Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தேட்டருந்திறல்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெருமாள் திருமொழி

தேட்டருந்திறல்

பகவானிடம் அன்பு கொண்டவர்கள் பாகவதர்களிடமும் (அவனடியார்களிடமும்) அன்பு கொண்டிருப்பார்கள். குலசேகரர், அடியார்களிடம் தமக்கு இருக்கும் அன்பு மிகுதியை ஈண்டு வெளிப்படுத்துகிறார்.

அழகிய மணவாளன் விஷயம்

சந்தக் கலி விருத்தம்

கண் பெற்ற பயன்

658. தேட்டரும்திறல் தேனினைத்தென்

னரங்கனைத்திரு மாதுவாழ்

வாட்டமில்வன மாலைமார்வனை

வாழ்த்திமால்கொள்சிந் தையராய்,

ஆட்டமேவி யலந்தழைத்தயர்

வெய்தும்மெய்யடி யார்கள்தம்,

ஈட்டம்கண்டிடக் கூடுமேலது

காணும்கண்பய னாவதே. 1

கங்கா ஸ்நானத்தைவிடச் சிறந்தது

659. தோடுலாமலர் மங்கைதோளிணை

தோய்ந்ததும்சுடர் வாளியால்

நீடுமாமரம் செற்றதும்நிரை

மேய்த்ததுமிவை யேநினைந்து,

ஆடிப்பாடி அரங்கவோஎன்ற

ழைக்கும்தொண்ட ரடிப்பொடி

ஆடநாம்பெறில், கங்கைநீர்குடைந்

தாடும்வேட்கையென் னாவதே. 2

தொண்டர் அடிச்சேற்றைச் சென்னியில் அணிவேன்

660. ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம்

கீண்டதும்முன்னி ராமனாய்,

மாறடர்த்ததும் மண்ணளந்ததும்

சொல்லிப்பாடி,வண் பொன்னிப்பே-

ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட

ரங்கன்கோயில் திருமுற்றம்,

சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ்

சேறென்சென்னிக் கணிவனே. 3

என் மனம் தொண்டர்களையே வாழ்த்தும்

661. தோய்த்தண்தயிர் வெண்ணெய்பாலுடன்

உண்டலும்உடன் றாய்ச்சிகண்டு,

ஆர்த்ததோளுடை யெம்பிரானென்ன-

ரங்கனுக்கடி யார்களாய்,

நாத்தழும்பெழ நாரணாவென்ற

ழைத்துமெய்தழும் பத்தொழு-

தேத்தி,இன்புறும் தொண்டர்சேவடி

ஏத்திவாழ்த்துமென் நெஞ்சமே. 4

தொண்டர்களை நினைத்து என் மெய் சிலிர்க்கிறது

662. பொய்சிலைக்குர லேற்றெருத்தமி-

றுத்துப்போரர வீர்த்தகோன்,

செய்சிலைக்சுடர் சூழொளித்திண்ண

மாமதிள்தென்ன ரங்கனாம்,

மெய்சிலைக்கரு மேகமொன்றுதம்

நெஞ்சில்நின்று திகழப்போய்,

மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந்

தென்மனம்மெய்சி லிர்க்குமே. 5

தொண்டர்களையே என் மனம் பக்தி செய்யும்

663. ஆதியந்தம னந்தமற்புத்மி

ஆனவானவர் தம்பிரான்,

பாதமாமலர் சூடும்பத்தியி-

லாதபாவிக ளுய்ந்திட,

தீதில்நன்னெறி காட்டியெங்கும்

திரிந்தரங்னெம் மானுக்கே,

காதல்செய்தொண்டர்க் கெப்பிறப்பிலும்

காதல்செய்யுமென் னெஞ்சமே. 6

அரங்கன் அடியாருக்கே அன்பு காட்டுவேன்

664. காரினம்புரை மேனிநல்கதிர்

முத்தவெண்ணகைச் செய்யவாய்,

ஆரமார்வ னரங்கனென்னும்

அரும்பெருஞ்சுட ரொன்றினை,

சேரும்நெஞ்சின ராகிச்சேர்ந்துக-

சிந்திழிந்தகண் ணீர்களால்,

வாரநிற்பவர் தாளிணைக்கொரு

வாரமாகுமென் னெஞ்சமே. 7

தொண்டர்களிடமே என் மனம் மயங்கியது

665. மாலையுற்றக டல்கிடந்தவன்

வண்டுகிண்டுந றுந்துழாய்,

மாலையுற்றவ ரைப்பெருந்திரு

மார்வனைமலர்க் கண்ணனை,

மாலையுற்றெழுந் தாடிப்பாடித்தி-

ரிந்தரங்கனெம் மானுக்கே,

மாலையுற்றிடும் தொண்டர்வாழ்வுக்கு

மாலையுற்றதென் நெஞ்சமே. 8

தொண்டர்கள் பித்தர்கள் அல்லர்

666. மொய்த்துக்கண்பனி சோரமெய்கள்சி-

லிர்ப்பஏங்கி யிளைத்துநின்று,

எய்த்துக்கும்பிடு நட்டமிட்டெழுந்

தாடிப்பாடியி றைஞ்சி,என்

அத்தனச்ச னரங்கனுக்கடி-

யார்களாகி, அவனுக்கே

பித்தராமவர் பித்தரல்லர்கள்

மற்றையார்முற்றும் பித்தரே. 9

அடியார்க்கு அடியார் ஆவர்

667. அல்லிமாமலர் மங்கைநாதன்

அரங்கன்மெய்யடி யார்கள்தம்,

எல்லையிலடி மைத்திறத்தினில்

என்றுமேவு மனத்தனாம்,

கொல்லிகாவலன் கூடல்நாயகன்

கோழிக்கோன்குல சேகரன்,

சொல்லினின்தமிழ் மாலைவல்லவர்

தொண்டர்தொண்டர்க ளாவரே. 10

அடிவரவு:தேட்டரு தோடு ஏறு தோய்த்த பொய் ஆதி காரினம் மாலை மொய்த்து அல்லி --- மெய்யில்.
 

 

 


 


 Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is இருளிரியச் சுடர்மணிகள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  மெய்யில் வாழ்க்கையை
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it