Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மரவடியை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

நாலாம் பத்து

மரவடியை

அடியார்களின் அன்பன் அரங்கன்;அவர்கள் குற்றம் செய்தாலும் அதைக் குற்றமாகவே நினைக்கமாட்டான்;குற்றம் செய்தான் என்று பிராட்டியே கூறினாலும் ஒப்புக்கொள்ள மாட்டான். இவனே ரக்ஷ கன். இவனே எல்லா அவதாரங்களையும் மேற்கொண்டவன். அருமைத் தம்பியான பரதனுக்கு எல்லாம் அருளவல்ல பாதுகைகளை நம்பிக்கைக்காக இராமன் அளித்துச் சென்றானே!என்ன பரிவு!அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் இவனே!இவன் வாழுமிடம் திருவரங்கம்.

திருவரங்கத் திருப்பதி

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இராமன் கோயில் கொண்ட இடம் ஒளியரங்கம்

412. மரவடியைத் தம்பிக்கு வான்பணையம்

வைத்துப்போய் வனோர் வாழ,

செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்

துலகாண்ட திருமால் கோயில்

திருவடிதன் திருவுருவும் திருமங்கை

மலர்க்கண்ணும் காட்டி நின்று,

உருவுடைய மலர்நீலம் காற்றாட்ட

ஒசலிக்கு மொளிய ரங்கமே. 1

அடியார்மீது நம்பிக்கை கொண்டவன் அரங்கன்

413. தன்னடியார் திறத்தகத்துத் தாமரையா

ளாகிலும் சிதகு ரைக்குமேல்,

என்னடியா ரதுசெய்யார் செய்தாரேல்

நன்றுசெய்தா ரென்பர் போலும்,

மன்னுடைய விபீடணற்காய் மதிலிலங்கைத்

திசைநோக்கி மலர்க்கண் வைத்த,

என்னுடைய திருவரங்கற் கன்றியும்

மற்றொருவர்க் காளா வாரே! 2

அடியவரை ஆட்கொள்வான் ஊர் அணியரங்கம்

414. கருளுடைய பொழில்மருதும் கதக்களிறும்

பிலம்பனையும் கடிய மாவும்,

உருளுடைய சகடரையும் மல்லரையும்,

உடையவிட் டோசை கேட்டான்,

இருளகற்று மெறிகதிரோன் மண்டலத்தூ

டேற்றிவைத் தேணி வாங்கி,

அருள்கொடுத்திட் டடியவரை யாட்கொள்வான்

அமருமூ ரணிய ரங்கமே. 3

துவராபதி மன்னன் மன்னுமிடம் புனலரங்கம்

415. பதினாறா மாயிரவர் தேவிமார்

பணிசெய்யத் துவரை யென்னும்

மதில்நா யகராகி வீற்றிருந்த

மணவாளர் மன்னு கோயில்,

புதுநாண் மலர்க்கமல மெம்பெருமான்

பொன்வயிற்றில் பூவே போல்வான்,

பொதுநா யகம்பாவித் திறுமாந்து

பொன்சாய்க்கும் புனல ரங்கமே. 4

பறவைகள் கருடனின் புகழ் கூறும் இடம் திருவரங்கம்

416. ஆமையாய்க் கங்கையா யாழ்கடலாய்

அவனியா யருவ ரைகளாய்,

நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த்

தக்கணையாய்த் தானு மானான்,

சேமமுடை நாரதனார் சென்றுசென்று

துதித்திறைஞ்சக் கிடந்தான் கோயில்,

பூமருவிப் புள்ளினங்கள் புள்ளரையன்

புகழ்குழறும் புனல ரங்கமே. 5

யாவரும் வந்து தொழுமிடம் திருவரங்கம்

417. மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்

தவர்களையே மன்ன ராக்கி,

உத்தரைதன் சிறுவனையு முயக்கொண்ட

உயிராள னுறையும் கோயில்

பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்

முனிவர்களும் பரந்த நாடும்,

சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திசைவிளக்காய்

நிற்கின்ற திருவ ரங்கமே. 6

அரவணையின் செழுமணிகள் ஒளிரும் இடம் அரங்கம்

418. குறட்பிரம சாரியாய் மாவலியைக்

குறும்பதக்கி யரசு வாங்கி,

இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை

கொடுத்துகந்த எம்மான் கோயில்,

எறிப்புடைய மணிவரைமே லிளஞாயி

றெழுந்தாற்போ லரவ ணையின்வாய்,

சிறப்புடைய பணங்கள்மிசைச் செழுமணிகள்

விட்டெறிக்கும் திருவ ரங்கமே. 7

இரணியனைப் பிளந்தவன் இடம் தண்ணரங்கம்

419. உரம்பற்றி யிரணியனை யுகிர்நுதியால்

ஒள்ளியமார் புறைக்க வூன்றி,

சிரம்பற்றி முடியிடியக் கண்பிதுங்க

வாயலறத் தெழித்தான் கோயில்,

உரம்பெற்ற மலர்க்கமல முலகளந்த

சேவடிபோ லுயர்ந்து காட்ட,

வரம்புற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத்

தலைவணக்கும் தண்ண ரங்கமே. 8

தசாவதாரம் எடுத்தவன் கோயில் புனலரங்கம்

420. தேவுடைய மீனமா யாமையாய்

ஏனமா யரியாய்க் குறளாய்,

மூவுருவி லிராமனாய்க் கண்ணனாய்க்

கற்கியாய் முடிப்பான் கோயில்,

சேவலொடு பெடையன்னம் செங்கமல

மலரேறி யூச லாடி,

பூவணைமேல் துதைந்தெழுசெம் பொடியாடி

விளையாடும் புனல ரங்கமே. 9

திருவாளன் கண்வளரும் இடம் திருவரங்கம்

421. செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்

செருச்செய்யும் நாந்தக மென்னும்

ஒருவாளன், மறையாள னோடாத

படையாளன் விழுக்கை யாளன்,

இரவாளன் பகலாள னென்னையாளன்

ஏழுலகப் பெரும்புர வாளன்,

திருவாள னினிதாகத் திருக்கண்கள்

வளர்கின்ற திருவ ரங்கமே. 10

எம்பெருமான் இணையடிக்கீழ் இருப்பர்

422. கைந்நாகத் திடர்கடிந்த கனலாழிப்

படையுடையான் கருதும் கோயில்,

தென்னாடும் வடநாடும் தொழநின்ற

திருவரங்கத் திருப்ப தியின்மேல்,

மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்

விரித்ததமி ழுரைக்க வல்லார்,

எஞ்ஞான்று மெம்பெருமா னிணையடிக்கீழ்

இணைபிரியா திருப்பர் தாமே. 11

அடிவரவு:மரவடியை தன்னடியார் சுருள் பதினாறு ஆமை மைத்துனன் குறள் உரம் தேவுடைய செரு கைந்நாகத்து - துப்பு.  


 


 Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is மாதவத்தோன்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  துப்புடையாரை
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it