இரு மார்க்கத்திற்கும் ஆசாரியர் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘ஜகத்தே கூடாது, ஜகத் வியாபரமே மாயை. ஒரு காரியமும் இல்லாமல் இருக்கிற ஸத்ய சிவமான நிர்குணப் பிரம்மமாக ஆகிவிட வேண்டும்’ என்றுதான் ஆசார்யாள் ஏகப்பட்ட அத்வைத பாஷ்யங்களும் ப்ரகரண க்ரந்தங்களும் எழுதி ஸித்தாந்தம் செய்தார். அசையாத சிவம்தான் அங்கே அவருக்கு முக்யமாக, லக்ஷ்யமாக இருந்தது. அது அசைகிற மாதிரிச் செய்கிற சக்தியை மாயை மாயை என்று சொல்லி, கரித்துக் கொட்டிக் கண்டனம் பண்ணினார். இங்கே அதே சக்தியிடம் ‘நீ இல்லாவிட்டால் சிவன் அசைவானா?’ என்று ஸ்தோத்திரம் பண்ணுகிறார்! சிவனை அசையப் பண்ணி ஜகத் வியாபாரத்தை உண்டாக்கினதற்காக ஸந்தோஷப்பட்டு, ”இது உன்னால் அல்லவா அம்மா ஆச்சு?” என்று கொண்டாடுகிறார்!

”ஒருத்தரே இப்படி இரண்டு தினுஸாகப் பேசலாமா? இரண்டு விதமாகப் பேசினால் எது ஸத்யம்? ஒன்றுதான் ஸத்யம், இன்னொன்று அஸத்யம் என்றாகிவிடுமே? ஆசார்யாள் இப்படிப் பண்ணலாமா?”

அப்படியில்லை இரண்டும் ஸத்யந்தான்.

”அதெப்படி நேர் விரோதமாயிருக்கிற இரண்டு ஸ்டேட்மென்டும் ஸத்யமாயிருக்க முடியும்?”

தர்க்க ரீதியில் இருக்க முடியாதுதான். ஆனால் ஸத்யத்துக்கு லக்ஷணம் தர்க்கப்படி வராது. யாராருக்கு எதெது நல்லது பண்ணுமோ அதைப் பிரியமாகச் சொல்வதுதான் ஸத்யம். அதனால், ஆசார்யாள் மநுஷ்யர்களில் ஞான மார்க்கமாகப் போகக் கூடியவர்கள், பக்தி மார்க்கமாகப் போகக் கூடியவர்கள் என்று பாகுபடுத்தி ஞான மார்க்கத்தில் போகக்கூடியவர்களுக்கு எதை எப்படிச் சொல்ல வேண்டுமோ அதை அத்வைத கிரந்தங்களில் சொன்னார். மூலமான ஒன்றையே பார்க்கப் பிரயத்னப்படுகிறவர்கள் அதற்கான பக்குவம் அடைகிற ஸ்திதியில், பல பலவாகப் பிரிந்திருக்கிற இந்தப் பிரபஞ்சத்தையும், அதைப் பல வித ஸுக துக்கங்களாக அநுபவிக்கிற தங்களுடைய தேஹம், இந்திரியம், மனஸ் முதலியவற்றையும் கொஞ்சங்கூட கவனிக்கக் கூடாதென்பதால் இது எல்லாவற்றையும் அடித்துத் தள்ளிவிட்டு அந்த மூலத்துக்கே போய்ச் செயலில்லாமல் ஒடுங்கச் சொன்னார். அதுதான் ஞான மார்க்கம். அந்தப் பக்குவம் வருவதற்கு முந்தி, அதற்கு வழியாகவே, இதெல்லாவற்றையும் ஒரேயடியாக ஒதுக்கச் சொன்னால் செய்ய முடியாதவர்களுக்கு பக்தியை உபதேசம் பண்ணினார். இந்திரிய-மனோ வியாபாரத்தையும், வியவஹாரப் பிரபஞ்ச திருஷ்டியையும் விடமுடியாதபோது, அதற்காக ஒரேயடியாக மூலத்தை மறந்து, மனஸ்போனபடி இந்திரிய ஸெளக்யத்திலும், அழுகையிலும், பயத்திலுமே ஜனங்கள் மாட்டிக்கொண்டு வீணாகப் போகாமலிருப்பதற்காக ஒரு வழி சொன்னார் – இதெல்லாவற்றையும் அந்த சாந்தமான மூலமே சக்தியுள்ள ஈச்வரனாக நிர்வாஹம் பண்ணுகிறது என்று காட்டி, ஜகத் வியாபாரத்தை அவன் லீலையாகப் பார்க்கப் பண்ணி மனஸ் இந்திரியம் எல்லாவற்றையும் அவனுடைய தியானம், பூஜை, கதா சிரவணம், ஸங்கீர்த்தனம் இவற்றிலே ஈடுபடுத்தப் பண்ணி பக்தியை உபதேசம் செய்தார். இப்படி ஜகத்தையும், மனஸையும் இந்திரியங்களையும் கொண்டே காரியப் பிரம்மத்தைப் பிடித்துவிட்டால், அப்புறம் காரணப் பிரம்மமாகச் செயலில்லாமலிருக்கிற ஸ்திதிக்கு இதை எல்லாம் விட்டுவிட்டுப் போவதற்குரிய யோக்யதா ஸித்தி அவனருளாலேயே பிறந்துவிடும் என்பதால் பக்தியை உபதேசித்தார். ஒரு தாயார் சாப்பிட அடம் பண்ணும் சோனிக் குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லி, கதை சொல்லி, காக்காயைக் காட்டி விதவிதமான ஆஹாரத்தை ஊட்டுகிறாள்; அஜீர்ணத்தில் கஷ்டப்படுகிற இன்னொரு குழந்தைக்கு, ‘கஞ்சிதான் எல்லாவற்றையும்விட உசந்தது’ என்று அதைவிட நல்ல வார்த்தை சொல்லிப் போட்டுகிறாள். அவள் வித்யாஸமாகச் செய்கிறாள், ஸத்யமாக நடக்கவில்லை என்று சொல்லலாமா?

