‘சிவ’ எனத் தொடங்கும் சக்தித் துதி : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்

ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திதுமபி |

அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹரவிரிஞ்சாதிபிரபி

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய: ப்ரபவதி || 1 ||

[(“சிவ: தேவ:”) இறைவனான, சிவபெருமான் (“சக்த்யா யுக்த: பவதி யதி”) சக்தியுடன் சேர்ந்திருப்பவராக இருந்தாலே (ப்ரபவிதும்) உலகை ஆக்குவதற்கு (சக்த:) ஆற்றல் படைத்தவராவர். (ஏவம் ந சேத்), இவ்வாறு சேர்ந்திராவிடில் (ஸ்பந்திதும் அபி) அசைவதற்குங்கூட (குசல: ந கலு) ஸாமர்த்தியமுள்ளவராக இல்லையல்லவா? (அத:) ஆகையால் (ஹரி ஹர விரிஞ்சாதிபி: அபி) திருமால், ருத்திரன், பிரம்மா முதலானோராலுங்கூட (ஆராத்யாம்) ஆராதனை செய்யப்படுபவளான (த்வாம்) உன்னை (அக்ருத புண்ய:) புண்ணியம் பண்ணாதவன் (ப்ரணந்தும்) நமஸ்கரிக்கவோ (ஸ்தோதும் வா) ஸ்தோத்திரிக்கவோ (கதம் ப்ரபவதி) எங்ஙனம் முடியும்?]

நம்முடைய ஸ்தோத்ரம் இந்த ச்லோகத்துடன் ஆரம்பிக்கிறது.

இந்த ச்லோகத்தில் ‘லோகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டிப்பது, ரக்ஷிப்பது, ஸம்ஹரிப்பது ஆகிய காரியங்களைச் செய்யும் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலியோருக்கும் மேற்பட்ட சக்தி அம்பாள்தான்; ஸாக்ஷாத் பரப்ரம்ம ஸ்வரூபமாக இருக்கப்பட்ட சிவனும் அவள் செயல்படுத்தி நடத்தி வைத்தால்தான் தன்னுடைய அசலமான [அசைவில்லாத] நிர்குண அத்வைத நிலையிருந்து அசைந்து கொடுத்து, த்ரிமூர்த்திகள் முதலியவர்களைக் கொண்டு த்வைத ப்ரபஞ்ச வ்யாபாரத்தைப் பண்ணமுடிகிறது’ என்ற முக்யமான சாக்த தத்வம் சொல்லியிருக்கிறது.

”த்ரிமூர்த்திகளும், இன்னும் மற்ற தேவர்கள் முதலான சக்திமான்கள் எல்லாரும் உன்னைப் பூஜை பண்ணுகிறார்கள். ப்ரம்மத்தையே நீ ஆட்டிப்படைக்கிறாய். அந்த ஆட்டம் உன்னுடையதே! அதிலிருந்தே லோகத்திலுள்ள அத்தனை தினுஸான ஆட்டங்களும்… ஆட்டம் என்றால் கார்யம்… ஒரு ஈ, எறும்பு அடியெடுத்து வைப்பது முதற்கொண்டு ஸகல கார்யமும் உன் சக்தியால்தான், உன் ஸங்கல்பத்தால்தான் நடக்கிறது. அப்படியிருக்கும்போது உன்னை ஒருத்தன் நமஸ்காரம் பண்ணுகிறான், ஸ்தோத்ரம் செய்கிறான் என்றால் அது மட்டும் தன்னால் ஆகிவிடுமா?

”எனக்கு உன்னிடம் அன்பு, பக்தி உண்டாகி நான் உன்னை நமஸ்காரம் பண்ணுவது என் செயலா? என் ஸங்கல்பமா? உன்னை ஸ்துதிக்க ஆரம்பித்திருக்கிறேனே, இது உன் சக்தியும் ஸங்கல்பமும் அருளும் ஸம்மதமும் இல்லாவிட்டால் நடக்கக் கூடுமா?”

இப்படி ஆசார்யாள் அம்பாளிடம் கேட்கிறார். வெளிப்படப் பொத்தைப் பூசணிக்காயாகக் கேட்காமல் நாசூக்காக உள்ளே இந்த அர்த்தத்தை வைத்து வ்யங்க்யமாகக் கேட்கிறார்.

