Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருமாலை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ:
தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த

திருமாலை

இவாழ்வார் பகவத சேஷத்தின் எல்லை நிலத்தில் இருப்பவர். அதற்கேற்றவாறு இவருடைய திருநாமமும், 'தொண்டரடிப்பொடிகள்'என்பதாயிற்று. இவரை அரங்கனே திருத்திப் பணி கொண்டான்.

இவ்வாழ்வார் திருவரங்கனைத் தவிர வேறு எவரையும் பாடவில்லை. அவனுக்குத் தொண்டு செய்வதையே விரும்பினார். அவன்மீது அருளிச் செய்யப்பெற்ற பாமாலையாதலால் இது 'திருமாலை'என்று பெயர் பெற்றது. 'திருமாலை அறியாதவர் திருமாலை அறியார்'என்பது பழமொழி. இவர் திருமாலையில், 'மோட்ச பலப்ரதனான திருவரங்கனே பரதெய்வம், அவனிடமும், அவனடியார்களிடமும் பக்தி செய்யாதவர் உலகில் வாழ்வதே வீண்'என்றும், 'அரங்கனே சிலையினால் இலங்கை செற்ற தேவன், அரங்கனே மதுரை மாநகரில் கவளமால் யானை கொன்ற கண்ணன்'என்றும் அறுதியிட்டு அனுபவிக்கிறார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அரங்கனே! நின் நாமத்தைக் கற்றேன்

872. காவலிற் புலனை வைத்துக்

கலிதனைக் கடக்கப் பாய்ந்து,

நாவலிட் டுழிதரு கின்றோம்

நமன்தமர் தலைகள் மீதே,

மூவுல குண்டு மிழ்ந்த

முதல்வ!நின் நாமம் கற்ற,

ஆவலிப் புடைமை கண்டாய்

அரங்கமா நகரு ளானே! 1

நின் பெயரைச் சொல்வதே பேரின்பம்

873. பச்சைமா மலைபோல் மேனி

பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா!அமர ரேறே!

ஆயர்தம் கொழுந்தே!என்னும்,

இச்சுவை தவிர யான்போய்

இந்திர லோக மாளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகரு ளானே! 2

பிறப்பே எனக்கு வேண்டாம்

874. வேதநூல் பிராயம் நூறு

மனிசர்தாம் புகுவ ரேலும்,

பாதியு முறங்கிப் போகும்

நின்றதில் பதினை யாண்டு,

பேதைபா லகன தாகும்

பிணிபசி மூப்புத் துன்பம்,

ஆதலால் பிறவி வேண்டேன்

அரங்கமா நகரு ளானே! 3

அரங்கனை அடைந்தபின் அல்லலே இல்லை

875. மொய்த்தவல் வினையுள் நின்று

மூன்றெழுத் துடைய பேரால்,

கத்திர பந்து மன்றே

பராங்கதி கண்டு கொண்டான்,

இத்தனை யடிய ரானார்க்

கிரங்கும்நம் மரங்க னாய

பித்தனைப் பெற்று மந்தோ!

