Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கையால் கொடுக்காத வர, அபயம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அடுத்த ச்லோகத்திலும் பாத மஹிமையையே ஸ்தோத்ரிக்கிறார். ஆனால் அதை முதலிலேயே அவிழ்த்து விடாமல் ஸஸ்பென்ஸ் வைத்துப் பண்ணியிருக்கிறார்.

த்வதந்ய: பாணிப்யாம் அபயவரதோ தைவதகண:

த்வமேகா நைவாஸி ப்ரகடித வராபீத்யபிநயா |

பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சா ஸமதிகம்

சரண்யே லோகாநாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ | |

[ (லோகானாம் சரண்யே) அனைத்துலகங்களுக்கும் புகலிடமே! (த்வத் அன்ய:) உன்னைத் தவிர ஏனைய (தைவத கண:) தெய்வங்களின் கூட்டம் (பாணிப்யாம்) கரங்களால் (அபய வரத:) அபயமும் வரமும் தருவது. (த்வம் ஏகா) நீ ஒருத்தியே (ப்ரகடித வர அபீதி அபிநயா) அபிநயத்தால் [கர முத்திரையால்] வர-அபயத்தை ப்ரகடனம் செய்பவளாக (ந ஏவ அஸி) இல்லவே இல்லை. [ஏனெனில்] (பயாத் த்ராதும்) பயத்திலிருந்து காக்கவும் (வாஞ்சா ஸமதிகம்) [வரத்தால் பெற] விரும்புவதற்கும் கூடுதலாகவே (பலம் தாதும் அபிச) பலனை வழங்குவதற்குங்கூட (தவ) உனது (சரணௌ ஏவ) பாதங்களே (நிபுணௌ ஹி) திறம் பெற்றவையன்றோ?]

”உன்னைத் தவிர மற்ற எல்லா ஸ்வாமிகளும் கைகளில் அபய வரத முத்ரைகளோடு இருக்கிறார்கள். அதாவது, பக்தர்களுடைய பயத்தைப் போக்குவதாகவும், அவர்கள் வேண்டுகிற வரத்தைத் தருகிறதாகவும் ஹஸ்த முத்திரை காட்டுகிறார்கள். நீ ஒருத்திதான் ஒருபோதும் அந்த மாதிரி வராபயங்களை [வர அபயங்களை] அபிநயித்துக் காட்டி ப்ரகடனம் பண்ணாமலிருக்கிறாய்” என்று ச்லோகத்தின் முதல் பாதிக்கு அர்த்தம்.

”என்ன இப்படிச் சொல்கிறாரே! அப்படியானால் அம்பாள் அபயம் தரமாட்டாளா? அபயாம்பிகை என்ற பேரோடு மாயவரத்தில் இருப்பவளாச்சே! (‘அவயம்’ ‘அவயம்’ என்று அங்கே பெண்டுகளுக்குப் பேர் வைப்பது ‘அபயம்’ தான்!) வர ப்ரதாயினி என்றும் அவளை விசேஷித்துச் சொல்வதுண்டே!”

வராபயம் அம்பாள் தர மாட்டாளென்று ஆசார்யாள் சொல்லவில்லை. மற்ற ஸ்வாமிகள் மாதிரி ஹஸ்தத்தினால் தரமாட்டாளென்றுதான் சொல்கிறார்.

”அப்படீன்னா?”

அப்படி என்றால் அவள் பாதங்களினாலேயே வராபயம் தருகிறாளென்று அர்த்தம். அதைத்தான் பின் பாதியில் சொல்கிறார். ”தவ ஹி சரணௌ ஏவ நிபுணௌ”: உன் பாதங்களே அந்த ஸாமர்த்தியம் – வராபயம் தருகிற ஸாமர்த்தியம் – பெற்றவையாக இருக்கின்றன; அதிலே நிபுர்ணர்களாக, ‘ஸ்பெஷலிஸ்ட்’களாக இருக்கின்றன!

தேவலோக விருக்ஷங்கள் கையான கிளையால் பண்ணுவதை அம்பாள் காலாலேயே பண்ணுகிறாள் என்று பின்னாடி ச்லோகத்தில் வருவதை முன்னாடி சொன்னேனே, அதே அபிப்ராயம்! ”பக்தர்களை பயத்திலிருந்து ரக்ஷிக்கவும் (”பயாத் த்ராதும்”), அவர்கள் கேட்கிற வரங்களை மட்டுமில்லாமல் அதற்கும் ஜாஸ்தியாக வாரி வழங்கவும் (”பலமபி ச வாஞ்சா ஸமதிகம் தாதும்”) உன் சரணங்களே நைபுண்யம் [விசேஷத் திறமை] பெற்றிருக்கின்றன” என்கிறார்.