இதே [வ்யங்கிய] ரீதியில் இன்னும் கேட்கிறார்: ”ஸ்தோத்ரிக்கும் சக்தியை நீதான் தருகிறாயென்றாலும் யாருக்கு வேண்டுமானாலும் தந்துவிடுவாயா என்ன? மாட்டாய்! ஏனென்றால் நீ என்னதான் தாயாரானாலும் கர்மாவைப் பார்த்துத்தான் பலன் தருவாய். ஆகையால் யோக்யதையில்லாதவனுக்கு உன்னை ஸ்துதி செய்யும் மஹா பாக்யத்தை தரமாட்டாய்! என்ன யோக்யதை? ஜன்மாந்தரங்களில் நிறைய ஸத்கர்மா பண்ணிப் புண்யம் ஸம்பாதித்திருக்க வேண்டும் – அதுதான் யோக்யதை. பூர்வ புண்யசாலியைத் தவிர உன்னை நமஸ்கரிக்கவும், ஸ்துதிக்கவும் எவருக்கு முடியும்?”

– இப்படி, எல்லாவற்றையும் plain-ஆகச் சொல்லாமல் அநேகம் indirect-ஆகவும் இந்த ச்லோகத்தில் சொல்லி இருக்கிறது.

கவிதைக்கு இது முக்ய லக்ஷணம். வசன நடை மாதிரி எல்லாவற்றையும் plain-ஆக explain பண்ணிவிடக் கூடாது! சில விஷயங்களைக் ‘கூறாமல் கூறுவது’ என்ற முறையில் உள்ளே மறைத்து வைத்தே சொல்லவேண்டும். அப்போது தான் ரஸம்! ஒரு பழம் இருந்தால் அதில் ரஸம் வெளியிலே சொட்டாமல் உள்ளுக்குள்ளேதானே தேங்கி தோய்ந்து இருக்கிறது? அந்த மாதிரி! கவிதையென்றால் ‘ரஸவத்’தாக இருக்கவேண்டும். ‘ஸாரவத்’ என்றும் சொல்வார்கள். அதாவது, வேண்டாததையெல்லாம் தள்ளிவிட்டு சாற்றை மட்டும் பிழிந்து தரவேண்டும் என்று அர்த்தம். இப்படிச் சொல்லும்போது வளவளப்பு இல்லாமல் ‘சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது’ என்று அர்த்தம். ஒரு கூடை எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழிந்து ஒரு சின்ன ஜாடிக்குள் அடக்கி வைக்கிறதுபோல அபிப்ராயங்களைச் சுருக்கி எஸ்ஸென்ஸாகத் தந்தாலே அது கவிதை. ஒரு சின்னப் பல்லவியை வித்வான்கள் ஸங்கதிகள் போட்டுப் பலுக்கிப் பலுக்கி விஸ்தாரம் பண்ணுவது போல, ரஸிகர்கள் உள்ளர்த்தத்தையும் நயங்களையும் தாங்களே விளக்கித் தெரிந்து கொள்ளும்படியாகக் கவிதைகளே இயற்ற வேண்டும்.

அப்படி இந்த ச்லோகத்தில் இன்னொன்றும் உள்ளர்த்தமாக ஊஹித்துப் புரிந்துகொள்ள வேண்டும். என்னவென்றால்: ”ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருதபுண்ய: ப்ரபவதி?”: ”உன்னை எப்படிப் புண்யம் பண்ணாதவன் நமஸ்கரிக்கவும் ஸ்தோத்ரிக்கவும் முடியும்?” என்று இதில் கேட்கிறார்; அப்படிக் கேட்பவரே ஸ்தோத்ரிக்கிறார் என்பதால் தாம் ரொம்பப் புண்யசாலி என்று ஆசார்யாள் தம்மையே காட்டிக் கொள்கிறார் என்று அர்த்தம் பண்ணிக் கொண்டால் அது அனர்த்தந்தான். பின்னாடி தம்மை ஒன்றுமே இல்லாதவனாக ஆசார்யாள் குறைத்துக்கொண்டு ”எனக்குங்கூட உன் கடாக்ஷத்தைக் கொடு”, ”என் சிரஸிலுங்கூட உன் சரணத்தை வை”1 என்று ரொம்ப அடக்கமாகச் சொல்கிறார். அப்படிப்பட்டவர் எடுத்த எடுப்பில், ”நான் நிறையப் புண்யம் பண்ணினவன்; அதனால்தான் உன்னைப் பற்றி ஸ்தோத்ரம் பண்ண முடிந்திருக்கிறது” என்று ஒரு நாளும் சொல்லமாட்டார். ஆகையால், இங்கேயும் என்ன உள்ளர்த்தம் ‘ஸஜெஸ்ட்’ பண்ணுகிறார் என்று ஆலோசித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும்.

