மாயா உபகரணங்களாலேயே ஞான நிலை அடைய : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

இப்படியெல்லாம் இருப்பவளை மாயா சக்தி என்று மட்டும் பார்த்துக் கரித்துக்கொட்டி ‘அவளுக்கு என்ன பூஜை?’ என்றால் ஸரியில்லைதானே? ஆனால், ”நம்மை மாயையிலேதானே கட்டிப்போட்டு வைச்சிருக்கா, ஸ்வாமீ?” என்றால், அதற்குத்தான் சாக்த தர்சனத்தில், – பக்தி மார்க்கத்தின் எல்லா தர்சனங்களிலுமே – எதெல்லாம் மாயையாகக் கட்டுகிறதோ, அதையெல்லாமே தெய்வ ஸம்பந்தமாக்கிக் கொடுப்பது. மாயையும் ஞானமும் ‘ஆப்போஸிட்’டாக இருந்தும், ஞானத்துக்கு வழியாகவே மாயா லோகத்தையும் இந்த்ரியங்களையும் மனஸையும், ப்ரேமையிலும் சுத்தமான ஸெளந்தர்யத்திலும் ஈடுபடுத்தி அவள் நினைப்பிலேயே ஆனந்தமாகத் தோய்ந்திருக்கும் படியாகப் பூஜை, ஸ்தோத்ரம் இத்யாதியைக் கொடுத்திருப்பது. மனஸ் இப்படி நல்லதில் ஒருமுகப்பட்டு சித்த ஐகாக்ரியம் உண்டாகிவிட்டால் அப்புறம் ஞான விசாரம் தன்னால் ‘ஈஸி’யாக வந்துவிடும். மாயாலோக உபகரணங்களாலேயே ஞானத்துக்குப் போகத்தான் ஆசார்யாள் பக்தி மார்க்கத்தைச் செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஆரம்பத்திலிருந்தே மனஸையும் இந்த்ரியங்களையும் கட்டுப்படுத்தி ஒரே வைராக்யமாயிருக்க முடியும் என்று இருப்பவர்களுக்கு அதுகளை வைத்துக்கொண்டே பண்ண வேண்டியதான பக்தியும் பூஜையும் வேண்டியதில்லை. அவர்கள் மாயையை அப்படியே உதறுவதற்கு அப்யாஸம் பண்ணி ‘ஷார்ட்-கட்’டில் ப்ரஹ்மத்துக்குப் போகக் கூடியவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் துச்சமாக ஒதுக்கித் தள்ள வேண்டிய மாயையையும், லக்ஷ்யமாக அடைய வேண்டிய ஆத்மாவையும் பற்றி மாத்திரம் ஆசார்யாள் வலியுறுத்திச் சொல்லி ஞானம், ஆத்மவிசாரம், அத்வைத ஸாதனை என்று வைத்தார். மற்றவர்களுக்குக் கீழ்த்தரமான இன்பங்களில் போய்ப் போய் மாயைக் கட்டில் மேலும் மேலும் கெட்டியாக மாட்டிக்கொள்ளும் மனஸை உசந்த, பரிசுத்தமான இன்பங்களான தெய்வ ஸ்மரணம், பூஜை, கதா ச்ரவணம், ஆலய தர்சனம், பகவத் குண கணாநுபவம் முதலியவற்றில் ஈடுபடுத்தித் தத்-த்வாரா [அதன் மூலம்] ஞானத்துக்குப் பக்குவப்படுத்துவதற்காக பக்தி மார்க்கத்தைக் காட்டினார். அந்தக் கணக்கில்தான் மாயையைத் திட்டிய ஆசார்யாளே மஹாமாயையான அம்பாள் விஷயமாக ஸ்தோத்ரம் பண்ணியதும்.

