Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கோழியழைப்பதன்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாச்சியார் திருமொழி

கோழியழைப்பதன்

ஆயர் பெண்கள் கோழி கூவும் முன்பே (விடியற்காலையில்) எழுந்தார்கள். நீராடுவதற்கு அருகிளுள்ள பொய்கைக்குச் சென்றனர். உறங்கும் கண்ணன் சூரியன் உதிக்கும்முன்பு எழுந்திருக்கமாட்டான் என்று நினைத்தனர். ஆனால், கண்ணன் கோபியர் வருவதற்குமுன்பே அங்கு வந்து மறைந்திருந்தான்;இவர்களது சேலைகளைக் கவர்ந்துகொண்டான்;அருகில் இருந்த குருந்த மரத்தின்மீது அமர்ந்துகொண்டான். 'மாயனே!ஆயர் கொழுந்தே!நீ எப்படி இங்கு வந்தாய்!ஆயர்கள் எழுந்திருக்கும் முன் நாங்கள் வீடு செல்லவேண்டும்!நாங்கள் இந்தப் பொய்கைக்கு வருவது உனக்குத் தெரிந்துவிட்டது!இனி இப்பொய்கைக்கு வரவே மாட்டோம். தயைசெய்து எங்கள் சேலைகளைக் கொடுத்துவிடு'என்னும் பாவனையில் ஆண்டாள் அருளிச் செய்கிறாள். இது கோபீ வஸ்த்ராபஹார சிரித்திரத்தின் பகுதியாகும்.

கன்னியரோடு கண்ணன் விளையாடல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் அரவணையில் பள்ளிகொண்டவனே!தொழுகிறோம்

524. கோழி யழைப்பதன் முன்னம்

குடைந்துநீ ராடுவான் போந்தோம்,

ஆழியஞ் செல்வ னெழுந்தான்

அரவணை மேல்பள்ளி கொண்டாய்,

ஏழைமை யாற்றவும் பட்டோம்

இனியென்றும் பொய்கைக்கு வாரோம்,

தோழியும் நானும் தொழுதோம்

துகிலைப் பணித்தரு ளாயே. 1

மாயனே!எங்கள் ஆடைகளைத் தருக

525. இதுவென் புகுந்ததிங் கந்தோ!

இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்,

மதுவின் துழாய்முடி மாலே!

மாயனே!எங்க ளமுதே,

விதியின்னைமை யாலது மாட்டோம்

வித்தகப் பிள்ளாய்!விரையேல்,

குதிகொண் டரவில் நடித்தாய்!

குருந்திடைக் கூறை பணியாய். 2

இலங்கை அழித்தவனே!எங்கள் பட்டுத் துணிகளைத் தருக

526. எல்லே யீதென்ன இளமை

எம்மனை மார்காணி லொட்டார்,

பொல்லாங்கீ தென்று கருதாய்

பூங்குருந் தேறி யிருத்தி,

வில்லாலி லங்கை யழித்தாய்!நீ

வேண்டிய தெல்லாம் தருவோம்,

பல்லாரும் காணாமே போவோம்

பட்டைப் பணித்தரு ளாயே. 3

கண்ணீர் விடுகிறோமே!இரக்கம் இல்லையா?

527. பரக்க விழித்தெங்கும் நோக்கிப்

பலர்குடைந் தாடும் கனையில்,

அரக்கநில் லாகண்ண நீர்கள்

அலமரு கின்றவா பாராய்,

இரக்கமே லொன்று மிலாதாய்!

இலங்கை யழித்த பிரானே,

குரக்கர சாவ தறிந்தோம்

குருத்திடைக் கூறை பணியாய். 4

பிரானே!எம் சிற்றாடைகளைத் தந்துவிடு

528. காலைக் கதுவிடு கின்ற

கயலோடு வாளை விரவி,

வேலைப் பிடித்தென்னை மார்கள்

ஒட்டிலென் னவிளை யாட்டோ,

கோலச்சிற் றாடை பலவுங்

கொண்டுநீ யேறி யிராதே,

கோலங் கரிய பிரானே!

குருந்திடைக் கூறை பணியாய். 5

வேதனை தாங்க முடியவில்லை:பட்டாடைகளைத் தந்துவிடு

529. தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்

தாள்களெங் காலைக் கதுவ,

பிடத்தே ளெறிந்தாலே போல

வேதனை யாற்றவும் பட்டோம்

குடத்தை யெடுத்தேற விட்டுக்

கூத்தாட வல்லஎங் கோவே,

படிற்றையெல் லாம்தவிர்ந் தெங்கள்

பட்டைப் பணித்தரு ளாயே. 6

என் தாயர் கோபிப்பர்:ஆடைகளைக் கொடுத்துவிடு

530. நீரிலே நின்றயர்க் கின்றோம்

நீதியல் லாதன செய்தாய்,

ஊரகம் சாலவும் சேய்த்தால்

ஊழியெல் லாமுணர் வானே,

ஆர்வ முனக்கே யுடையோம்

அம்மனை மார்காணி லொட்டார்,

போர விடாயெங்கள் பட்டைப்

பூங்குருந் தேறியி ராதே. 7

ஆயர் கொழுந்தே!அருள் செய்

531. மாமிமார் மக்களே யல்லோம்

மற்றுமிங் கெல்லாரும் போந்தார்,

தூமல்க் கண்கள் வளரத்

தொல்லையி ராத்துயில் வானே,

சேமமே லன்றிது சாலச்

சிக்கென நாமிது சொன்னோம்,

கோமள ஆயர்கொ ழுந்தே!

குருந்திடைக் கூறை பணியாய். 8

அசோதை திட்டுவாள்:ஆடைகளைக் கொடு

532. கஞ்சன் வலைவைத்த வன்று

காரிரு ளெல்லில் பிழைத்து,

நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய்

நின்றஇக் கன்னிய ரோமை,

அஞ்ச உரப்பாள் அசோதை

ஆணாட விட்டிட் டிருக்கும்,

வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட

மசிமையி லீ!கூறை தாராய். 9

வைகுந்தம் புகலாம்

533. கன்னிய ரோடெங்கள் நம்பி

கரிய பிரான்விளை யாட்டை,

பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த

புதுவையர் கோன்பட்டன் கோதை,

இன்னிசை யால்சொன்ன மாலை

ஈரைந்தும் வல்லவர் தாம்போய்,

மன்னிய மாதவ னோடு

வைகுந்தம் புக்கிருப் பாரே. 10

அடிவரவு:கோழி இது எல்லே பரக்க காலை தடத்தவிழ் நீரில் மாமிமார் கஞ்சன் கன்னி --- தெள்ளியார்.
 


 


 Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is நாமமாயிரம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தெள்ளியார் பலர்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it