கவிதை பிறந்த கதை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஆசார்யாள் மநுஷ்யாவதாரம் எடுத்து மநுஷ்யர்கள் மாதிரியே க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகப் போய், அங்கங்கே தம்முடைய திவ்ய சக்தியால் தெய்வ ஸாந்நித்யம் பலமாக ஸ்திரப்படுவதற்கு யந்திர ஸ்தாபனம் முதலானதைச் செய்து கொண்டே கைலாஸத்துக்குப் போய்ச் சேர்ந்தார். பார்வதி பரமேச்வரர்களை தரிசனம் பண்ணினார். அவர்களுடைய அவதாரம்தான் இவர்.

ராமர் இன்னொரு அவதாரமான பரசுராமரை ஸந்தித்துச் சண்டையே போட்டார். கிருஷ்ணர் இன்னொரு அவதாரமான பலராமருடன் ஸஹோதரராகச் சேர்ந்திருந்தார். இப்படி அவதாரத்திலே பல விசித்ரம்.

இங்கே அவதாரமான ஆசார்யாள் மூலமான பார்வதீ-பரமேச்வரர்களை தரிசனம் பண்ணினார்.

அப்போது ஈச்வரன் அவரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் ஒரு சுவடிக் கட்டையும் கொடுத்தார். சுவடியை அம்பாள் கொடுத்ததாகவும் சொல்வதுண்டு.

சுவடியில் என்ன இருந்தது என்றால், அம்பாளைப் பற்றிய நூறு ச்லோகங்கள். அது பரமேச்வரனே தேவியை ஸ்தோத்திரித்துப் பண்ணினது என்றும், ‘லலிதா ஸஹஸ்ரநாம’த்தை வசின்யாதி வாக்தேவதைகள் செய்த மாதிரி இந்த நூறு ச்லோகங்களையும் வாக் தேவதைகளே செய்தன என்றும் இரண்டு விதமாகச் சொல்வதுண்டு. ஸ்வாமியே ஒரு பக்தனின் பாவத்திலிருந்து கொண்டு அம்பாளைப் பாடியது என்று சொல்வதில்தான் ஜாஸ்தி மஹிமை ஏற்படுகிறது.

பஞ்ச லிங்கங்கள் ஈச்வர ஸ்வரூபமானவை. ஸ்வரூபம் என்று சொன்னாலும் கை, கால், தலை என்றில்லாததால் அருவுருவமானவை. சுவடியிலிருந்த ச்லோகங்களோ அம்பாள் ஸ்வரூபம். எப்படியென்றால் அம்பாளுக்கு இருக்கப்பட்ட பலவித ரூபங்களில் மந்த்ர மயமாகவும் அவளுக்கு ஒரு ரூபம் இருக்கிறது. அந்த நூறு ச்லோகங்களில் தேவியைக் குறித்த மந்திர சாஸ்திர விஷயங்கள்தான் முக்யமாக இருந்தன. ஆகையால், பஞ்சலிங்கம் எப்படி ஈச்வர ஸ்வரூபமோ, அப்படி இந்த ஸ்தோத்ரச் சுவடி அம்பாள் ஸ்வரூபமாயிற்று. ஆனபடியால் லிங்கங்களை ஈச்வரனே கொடுத்த மாதிரி, ஸ்தோத்திரத்தை அம்பாளே கொடுத்தாள் என்றால் பொருத்தமாயிருக்கிறது.

கொடுத்தவர், வாங்கிக் கொண்டவர், கொடுக்கப் பட்ட வஸ்து எல்லாமே ஒன்றுதான்! இதிலேயே அத்வைதம், த்வைதம் இரண்டும் கலந்து விடுகின்றன!

இந்தப் பஞ்ச லிங்கங்களில் ஒன்றுதான் [ஸ்ரீ காஞ்சி காமகோடி] மடத்துப் பூஜையிலிருக்கிற சந்திரமௌலீச்வரர். இதற்கு யோக லிங்கம் என்று பெயர். பாக்கி நாலில் முக்தி லிங்கம் கேதாரிநாத்திலும், வரலிங்கம் நேபாளத்தில் நீலகண்ட க்ஷேத்ரத்திலும், போகலிங்கம் சிருங்கேரியிலும், மோக்ஷலிங்கம் சிதம்பரத்திலும் ஆசார்யாளால் ப்ரதிஷ்டை பண்ணப்பட்டன. அதெல்லாம் பிற்பாடு நடந்த கதை.

பஞ்ச லிங்கங்களையும், ஸ்தோத்ரச் சுவடியையும் பெற்றுக் கொண்ட ஆசார்யாள் லோகத்தில் ஈச்வராராதனத்தையும், அம்பாள் ஸ்மரணத்தையும் பிரகாசப்படுத்துவதற்காகக் கைலாஸத்திலிருந்து புறப்பட்டார்.