பிறவியுள் பிணங்கு மாறே! 4

அரங்கன் அடியராகி ஆடிப்பாடுக

876. பெண்டிரால் சுகங்க ளுய்பான்

பெரியதோ ரிடும்பை பூண்டு

உண்டிராக் கிடக்கும் போது

உடலுக்கே கரைந்து நைந்து,

தண்டுழாய் மாலை மார்பன்

தமர்களாய்ப் பாடி யாடி,

தொண்டுபூண் டமுத முண்ணாத்

தொழும்பர்சோ றுசுக்கு மாறே! 5

அரங்கனாக்கு அடிமையாகுங்கள்

877. மறம்சுவர் மதிளெ டுத்து

மறுமைக்கே வெறுமை பூண்டு,

புறம்சுவ ரோட்டை மாடம்

புரளும்போ தறிய மாட்டீர்,

அறம்சுவ ராகி நின்ற

அரங்கனார்க் காட்செய் யாதே,

புறம்சுவர் கோலஞ் செய்து

புள்கவ்வக் கிடக்கின் றீரே! 6

இலங்கையை அழித்த தேவனே தேவன்

878. புலையற மாகி நின்ற

புத்தொடு சமண மெல்லாம்,

கலையறக் கற்ற மாந்தர்

காண்பரோ கேட்ப ரோதாம்,

தலையறுப் புண்டும் சாவேன்

சத்தியங் காண்மின் ஐயா,

சிலையினா லிலங்கை செற்ற

தேவனே தேவ னாவான். 7

பகவானைப் பழிப்பவர் அழியத்தான் வேண்டும்

879. வெறுப்போடு சமணர் முண்டர்

விதியில்சாக் கியர்கள்,நின்பால்

பொறுப்பரி யனகள் பேசில்

போவதே நோய தாகி,

குறிப்பெனக் கடையு மாகில்

கூடுமேல் தலையை ஆங்கே,

அறுப்பதே கருமங் கண்டாய்

அரங்கமா நகரு ளானே! 8

கண்ணன் கழல்களைப் பணிக

880. மற்றுமோர் தெய்வ முண்டே

மதியிலா மானி டங்காள்,

உற்றபோ தன்றி நீங்கள்

ஒருவனென் றுணர மாட்டீர்,

அற்றமே லொன்ற றீயீர்

அவனல்லால் தெய்வ மில்லை,

கற்றினம் மேய்த்த வெந்தை

கழலிணை பணிமி னீரே. 9

உலகம் உய்யத் திருவரங்கத்தைக் காட்டினான்

881. நாட்டினான் தெய்வ மெங்கும்

நல்லதோ ரருள்தன் னாலே,

காட்டினான் திருவ ரங்கம்

உய்பவர்க் குய்யும் வண்ணம்,

கேட்டிரே நம்பி மீர்காள்!

கெருடவா கனனும் நிற்க,

சேட்டைதன் மடிய கத்துச்

செல்வம்பார்த் திருக்கின் றீரே. 10

காலத்தை வீணாக்காமல் அரங்களை அழையுங்கள்

882. ஒருவில்லா லோங்கு முந்நீர்

அடைத்துல கங்க ளுய்ய,

செருவிலே யரக்கர் கோனைச்

செற்றநம் சேவ கனார்,

மருவிய பெரிய கோயில்

மதிள்திரு வரங்க மென்னா,

கருவிலே திருவி லாதீர்!