முதலில் என்ன சொன்னார்? அசைய முடியாத அசல தத்வமான சிவனையும் அவள் அசைவிக்கிறாள் என்றார். அதையே அநுஸரித்து இங்கேயும் ‘புண்யமே பண்ணாத எனக்கும் புண்யம் பண்ணியவர்களுக்கே உரியதான ஸ்தோத்ரம் இயற்றும் சக்தியைக் கொடுத்திருக்கிறாள்’ என்றுதான் அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்!

‘உன்னை எப்படிப் புண்யம் பண்ணாதவன் ஸ்தோத்ரம் பண்ண முடியும்?’ என்பதற்கு, ‘அப்படியிருந்தும், எப்படிப் புண்யமே பண்ணாத நானும் ஸ்தோத்ரிக்க முடிகிறது? எதையும் செய்யும் உன் ஸாமர்த்தியந்தான். அசல சிவனையே அசையப் பண்ணும் உன் ஸாமர்த்தியந்தான் புண்யம் பண்ணாத என்னையும் உன்னை ஸ்தோத்ரிக்கும்படி என் நாக்கை, வாக்கை அசைத்திருக்கிறது’ என்றே அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். அதுதான் ஆசார்யாளின் ஹ்ருதயத்தை அநுஸரித்தது.

‘ப்ரணந்தும்’ [நமஸ்கரிக்க]என்பது உடம்பால் பண்ணும் கார்யம். ‘ஸ்தோதும்’ [ஸ்தோத்ரிக்க] என்பது வாக்கால் பண்ணும் கார்யம். மனோ-வாக்-காயம் என்ற மூன்றில் பின்னிரண்டும் ”ப்ரணந்தும் ஸ்தோதும்” என்பதில் அடங்கிவிடுகின்றன. மனஸால் அம்பாளை நினைத்துத்தானே அப்புறம் அவளை நமஸ்கரிப்பதும், ஸ்தோத்ரிப்பதும்? ஆதலால் அதுவும் ‘அன்டர்ஸ்டுட்’தான் [உள்ளுறை பொருளாயிருப்பதுதான்]. இப்படி முதல் ச்லோகத்திலேயே அம்பாளுக்கு மனோ-வாக்-காய ஸமர்ப்பணம் நடந்து விடுகிறது. இங்கே போட்ட விதைதான் கடைசியில் நூறாம் ச்லோகத்தில் பரிபூர்ணமான சரணாகதியாக, ஆத்ம ஸமர்ப்பணம் செய்யும் பழமாகப் பழுத்து முடிகிறது.

பூர்வ புண்யமில்லாதவன் நமஸ்கார ஸ்தோத்ராதிகள் பண்ணமுடியாதென்றால் பக்தி பண்ணமுடியாதென்றே அர்த்தம். பக்தி மார்க்கத்தில் இப்படிச் சொன்னவர், ஞான மார்க்கத்தில் போவதற்கும் இப்படியே ‘விவேக சூடாமணி’யில் சொல்லியிருக்கிறார்: ”முக்திர்-நோ சதகோடி ஜன்மஸு க்ருதை: புண்யை: விநா லப்யதே2 அப்படியென்றால், நூறு கோடி ஜனமங்களில் புண்யம் பண்ணியிருந்தாலொழிய ஞான வழியில் போய் முக்தி அடைய முடியாது என்று அர்த்தம்.

இதிலே வேடிக்கை, தெய்வாநுக்ரஹத்தினால்தான் ஒருத்தனுக்கு பக்தியோ, ஞானமோ ஏதோ ஒரு நல்ல வழியில் போகத்தோன்றும் என்று பக்திப் புஸ்தகமான ஸெளந்தர்ய லஹரி ஆரம்பத்தில் ஆசார்யாள் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால், தெய்வத்தை அந்தண்டை மூட்டை கட்டி வைத்துவிடுவதாக உலகம் நினைக்கும் ஞான வழிக்காக எழுதின விவேகசூடாமணி ஆரம்பத்தில் தான் ”ஒருத்தன் மநுஷனாகப் பிறந்து, முக்திக்கு ஆசைப்பட்டு, உத்தம ஆசார்யனைச் சேர்வது தெய்வாநுக்ரஹத்தால்தான் உண்டாவது – ”தைவாநுக்ரஹ ஹேதுகம்” – என்று சொல்லியிருக்கிறார்3. “அவனருளாலே அவன் தாள்வணங்கி4 என்பதாக, பக்தி பண்ணும் எண்ணமும் தெய்வ ப்ரஸாதமாகத்தான் கிடைக்க வேண்டும் என்று மாணிக்கவாசகர் சொல்லியிருக்கிறார்……