ஹஸ்தத்தால் செய்வது ஒருவர் மெனக்கிட்டு, உழைத்து, கிழைத்துச் செய்யும் கார்யம். வேலைக்குக் ‘கார்யம்’ என்று பேர் இருப்பதே ‘கர’த்தை வைத்துத்தான். அப்படி மற்ற ஸ்வாமிகள் மெனக்கிட்டு, ஸ்ட்ரெய்ன் பண்ணிக்கொண்டு ஹஸ்த முத்ரை காட்டித்தான் வராபயங்களை அளிக்க முடிகிறது. நீயோ ஸர்வசக்தை. லோசாக ஸங்கல்பித்தே எதையும் பண்ணிவிடுவாய். லோகத்தின் ஸ்ருஷ்ட்யாதி [படைப்பு முதலான] பஞ்ச க்ருத்யங்களையுங்கூட க்ஷணகாலப் புருவ நெரிப்பினாலேயே அம்பாள் பண்ணுவித்துவிடுகிறாளென்று பின்னாடி1 சொல்கிறார்: ”க்ஷண-சலிதயோ: ப்ரூ-லதிகயோ:” – ‘கொடி மாதிரியுள்ள புருவத்தை க்ஷணம் நெரித்தே’ என்று அர்த்தம். அப்பேர்ப்பட்டவள் அபய வர ப்ரதானத்தை கைக் கார்யமாக முயற்சி பண்ணிச் செய்ய வேண்டியிருக்கவில்லை! அவள் பாட்டுக்கு இருந்தாலே போதும். அவள் எப்படி இருக்கிறாள்? என்ன ஸ்வரூபம்?

”லோகாநாம் சரண்யே!”

என்கிறார். உலகமெல்லாம் அடைக்கலம் புகுகிற இடமாக, புகலிடமாக இருக்கிறாள். அதனால் – லோக ஜனங்கள் ”ச(sa)ரணம்!” என்று வந்து அவளுடைய ச(cha)ரணங்களில் தானே விழுகிறார்கள்? அவள் பாட்டுக்கு ஸ்வாபாவிகமாக இருக்கிறபடி சரணாலயமாக இருந்து கொண்டிருக்கிற போது அவளுடைய அந்தச் சரணங்களே சரண் புகுந்தவர்களுக்கு வராபயம் வழங்கிவிடுகின்றன. ஒரு கார்யமாக இல்லாமல், ஒரு புஷ்பம் வாஸனை வீசுகிற மாதிரி!

பயம் போகவேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்கும் போது கேட்டபடி அபயந்தான் தரமுடியும்; அதற்கு மேல் ஒன்று தருவதற்கில்லை. ஆனால் இது வேண்டும், அது வேண்டும் என்று ஏதாவது வரம் கேட்டால் வேண்டியதற்கும் ஜாஸ்தியாகத் தர இடமுண்டு. L.I.G. ஃப்ளாட் கேட்டால் H.I.G. தர இடமுண்டு. அந்த மாதிரி ”வாஞ்சா ஸமதிக”மாக – விரும்பியதற்கும் மேலாக – அம்பாள் பாதங்களே கொடுத்துவிடுகின்றன.

ஒரு கேள்வி தோன்றலாம். ”அநேக வரங்கள் கொடுப்பதில் ஒன்றாகவே அபயத்தையும், அதாவது பயமில்லாமலிருக்கிற நிலையையும் கொடுக்கலாந்தானே? இது வேணும், அது வேணும் என்று அநேகம் கேட்கிறாற் போல ‘பயமில்லாமல் இருக்கணும்’ என்பதையும் ஒரு வரமாகக் கேட்டால் ஸ்வாமி கொடுத்துவிட்டுப் போகிறார். ஆகையால் வரத்திலிருந்து தனியாகப் பிரித்து அபயம் என்று வைப்பானேன்?” என்று தோன்றலாம்.