காலத்தைக் கழிக்கின் றீரே. 11

அரங்கம் என்னாதவர்க்கு இரங்குகிறேன்

883. நமனும்முற் கலனும் பேச

நரகில்நின் றார்கள் கேட்க,

நரகமே சுவர்க்க மாகும்

நாமங்க ளுடைய நம்பி,

அவனதூ ரரங்க மென்னாது

அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்,

கவலையுள் படுகின் றாரென்

றதனுக்கே கவல்கின் றேனே! 12

அரங்கனை நினைத்தால் நரகம் அழிந்துவிடும்

884. எறியுநீர் வெறிகொள் வேலை

மாநிலத் துயிர்க ளெல்லாம்,

வெறிகொள்பூந் துளவ மாலை

விண்ணவர் கோனை யேத்த,

அறிவிலா மனித ரெல்லாம்

அரங்கமென் றழைப்ப ராகில்,

பொறியில்வாழ் நரக மெல்லாம்

புல்லெழுந் தொழியு மன்றே? 13

கடவுளைத் தொழாதவர்க்குச் சோறு தராதீர்

885. வண்டின முரலும் சோலை

மயிலினம் ஆலும் சோலை,

கொண்டல்மீ தணவும் சோலை

குயிலினம் கூவும் சோலை,

அண்டர்கோ னமரும் சோலை

அணிதிரு வரங்க மென்னா,

மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை

விலக்கிநாய்க் கிடுமி னீரே. 14

அழகன் வாழும் ஊர் அரங்கம்

886. மெய்யர்க்கே மெய்ய னாகும்

விதியிலா வென்னைப் போல,

பொய்யர்க்கே பொய்ய னாகும்

புட்கொடி யுடைய கோமான்,

உய்யப்போ முணர்வி னார்கட்

கொருவனென் றுணர்ந்த பின்னை,

ஐயப்பா டறுத்துத் தோன்றும்

அழகனூ ரரங்க மன்றே? 15

என்னை ஆட்கொண்டவன் அரங்கன்

887. சூதனாய்க் கள்வ னாகித்

தூர்த்தரோ டிசைந்த காலம்,

மாதரார் கயற்க ணென்னும்

வலையுள்பட் டழுந்து வேனை,

போதரே யென்று சொல்லிப்

புந்தியில் புகுந்து,தன்பால்

ஆதரம் பெருக வைத்த

அழகனூ ரரங்க மன்றே? 16

அரங்கனைக் கண்ட களிப்பே களிப்பு!

888. விரும்பிநின் றேத்த மாட்டேன்

விதியிலேன் மதியன் றில்லை,

இரும்புபோல் வலிய நெஞ்சம்

இறையிறை யுருகும் வண்ணம்,

சுரும்பமர் சோலை சூழ்ந்த

அரங்கமா கோயில் கொண்ட,

கரும்பினைக் கண்டு கொண்டேன்

கண்ணிணை களிக்கு மாறே! 17

ஆனந்தக் கண்ணீர் வருகிறதே !

889. இனிதிரைத் திவலை மோத

எறியும்தண் பரவை மீதே,

தனிகிடந் தரசு செய்யும்

தாமரைக் கண்ண மெம்மான்,

கனியிருந் தனைய செவ்வாய்க்

கண்ணனைக் கண்ட கண்கள்,

பனியரும் புதிரு மாலோ

என்செய்கேன் பாவி யேனே! 18

பள்ளி கொண்டானைப் பார்த்தால் உடல் உருகும்

890. குடதிசை முடியை வைத்துக்

குணதிசை பாதம் நீட்டி,

வடதிசை பின்பு காட்டித்

தென்திசை யிலங்கை நோக்கி,

கடல்நிறவுக் கடவு ளெந்தை

அரவணைத் துயிலு மாகண்டு,

உடலெனக் குருகு மாலோ

என்செய்கே னுலகத் தீரே! 19

பள்ளிகொண்ட காட்சியே காட்சி!

891. பாயுநீ ரரங்கந் தன்னுள்

பாம்பணைப் பள்ளி கொண்ட,

மாயனார் திருநன் மார்பும்

மரகத வுருவும் தோளும்,

தூய தாமரைக் கண்களும்

துவரிதழ்ப் பவள வாயும்,

ஆயசீர் முடியும் தேசும்

அடியரோர்க் ககல லாமே? 20

மனமே!சஞ்சலம் எதற்கு?

892. பணிவினால் மனம் தொன்றிப்

பவளவா யரங்க னார்க்கு,

துணிவினால் வாழ மாட்டாத்

தொல்லைநெஞ் சே!நீ சொல்லாய்,

அணியனார் செம்பொ னாய

அருவரை யனைய கோயில்,

மணியனார் கிடந்த வாற்றை

மனத்தினால் நினைக்க லாமே? 21

மாசற்றார் மனத்தில் உள்ளான் அரங்கன்

893. பேசிற்றே பேச லல்லால்

பெருமையன் றுணர லாகாது,

ஆசற்றார் தங்கட் கல்லால்

அறியலா வானு மல்லன்,

மாசற்றார் மனத்து ளானை

வணங்கிநா மிருப்ப தல்லால்,

பேசத்தா னாவ துண்டோ?

