Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தையரு திங்கள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாச்சியார் திருமொழி

தையரு திங்கள்

கண்ணனை அடையவேண்டும் என்று ஆண்டாள் விரும்பினாள். மார்கழி மாதம் முழுவதும் நோன்பு நோற்றாள். அவன் வரவில்லை. அவனை அடைந்தே தீர்வது என்று தீர்மானித்தாள். நல்ல பயனை யாரைக்கொண்டு அடைந்தால் என்ன? பிரிந்தவர்களைச் சேர்த்துவைப்பவன் மன்மதன். அவன் உதவியை நாடுகிறாள். 'c என்னைக் கண்ணனோடு சேர்த்து வைக்கவேண்டும்'என்று வேண்டுகிறாள். அவனைக் குறித்து நோன்பு நோற்கிறாள். காமனைக்கொண்டு காமனைப் பயந்த காளையான கண்ணனை அடைய விரும்புகிறாள்.

'கண்ணன் இணக்கு'எனக் காமனைத் தொழுதல்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

காமனே!வேங்கடவற்கு என்று என்னை விதி

504. தையரு திங்களும் தரைவிளக்கித்

தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,

ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து

அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,

உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி

உன்னையு மும்பியை யும்தொழுதேன்,

வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை

வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. 1

புள்வாய் பிளந்தவனை அடைய எனக்கு உதவு

505. வெள்ளைநுண் மணந்கொண்டு தெருவணிந்து

வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து,

முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து

முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,

கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு

கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி,

புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்

இலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. 2

வேங்கடவாணனென்னும் விளக்கிளில்புக எனக்க உதவு

506. மத்தநன் னறுமலர் முருக்கமலர்

கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி,

தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து

வாசகத் தழித்துன்னை வைதிடாமே,

கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு

கோவிந்த னென்பதோர் பேரேழுதி,

வித்தகன் வேங்கட வாணனென்னும்

விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3

துவரைப் பிரானுக்கே சங்கல்பித்துக் கொண்டேன்

507. சுவரில் புராணநின் பேரெழுதிச்

சுறவநற் கொடிகளும் துரங்கங்களும்,

கவரிப் பிணாக்களும் கருப்புலில்லும்

காட்டித்தந் தேன்கண்டாய் காமதேவா,

அவரைப் பிராயந் தொடங்கிஎன்றும்

ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்,

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்

தொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. 4

மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்

508. வானிடை வாழுமல் வானவர்க்கு

மறையவர் வேள்வியில் வகுத்தஅவி,

கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து

கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,

ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென்று

உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,

மானிட வர்க்கென்று பேச்சுப்படில்

வாழகில் லேன்கண்டாய் மன்மதனே! 5

கமலவண்ணன் என்னை நோக்குமாறு அருள்

509. உருவுடை யாரிளை யார்கள்நல்லார்

ஒத்துவல் லார்களைக் கொண்டு,வைகல்

தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்

திருந்தவே நோற்கின்றேன் காமதேவா,

கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்

கருவிளை போல்வண்ணன், கமலவண்ணத்

திருவுடை முகத்தினில் திருக்கண்களால்

திருந்தவே நோக்கெனக் கருளுகண்டாய். 6

திரிவிக்கிரமன் என்னைத் தொடுமாறு அருள்

510. காயுடை நெல்லோடு கரும்பமைத்துக்

கட்டி யரிசி யவலமைத்து,

வாயுடை மறையவர் மந்திரத்தால்

மன்மத னே!உன்னை வணங்குகின்றேன்,

தேயமுன் னளந்தவன் திரிவிக்கிரமன்

திருக்கைக ளாலென்னைத் தீண்டும்வண்ணம்,

சாயுடை வயிறுமென் தடமுலையும்

தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7

கேசவனின் கால்பிடிக்கும் பாக்கியத்தை எனக்குக் கொடு

511. மாசுடை யுடம்பொடு தலையுலறி

வாய்ப்புறம் வெளுத்தொரு போதுமுண்டு,

தேசுடைத் திறலுடைக் காமதேவா!

நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள்கண்டாய்,

பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்

பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்

கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்

என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். 8

கடல்வண்ணனுக்கே பணிசெய்து வாழ்வேன்

512. தொழுதுமுப் போதுமுன் மடிவணங்கித்

தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்,

பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே

பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்,

அழுதழு தலமந்தம் மாவழங்க

ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய்,

உழுவதோ ரெருத்தினை நுகங்கொடுபாய்ந்து

ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே. 9

வைகுந்தப் பதிவி அடைவர்

513. கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக்

கழலிணை பணிந்தங்கோர் கரியலற,

மருப்பினை யசித்துப்புள் வாய்பிளந்த

மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,

பொருப்பன்ன மாடம்பொ லிநிதுதோன்றும்

புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,

விருப்புடை யின்தமிழ் மாலைவல்லார்

விண்ணவர் கோனடி நண்ணுவரே. 10

அடிவரவு:தை வெள்ளை மத்தம் சுவரில் வான் உருகாயுடை மாசு தொழுது கருப்பு --- நாமமாயிரம்.


 


 


 Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is நாச்சியார் திருமொழித் தனியங்கள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  நாமமாயிரம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it