”சிவ: சக்த்யா” என்று ஸ்தோத்ரம் ஆரம்பிக்கிறது. பரம மங்களம் என்று அர்த்தமுள்ள ‘சிவ’ சப்தத்தோடு சுபமாக ஆரம்பிக்கிறது. சக்தியோடு சேர்ந்திருந்தால்தான் சிவனால் அசையக்கூட முடியும், இல்லாவிட்டால் ஒன்றுமேயில்லை என்றுதான் ச்லோகம் சொல்கிறதென்றாலும் முதல் வார்த்தை ‘சக்தி’ என்று இல்லாமல், ‘சிவ’ என்றே இருக்கிறது. ஸதி-பதி, Mrs-and-Mr என்று எப்படிச் சொன்னாலும் முதலில் பத்னி, அப்புறம் புருஷன் என்றே உள்ள போதிலும், சக்தி மஹிமையையே சொல்லி, அவள் ஸம்பந்தமில்லாவிட்டால் அந்த சிவனுக்கு மஹிமையே இல்லை – அவன் கால கூட விஷத்தைச் சாப்பிட்டுங்கூட உயிரோடு இருக்கிறானா? அதுகூட அவளுடைய தாடங்க மஹிமைதான்5 என்கிற அளவுக்குப் போய்விடுகிற ஸ்தோத்ரத்தின் ஆரம்பத்தைப் பார்த்தாலோ முதலில் அவன் பேர், அப்புறந்தான் அவள் பேர் என்று இருக்கிறது!

ஏனிப்படி என்றால் லோகத்துக்கு தர்ம சாஸ்த்ர வழிகளை எப்போதும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருப்பதில் ஆசார்யாள் ரொம்பவும் கவனமாயிருந்தவர். லோகத்திலுள்ள பதி-பத்னிகள் மாதிரி இல்லாமல் ஈச்வரனும் அம்பாளும் அநேக விதங்களில் வித்யாஸமாயிருப்பவர்கள். லோகத்தில் ஸ்த்ரீகளை ‘அபலா’ என்கிறது வழக்கம். பலம் குறைந்தவர்கள் என்று அர்த்தம். புருஷன் தான் தன் பலத்தினால் அவளுக்கு ரக்ஷையாக இருப்பவன். பலம் என்றாலும் சக்தி என்றாலும் ஒன்றுதான். சிவ-சக்தி ஜோடியை எடுத்துக் கொண்டாலோ ‘சக்தி’ என்பதே அவள் பெயராகத்தானிருக்கிறது! அவளில்லாவிட்டால் அவன் ஒன்றும் செய்வதற்கில்லாமல் கிடக்கவேண்டியிருக்கிறது! பௌராணிகர்கள் வேடிக்கையாகச் சொல்கிறாற்போல: ஒன்றும் செய்யாமல் இரு என்பதற்கு ‘சிவனேன்னு கிட’ என்றுதான் சொல்கிறோம். ரொம்பவும் கார்யத் துடிப்போடு ஒன்று பண்ணக் கிளம்பினால் ‘சக்தியோடு புறப்பட்டான்’ என்கிறோம். ‘சக்தியே இல்லை; அதனாலே சிவனேன்னு கிடந்தேன்’ என்று ஸஹஜமாக யாரும் சொல்கிறோம்.

லோக ரீதிக்கு வழிகாட்டுவதான தர்ம சாஸ்த்ரங்களில் பதியை வைத்துத்தான் பத்னி, பதிக்கு அடங்கித் தான் பத்னி என்று வைத்திருக்கிறது. ஈஸ்வரன்-அம்பாள் என்பதை தத்வார்த்தமாக [முறையே] நிஷ்க்ரியமான நிர்குண ப்ரஹ்மம், ஜகத் வியாபார மஹாசக்தி (மாயாசக்தி என்கிறதுந்தான்) என்று பார்க்கிறபோதோ நேர்மாறாக இருக்கிறது!