அவரவர் மனோபாவத்துக்கு ஏற்றபடி ஆசார்யாள் இரண்டு விதமாகச் சொன்னார் என்றால் மட்டும் போதாது. அவர் சொன்ன இரண்டுமே இரண்டு விதமான ‘ஸ்டேஜ்’களில் (நிலைகளில்) ஸத்யம்தான். வியவஹார தசையில் லோகம், ஸ்ருஷ்டி இவற்றை ஆக்கிப் படைத்து ஆட்டிவைக்கிற ஈச்வரனும் மனஸு-இந்திரியங்களோடு கூடிய தனி ஜீவனும் இரண்டு வேறு வஸ்துக்களாக இருப்பதும் ஸத்யம். இந்த வியவஹாரத்துக்குக் காரணம் என்ன, மூலம் என்ன என்று பார்க்கிறபோது இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, இதையெல்லாம் ஒரு மாயா விளையாட்டாகவே, செப்பிடு [செப்படி] வித்தையாகவே பண்ணிக்கொண்டு, ஆனால் ஒன்றும் பண்ணாமல் தன்னில் தானாக ஒரே ஸத் வஸ்து இருப்பதும் ஸத்யம்.

அந்தந்த மார்க்கத்தில் போகிறவர்களுக்கு, அதிலேயே பிடிப்பு ஏற்பட வேண்டும்; அதற்கான பக்வம் ஏற்படாத போது இன்னொன்றில் தலையை விட்டு ஐகாக்ரியம் [சித்த ஒருமுகப்பாடு] சிதற விடக் கூடாது என்பதால் அததையும் சொல்லும்போது அதைக் கொஞ்சம் கூடவே உயர்த்தி வைத்தும், இன்னொன்றைக் கொஞ்சம் மட்டம் தட்டுகிற மாதிரியாகவும் சொல்ல வேண்டியதாகும். அதனால், ‘லாஜிக’லாக ஸரியா, தப்பா என்று இதையெல்லாம் விமரிசிக்காமல், ‘லாஜிக்கு’க்குள் வராத மனோபாவ பேதம் (‘லாஜிகல்’ இல்லை; ‘ஸைகலாஜிகல்’ தராதரம்) , அதிகாரி பேதம் முதலியவற்றை அநுஸரித்து அவாளவாளுக்கும் அநுகூலமாக ஆத்மாபிவிருத்திக்கு வழி சொல்ல வேண்டுமானால் இப்படி வித்யாஸமாகத்தான் சொல்ல வேண்டும் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

