Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஏர்மலர்ப்பூங்குழல்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெருமாள் திருமொழி

ஏர்மலர்ப்பூங்குழல்

கோபியர் கண்ணனின் வார்த்தையில் மயங்கினர். சொல்லியபடி கண்ணன் வரவில்லை. எனவே கண்ணனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வெறுத்துக் கூறுகிறார்கள்.

ஆய்ச்சியர் ஊடி அமலனை எள்கல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வாசுதேவா, உனக்காகக் காத்திருந்தேனே!

698. ஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர்

எனைப்பல ருள்ளவிவ் வூரில்,உன்றன்

மார்வு தழுவுதற் காசையின் மை

அறிந்தறிந் தேயுன்றன் பொய்யைக்கேட்டு,

கூழ்மழை போல்பனிக் கூதலெய்திக்

கூசி நடுங்கி யமுனையாற்றில்,

வார்மணற் குன்றில் புலரநின்றேன்

வாசுதே வா!உன் வரவுபார்த்தே. 1

c தயிர் கடைந்த விதத்தை நானறிவேன்

699. கெண்டையண் கண்மட வாளருத்தி

கீழை யகத்துத் தயிர்கடையக்

கண்டு,ஒல்லை நானும் கடைவனென்று

கள்ள விழியைவிழித் துப்புக்கு,

வண்டமர் பூங்குழல் தாழ்ந்துலாவ

வாண்முகம் வேர்ப்பச்செவ் வாய்துடிப்ப,

தண்டயிர் நீகடைந் திட்டவண்ணம்

தாமோத ரா!மெய் யறிவன்நானே. 2

கண்ணா, உன் மாயை வளர்கிறது

700. கருமலர்க் கூந்த லொருத்திதன்னைக்

கடைக்கணித்து, ஆங்கே யருத்திதன்பால்

மருவி மனம்வைத்து மற்றொருத்திக்

குரைத்தொரு பேதைக்குப் பொய்குறித்து,

புரிகுழல் மங்கை யருத்தி தன்னைப்

புணர்தி யவளுக்கும் மெய்யனல்லை,

மருதிறுத் தாய்!உன் வளர்த்தியூடே

வளர்கின்ற தாலுன்றன் மாயைதானே. 3

கண்ணா, என்னை ஏமாற்றி விட்டாயே!

701. தாய்முலைப் பாலி லமுதிருக்கத்

தவழ்ந்து தளர்நடை யிட்டுச்சென்று,

பேய்முலை வாய்வைத்து நஞ்சையுண்டு

பித்தனென் றேபிற ரேசநின்றாய்,

ஆய்மிகு காதலோடு யானிருப்ப

யான்விட வந்தவென் தூதியோடே,

நீமிகு போகத்தை நன்குகந்தாய்

அதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே. 4

கண்ணா!இங்கு ஏன் வந்தாய்?

702. மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு

வீங்கிருள் வாயென்றன் வீதியூடே,

பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப்

போகின்ற போதுநான் கண்டுநின்றேன்,

கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக்

கைவிளிக் கின்றதும் கண்டேநின்றேன்,

என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய்

இன்னமங் கேநட நம்பி!நீயே, 5

முன்பு ஏமாற்றினாய்!இப்பொழுது ஏன் வந்தாய்?

703. மற்பொரு தோளுடை வாசுதேவா!

வல்வினை யேன்துயில் கொண்டவாறே,

இற்றை யிரவிடை யேமத்தென்னை

இன்னணை மேலிட்ட கன்றுநீபோய்,

அற்றை யிரவுமோர் பிற்றைநாளும்

அரிவைய ரோடும் அணைந்துவந்தாய்,

எற்றுக்கு நீயென் மருங்கில்வந்தாய்?

எம்பெரு மான்!நீ யெழுந்தருளே. 6

இனி என்னை ஏமாற்ற முடியாது

704. பையர வின்னணைப் பள்ளியினாய்!

பண்டையோ மல்லோம்நாம், நீயுகக்கும்

மையரி யண்கண்ணி னாருமல்லோம்

வைகியெம் சேரி வரமோ Nc,

செய்ய வுடையும் திருமுகமும்

செங்கனி வாயும் குழலும்கண்டு,

பொய்யரு நாள்பட்ட தேயமையும்

புள்ளுவம் பேசாதே போகுநம்பீ! 7

ஒரு நாள் வந்தால் என் சினம் தீர்ப்பேன்

705. என்னை வருக வெனக்குறித்திட்-

டினமலர் முல்லையின் பந்தர்நீழல்,

மன்னி யவளைப் புணரப்புக்கு

மற்றென்னைக் கண்டுழ றாநெகிழ்ந்தாய்,

பொன்னிற வாடையைக் கையில்தாங்கிப்

பொய்யச்சங் காட்டிநீ போதியேலும்,

இன்னமென் கையகத் தீங்கொருநாள்

வருதியே லென்சினம் தீர்வன்நானே. 8

குழைந்து குழலூதி வரமாட்டாயா?

706. மங்கல நல்வன மாலைமார்வில்

இலங்க மயில்தழைப் பீலிசூடி,

பொங்கிள வாடை யரையில்சாத்திப்

பூங்கொத்துக் காதிற் புணரப்பெய்து,

கொங்கு நறுங்குழ லார்களோடு

குழைந்து குழலினி தூதிவந்தாய்,

எங்களுக் கேயரு நாள்வந்தூத

உன்குழ லின்னிசை போதராதே. 9

துன்பம் போய்விடும்

707. அல்லி மலர்த்திரு மங்கைகேள்வன்-

றன்னை நயந்திள வாய்ச்சிமார்கள்,

எல்லிப் பொழுதினி லேமத்தூடி

எள்கி யுரைத்த வுரையதனை,

கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான்

குலசே கரனின் னிசையில்மேவி,

சொல்லிய இன்தமிழ் மாலைபத்தும்

சொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே. 10

அடிவரவு:ஏர் கெண்டை கரு தாய் மின் மற்பொரு பை என்னை மங்கலம் அல்லி -- ஆலை.
 

 

 


 


 Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தருதுயரந்தடாயேல்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  ஆலை நீள்கரும்பு
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it