தத்வார்த்தமாக சிவன் powerless, சக்தியே powerful என்று இருப்பதுமட்டுமில்லை. காவ்ய மரபை எடுத்துக் கொண்டாலும் ச்ருங்கார கேளியில் நாயகி என்கிறவளுக்கே நாயகனுக்கு மேலே ஸ்தானம் கொடுத்து வர்ணிப்பது வழக்கமாயிருக்கிறது. இரண்டு பேருக்கும் நடுவில் மனஸ்தாபம் வந்து, தீருகிறபோது முடிவில் அவன்தான் அவள் காலில் போய் விழுந்தான் என்று கவிகள் எழுதுகிறது வழக்கம். ‘கீத கோவிந்த’த்தில் அப்படித்தான் வருகிறது. ”பெரிய மனஸு பண்ணி என் தலைக்கு அலங்காரமாக அதன் மேலே உன் பாதத்தை வை!” என்றே கிருஷ்ணர் ராதையிடம் வேண்டிக்கொண்டதாக அதில் இருக்கிறது6. இதையே சிவன்-அம்பாள் ஊடலிலும் காவ்யங்களில், புராணங்களில் சொல்லியிருக்கிறது. இந்த ஸெளந்தர்ய லஹரியிலேயேகூடப் பின்னாடி அப்படி வருகிறது. பாத்யம் என்று ஒரு உபசாரம். ஒரு தேவதைக்குப் பூஜை பண்ணும்போது அதை எழுந்தருளப் பண்ணினவுடன், நம் அகத்திற்கு வந்தவர்களுக்குக் கால் அலம்ப ஜலம் கொடுப்பதுபோல, அந்த தேவதையின் பாதத்தில் ஜலம் விட்டு அலம்பி உபசரிப்பது பாத்யம். அம்பாளுக்கு இப்படிப்பட்ட பாத்ய தீர்த்தமாக ஈச்வரனின் ஜடையிலுள்ள கங்கையே இருக்கிறது என்று பின்னாடி ஆசார்யாள் சொல்கிறார்7. என்ன அர்த்தம்? இவள் பாதத்தில் அவர் சிரஸ் இருக்கிறது என்றுதானே? அப்போதுதானே அவருடைய சிரஸிலுள்ள கங்கை இவளுடைய பாத தீர்த்தமாக முடியும்?

இன்னொரு ச்லோகத்திலும் இன்னும் வ்யக்தமாகவே [வெளிப்படையாகவே] சொல்கிறார். கவி மரபு என்னவென்றால், தன் காலில் நாயகன் விழுந்தால்கூட உடனே நாயகி, ‘ஐயையோ, பதி இப்படிப் பண்ணுகிறாரே!’ என்று வாரிச் சுருட்டிக்கொண்டு அவனோடு ஸ்நேஹமாய் விட்டாள் என்று சொல்லமாட்டார்கள். நமக்குக் கேட்கவே என்னவோ போலத்தானிருக்கும், ஆனாலும் காவ்யம் என்று வரும்போது ச்ருங்காரத்துக்கு ஏற்றம் கொடுக்க வேண்டும் என்ற அபிப்ராயத்தில், என்ன சொல்வார்களென்றால் – அவன் அவள் காலில் விழுந்தான் அப்பவும் அவள் கோபம், அல்லது பொய்க் கோபம், தணியாமல், அல்லது தணியாத மாதிரி, அவன் தலையைக் காலால் உதைத்தாள்; அதற்கும் அவன், ‘ஐயோ உன் காலை வலிக்கப்போகிறதே!’ என்றுதான் அழுதான்; அப்புறந்தான் அவள் ஸமாதானமானாள் என்று வர்ணிப்பார்கள். கவிதா லக்ஷணங்கள் பூர்ணமாக இருக்கும்படியான ஒரு ஸ்துதியாக இது [‘ஸெளந்தர்ய லஹரி’] ஆசார்யாள் வாக்கில் வரவேண்டுமென்று திவ்ய ஸங்கல்பமிருந்ததால் இந்த ஸமாசாரத்தைக்கூட அவர் அம்பாள்-ஈச்வரனை ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறார்8.