சோனிக் குழந்தையிடம் ஒரு தாயார்க்காரி கசப்பு மருந்தைக் தித்திக்கும் என்று சொல்லி வாயைத் திறக்கப் பண்ணி அடி நாக்கில் தடவிவிட்டால், அவள் சொன்னது ஸத்யந்தான். பேதியாகிற குழந்தையிடம் மைஸுர்ப் பாகை அரப்புக் கட்டி என்று சொல்லித் தின்னவிடாமல் தடுப்பதும் ஸத்யந்தான். ஸத்ய லக்ஷணம் என்னவென்றால்: பிறத்தியார் ஒருவருடைய நலனே நோக்கமாயிருக்கணும்; அதற்காக வேறே யாருக்கோ கெடுதல் பண்ணி இவர்களுக்கு நன்மை செய்வதாகவும் இருக்கப்படாது – அதாவது எவருக்கும் கெடுதல் உண்டாக்காததாக இருக்க வேண்டும்; ஸ்வய லாபம், ஸ்வய நலம் கலக்காமல் இருக்க வேண்டும்; யாருடைய நலனை உத்தேசிக்கிறோமோ அவர்கள் பிரியமாக ஏற்று ஸெளக்யமாகப் பின்பற்றும் படியாகவும் இருக்க வேண்டும்.

இந்த நோக்கத்தில், நன்னோக்கத்தில், ஒன்றை மட்டம் தட்டி இன்னொன்றை உசத்திச் சொல்ல நேர்ந்தாலும் அப்போது ‘மட்டம் தட்டினது வாஸ்தவமாகவே மஹா மட்டம்’ என்று கழித்துக் கட்டுவது லக்ஷ்யமில்லை; ‘உசத்திச் சொன்னதுதான் தனக்கானது’ என்று அந்த ஆஸாமி புரிந்து கொண்டு எடுத்துக்கொள்ளப் பண்ணுவது தான் லக்ஷ்யம். இவனுக்கு இதுதான் ஏற்றது, ஒத்து வரும் என்பதால் அப்படிப்பட்டதில் அவனுக்கு ஒருமுகமான பிடிப்பு ஏற்படுத்தித் தரும் நல்ல எண்ணத்தில்தான், வேறே ஒன்றில் அவன் இறங்கிக் குழறுபடி பண்ணிக் கொள்ளாமல் தடுக்குமுகமாக அந்த இன்னொன்றை மட்டம் தட்டுவது. வேறே விதமான மனப்பான்மை, ஸம்ஸ்காரம் உள்ளவனுக்கோ இவன் விஷயமாக எதை உசத்திச் சொல்லிற்றோ அதை மட்டம் தட்டியும், இவனுக்கு எதை நிஷித்தமாகக் காட்டிற்றோ அதை உத்கர்ஷமாகவும் சொல்ல வேண்டியதாகும். இப்படித்தான் புராணங்களில், ஸ்தோத்ரங்களில் அந்தந்த தெய்வத்தைப் பற்றிச் சொல்லும் போதும் அதுவே மற்ற எல்லா தெய்வங்களுக்கும் மேலானது என்று உத்கர்ஷம் சொல்வது.