பேதைநெஞ் சே!நீ சொல்லாய். 22

அரங்கனை எப்படி மறக்க முடியும்?

894. கங்கையிற் புனித மாய

காவிரி நடுவு பாட்டு,

பொங்குநீர் பரந்து பாயும்

பூம்பொழி லரங்கந் தன்னுள்,

எங்கள்மா லிறைவ னீசன்

கிடந்ததோர் கிடக்கை கண்டும்,

எங்ஙனம் மறந்து வார்கேன்

ஏழையே னேழை யேனே! 23

மனமே!காலத்தை வீணாக்காதே

895. வெள்ளநீர் பரந்து பாயும்

விரிபொழி லரங்கந் தன்னுள்,

கள்ளனார் கிடந்த வாறும்

கமலநன் முகமும் கண்டு,

உள்ளமே!வலியை போலும்

ஒருவனென் றுணர மாட்டாய்,

கள்ளமே காதல் செய்துன்

கள்ளத்தே கழிக்கின் றாயே! 24

கடல்வண்ணா!எனக்கு அருள்செய்

896. குளித்துமூன் றனலை யோம்பும்

குறிகொளந் தணமை தன்னை,

ஒளித்திட்டே னென்க ணில்லை

நின்கணும் பத்த னல்லேன்,

களிப்பதென் கொண்டு நம்பீ!

கடல்வண்ணா!கதறு கின்றேன்,

அளித்தெனக் கருள்செய் கண்டாய்

அரங்கமா நகரு ளானே! 25

நான் ஏன் பிறந்தேன்?

897. போதெல்லாம் போது கொண்டுன்

பொன்னடி புனைய மாட்டேன்,

தீதிலா மொழிகள் கொண்டுன்

திருக்குணம் செப்ப மாட்டேன்,

காதலால் நெஞ்ச மன்பு

கலந்திலே னதுதன் னாலே,

ஏதிலே னரங்கர்க்கு எல்லே!

என்செய்வான் தோன்றி னேனே! 26

அரங்கனுக்கு அடிமைசெய்யத் தயங்குகின்றேனே!

898. குரங்குகள் மலையை நூக்கக்

குளித்துத்தாம் புரண்டிட் டோடி,

தரங்கநீ ரடைக்க லுற்ற

சலமிலா அணிலம் போலேன்,

மரங்கள்போல் வலிய நெஞ்ச

வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,

அரங்கனார்க் காட்செய் யாதே

அளியத்தே னயர்க்கின் றேனே! 27

அரங்கனுக்கு அடியனாகாமல் ஏன் இருக்கின்றேன்?

899. உம்பரா லறிய லாகா

ஒளியுளார் ஆனைக் காகி,

செம்புலா லுண்டு வாழும்

முதலைமேல் YP வந்தார்

நம்பர மாய துண்டே?

நாய்களோம் சிறுமை யோரா,

எம்பிராற் காட்செய் யாதே

என்செய்வான் தோன்றி னேனே! 28

உன்னைத் தவிர ரக்ஷகர் யார்?

900. ஊரிலேன் காணி யில்லை

உறவுமற் றொருவ ரில்லை,

பாரில்நின் பாத மூலம்

பற்றிலேன் பரம மூர்த்தி,

காரொளி வண்ண னே! (என்)

கண்ணனே!கதறு கின்றேன்,

ஆருளர் களைக ணம்மா!

அரங்கமா நகரு ளானே! 29

எனக்கு இனி என்ன கதி?

901. மனத்திலோர் தூய்மை யில்லை

வாயிலோ ரின்சொ லில்லை,

சினத்தினால் செற்றம் நோக்கித்

bMO விளிவன் வாளா,

புனத்துழாய் மாலை யானே!

பொன்னிசூழ் திருவ ரங்கா,

எனக்கினிக் கதியென் சொல்லாய்

என்னையா ளுடைய கோவே! 30

வீணாகப் பிறவி கொடுத்தாய்!