ஜகத்குரு என்ற கடமைப்படி அவர் லோகம் முழுவதற்கும் முதலில் முக்யமாகச் சொல்லவேண்டியது தர்ம சாஸ்திர ஒழுக்கங்களைத்தான் என்று வைத்துக் கொண்டிருந்தார். அப்புறம் பக்வம் பார்த்து பக்தி காவ்யம், அதற்கும் அப்புறந்தான் தத்வம், ஞானம் என்றெல்லாம் சொல்லவேண்டியது என்று வைத்துக் கொண்டிருந்தார். அப்படிப்பட்டவர் அம்பாள் ப்ரேரணையில் இப்போது இந்த ஸ்தோத்ரம் பண்ணும்படி ஆனபோது ஒரு பக்கம் சாக்த தத்வ சாஸ்த்ரத்தின்படி பதியான பரமசிவனுக்கு மேலே பத்னியான அம்பாளுக்கு மஹிமை சொல்ல வேண்டியதாயிற்று. இன்னொரு பக்கம் கவி மரபின்படி அவள் நாயகி அவர் நாயகன் என்று வைத்து, இங்கேயும் பதிக்கு மேலே பத்னியை உயர்த்திக்காட்ட வேண்டிவந்து விட்டது. ”என்னடா (இ)து? அத்தனை தர்ம சாஸ்த்ரங்களும் ‘கல்லானாலும் கணவன்’ என்றுதான் ஒரு ஸ்த்ரீ அவனிடம் பவ்யமாக இருக்கணுமென்று சொன்னால், தர்ம பீடத்தில் ஆசார்யராக இருக்கிற நாம் இதற்கு வித்யாஸமாக அம்பாள் இருப்பதைச் சொல்லி எல்லா ஸ்த்ரீகளும் அதுதான் தங்களுக்கும் ‘எக்ஸாம்பிள்’ என்று எடுத்துக் கொண்டுவிட்டால் என்ன ஆவது?” என்று ஆசார்யாள் பார்த்தார். அதனால்தான், இதற்கு ‘காம்பன்ஸேட்’ பண்ணுகிற மாதிரி, ‘எடுத்த எடுப்பில் பதி-சிவன் பேரைப் போட்டு அப்புறமே அவள் பேரைப் போடுவோம். இவள் சேர்ந்தால்தான் அவனுக்குப் பெருமை என்று உள்ளே சொன்னாலும், அவளுக்கு முந்தி அவன் பேருக்கு முதலிடம் கொடுத்துப் போட்டாலே அவனை அநுஸரித்து, பின்தொடர்ந்து போவதுதான் அவளுக்கும் பெருமை என்று ஸ்த்ரீ ஸமூஹத்துக்குத் தெரியப்படுத்திவிடுவோம்’ என்கிற உத்தேசத்திலேயே ”சிவ : சக்த்யா” என்று ஆரம்பித்ததாகத் தோன்றுகிறது.

அப்புறமும் ஸ்தோத்திரத்திற்குள், அம்பாள் தர்ம சாஸ்திரபடியான பரம பாதிவ்ரத்யத்தை அநுஷ்டிப்பவள் என்று நன்றாகவே உடைத்துக் காட்டியும் சில ச்லோகங்கள் பண்ணியிருக்கிறார். ராஜராஜேச்வரியாக ஸமஸ்த தேவர்களும் நமஸ்காரம் பண்ணக் கொலுவிருக்கும் அம்பாள் ஈச்வரன் வருகிறாரென்றால் உடனே ஒரே மரியாதையாக, ஒரே பரபரப்பாக, ப்ரியமாக எழுந்திருந்து ஓடிப்போய் வரவேற்பாள்; அப்போது வழியிலே அவளுக்கு நமஸ்காரம் பண்ணிக்கொண்டிருக்கும் தேவர்களின் கிரீடத்தில் அவள் இடறிக் கொண்டுவிடப் போகிறாளே என்பது ஸகிகள் எச்சரிக்கை பண்ணிக்கொண்டேயிருப்பார்கள் என்று ஒரு இடத்தில் சொல்கிறார் [ச்லோ. 29]. இன்னொரு இடத்தில் [ச்லோ. 64] ”பதியின் குண கணங்களைப் பற்றி ஓயாமல் பேசிப் பேசி உன் நாக்கு செம்பருத்திப் பூவாகச் சிவந்து விட்டது” என்கிறார். இன்னொரு ச்லோகத்தில் [66] பரமேச்வரனின் வித விதமான லீலைகளை ஸரஸ்வதி வீணாகானம் செய்வதைக் கேட்டு கேட்டே அம்பாள் ஸந்தோஷப்படுகிறாள் என்கிறார். பதிக்கு நமஸ்காரம் பண்ணிப் பண்ணித்தான் அவளுடைய முழங்கால் கெட்டிப் பட்டுப் போயிற்று என்று ஒரு இடத்தில் சொல்கிறார் [ச்லோ. 82]. கடைசி ச்லோகங்களில் ஒன்றில் [96] ”ஸதீநாம் அசரமே!” என்றே அவளைப் பெருமைப்படுத்திக் கூப்பிடுகிறார்; ”பதிவ்ரதைகளில் நம்பர்-1” என்று அர்த்தம்.

