந்த அம்பாளிடம் ப்ரேமையைத் தோற்றுவிக்க வேண்டுமென்று மன்மதனிடம் சொல்லி அனுப்பி வைத்தார்கள். நம்முடைய ச்லோகத்தில் “ஹிமகிரிஸுதே!” என்று வருகிறது. பர்வத ராஜகுமாரியைத்தான் அப்படிச் சொல்வது. அம்பாள் எடுத்துக் கொண்ட அநேக அவதாரங்களில் இதன்போதுதான் ஈச்வரன் முதலில் மன்மதனை தஹனம் பண்ணிவிட்டு, அப்புறம் மனஸ் மாறி அவளிடம் ப்ரேமை கொண்டு கல்யாணம் செய்துகொண்டதால் அந்தப் பெயரை இங்கே போட்டதில் தனிப் பொருத்தம் இருக்கிறது. அது பின்கதை. முதலில் தேவர்கள் ஸ்வாமியிடம் ச்ருங்கார எண்ணத்தை உண்டாக்கச் சொல்லி மன்மதனை அனுப்பினார்கள். ‘ஓ! நாம் பரமேச்வரன் மனஸையே கலக்கி ஜயிக்கக்கூடிய மஹாசக்திமானா?’ என்ற அஹம்பாவமும் அவனுக்குச் சேர்ந்தது. ‘மன்மதன்’ என்றால் ‘மனஸைக் கலக்குகிறவன்’ என்றுதான் அர்த்தம். கடைவதை ‘மதனம்’ என்பது. ‘க்ஷீராப்தி மதனம்’ என்று [பாற்கடலைச் கடைந்ததைச்] சொல்கிறோமல்லவா? மனஸை மதனம் பண்ணுபவன் மன்மதன். கலக்கமுடியாத வைராக்ய பர்வதமாயிருந்த ஸ்வாமியைக் கலக்க முடியும் என்ற அஹம்பாவத்துடன் போனான். அப்புறம் என்ன ஆச்சு? அவர் இவனை இருந்த இடம் தெரியாமல் பொசுக்கிவிட்டார். பிற்பாடு அம்பாள் புத்துயிர் கொடுத்தாள். ஆனால் இப்போது தன்னால் எதுவும் முடியும் என்ற அஹம்பாவம் அவனுக்குப் போய் விட்டிருந்தது. அப்புறம் ஸ்வாமியையும் அவன் ஜயித்து அதுதான் முக்யமாகக் காமாக்ஷி விஷயமான “காமாக்ஷி விலாஸம்” என்ற புராணமாக ஆனாலும் அது மன்மத புராணமாயில்லாமல் காமாக்ஷிபுராணமாக இருப்பதாலேயே அந்த ஜயத்திற்கான சக்தி முழுவதும் அவள் தந்ததாலேயே என்று தெரிந்து கொள்ளலாம்3. இதை ரொம்பவும் அடக்கத்துடன் மன்மதனும் தெரிந்து கொண்டிருந்ததாகவே அந்தப் புராணக் கதை காட்டுகிறது. “என் சக்தியால் ஜயிக்கப் போகிறேனாக்கும்” என்று இப்போது அவன் ஸ்வாமியிடம் போகாமல், “என் தாயாரின் அநுக்ரஹ சக்தி எனக்கும் ஜயம் வாங்கித்தரப் போகிறது!” என்ற ‘ஸ்பிரிட்’டிலேயே போய், அப்படியே ஜயித்தான். அதாவது அவன் சிவநேத்ராக்னியில் பஸ்மமானபோதே அவனுக்கு ஸொந்த சக்தியில் இருந்த அஹம்பாவமும் பஸ்மமாகிவிட்டது! தன்னுடைய ரூப ஸம்பத்தைப் பற்றி அவனுக்கிருந்த அஹம்பாவமும் போக வேண்டுமென்றுதான், மறுபடி அம்பாள் அவனை உயிர்ப்பித்தபோது உயிர்ப்பிக்க மட்டும் செய்தாளேயொழிய உடம்பைக் கொடுக்கவில்லை. [சிரித்து] உயிர்ப்பித்தாளேயொழிய ‘உடற்பிக்க’வில்லை! உருவிலியாகப் பண்ணிவிட்டாள்.

‘வல்லவனுக்குப புல்லும் ஆயுதம்’ என்று பழமொழி. தர்ப்பையும் புல் தினுஸைச் சேர்ந்ததே. தூய புல்லானதால் தூப்புல் என்று அதற்குப் பேர். காஞ்சீபுரத்தில் தர்ப்பை நிறைய மண்டி வளர்ந்த ஒரு இடத்திற்குத் தூப்புல் என்றே பெயர். வேதாந்த தேசிகர் அங்கேதான் பிறந்தார். காகாஸுரனை வதம் பண்ணுவதற்காக ராமர் ஒரு தர்ப்பைப் புல்லைத்தான் அஸ்திரமாகப் போட்டார். அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவன் அவர் காலிலே வந்து விழுந்தான். அபயந் தந்து “பிழைத்துப் போ!” என்று அனுப்பி வைத்தார். அங்கே வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று நிரூபித்துக் காட்டினார். அவர் பல தினுஸில் வல்லவரானாலும் இங்கே மந்திரத்தில் வல்லவராக இருந்து மந்த்ர சக்தியாலேயே புல்லை ஆயுதமாக்கினார். ஸாக்ஷாத் பராசக்தியின் கடாக்ஷ சக்தியால் மன்மதனுக்குப் பூவும் ஆயுதமாயிருக்கிறது.

பஸ்மமான அவனுக்குப் புனர்ஜீவனம் தந்ததே அந்தக் கடாக்ஷந்தான். அக்னி நேத்ரத்தால் பதி பஸ்மமாக்கியிருந்தாரே, அந்த சாம்பலை அவள் அம்ருத நேத்ரத்தால் பார்த்தாள். உடனே மன்மதனுக்கு உயிர் வந்து விட்டது. ‘காமாக்ஷி’ என்ற பெயருக்கு ஒரு அர்த்தமே தன்னுடைய அக்ஷத்தால், கடாக்ஷத்தால், காமனை உண்டு பண்ணியவள் என்பதுதான்.


1 மூன்றாவதாக இந்திரன் ஸுப்ரஹ்மண்யரை மயிலாகித் தாங்கியதாகவும் சொல்வதுண்டு. இவ்விதமான மயில் நம்மை நோக்கி நிற்க, ஸ்வாமியும் அதன் மீது நம்மை நோக்கி வீற்றிருப்பார்.

2 மூலத்தில் மந்தமாருதம் என்றில்லாவிட்டாலும் மலயமாருதத்தை அப்படிக் குறிப்பதும் பொது வழக்கு.

3 இப்புராணக் கதையை “தெய்வத்தின் குரல்” முதற் பகுதியில் ‘காமாக்ஷியின் சரிதை‘ என்ற உரையில் ஓரளவும், தொகுப்பாசிரியரின் “காமாக்ஷி, கடாக்ஷி!” நூலில் விரிவாகவும் காணலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஸ்தோத்திர மூர்த்தியைக் குறிப்பாலுணர்த்தல்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  சிவனைக் காமன் வென்றதைச் சொல்லாதது
Next