902. தவத்துளார் தம்மி லல்லேன்

தனம்படைத் தாரி லல்லேன்,

உவர்த்தநீர் போல வென்றன்

உற்றவர்க் கொன்று மல்லேன்,

துவர்த்தசெவ் வாயி னார்க்கே

துவக்கறத் துரிச னானேன்,

அவத்தமே பிறவி தந்தாய்

அரங்கமே நகரு ளானே! 31

உன்னைக்காண வழி தெரியவில்லையே!

903. ஆர்த்துவண் டலம்பும் சோலை

அணிதிரு வரங்கந் தன்னுள்,

கார்த்திர ளனைய மேனிக்

கண்ணனே!உன்னைக் காணும்,

மார்க்கமொன் றறிய மாட்டா

மனிசரில் துரிச னாய,

மூர்க்கனேன் வந்து நின்றேன்

மூர்க்கனேன் மூர்க்க னேனே. 32

உன் அருள்பெற வந்து நின்றேன்

904. மெய்யெலாம் போக விட்டு

விரிகுழ லாரில் பட்டு,

பொய்யெலாம் பொதிந்து கொண்ட

போட்கனேன் வந்து நின்றேன்,

ஐயனே!அரங்க னே!உன்

அருளென்னு மாசை தன்னால்,

பொய்யனேன் வந்து நின்றேன்

பொய்யனேன் பொய்ய னேனே. 33

எனது நினைவை c அறிவாய்

905. உள்ளத்தே யுறையும் மாலை

உள்ளுவா னுணர்வொன் றில்லா,

கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்

தொண்டுக்கே கோலம் பூண்டேன்,

உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்

உடனிருந் தறிதி யென்று,

வெள்கிப்போ யென்னுள் ளேநான்

விலவறச் சிரித்திட் டேனே! 34

உன்னையே நான் சேவிப்பேன்

906. தாவியன் றுலக மெல்லாம்

தலைவிளாக் கொண்ட எந்தாய்,

சேவிய னுன்னை யல்லால்

சிக்கெனச் செங்கண் மாலே,

ஆவியே! அமுதே!என்றன்

ஆருயி ரனைய எந்தாய்,

பாவியே னுன்னை யல்லால்

பாவியேன் பாவி யேனே. 35

உன்னைத்தானே நான் அழைக்கின்றேன்!

907. மழைக்கன்று வரைமு னேந்தும்

மைந்தனே!மதுர வாறே,

உழைக்கன்றே போல நோக்கம்

உடையவர் வலையுள் பட்டு,

உழைக்கின்றேற் கென்னை நோக்கா

தொழிவதே,உன்னை யன்றே

அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!

அரங்கமா நகரு ளானே! 36

என் தந்தையும் தாயும் நீரே

908. தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்

திருவரங் கத்துள் ளோங்கும்,

ஒளியுளார் தாமே யன்றே

தந்தையும் தாயு மாவார்,

எளியதோ ரருளு மன்றே

என்திறத் தெம்பி ரானார்,

அளியன்நம் பையல் என்னார்

அம்மாவோ கொடிய வாறே! 37

நானும் வேஷம் போடவேண்டுமா?

909. மேம்பொருள் போக விட்டு

மெய்ம்மையை மிகவு ணர்ந்து,

ஆம்பரி சறிந்து கொண்டு

ஐம்புல னகத்த டக்கி,

காம்புறத் தலைசி ரைத்துன்

கடைத்தலை யிருந்து,வாழும்

சோம்பரை உகத்தி போலும்

சூழ்புனல் அரங்கத் தானே! 38

அன்பு செய்யும் அடியாரையே உசுக்கிறாய்

910. அடிமையில் குடிமை யில்லா

அயல்சதுப் பேதி மாரில்,

குடிமையில் கடைமை பட்ட

குக்கரில் பிறப்ப ரேலும்,

முடியினில் துளபம் வைத்தாய் !