வெளி வாசலில் காவலில் இருந்த நந்திகேச்வரர் ஆசார்யாள் கையிலிருந்த சுவடிக் கட்டைப் பார்த்தார். “ஸ்வாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுப்பதில்லை” என்று சொல்வதுண்டல்லவா? அந்த மாதிரி நந்திகேச்வரருக்கு, ‘மஹா பெரிய ஸொத்தான மந்திர சாஸ்திர சுவடி கைலாஸத்தை விட்டுப் போகிறதா?’ என்று தாபம் ஏற்பட்டது.

அவருக்கு அவ்வப்போது ரொம்ப வேகம் வந்துவிடும். அந்த மாதிரி இப்போதும் வந்தது. தாபம் கோபமாயிற்று. ஆசார்யனை மறித்து அவர் கையிலிருந்த சுவடியைப் பிடித்து இழுத்தார்.

ஆசார்யாள் ஸமாளித்துக் கொண்டு வெளியிலே வந்து விட்டார். ஆனால் நந்திகேச்வரர் உருவியதிலே சுவடியில் பாதிக்கு மேலே அவர் கைக்குப் போய்விட்டது. நூறு ச்லோகத்தில் ஐம்பத்தொன்பது அவரிடம் போய்விட்டன. அது சுவடியின் பின் பாகம். ஆசார்யாள் கையில் முதல் நாற்பத்தியொரு ச்லோகம் மட்டுமே மிஞ்சி நின்றது.

உங்களுக்கெல்லாம் நந்திகேச்வரர் மேலே கோபம் கோபமாக வருகிறதோ என்னவோ? ‘ஆனானப்பட்ட ஆசார்யாள் மேலே பாயவாவது? அம்பாளே பூலோகத்தில் ப்ரசாரமாகணுமென்று அவரிடம் கொடுத்த புஸ்தகத்திலே பாதிக்கு மேலே நமக்குச் சேர முடியாதபடி அபேஸ் பண்ணவாவது?’ என்று கோபம் வரலாம். ஆனால் எனக்கென்னவோ அந்த நந்தியம்பெருமானை ரொம்ப ‘தாங்க்’ பண்ணனுமென்று இருக்கிறது! ஏனென்றால், ஸொச்சம் கதை கேளுங்கள்.

‘அம்மா அநுக்ரஹம் பண்ணிக் கொடுத்தாள். அதிலே பாதிக்கு மேலே கோட்டை விட்டு விட்டோமே! ஜனங்களை உத்தேசித்து டிரஸ்டியிடம் தர்ம ஸொத்தை கொடுக்கிற மாதிரிக் கொடுத்தாள். தவற விட்டுவிட்டோமே!’ என்று ஆசார்யாள் ரொம்ப மனக்லேசம் அடைந்தார். ‘சங்கரம் லோக சங்கரம்’ என்று உலக நலனையே ஸதாவும் பண்ணிக் கொண்டிருந்தவர், அதற்கே தம்முடைய ஜீவிதத்தில் ஒவ்வொரு க்ஷணத்தையும் செலவிட்டவர், ‘கடைசியில் இப்படி லோகமாதா அள்ளிக் கொடுத்ததில் பாதிக்கு மேல் லோகத்துக்குச் சேரவிடாமல் பறி கொடுத்து விட்டோமே!’ என்று ரொம்ப வருத்தப்பட்டார்.

அப்போது அம்பாள் ஆஜ்ஞை பண்ணினாள். “தவறிப் போன ஐம்பத்தொன்பது ச்லோகங்களையும் நீயே பூர்த்தி பண்ணிவிடு. அதுதான் என் ஸங்கல்பம். அதுதான் எனக்கு ப்ரீதி. இதற்காகவேதான் அதைத் தவற விடும்படிப் பண்ணியது” என்று அம்பாளுடைய உத்தரவாயிற்று.

உடனே கடல் மடை திறந்ததுபோல ஆசார்யாள் அம்பாளை சிரஸிலிருந்து பாதம் வரையில் அங்கம் அங்கமாக வர்ணித்துப் பாடி நூறு ச்லோகமாகப் பூர்த்தி பண்ணி விட்டார்.