அபயம் என்பது கொடுத்து வாங்கிக் கொள்ளும் ஒரு சரக்கு இல்லை. அத்வைதத்திற்கே அது இன்னொரு பெயர். ”த்வைதம் இருந்தால்தான் பயம்” என்று உபநிஷத்து சொல்கிறது2. ஒன்றேதான் இருப்பது என்றால் அப்போது எதனிடமிருந்து பயம் வரமுடியும்? இரண்டாம் வஸ்து இருந்தாலே அதன் நிமித்தமாக பயமும் உண்டாகிறது. ”பிரம்த்தில் ஒருவன் கிஞ்சித்தேனும் பேதத்தை நினைத்து விட்டாலும் பயம் உண்டாகிறது. பெரிய வித்வானுங்கூட பிரம்மத்தை இப்படி வேறே வஸ்துவாக நினைத்து விட்டால் அதனிடமே பயப்பட ஆரம்பித்துவிடுகிறான்!” என்று தைத்திரீயத்தில் இருக்கிறது3. ஸகுணமாக ஈச்வரன் என்று நமக்கு வேறாக பிரம்மத்தை நினைக்கிறபோது ”பயபக்தி” என்றே சொல்லும்படியான பாவந்தானே ஏற்படுகிறது? ‘God-fearing’ என்பதையே மநுஷ்யனின் உசந்த லக்ஷணமாக அவர்களும் [மேல் நாட்டினரும்] சொல்கிறார்கள். அந்த பயம் எப்போது போகிறதென்றால் அந்த ஈச்வரனுக்கு வேறாக ஜீவாத்மா என்று நாம் ஒருத்தரில்லை என்று அத்வைதமாக ஆகிறபோதுதான். ஒரு வஸ்துதான் இருக்கிறது என்ற அந்த ஸ்திதியில் வரம் கொடுப்பவர் என்று ஒருவர், வாங்கிக் கொள்வதற்கு என்று ஒருவர் என்பதாக ஆஸாமிகள் — இரண்டு பேர் — கிடையாது. ஏதோ ஒரு அடையாளம் தெரிய வேண்டுமென்பதற்காக ஒரு ரூபத்தின் ஹஸ்தத்திலே காட்டும் அபய முத்ரை வாஸ்தவத்தில் அரூபமான தத்வந்தான். கொடுக்கல்-வாங்கல் ‘வர’ பிஸினஸ் நடக்க முடியாத பரம தத்வமான நிலைக்கு அந்த முத்ரை ஒரு அடையாளம். சின்னச் சின்ன பயங்களிலிருந்து ஜனன மரண பயம், த்வைதமாகப் பிரிந்திருக்கிற பயம் வரையில் எல்லாவற்றையும் ஸ்வாமி போக்கினாலும் அபயம் என்றால் அது அத்வைத ஸ்திதிதான். ஆகையால்தான் அதை வரத்தோடு சேர்க்காமல் தனியாக வைத்திருக்கிறது.

‘வராபயம்’ என்று இரண்டாக வைப்பானேன் என்றால் மற்ற [த்வைத] ஸித்தாந்திகள், ‘பவ வீதி’ என்கிற ஸம்ஸார பயத்தைப் போக்குவதுதான் மிக உயர்ந்த அநுக்ரஹமாதலால், அதன் முக்யத்வத்தைக் கருதி ‘அபயம்’ என்று தனியாக வைத்திருக்கிறது என்று சொல்லி நிறுத்திக் கொண்டுவிடுவார்கள்.

அபயத்தில் வலது கை மேல் பக்கமாக நீட்டிக் கொண்டிருக்கும். அது மேல் உலகமான வைகுண்ட-கைலாஸாதிகளைக் குறிப்பதாக அவர்கள் சொல்வார்கள். ஆகாசம் மாதிரி அகண்டமான அத்வைத ஸ்திதியைக் குறிப்பதாக நாங்கள் [அத்வைதிகள்] சொல்கிறோம்.

வரஹஸ்தத்தைப் பார்த்தால் அது கீழ்ப்பக்கமாக நீட்டிக் கொண்டிருக்கும். ” ‘அது வேணும், இது வேணும்’ ஸமாசாரமே கீழானதுதான். அதனால்தான் இப்படி. அதோடு இதைக் கொடுப்பதும் இடது கை. இடது கையால் கொடுப்பது கௌரவமில்லை” என்று சொல்வதுண்டு. ஆனால் இதுகளையே நல்லபடியாக எடுத்துக்கொள்ளவும் இடமிருக்கிறது. அம்பாளே இடது பாகமாக இருப்பவள் தானே? செயலில்லாத அபய ஸ்திதிக்கான ஹஸ்தம் செயலில்லாத சிவபாகத்தைச் சேர்ந்ததாக இருக்கிற மாதிரி, அநுக்ரஹச் செயலைச் செய்கிற வர ஹஸ்தம் சக்தியுடைய பக்கத்தில் பொருத்தமாக இருக்கிறது. கீழே நீட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கை எதைக் காட்டுகிறது என்று பார்த்தால் ஸாக்ஷாத் சரணாரவிந்தத்தைத்தான் காட்டுகிறது! ”என் பாதத்தைத் தருகிறேன். பிடிச்சுக்கோ! அதுதான் பெரிய வரம்” என்று தெரிவிக்கிறது. இப்படி [வரமுத்திரையை] உசத்தியாகவும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.


1 ச்லோ. 24

2 ப்ருஹதாரண்யகம் I. 4.2..

3 II.7

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is இஹ-பர நலன் தரும் இணையடிப் பொடி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸ்தோத்திர மூர்த்தியைக் குறிப்பாலுணர்த்தல்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it