Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பூதத்தாழ்வார்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பன்னிரு ஆழ்வார்கள்

பூதத்தாழ்வார்

'தெண்ணீர் வயற்றொண்டை நன்னாடு சான்றோருடைத்து'என்று ஒளவையாரால் புகழ்ந்துரைக்கப்பட்ட தொண்டை நாட்டில், பல்லவ மன்னர்களால் சிறந்த ஒரு நகரம் அமைக்கப்பட்து. அந்நகரம் சென்னைக்குத் தெற்கில் கடற்கரையில் உள்ளதால் அதற்குக் 'கடல்மல்லை' என்று பெயரிடப்பட்டது. மாமல்லன் என வழங்கப்பெற்ற பல்லவ மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட நகரமாதலினால் அதற்கு மாமல்லபுரம் என்றும், மகாபலிபுரம் என்றும் மக்கள் பெயரிட்டு வழங்கினர். மாமல்லனின் கலை வளத்தைச் சிற்பங்களின் வாயிலாகச் சித்தரித்து, மக்கள் யாவரும் கண்டு வண்ணம் எழில் அமைந்த கலைக்கூடமாகக் காட்சி அளிக்கும் இம்மாகாபலிபுரத்தில் திருமால் சயனத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இறைவன் ஏனைத் திருப்பதிகளில் பாம்பணையிற் பள்ளி கொண்டிருப்பான். ஆனால் இப்பதியில் தலத்தில் பள்ளி கொண்டிருக்கின்றான். ஆகையால், இப்பதியினைக் 'கடல் மல்லைத் தலசயனம்'என்றும் மக்கள் சொல்லுவர்.

நரசிம்மவர்ம பல்லவனின் கலை மாண்பினை விளக்கும் கலைக்கோயிலாக உள்ள இம்மகாபலிபுரத்தில் மல்லிகைப் புதரின் நடுவில் நீலோற்பல மலரில் (A.H. 7 ஆம் நூற்றாண்டில்) சித்தாத்திரி ஆண்டு ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் அமைந்த நவமி திதியில் புதன்கிழமையன்று அவிட்ட நட்சத்திரத்தில், திருமாலின் ஐம்படைகளில் ஒன்றாகிய கௌமோதகி என்னும் கதாயுதத்தின் அமிசமாகப் பூதத்தாழ்வார் அவதரித்தருளினார்.

பூதத்தாழ்வாரின் மனம் திருமாலின் திருவடிகளையே நாடியது. எனவே, அவர் இவ்வுலக வாழ்க்கையைச் சிறிதும் விரும்பவில்லை. அவர், மனக்கோயிலில் திருமாலை அமைத்து அவ்விறைவனை ஞானநீர்கொண்டு ஆட்டி, அப்பெருமான் திருவடிகளில் அன்பாகிய மலரை இட்டு, என்றும் அவனை ஆராதிப்பார். அவர் திருமாலின் திருவடிக்குச் செந்தமிழ்ப் பாக்கலால் ஆயினவும், என்றும் வாடாத வளம் பெற்ற நிலையில் அமைந்தனவுமாகிய செஞ்சொற்களால் ஆன பாமாலையைச் சாத்தியதால், 'யானே ஏழ்பிறப்பும் தவம் உடையேன்'என்றுகூறுவார். 'திருமாலைச் செங்கண் நெடியானை எங்கள் பெருமானைக் கைகூப்பி வணங்கப் பெற்றேனாதலின், யான் இனி ஒரு குடைக்கீழ் மண்ணுலகை ஆள்வதையும் வேண்டேன்;தேவர்கட்கும் தேவனாய்த் தேவருலகை ஆள்வதையும் வேண்டேன்' என்று சொல்லுவார். அவரைக் கண்டவர்கள், 'இவர் நம்மைப்போன்ற மக்கட் பிறப்பினர் அல்லர். தெய்வப் பிறப்பினர்'என்று வணங்கித் துதிப்பார்கள். இங்ஙனம் கண்டோர் அனைவரும் பாராட்டி வணங்கிப் போற்றும் உண்மை அறிவுச் செல்வராய்ப் பூதத்தாழ்வார் விளங்கினார்.

பூதத்தாழ்வார் பாடியருளிய இரண்டாம் திருவந்தாதியில்,

"யானே தவம்செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்

யானே தவம்உடையேன் எம்பெருமான் - யானே

இருந்தமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்

பெருந்தமிழன் நல்லேன் பெரிது".

என்னும் செய்யுள் ஒன்றாகும். இச்செய்யுளின்கண் அவர், தாம் நல்லவராக ஆயினமைக்கு உரிய காரணத்தைக் கூறியுள்ளார்.

இவரால் பாடப்பட்ட பெருமை பொருந்திய நகரங்கள்:1. திருவரங்கம் 2. தஞ்சை
3. திருக்குடந்தை 4. திருமாவிருஞ்சோலைமலை, 5. திருக்கோட்டியூர் 6. திருத்தண்கால் 7. திருக்கோவலுர் 8. திருக்கச்சி 9. திருப்பாடகம் 10. திருநீர்மலை
11. திருக்கடன்மல்லை 12. திருவேங்கடம் 13. திருப்பாற்கடல் முதலியனவாகும்.


 


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is பொய்கையாழ்வார்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  பேயாழ்வார்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it