முதல் நாற்பத்தியொரு ச்லோகம் மந்திர சாஸ்திரம். அதைக் கொஞ்சம் பேர்தான் ரொம்பவும் கடுமையான நியமங்களோடு அநுஸந்தானம் பண்ணி அநுபவிக்க முடியும். மந்திரயோகம், குண்டலிநீயோகம் முதலியன அந்த பாகத்தில் வரும். இதில் கொஞ்சம் தப்பு வந்தாலும் விபரீதமாகும். தாயின் உபாஸனையில் எப்படிப் பண்ணினால் என்ன என்று நினைப்பது ஸரியில்லை. அவளுடைய லீலை பல விதம். அதனால் ஸுலபமான, ஸெளக்யமான ஸாதனா மார்க்கம் போலவே, கடுமையாக உக்ரமாக உள்ள மார்க்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறாள். அததை அப்படி அப்படித்தான் அநுஷ்டானம் பண்ண வேண்டும். ஆலய தரிசனம், ஸ்தோத்ர பாராயணம், கீர்த்தனம் பாடுவது, பஜனை பண்ணுவது, கதை புராணம் கேட்பது என்ற ஸுலபமான வழிகள் இருக்கிறபோது, அது போதாது என்று ஜபம், யோகம், ஸ்ரீ சக்ர பூஜை என்பவற்றை எடுத்துக்கொண்டு, ஆனாலும் “இதுகளை நியமம் இல்லாமல் பண்ணுவேன்” என்றால் அம்பாள் அதைப் போக்கிரித்தனம் என்றுதான் நினைப்பாள். முடிந்த சில பேருக்குத்தான் இவை என்று விட்டுவிட வேண்டும்.

இப்படிப்பட்ட சில பேரிடம் மட்டுமின்றி ஆசார்யாளோ ஸமஸ்த ஜனங்களிடமும் பரம கருணை கொண்டவர். ‘பாபியையும் பரமாத்மா ஆக்கியவர்’ என்று கன்னடத்தில் அவரைப் பற்றிய பாட்டில் வருகிறது1. அதனால் அவர் அம்பிகையை மந்திர ஸ்வரூபமாக இல்லாமல், ஸுந்தர ஸ்வரூபமாக கேசாதி பாதம் [கூந்தலிலிருந்து திருவடி வரை] ஸகல ஜனங்களும் கல்பித்துப் பார்த்து ஸந்தோஷப்படும்படியாக ஒரே வர்ணனை மயமாக மீதி ஐம்பத்தியொன்பது ச்லோகங்களையும் பாடி அநுக்ரஹம் பண்ணிவிட்டார். அம்பாளுடைய ஸெளந்தர்ய ஸ்வரூபமே அவருடைய கவிதா வாக்காக அவதாரம் பண்ணிவிட்டது.

இந்த ஐம்பத்தியொன்பது ச்லோகங்களுக்கு மட்டுமே குறிப்பாக ‘ஸெளந்தர்ய லஹரி’ என்று முதல் நாற்பத்தியொன்றிலிருந்து பிரித்துப் பெயர் சொல்கிறதும் உண்டு. முதல் நாற்பத்தியொரு ச்லோகங்களுக்கு ‘ஆனந்தலஹரி’ என்று பெயர் சொல்வார்கள்.

இரண்டையும் சேர்த்தே நூறு ச்லோகமுள்ள ஒரே ஸ்தோத்ரமாகக் கொண்டுதான் பாராயணம் செய்ய வேண்டும். இப்படி ஒரே நூலாகக் கொள்ளும்போது முதல் பாகத்துக்கு ‘ஆனந்த லஹரி’ என்றும், இரண்டாம் பாகத்துக்கு ‘ஸௌந்தர்ய லஹரி’ என்றும் பெயர். மொத்தமாக இரண்டும் சேர்ந்த முழு நூலுக்கும் ‘ஸெளந்தர்ய லஹரி’ என்றுதான் பெயர்.

ஆசார்யாள் கைலாஸத்துக்குப் போய் பார்வதீ பரமேச்வராளிடமிருந்து பஞ்ச லிங்கமும் ஸெளந்தர்ய லஹரிச் சுவடிக் கட்டும் பெற்றுக்கொண்டு வந்தாரென்று நான் சொன்ன கதை ‘மார்க்கண்டேய ஸம்ஹிதை’யில் இருக்கிறது. அதில் ச்லோகமாக இருப்பதையே ‘க்ளோ’ஸாக ‘ஃபாலோ’ பண்ணி ‘ஆனந்த கிரீய சங்கர விஜய’த்தில் ‘ப்ரோ’ஸாகச் சொல்லியிருக்கிறது.

ஸெளந்தர்ய லஹரியின் அவதாரிகை [தோற்றுவாய்] பற்றி வேறே கதைகளும் உண்டு. முதல் நாற்பத்தியொன்று உள்பட நூறு ச்லோகமும் ஆசார்யாளே பண்ணியதுதான் என்றும் பல பேருக்கு அபிப்ராயமிருக்கிறது2.