அத்வைதத்தில் மாயை என்று ஒதுக்கச் சொல்வதை ஒதுக்க முடியாதவர்களுக்காக பகவத் லீலை, பராசக்தி லீலை என்று பார்த்து தெய்வ ஸம்பந்தப்படுத்தி நினைக்கப் பண்ணுவதற்கே பக்தி மார்க்கத்தில் பூஜா, ஸ்தோத்ராதிகள் என்று வைத்தது. மாய ப்ரபஞ்சத்திலுள்ள வஸ்துக்கள், அவற்றை ஆண்டநுபவித்துக் குட்டிச்சுவராக ஆகிற நம்முடைய இந்த்ரியங்கள் மனஸ் ஆகிய எல்லாவற்றையுங் கூடப் பூஜை, ஸ்தோத்ரம், புராணம், ஆலய தர்சனம், ஜபம், த்யானம் என்று அந்த மாயைக்கு அதிகாரியாயிருக்கப்பட்ட மஹாசக்தி விஷயமாகவே ஈடுபடுத்தி சுத்தமாக்குவது. பக்தியுபாஸனையில், நமக்கு போக்யவஸ்துவாக – ‘மைனர்’ என்று பரிஹாஸம் பண்ண வைக்கிற – ஜவ்வாதுப் பொட்டை அம்பாளுக்கு கந்தோபசாரம் என்று பண்ணுவது; வஸ்த்ர-ஆபரணாதிகளைச் சார்த்துவது; வாஹானாதிகளில் ஏற்றி ஊர்வலம் விடுவது; வெறும் சாப்பாட்டைப் பிரஸாதமாக்க வடை, பாயஸம், சித்ரான்னம், சர்க்கரைப் பொங்கல் என்று நைவேத்யம் பண்ணுவது; நமக்கு உல்லாஸமூட்டுகிற ந்ருத்த, கீத, வாத்யங்களை வெறும் கேளிக்கையாயில்லாமல் அவளுக்கு மனஸுருகி அர்ப்பணம் பண்ணுவது; சில்ப, சித்ரங்கள் நம்மைக் கன்னாபின்னா எண்ணங்களில் கொண்டு போகாதபடி தெய்வ ஸம்பந்தப்படுத்துவது. பஞ்சேந்திரியங்களும் பஞ்ச பூதங்களும் ஸம்பந்தப்பட்டதாகவே, அவற்றையும் பகவத் பரமாக்குவதாகவே, ‘கந்த-புஷ்ப-தூப-தீப-நைவேத்யம்’ என்ற பஞ்சோபசாரம் விதிக்கப்பட்டிருக்கிறது. வாக்கை ஸ்துதியிலும், காதைக் கதா ச்ரவணத்திலும், கண்ணை தரிசனத்திலும் ப்ரயோஜனப்படுத்தவது; சரீரத்தை நமஸ்காரம் என்று கீழே கிடத்துவது, அங்க ப்ரதக்ஷிணம் என்று உருள்வது; மனஸை ஜபம், த்யானம் என்பதில் உருட்டுவது – இப்படியாக பக்தி மார்க்கம் நாம் மாயையில் இருக்கும்போதே மாயா வஸ்துக்களாலேயே மாயா காரண மஹாசக்தியிடம் பிடிப்பை உண்டுபண்ணித் தருகிறது.

மாயா ஸமாசாரங்களை லேசிலே தொலைத்து முழுக முடியாது. ரொம்பவும் விவேக வைராக்யப் பக்வம் பெற்றவர்களைத் தவிர மற்ற எல்லாரையும் லோகமும், இந்திரியங்களும், இரண்டும் சேர்ந்து உண்டாக்குகிற பாச பந்தங்களும் வலிந்து வலிந்து இழுத்துக் கொண்டே தானிருக்கும். அபக்வ நிலையிலிருப்பவர்கள் நேராக அந்த இழுப்பைத் துண்டிக்க வேண்டுமென்று யத்தனம் பண்ணினாலும் லேசில் முடியாது. தொலைத்து முழுகுவது நம்மால் முடியாத கார்யம் என்று ஆத்திரப்படுவதும், ‘நாம் விமோசனமே பெற முடியாது’ என்று ‘ஹோப்லெஸ்’ஸாக நிற்பதுமாகவே ஆகும். அதற்காகத்தான் தொலைத்து முழுகாமல் மாயா ஸமாசாரங்களையே தெய்வ ஸம்பந்தமாக்கிக் கொடுப்பது. மாயைக்கு, ஸகலத்திற்குமே, காரணமான வஸ்துவிடம் “பக்தி” என்று அன்பு வைக்கச் சொல்லி, அதைக் கார்யத்தில் பூஜை, த்யானம், கானம் என்று பல தினுசில் மாயா ஸாமக்ரிகளைக் கொண்டே செய்வதற்குச் சொல்லிக் கொடுப்பது. இப்படி மாயை ஸமாசாரங்களையும் தெய்வ ஸம்பந்தப்படுத்திக் கொண்டே போனால் அவை நம்மை பாதிக்காது, பந்தப்படுத்தாது. மின்ஸாரக் கம்பியை வெறுங் கையால் தொட்டால் ‘ஷாக்’ அடிக்கிறது. அதுவே gloves போட்டுக் கொண்டால் பயப்படாமல் தொடமுடிகிறதல்லவா? அப்படி மாயா ஸமாசாரங்களையே தெய்வ நினைப்பு என்ற gloves போட்டுக்கொண்டு கையாளும்போது அவை பாதிக்காது.