அத்வைதத்தில் எதை விட்டுவிடும்படி ஆசார்யாள் சொன்னாரோ அதையே பக்தியில் ‘கெட்டியா பிடிச்சுக்கோ!’ என்று ஸ்தோத்ரித்திருப்பது இந்த நியாயத்தில்தான். மாயை என்று அங்கே திட்டியது பக்தி பண்ண வேண்டாதவர்களுக்கு; பக்தி மார்க்கத்தில் போக வேண்டிய அவச்யமில்லாதவர்களுக்கு! பக்தியாயிருப்பது என்றால் பக்தனாக இருப்பவன் பகவானிடமிருந்து கொஞ்சமாவது பிரிந்திருந்தால்தானே முடியும்? இப்படிக் கொஞ்சம்கூடப் பிரியாமல் ஒன்றாகி விடுவதற்கான ஞான [அத்வைத] வழியில் போகக்கூடியவர்கள் நாம் சொல்கிற அர்த்தத்தில், நாம் நினைக்கிற ரீதியில் பக்தி பண்ண வேண்டிய அவச்யமில்லைதான். அவர்கள் விஷயத்தில் ஸ்வ-ஸ்வரூபாநுஸந்தானமேதான் [தனது மெய்யான உயிர்ப் பொருளை உன்னி உணர்ந்திருத்தலேதான்] பக்தி என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார்1. ஆனால் அப்படி இருப்பவர்கள் ரொம்பக் கொஞ்சம் பேரே.

பெரும்பாலானவர்களாக நாம் எப்படியிருக்கிறோம்? சித்தமும், புலன்களும் ஓடுகிற வழியில் ஓடிக்கொண்டு நியாயாநியாயம், தர்மாதர்மம் பார்க்காமல் நாம் ஸந்தோஷம் என்று நினைப்பதையே ஸரியானது என்றும் நினைத்துப் பலவிதமான தப்புக்களை, பாபங்களைப் பண்ணுகிறோம். பிரம்மாதி தேவர்களையும் ஆட்டிப் படைக்கிற ஒரு சக்தி, பிரம்மத்தையே அசைக்கிற பராசக்தி, ஒன்று இருப்பதாக நமக்கு நன்றாக எடுத்துக் காட்டினால்தான் நமக்கு அடக்கம், பக்தி, பயம் உண்டாகித் தப்புத் தண்டாக்களைக் குறைத்துக்கொள்ள நினைப்பு வரும். ‘செயலேயில்லாத சிவம்தான் ஸத்யம்; அங்கே நியாயமும் இல்லை, அநியாயமும் இல்லை; தர்மும் இல்லை, அதர்மமும் இல்லை; பாபமும் இல்லை, புண்ணியமும் இல்லை. இதெல்லாமே மாயை. அது [சிவம்] இது எதோடும் ஸம்பந்தமே படாதது. அது தண்டிப்பதும் இல்லை; வரம் தருவதுமில்லை’ என்று அத்வைதமாகச் சொன்னால், அதை நாம் குயுக்தி பண்ணிக்கொண்டு, ‘நம் இஷ்டப்படி, மனம் போகிற போக்கில் எது வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று free license-ஆகத்தானே வைத்துக்கொள்வோம்? அதனால்தான் ஸ்தோத்ரத்தை ஆரம்பிக்கிறபோதே ஆசார்யாள் நமக்கு அஹம்பாவம் போகவேண்டுமென்பதற்காக, நமக்கு அடக்கம் ஏற்படும் விதத்தில், ”சிவத்தையும் அசைவிக்கிறதாக, திரிமூர்த்திகளும் ஆராதிக்கிறதாக – ‘ஹரி ஹர விரிஞ்சாதிபி: அபி ஆராத்யாம்’: விஷ்ணு, ருத்ரன், ப்ரம்மா இவர்களாலும் ஆராதிக்கப்படுகிறவளாக – மஹாசக்தியாக அம்பாள் இருக்கிறாள். அவளை நாம் நமஸ்காரம் பண்ண முடியும், ஸ்தோத்ரம் பண்ண முடியும் என்று நினைப்பதற்குக்கூட நமக்கு சக்தி இல்லை. இந்த ஸ்துதி-நுதிகளுங்கூட [துதிப்பதும் தொழுவதுங்கூட] அவள் அநுக்ரஹத்தால்தான் நடக்கவேண்டும். நடப்பதற்கு நாம் தர்மமாக, நியாயமாக, பக்தியாக நடந்துகொண்டு புண்யங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று அர்த்தம் கொடுக்கிற ச்லோகத்தைச் செய்திருக்கிறார்.


1 “விவேக சுடாமணி” ச்லோ. 31

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is சிவத்துக்கும் ஜீவசக்தி;ஆண்-பெண் பெயர்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  பஞ்ச கிருத்யமும் காமேச்வரி-காமேச்வரர்களும்
Next