அஞ்சன வண்ணனை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

மூன்றாம் பத்து

அஞ்சன வண்ணனை

மாடு மேய்க்கக் கண்ணனை அசோதை காட்டிற்கு அனுப்பி விட்டாள். ஆனால் அவனது பிரிவைத் தாளமுடியவில்லை. "என் அன்பு மகனை இங்கேயே இருக்கச் செய்யாமல் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டிற்கு அனுப்பிவிட்டேனே"என்று மனம் கரைந்து அவனது தீம்புகளை எல்லாம் நினைத்து அநுபவித்துப் பேசுகிறாள். ஆழ்வாரும் அதை அப்படியே அநுபவிக்கிறார். கண்ணனை அன்னை கன்றின்பின் போக்கியதெண்ணி மனம் இரங்குதல்

கலிநிலைத்துறை

ஆயர் கோலக் கொழுந்து

234. அஞ்சன வண்ணனை ஆயர் கோலக் கொழுந்தினை,

மஞ்சன மாட்டி மனைகள் தோறும் தியாமே,

கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக் கன் றின்பின்,

என்செய் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. 1

சிற்றில் சிதைத்த சிரீதரன்

235. பற்றுமஞ் சள்பூசிப் பாவை மாரொடு பாடியில்,

சிற்றில் சிதைத்தெங்கும் தீமை செய்து திரியாமே,

கற்றுத் தூளி யுடைவேடர் கானிடைக் கன் றின்பின்,

எற்றுக்கென் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. 2

பொன்மணி மேனியான்

236. நன்மணி மேகலை நங்கை மாரொடு நாடொறும்,

பொன்மணி மேனி புழுதி யாடித் திரியாமே,

கன்மணி நின்றதிர் கான தரிடைக் கன் றின்பின்,

என்மணி வண்ணனைப் போக்கினேன் எல்லே பாவமே. 3

கண்ணுக்கினியவன்;எண்ணற்கு அரியவன்

237. வண்ணக் கருங்குழல் மாதர் வந்தலர் தூற்றிட,

பண்ணிப் பலசெய்திப் பாடி யெங்குந் திரியாமே,

கண்ணுக் கினியானைக் கான தரிடைக் கன்றின்பின்,

எண்ணற் கரியானைப் போக்கினேன் எல்லே பாவமே. 4

தெய்வத் தலைவன்

238. அவ்வவ் விடம்புக் கவ்வாயர்

பெண்டிர்க் கணுக்கனாய்,

கொவ்வைக் கனிவாய் கொடுத்துக்

கூழைமை செய்யாமே,

எவ்வும் சிலையுடை வேடர்

கானிடைக் கன் றின்பின்,

தெய்வத் தலைவனைப் போக்கினேன்

எல்லே பாவமே. 5

படிறு பல செய்யும் பிரான்

239. மிடறு மெழுமெழுத் தோட வெண்ணெய் விழுங்கிப்போய்,

படிறு பலசெய்திப் பாடி யெங்கும் திரியாமே,

கடிறு பலதிரி கான தரிடைக் கன்றின்பின்,

இடறவென் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. 6

புள்ளின் தலைவன்

240. வள்ளி நுடங்கிடை மாதர் வந்தலர் தூற்றிட,

துள்ளி விளையாடித் தோழ ரோடு திரியாமே,

கள்ளி யுணங்கு வெங்கா னதரிடைக் கன்றின்பின்,

புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லே பாவமே. 7

பன்னிரு திங்கள் கருவில் இருந்தவன்

241. பன்னிரு திங்கள் வயிற்றிற்

கொண்டஅப் பாங்கினால்,

என்னிளங் கொங்கை அமுத

மூட்டி யெடுத்துயான்,

பொன்னடி நோவப் புலரியே

கானிற் கன்றின்பின்,

என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன்

எல்லே பாவமே. 8

தாமோதரன்

242. குடையும் செருப்பும் கொடாதே

தாமோ தரனை!நான்,

உடையும் கடியன ஊன்று

வெம்பரற் களுடை,

கடியவெங் கானிடைக் காலடி

நோவக் கன்றின்பின்

கொடியேனென் பிள்ளையைப் போக்கினேன்

எல்லே பாவமே. 9

எனக்கினியான் மணிவண்ணன்

243. என்று மெனக்கினி யானை என்மணி வண்ணனை,

கன்றின் பின்போக்கி னேனென் றசோதை கழறிய,

பொன்திகழ் மாடப் புதுவையர் கோன்பட் டன் சொல்,

இன் தமிழ் மாலை வல்ல வர்க்கிட ரில்லையே. 10

அடிவரவு:அஞ்சன பற்று நன்மணி வண்ணம் அவ்வவ்விடம் மிடறு வள்ளி பன்னிரு குடை என்றும்- சீலை.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தன்னேராயிரம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  சீலைக்குதம்பை
Next