மூன்றாம் கட்டத்தின் மூன்று அங்கங்களுக்கு முன் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஸாதனா சதுஷ்டயத்தை நன்றாக அப்யாஸம் பண்ணிய பின் குருமுகமாக ஸந்நியாஸமும் மஹா வாக்யோபதேசமும் பெற்று, அவர் உபதேசிக்கிற மற்ற ப்ரஹ்ம வித்யா சாஸ்திர ஸம்பிரதாய – ப்ரத்யக்ஷ அநுபவ ஸமாசாரங்களையும் கற்றுக்கொண்டு, அதையெல்லாம் புத்தி பூர்வமாக ஜீர்ணம் பண்ணிக்கொண்டு, அப்புறம் புத்தியிலிருப்பது ஹ்ருதயத்தில் இறங்கி அநுபவமாவதற்காக ஸதா த்யானமாயிருக்க வேண்டும். அதுதான் மூன்றாவது ஸ்டேஜின் அங்கங்கள். அதே த்யானமாயிருந்தால் முடிவிலே ப்ரஹ்மாநுபவம் ஏற்பட்டுவிடும். அதுதான் பந்தத்திலிருந்து மோக்ஷம்; ஸத்ய ஸாக்ஷாத்காரம்.

இப்போது நான் சொன்ன இந்த ஸமாசாரங்களை நாலு அங்கம் என்று நடு ஸ்டேஜில் சொன்னாற்போல மூன்று அங்கங்களாக வரிசைப்படுத்திச் சொல்வார்கள்: ‘ச்ரவணம்’, ‘மனனம்’, ‘நிதித்யாஸனம்’ என்று மூன்று பேர் கொடுத்துச் சொல்வார்கள்.

அதனால் இங்கேயிருப்பவர்களில் ஸாதனா க்ரமம் தெரிந்தவர்கள், முமுக்ஷுத்வத்தை முடித்துவிட்டு, மூன்றாம் ஸ்டேஜ் பற்றி ஆரம்பிக்கப் போகிறேன் என்றதும் ‘ச்ரவணம்’ என்று ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்ப்பீர்கள். (சிரித்து) நான் ஏமாற்றப் போகிறேன்! ஏன் ஏமாற்றப் போகிறேன் என்றால், ஸொந்த ஹோதாவிலே இல்லை! ஆசார்யாளே அப்படித்தான் ஏமாற்றியிருப்பதால்! ஏமாற்றுவது ஒன்றையாவது அவர் மாதிரி நாமும் பண்ணலாமே என்றுதான்! அவர் பண்ணாத வேறே அநேக விஷயங்களில் அதை [ஏமாற்றுவதை]ப் பண்ணிவிட்டு, அவரே பண்ணின இடத்தில் நாம் விடுவானேன் என்று!

என்ன ஏமாற்றியிருக்கிறாரென்றால், ‘விவேக சூடாமணி’யைப் பார்த்துக் கொண்டு போனால் தெரியும். அதை ‘ஃபாலோ’ பண்ணித்தான் [இதுவரை உபந்நியஸித்த] விஷயங்களைச் சொல்லிக்கொண்டு போனது. ஏனென்றால் அதுதான் தீர்ந்த முடிவாக ஆசார்யாள் அநுக்ரஹித்த ஸொந்த நூல். அதிலே முமுக்ஷுத்வத்தைச் சொல்லி, மந்த-மத்யம நிலைக்காரர்களைக் குறிப்பிட்டு அவர்களையும் உத்ஸாஹப்படுத்திவிட்டு, “வைராக்யமும் முமுக்ஷுதையும் தீவிரமாயில்லாமல் தூங்கி வழிந்துகொண்டு இருந்தால் மனஸ் அடங்கி ஆத்மா வெளிப்படாது என்பது வாஸ்தவந்தான். அந்த மந்த தசையில் மனஸ் அடங்கினாற்போலத் தோன்றினாலுங்கூட அது கானல் நீர்க் காட்சிதான். ஆனால் அதற்காக அதைர்யம் வேண்டாம்; நம்பிக்கை இழக்க வேண்டாம். வைராக்யத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, முமுக்ஷுதையையும் தீவிரமாக்கிக் கொண்டீர்களானால் மந்த மத்யமமான யாரானாலும் உத்தமமாக உசந்து மனஸை அடக்கிவிடலாம். அதன் பலனான ஸித்தியும் பெறலாம்”1 என்று ஆச்வாஸம் பண்ணி, ஸாதனா சதுஷ்டய விஷயத்தை முடிக்கிறார்.

அதற்கப்புறம் ‘ச்ரவண’த்தைப் பற்றி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றுகிறார்! ‘பக்தி’ என்று புதுசாக ஒரு ‘டாபிக்’கை ஆரம்பிக்கிறார்!


1 29 & 30 (அ) 30 & 31. இச் ச்லோகங்களை முன்பின்னாக மாற்றிப் பொருள் கூறியுள்ளார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஆன்மியமான நால்வகைப் படை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  பக்தி : ஞானமார்க்த்தில் அதன் இடம்
Next