Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

அமலனாதிபிரான்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ:
திருப்பாணாழ்வார் அருளிச்செய்த

அமலனாதிபிரான்

திருப்பாணாழ்வார் பண்ணிசைத்துப் பாடுவதில் வல்லவர். பாட்டும் அரங்கனைப் பற்றியதாகவே இருக்கும். இவர் அருளிய இப்பத்துப் பாடல்களும் பழமறையின் பொருள்கள்.

ஆசிரியத் துறை

அரங்கனின் கமலபாதம் வந்துவிட்டது!

927. அமல னாதிபிரா னடியார்க்

கென்னை யாட்படுத்த

விமலன், விண்ணவர் கோன்விரை

யார்பொழில் வேங்கடவன்,

நிமலன் நின்மலன் cF வானவன்

நீள்மதி ளரங்கத் தம்மான்,திருக்

கமல பாதம்வந் தென்கண்ணி

னுள்ளன வொக்கின்றதே. 1

அரங்கனின் சிவந்த ஆடையைச் சிந்திக்கின்றேன்

928. உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற,

நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை,

கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில்

அரங்கத் தம்மான்,அரைச்

சிவந்த ஆடையின் மேல்சென்ற

தாமென் சிந்தனையே. 2

அவனது திருவுந்தியின்மேல் என் மனம் உள்ளது

929. மந்தி பாய்வட வேங்கட மாமலை, வானவர்கள்,

சந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்,

அந்தி போல்நிறத் தாடையு மதன்மேல்

அயனைப் படைத்த தோரெழில்

உந்தி மேலதன் றோஅடி

யேனுள்ளத் தின்னுயிரே. 3

அவனது திருவயிறு என் மனத்தில் உலவுகிறது

930. சதுரமா மதிள்சூ ழிலங்கைக்

கிறைவன் தலைபத்து

உதிர வோட்டி,ஓர் வெங்கணை

யுய்த்தவ னோத வண்ணன்,

மதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத்

தம்மான்,திருவயிற்

றுதரபந் தனமென்

னுள்ளத்துள்நின் றுலாகின்றதே. 4

அவனது திருமார்புதான் என்னை ஆட்கொண்டது

931. பாரமாய பழவினை பற்றறுத்து, என்னைத்தன்

வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி

யென்னுள் புகுந்தான்,

கோர மாதவம் செய்தனன்கொ லறியே

னரங்கத் தம்மான்,திரு

வார மார்பதன் றோஅடி

யேனை யாட்கொண்டதே. 5

அவனது திருக்கழுத்து என்னை உய்வித்தது

932. துண்ட வெண்பிறை யான்துயர்

தீர்த்தவன், அஞ்சிறைய

வண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேய வப்பன்

அண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம்

எழுமால்வரை, முற்றும்

உண்ட கண்டங்கண் டீரடி

யேனை யுய்யக்கொண்டதே. 6

அவன் பவளச்செவ்வாய் என்னைக் கவர்ந்தது

933. கையி னார்சுரி சங்கன லாழியர், நீள்வரைபோல்

மெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்

ஐயனார், அணியரங்கனா ரரவி

னணைமிசை மேய மாயனார்,

செய்யவா யையோ!என்னைச்

சிந்தை கவர்ந்ததுவே! 7

அவன் கண்கள் என்னை மயக்கி விட்டன

934. பரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட, அமரர்க்கு

அரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து,

கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து

செவ்வரி யோடி, நீண்டவப்

பெரிய வாய கண்க

ளென்னைப் பேதைமை செய்தனவே! 8

அவன் நீலமேனி என் மனத்தை நிறைத்தது

935. ஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய்,

ஞால மேழு முண்டா னரங்கத் தரவி னணையான்,

கோல மாமணி யாரமும் முத்துத் தாமமும்

முடிவில்ல தோரெழில்

நீல மேனி யையோ!

நிறை கொண்டதென் நெஞ்சினையே! 9

கலி விருத்தம்

அவனைக் கண்டேன்:மற்றொன்றைக் காணேன்

936. கொண்டல் வண்ணனைக்

கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை,

அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்

கண்ட கண்கள்,மற் றொன்றினைக் காணாவே. 10

அடிவரவு:அமலன் உவந்த மந்தி சதுரம் பாரம் துண்டகை பரி ஆலம் கொண்டல் --- கண்ணி.

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம் 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is அமலனாதிபிரான் தனியன்கள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கண்ணி நுண்சிறுத்தாம்புத் தனியன்கள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it