சாஸ்த்ரத்திற்கு விரோதமாக ஒன்றை ஜன ஸமூஹம் ‘ஐடிய’லாக நினைக்கும்படிப் பண்ணிவிடக் கூடாதென்றே பதி-ஈச்வரன் பேரைச் சொல்லி ஆரம்பித்திருக்கிறார். ”அன்னையும் பிதாவும்’,” – வேதத்திலேயே ”மாத்ரு தேவோ”வுக்கு அப்புறந்தான் ”பித்ரு தேவோ” – என்றே இருந்தாலுங்கூட, உள்ளே ஸ்தோத்ரத்தில் ஈச்வரனுக்கு மேலே அம்பாள் என்று நிறையக் காட்டவேண்டியிருப்பதால் ‘காம்பன்ஸேஷ’னாக எடுத்தவுடன் சிவ நாமாவைப் போட்டு அப்புறம் சக்தியைச் சொன்னாற்போல இருக்கிறது! சக்தியோடு சேர்ந்தால்தான் சிவனுக்குப் பெருமை என்று இந்த ச்லோக தாத்பர்யம். ஆனால் வார்த்தையைப் போட்டிருக்கும் விதத்தாலேயே அவனோடு சேர்ந்திருந்தால்தான் அவளுக்குப் பெருமை என்று தெரிவிப்பதாக முதலில் அவன் பேர், அப்புறமே அவள் பேர் என்று வைத்திருக்கிறார்: முதலில் ‘சிவ’, அப்புறம் ‘சக்த்யா’.

இவளால் அவன், அவனால் இவள் என்று ஒருத்தருக்கொருத்தர் பெருமை சேர்த்துத் தருபவர்களாக ஆதி தம்பதி இருக்கிறார்கள். வாஸ்தவத்தில் ஏற்றத் தாழ்வேயில்லாமல், அவர்கள் ஒருத்தருக்கு மற்றவர் ஸமம் என்று இருப்பவர்கள். ‘அன்யோன்ய ஸத்ருசம்’ என்று சொல்வது. ஈச்வரனும் அம்பாளும் ஸமமான மஹிமை உடையவர்கள்.

ஸமயம், ஸமயம் என்று மதத்துக்கு ஒரு பேர் சொல்கிறோம். இந்து சமயம், சமண சமயம், சமய குரவர் என்றெல்லாம் படிக்கிறோம். மதத்திற்கே பொதுப் பெயராகிவிட்ட இந்த ‘ஸமயம்’ என்ற வார்த்தை சிவ-சக்திகளின் ஸமத்வத்தை வைத்து உண்டான பேர்தான். சாக்த, சைவ சாஸ்த்ரங்களில் ‘ஸமயாசாரம்’ என்பது உபாஸனா மார்க்கங்களில் ஒன்று; வெளிப் பூஜையாயில்லாமல் ஹ்ருதயத்திலே பாவனா ரூபமாகப் பண்ணும் உசந்த உபாஸனை. அதற்கு ஏன் ஸமயம் என்று பேர் என்றால் அதில் அம்பாளையும் ஈச்வரனையும் ஐந்து விதத்தில் ஸமமானவர்களாக பாவிக்க வேண்டும். ‘பஞ்ச ஸாம்யம்’ என்பார்கள். ஒன்று – அவர்களுடைய நாமம் ஸமம் – அவர் சிவன் என்றால் அவள் சிவா. அவர் ஹம்ஸன் என்ற பேருடன் இருக்கிறபோது அவளுக்கு ஹம்ஸி என்று பேர். அவர் பைரவர் என்ற பேரில் இருந்தால் அப்போது அவள் பைரவி. ஸமயன் என்றேகூட அவருக்கு ஒரு பேர். அப்போது அவள் பேரும் ஸமயா. இரண்டு – அவர்கள் ரூபத்திலேயும் ஒரேமாதிரி ஸமமாக இருப்பவர்கள் – காமேச்வர-காமேச்வரிகளில் இரண்டு பேருக்குமே சிவப்பு வர்ணம், சதுர்புஜம், த்ரிநேத்ரம், சிரஸில் சந்த்ர கலை, சதுர்புஜத்தில் அதே நாலு ஆயுதங்கள்: தநுர் பாண-பாச-அங்குசங்கள். மூன்று – அவர்கள் இருக்கிற இடமும் ஒன்றே: அதே மேரு சிகர மத்தி; அம்ருத ஸாகரத்தில் மணித்வீபத்தின் மத்தி; ஸ்ரீசக்ரத்தின் மத்ய பிந்து. நாலு – இரண்டு பேரும் செய்யும் கார்யமும் ஒன்றே. பஞ்ச க்ருத்யம் என்ற ஐந்தொழில்9. ஐந்து – அவர்களால் லோகம் பெறுகிற அநுக்ரஹங்களும் ஒன்றாகவே இருக்கின்றன.

