ஞானியும் பக்தியும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

கர்மா, பக்திகளில் பக்வப்பட்டு நிவ்ருத்தி மார்க்கத்தில் ப்ரவேசித்த பிறகு ஆத்ம ஞானம் ஸித்திக்கும்வரை லோகத்தை – அதாவது த்வைத லீலையை – மாயை என்று அப்படியே தள்ளவேண்டியதுதான். இந்த லோகத்தை நடத்தும் ஈச்வரனை உபாஸிப்பதற்கும் அப்போது இடமில்லை. ஆனால் ஞானம் வந்த பிறகு மாயை ஒருத்தரை மயக்கி ஸம்ஸாரத்தில் தள்ள முடியாது. அதனால் தைர்யமாக மாயாலோக விளையாட்டுப் பார்க்கலாம். அந்த விளையாட்டைப் பண்ணும் ஈச்வரனையும் பலவிதமாக பக்தி பண்ணி அநுபவித்து மகிழலாம். ஆத்மா என்று ஞானி அநுபவிப்பதும் ஈச்வரனுடைய நிர்குண ஸ்வரூபம்தான். அதோடுகூட அவனுடைய ஸகுண லீலையையும் ஞானி அநுபவித்து ஆனந்தப்பட்டு அவனை ஸ்துதிக்கவும் முடியும். இது ஞானியுடைய ஸொந்த விஷயம். அதோடு, ஞானி மாயாலோகத்தைப்பார்க்கஆரம்பித்த பிறகு அதிலுள்ள ஜனங்களிடம் தன்னியல்பாக அவனுக்கு ஒரு கருணை பிறக்கும். அப்போது அவர்களை நல்ல வழியில் அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்பதற்காகவும் பக்தியிலேயே ஈடுபடக்கூடியவர்களான அவர்களை உத்தேசித்து அவனும் பக்தனாக நடந்துகொண்டு பக்தி ஸ்துதிகள், பூஜா க்ரமங்கள் ஆகியவை செய்வதும் உண்டு.

ஞான ஸ்வரூபியான சுகர்தான் பாகவத உபதேசம் பண்ணியவர். அத்வைத ஸ்தாபனாச்சார்யார் எனப்படும் ஆசார்யாளோ ஸ்தோத்ரம் பண்ணாத தெய்வமே இல்லை! ஷண்மத ஸ்தாபனமே வேறே பண்ணியிருக்கிறார்! கௌடபாதாளைப் பற்றியும் அந்தமாதிரி சொல்வதில் நடக்கக் கூடாததாக எதுவுமில்லை.

மேற்கு ஸமுத்ரக்கரையில் கொங்கண தேசத்தில் கோவாவிலுள்ள ஷிரோதா என்ற இடத்தில் ‘கௌடபாதாசார்ய மடம்’ என்றே ஒன்று இருக்கிறது. கௌட ஸாரஸ்வதர்கள் என்பவர்கள் அதை ஆச்ரயித்தவர்கள். இதிலே தேசிய ஒற்றுமை! எப்படியென்றால், கொங்கணம் இருப்பது பஞ்ச த்ராவிடத்தைச்சேர்ந்த கர்நாடக பார்டர், கௌடர், ஸாரஸ்வதர் என்பவர்கள் பஞ்ச கௌடர்களைச் சேர்ந்தவர்கள்! நம் குரு பரம்பரையில் ஆசார்யாள் த்ராவிடர்; கோவிந்தபகவத்பாதர் காஷ்மீரியானால் ஸாரஸ்வதர்; கௌடபாதர் கௌடரே!

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is பக்தி-கவிதைச் சிகரம் ' ஸெளந்தர்ய லஹரி '
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  கவிதை பிறந்த கதை
Next