மொய்கழற் கன்பு செய்யும்,

அடியரை யுகத்தி போலும்

அரங்கமா நகரு ளானே! 39

நின்னையே மனத்தில் வைக்கவேண்டும்

911. திருமறு மார்வ!நின்னைச்

சிந்தையுள் திகழ வைத்து,

மருவிய மனத்த ராகில்

மாநிலத் துயிர்க ளெல்லாம்,

வெருவரக் கொன்று சுட்டிட்

டீட்டிய வினைய ரேலும்,

அருவினைப் பயன துய்யார்

அரங்கமா நகரு ளானே! 40

அடியவர் உண்டு மிஞ்சிய சேடமே சிறந்தது

912. 'வானுளா ரறிய லாகா

வானவா!'என்ப ராகில்,

'தேனுலாந் துளப மாலைச்

சென்னியாய்!' என்ப ராகில்,

ஊனமா யினகள் செய்யும்

ஊனகா ரகர்க ளேலும்,

போனகம் செய்த சேடம்

தருவரேல் புனித மன்றே? 41

எக்குலத்தாராயினும் நின் அடியவர்களே உயர்ந்தவர்கள்

913. 'பழுதிலா வொழுக லாற்றுப்

பலசதுப் பேதி மார்கள்,

இழிகுலத் தவர்க ளேலும்

எம்மடி யார்க ளாகில்,

தொழுமினீர் கொடுமின் கொள்மின்!'

என்றுநின் னோடு மொக்க,

வழிபட வருளி னாய்போன்ம்

மதிள்திரு வரங்கத் தானே! 42

அடியார்களைப் பழிப்பவர் புலையர்

914. அமரவோ ரங்க மாறும்

வேதமோர் நான்கு மோதி,

தமர்களில் தலைவ ராய

சாதியந் தணர்க ளேலும்,

நுமர்களைப் பழிப்ப ராகில்

நொடிப்பதோ ரளவில்,ஆங்கே

அவர்கள்தாம் புலையர் போலும்

அரங்கமா நகரு ளானே! 43

ஆனைக்கு அன்று அருள் செய்தாயே!

915. பெண்ணுலாம் சடையி னானும்

பிரமனு முன்னைக் காண்பான்,

எண்ணிலா வூN யூழி

தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,

விண்ணுளார் வியப்ப வந்து

ஆனைக்கன் றருளை யீந்த

கண்ணறா, உன்னை யென்னோ

களைகணாக் கருது மாறே! 44

என் கவிதைகள் எம்பிரானுக்கு இனிக்கும்

916. வளவெழும் தவள மாட

மதுரைமா நகரந் தன்னுள்,

கவளமால் யானை கொன்ற

கண்ணனை அரங்க மாலை,

துளவத்தொண் டாய தொல்சீர்த்

தொண்டர டிப்பொ டிசொல்,

இளையபுன் கவிதை யேலும்

எம்பிராற் கினிய வாறே! 45

அடிவரவு:காவல் பச்சை வேதம் மொய்த்த பெண்டிர் மறம் புலை வெறுப்போடு மற்றும் நாட்டினான் ஒரு நமனும் எறி வண்டு மெய் சூதன் விரும்பி இனி குட பாயும் பணி பேசு கங்கை வெள்ளம் குளித்து போது குரங்கு உம்பரால் ஊர் மனம் தவம் ஆர்த்து மெய் உள்ளம் தாவி மழை தெளிவு மேம்பொருள் அடிமை திரு வான் பழுதிலா அமர பெண் வளவெழும் -- கதிரவன்.

(12-வது பாடல் கோவிந்த நாமத்தின் பெருமையைக் கூறுகிறது.)

தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is திருமலைத் தனியன்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திருப்பள்ளியெழுச்சித் தனியன்கள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it