இப்படியெல்லாம் ஸமத்வம் சொல்கிறது ஒரு பக்கம். நம் மனஸின் ஆழத்தில் அந்த அபிப்ராயந்தான் இருக்க வேண்டும். ஜீவகோடிகளைப் பார்க்கும்போதுகூட ஸம பாவந்தான் இருக்கவேண்டும் என்கிறபோது தெய்வங்களுக்குள்ளே உசத்தி தாழ்த்தி சொல்லப்படாதுதான். அதிலும் தம்பதியாக, நமக்குத் தாயும் தந்தையுமாக இருக்கிறவர்களிடம் வித்யாஸம் பண்ணுவது ஸரியேயில்லைதான். ஆகையினால் அடி மனஸில் [இருவரும்]ஒன்று என்ற எண்ணமே இருக்கவேண்டும். ஆனாலும் ‘அம்மா’! என்று கொஞ்சப் போகிறபோது, அல்லது ‘அப்பா’! என்று கொஞ்சப் போகிறபோது யாரிடம் போகிறோமோ அவருக்கு ஈடு, ஸமம் எவருமேயில்லை என்றுதான் ஆசையிலே தோன்றும். அப்பாவைவிட அம்மா உசத்தி, அல்லது அம்மாவைவிட அப்பா உசத்தி என்று வைத்துக் கொண்டால்தான் அன்பு பூர்ணமாகப் பொங்கி வருவதற்கு அநுகூலமாக இருக்கும். அந்த context-ல் அந்த விதமாகக் குழந்தைகள் நினைப்பதை அந்த அப்பா-அம்மாவும் தப்பாக எடுத்துக்கொள்ளவே மாட்டார்கள். குழந்தை எப்படி ஆசைப்படுகிறதோ அதற்கு அநுஸரணையாகவே அம்மாவுக்கு அப்பா தாழ்ந்து போவார்; அல்லது அப்பாவுக்கு அம்மா தாழ்ந்து போவாள். காவ்ய ரீதியில் ஒரு கவிக் குழந்தை இப்படிப் பண்ணி ஸந்தோஷப்படும்படி லீலைகள் செய்வார்கள். தத்வ ரீதியாக ஒரு புத்திசாலிக் குழந்தை பார்த்துக்கொண்டு போகும்போதும் அதேமாதிரி அதன் பாவனைக்கு அநுஸரணையாக ஒருத்தர் மற்றவரை விட உசத்தியாகத் தெரிகிற விதத்தில் காட்டுவார்கள்.

இந்தப்படி சாக்த தத்வ சாஸ்தரமாயும், கவிதா ஸ்தோத்ரமாயும் ஒருங்கே இருக்கப்பட்ட ”ஸெளந்தர்ய லஹரி”யில் அம்பாளையே மஹிமை உச்சியில் காட்டுவதாகத்தான் பொதுவில் இருக்கும். இது பதி-பத்னிகளைக் குறித்த பொது தர்மாசாரத்திற்கு வித்யாஸமான அபிப்ராயங்களில் ஜனங்களைக் கொண்டு சேர்த்துவிடப் படாதே என்பதில் நம்முடைய ஜகதாசாரியாளுக்கு விசாரம் இருந்ததால் அங்கங்கே ஈச்வரனுக்கு ஏற்றம் கொடுத்துச் சொல்லி ஸரிகட்டியிருக்கிறார். ஆரம்பத்திலேயே அப்படித்தான் சிவ நாமாவைப் போட்டு அதை சக்தி நாமா ‘ஃபாலோ’ பண்ணுவதாகக் காட்டியிருக்கிறார்.


1 ச்லோ, 57; 84

2 ச்லோ. 2

3விவேகசுடாமணி, ச்லோ. 3

4 சிவபுராணம், வரி 18.

5ச்லோ. 28. (விளக்கம் பின்னால் வரும்).

6 19-வது அஷ்டபதி (“வதஸி யதி”)

7 ச்லோ. 84

8 ச்லோகங்கள் 85, 86 ஆகிய இரண்டிலுமே “இந்த ஸமாசாரம்” உள்ளது.

9படைப்பு, காப்பு, அழிப்பு, மறைப்பு (திரோதானம் எனும் மாயை). அருள் (அநுக்ரஹம் எனும் மோக்ஷம்). விளக்கம் இவ்வுரையில் பின்னர் வரும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ''ஆனந்த லஹரி''என்ற தலைப்பு:அத்வைதமும் சாக்தமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  சிவத்துக்கும் ஜீவசக்தி;ஆண்-பெண் பெயர்கள்
Next