முதல் நாற்பத்தொன்றை அவர் கைலாஸத்திலிருந்து கொண்டு வந்திருந்தால்கூட, முழுப் புஸ்தகத்தையும் அவர் பேரிலேயே சொல்வதில் தப்பில்லை. ஏனென்றால் நமக்கு எட்டாமல் கைலாஸத்திலிருந்ததை லோகத்தில் பிரசாரத்துக்குக் கொண்டு வந்தவர் அவர்தானே? ரிஷிகள்கூடத் தாங்களே மந்த்ரங்களைப் பண்ணாமல் ஏற்கெனவே ஆகாசத்தில் வியாபித்திருந்த சப்தங்களையே நாம் கேட்கிற மாதிரி நமக்குப் பிடித்துக் கொடுத்துப் பிரசாரம் பண்ணினவர்கள்தான். ஆனால் ஒவ்வொரு மந்த்ரத்துக்கும் இன்னார் ரிஷி என்று, அதைப் பிரசாரம் பண்ணினவரின் பேரிலேயேதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அந்த நியாயத்தில் மந்த்ர சாஸ்திரமாகவே அமைந்துள்ள நம்முடைய முதல் பாக 41 ச்லோகங்களையும் ஆசார்யாள் தான் நம்முடைய லோகத்திற்குக் கொண்டு வந்ததால் அவர் பேரிலேயே தாராளமாகச் சொல்லலாம்.

இன்னொன்று: பரமேச்வரனே செய்த ஸ்துதிதான் அந்தக் கைலாஸ ஸௌந்தர்ய லஹரி என்றால், ஆச்சர்யாள் யார்? அதே கைலாஸ சங்கரன்தானே காலடி சங்கரராக வந்தது? அதனால் அவன் பண்ணினதை இவர் பேரில் சொல்வதில் குற்றமில்லை.

முதல் நாற்பத்தியொரு ச்லோகங்கள் மந்திர சாஸ்திர ஸூக்ஷ்மங்கள், குண்டலிநீ யோக தத்வங்கள், ஸ்ரீவித்யா என்கிற மஹாத்ரிபுர ஸுந்தரி ஆராதனை பற்றிய ரஹஸ்யங்கள் முதலியவற்றைச் சொல்கின்றன. அதில் உபாஸகர்களுக்கு ரொம்பவும் உபயோகமான விஷயங்கள் இருக்கின்றன.

ஆனாலும், பின்னாலுள்ள, ஆசார்யாள் வாக்கிலிருந்த வந்த 59 ச்லோகங்களின் அழகே அழகு. காம்பீர்யத்துக்கும் ஸரி, மாதுர்யத்துக்கும் ஸரி இந்த வாக்குதான் சிகரம் என்று சொல்கிற மாதிரி அப்படிப்பட்ட அத்புதமான ச்லோகங்கள் அவை. சொல்லழகு, பொருளழகு இரண்டிலுமே ஈடிணை இல்லாமலிருப்பவை. ஸகல ஜனங்களுமே படித்துப் படித்து ஆனந்தப்படக் கூடியது இந்த பாகம்தான்.

பழங்காலத்தில் செய்த அதிஸுந்தரமான விக்ரஹங்களிலும், சில்பங்களிலும் நகத்தளவு பங்கமானாலும்கூட, பிற்காலத்தவர்களால் அதே மாதிரி வேலைபாட்டோடு செய்து ஒட்டுப்போட முடியவில்லை. இந்த மாதிரிதான், ஆசார்யாளின் ஸெளந்தர்ய லஹரி ச்லோகத்தில் ஒரு வார்த்தையை எடுத்துவிட்டு அதற்குப் பதில் இன்னொரு வார்த்தையை யாரும் போடமுடியாது!

அம்பாள் கொடுத்த மூல ஸ்தோத்ரத்தில் பாதிக்கு மேலே ஆசார்யாள் நந்திகேச்வரரிடம் நஷ்டப்பட்டதே நமக்கு லாபமாயிற்று! அந்த நஷ்டம் ஏற்பட்டிருக்கா விட்டால் ஆசார்யாளின் வாங் மஹிமை [வாக்குச் சிறப்பு] எத்தனை அற்புதமானது என்று நமக்குத் தெரிந்திருக்குமா? அதனால்தான் நந்திகேச்வரரைத் ‘தாங்க்’ பண்ணத் தோன்றியது. அவர் மட்டும் வழிப்பறி பண்ணாதிருந்தால் நாம் படித்துப் படித்து ஆனந்தப்படுவதற்கும், அதன் வழியாகவே அம்பாளிடம் பக்தி கொள்வதற்கும் இப்பேர்ப்பட்ட ச்லோகங்கள் கிடைத்திருக்குமா?


1 “மங்களம் குரு சங்கரா” எனும் பாடல்.
2 நமது ஸ்ரீசரணர்களும் முதல் 41-ல் வரும் ச்லோகங்களை ஆதி சங்கரர் இயற்றியதாகத்தான் குறிப்பிடுவது வழக்கம். தற்போதைய பேருரையிலேயே மிகப் பெரும்பாலும் அப்படித்தான் காண்கிறோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஞானியும் பக்தியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  நந்திகேச்வர நாடகம் எதற்கு?
Next