நான் நினைப்பது, சொல்லப் போவது விசித்ரமாக இருக்கலாம். ஆனாலும் அப்படி நினைப்பு வந்து, சொல்லத் தோன்றுவதால் சொல்கிறேன்: மாயா ஸமாசாரம் என்றேனே, அதில்தான் ப்ரத்யக்ஷஆத்ம அநுபவம் பெறும் ஸித்தியான உச்ச கட்டம் தவிரப் பாக்கி எல்லாமே இருக்கிறது. ஞான ஸாதனை என்கிறதுமேகூடத்தான்! ஸாதனை என்று பண்ண ஒன்று, அதைப் பண்ணும் ஸாதகன் என்கிற ஒருத்தன், பண்ணுவது என்ற கார்யம் ஆகியவை வேறே வேறேயாக இருப்பதால் அதுவும் த்வைதந்தான். அதாவது மாயைதான். மாயா ஸமாசாரங்களாலேயே மாயையைப் போக்கிக் கொள்வதில் ஒரு அங்கந்தான் அத்வைதத்திற்கான ஸாதனைகூட! இது ஒன்றும் நான் புதுசாகச் சொல்கிறதில்லை. ஏற்கெனவேயே சொல்வதுதான் – குரு உபதேசிக்கிறதும் த்வைதந்தான். ஆனாலும் அதனால் அத்வைத ஸித்தி அடையலாம். எப்படியென்றால் ஸ்வப்னத்திலே ஒரு சிங்கம் கர்ஜிக்கிறது. அது ஸ்வப்னந்தான். ஆனால் ஸ்வப்னம் கண்டவனோ உளறியடித்துக் கொண்டு நிஜமான [நனவு] நிலையில் முழித்துக் கொண்டுவிடுகிறான். ஸ்வப்ன சிங்கமே இவனை ஜாக்ரத் என்னும் விழிப்பு நிலைக்குக் கொண்டு வருகிறது போலத்தான் மாயக் கனாவான த்வைத வாழ்க்கையில் குரு உபதேசிப்பதே ஒருத்தனை ஞானமான விழிப்பில் சேர்த்து விடுகிறது என்று சொல்வதுண்டு. அதனால்தான், “ஸாதனை என்பதே த்வைதந்தான் என்றுள்ளபோது அத்வைத லக்ஷ்யத்திற்கு மாறான லக்ஷ்யங்களை உடைய ஸாதனைகளையுங்கூடத்தான் நம்முடைய எண்ண ஓட்டத்தில் அவை இயற்கையாக வருகிறபோது சொல்லி விட்டுப் போவோமே! தெய்வபரமாகப் பிரயோஜனப்படுத்தும்போது எந்த த்வைத விஷயமும் ஞான மார்க்கத்திற்கு யோக்யதா ஸித்தியைக் கொடுக்கிறது என்னும்போது எந்த இதர மார்க்க ஸாதனையும், அதனுடைய சடங்குகள், சாஸ்திரங்கள் ஆகியவையும் அப்படிக் கொடுக்கத்தானே செய்யும்? அதனால், நாம் பாட்டுக்கு ‘ரிஸர்வேஷன்’ இல்லாமல் எந்த ஸித்தாந்த ரீதியில் சிந்தனை போனாலும் அப்படியே ச்லோகம் பண்ணிக்கொடுத்து விடுவோம்’ என்று ஆசார்யாள் நினைத்தே ஸெளந்தர்யலஹரியை அநுக்ரஹித்திருக்கிறார் என்று சொல்லலாம். அதனால் தான் இதில் வைதிகம், தாந்த்ரிகம், அத்வைத-த்வைத-விசிஷ்டாத்வைதங்கள், சைவம், சாக்தம் என்று எல்லாம் அங்கங்கே குரல் கொடுக்கின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is அத்வைத மாயையும், சைவ-சாக்தங்களின் சக்திகளும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  அத்வைத சாஸ்திரத்திலும் சக்தி, லீலை முதலியன
Next