ஆன்மியமான நால்வகைப் படை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

நாலங்கம், சதுரங்கம். அப்படிச் சொன்னால் பாண்டவர்கள் கௌரவர்களோடு ஆடிய ஆட்டம் நினைவு வரும். ஸைன்யத்தில் ரதம், கஜம், துரகம் (குதிரை) , பதாதி (காலாள்) என்று நாலு அங்கம் இருப்பதால் ‘சதுரங்க ஸேனை’ என்று சொல்வது. சொக்கட்டான் சதுரங்கத்திலும் இதே மாதிரி நாலு விதமான காய்களை நகர்த்தித்தான் வெற்றி தோல்விகள் ஏற்படுவதாக விளையாடுவது. செஸ்ஸும் இதை பேஸ் பண்ணினதுதான். ‘இந்தியாவிலிருந்துதான் ரொம்ப காலம் முந்தி (இதை) இறக்குமதி பண்ணிக்கொண்டோம்’ என்று வெள்ளைக்காரர்களே ஒப்புக் கொள்கிறார்கள். இந்தியாவிலிருந்து முதலில் பெர்ஷியாவுக்கு இந்த ஆட்டம் போய், அப்புறம் ஐரோப்பாவுக்கு போனதால் பெர்ஷியன் பாஷையில் ராஜாவுக்கு உள்ள பெயரை வைத்து ‘செஸ்’ என்று பேர் ஏற்பட்டது என்கிறார்கள். அங்கே வேடிக்கையாக எப்படி மாறுதல் ஏற்பட்டிருக்கிறதென்றால், நாலு வகை ஸைன்யமாகக் காய்கள் இல்லாமல் ராஜாவாகவே ஒரு காய் உண்டு. ராணிக் காயும் உண்டு. அதோடு யுத்த ஸம்பந்தமே இல்லாதவர் என்று தோன்றுகிற பிஷப் காயும் உண்டு. ஆனால் அவர்கள் (ஐரோப்பியர்கள்) சரித்திரத்தைப் பார்த்தால் முக்கால்வாசிச் சண்டைகளில் போப்களும் பிஷப்களும் தான் ராஜாக்களோடு மோதியிருப்பார்கள்; அல்லது தூண்டிக் கொடுத்திருப்பார்கள்….. அந்த விஷயம் இருக்கட்டும்….. கெட்டதுகளோடு போராடி மஹா பெரிய ஆத்ம ஸாம்ராஜ்யத்தைப் பிடிப்பதற்காகச் சதுரங்கம் கொண்ட ஸைன்யமாக இந்த ஸாதனாக்ரமம்! அதில் கடைசி முமுக்ஷுத்வம்.

ஸாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக அதை [முமுக்ஷுத்வத்தை] சொல்லியிருப்பதால், ஆரம்பத்திலிருந்து லேசாக இருந்து அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாக வலுப்பட்டுக் கொண்டுவந்த மோக்ஷ ஆசையை இந்த கட்டத்தில் நன்றாக புத்தி பூர்வமாக, மனப்பூர்வமாகத் தீவிரப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாகிறது. ‘நமக்காவது பந்த மோக்ஷமாவது, ஸாக்ஷாத்காரமாவது?’ என்று அவநம்பிக்கை உண்டாகிற தினுஸில் ஸாதனையில் அவ்வப்போது சறுக்கிவிட்டுக் கொண்டிருக்கும். அந்த மனப்போக்குக்கு இடம் கொடுக்கப்படாது. அதுமட்டுமில்லாமல் ‘விடுபட்டு முடியும்; ஸத்யத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அதுவே தாபமாக நாம் விடாப்பிடி பண்ணினால் அது சிக்கிக் கொள்ளாமல் போகுமா? நம்முடைய ஏற்ற இறக்கங்களை குரு ப்ரஸாதம் ஸமாளித்து ஸரிப்படுத்தாதா என்ன? ஆகையால் ‘விடுதலை’, ‘ஸத்யம்’ என்று ஆசையான ஆசைப்பட்டுத் தவிப்போம்!’ என்று அதை ஒரு பயிற்சியாகப் பண்ண வேண்டும். ‘எங்கேயோ அஞ்ஞான பிண்டமாகக் கிடந்த நமக்கும் விவேகம், வைராக்யம், இந்திரிய அடக்கம், மனஸடக்கம், ச்ரத்தை ஆகியதெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாக வலுப்பட்டுக் கொண்டு வரவில்லையா? இத்தனை தூரம் வந்துவிட்டு வழிகெட்டுப் போக குரு ப்ரஸாதம் விடாது. ஆகையினாலே நம்மாலேயும் [விடுபட] முடியும், முடியும் – நாம் மட்டும் அதே தாபமாக இருந்துவிட்டால்’ என்ற அபிப்ராயத்தோடு முமுக்ஷுதையைப் பயிற்சி செய்ய வேண்டும்; பயில வேண்டும்.

இதோடு ஸாதனா சதுஷ்டயம் பூர்த்தி. ஆனால் இதுவும் நடு ஸ்டேஜ், இரண்டாம் ஸ்டேஜ்தான்; இதற்கும் மேலே உச்சமாக மூன்றாம் ஸ்டேஜ் இருக்கிறதென்று மறந்து போயிருக்க மாட்டீர்கள். அதையும் சொல்லி – இத்தனை கதை சொல்லியும் பூரா சொல்லவில்லை என்றில்லாமல் ஸொச்சத்தையும் சொல்லி – பூர்த்தி பண்ணுகிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is முமுக்ஷ§ பற்றி ஆசார்யாளும் ஆதி நூல்களும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  மூன்றாம் கட்டத்தின் மூன்று அங்கங்களுக்கு முன்
Next