Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

சீதக்கடல்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

முதற் பத்து

சீதக்கடல்

கண்ணனை மகனாகப் பெற்ற பாக்கியத்தைப் பெறாப் பெரும் பேறாக நினைக்கிறாள் யசோதை!ஆயர்பாடியிலுள்ள பெண்களை அழைத்துக் கண்ணணின் திருமேனி அழகைக் காட்டுகிறாள். தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறவேண்டும் என்பதே யசோதையின் நோக்கமாகும். திருவடிமுதல் திருமுடி வரை இத்திருமொழியில் புகழப்படுகிறது!

திருப்பாதாதிகேச வண்ணம்
(கண்ணனின் திருமேனியழகை திருவடி முதல் திருமுடி வரை அனுபவித்தல்) கலித்தாழிசை

பாதக் கமலங்கள்

23. சீதக் கடலுள் ளமுதன்ன தேவகி,

கோதைக் குழலா ளசோதைக்குப் போத்தந்த,

பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்,

பாதக் கமலங்கள் காணீரே,

பவளவா யீர்வந்து காணீரே. 1

ஒளி விரல்கள்

24. முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்,

தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல், எங்கும்

பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்,

ஒத்திட் டிருந்தவா காணீரே,

ஒண்ணுத லீர்வந்து காணீரே. 2

வெள்ளித் தளை இலங்கும் கணைக்கால்

25. பணைத்தோ ளிளவாய்ச்சி பால்பாய்ந்த கொங்கை,

அணைத்தார வுண்டு கிடந்தஇப் பிள்ளை,

இணைக்காலில் வெள்ளித் தளைநின் றிலங்கும்,

கணைக்கா லிருந்தவா காணீரே,

காரிகை யீர்வந்து காணீரே. 3

தவழும் முழந்தாள்

26. உழந்தாள் நறுநெய்யோ ரோர்தடா வுண்ண,

இழந்தா ளெரிவினா லீர்த்து,எழில் மத்தின்,

பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான்,

முழந்தா ளிருந்தவா காணீரே,

முகிழ்முலை யீர்வந்து காணீரே. 4

இரணியனை அழித்த தொடைகள்

27. பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு,

உறங்குவான் போலே கிடந்தஇப் பிள்ளை,

மறங்கொ ளிரணியன் மார்பைமுன் கீண்டான்,

குறங்கு களைவந்து காணீரே,

குவிமுலை யிர்வந்து காணீரே. 5

அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்

28. மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை,

சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்,

அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்,

முத்த மிருந்தவா காணீரே,

முகிழ்நகை யீர்வந்து காணீரே. 6

பரமனின் திருமருங்கு

29. இருங்கை மதகளி றீர்க்கின் றவனை,

பருங்கிப் பறித்துக்கொண் டோடும் பரமன்றன்,

நெருங்கு பவளமும் நேர்நாணும் முத்தும்,

மருங்கு மிருந்தவா காணீரே,

வாணுத லீர்வந்து காணீரே. 7

நந்தன் மதலையின் உந்தி

30. வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து,

தந்தக் களிறுபோல் தானே விளையாடும்,

நந்தன் மதலைக்கு நன்று மழகிய

உந்தி யிருந்தவா காணீரே,

ஒளியிழை யீர்வந்து காணீரே. 8

தாம்பினால் கட்டப்பட்ட திருவயிறு

31. அதிருங் கடல்நிற வண்ணனை, ஆய்ச்சி,

மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து,

பதறப் படாமே பழந்தாம்பா லார்த்த,

உதர மிருந்தவா காணீரே,

ஒளிவளை யீர்வந்து காணீரே. 9

கௌஸ்துபம் திகழும் திருமார்பு

32. பெருமா வுரலில் பிணிப்புண் டிருந்து, அங்

கிருமா மருத மிறுத்தஇப் பிள்ளை,

குருமா மணிப்பூண் குலாவித் திகழும்,

திருமார் பிருந்தவா காணீரே,

சேயிழை யீர்வந்து காணீரே. 10

அசுரரை அழித்த திருத்தோள்கள்

33. நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே,

தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்,

வாள்கொள் வளையெயிற் றாருயிர் வவ்வினான்,

தோள்க ளிருந்தவா காணீரே,

சுரிகுழ லீர்வந்து காணீரே. 11

சங்கு சக்கரம் நிலவும் கைத்தலங்கள்

34. மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற,

செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை,

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய,

கைத்தலங் கள்வந்து காணீரே,

கனங்குழை யீர்வந்து காணீரே. 12

உலகங்களை விழுங்கிய கழுத்து

35. வண்டமர் பூங்குழ லாய்ச்சி மகனாகக்

கொண்டு, வளர்கின்ற கோவலக் குட்டற்கு,

அண்டமும் நாடு மடங்க விழுங்கிய,

கண்ட மிருந்தவா காணீரே,

காரிகை யீர்வந்து காணீரே. 13

ஆய்ச்சியர் விரும்பும் அழகிய வாய்

36. எந்தொண்டை வாய்ச்சிங்கம் வாவென் றெடுத்துக்கொண்டு,

அந்தொண்டை வாயமு தாதரித்து, ஆய்ச்சியர்

தந்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்,இச்

செந்தொண்டை வாய்வந்து காணீரே,

சேயிழை யீர்வந்து காயீரே. 14

முகத்தின் அழகு

37. நோக்கி யசோதை நுணுக்கிய மங்சளால்,

நாக்கு வழித்துநீ ராட்டுமிந் நம்பிக்கு,

வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்,

மூக்கு மிருந்தவா காணீரே,

மொய்குழ லீர்வந்து காணீரே. 15

வாசுதேவனின் கண்கள்

38. M ண்கொ ளமரர்கள் வேதனை தீர,முன்

மண்கொள் வசுதேவர் தம்மக னாய்வந்து,

திண்கொ ளசுரரைத் தேய வளர்கின்றான்,

கண்க ளிருந்தவா காணீரே,

கனவளை யீர்வந்து காணீரே. 16

தேவகி மகனின் திருப்புருவம்

39. பருவம் நிரம்பாமே பாரெல்லா முய்ய,

திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற,

உருவு கரிய வொளிமணி வண்ணன்,

புருவ மிருந்தவா காணீரே.

பூண்முலை யீர்வந்து காணீரே. 17

மகரக்குழை பதிந்த திருச்செவிகள்

40. மண்ணும் மலையும் கடலும் உலகேழும்,

உண்ணுந் திறந்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு,

வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை,

திண்ண மிருந்தவா காணீரே,

சேயிழை யீர்வந்து காணீரே. 18

பரமன் திருநுதல்

41. முற்றிலும் தூதையும் முன் கைம்மேல் பூவையும்,

சிற்றி லிழைத்துத் திரிதரு வோர்களை

பற்றிப் பறித்துக்கொண் டோடும் பரமன்றன்,

நெற்றி யிருந்தவா காணீரே,

நேரிழை யிர்வந்து காணீரே. 19

கண்ணன் திருக்குழல்கள்

42. அழகிய பைம்பொன்னின் கோலங்கைக் கொண்டு,

கழல்கள் சதங்கை கலந்தெங்கு மார்ப்ப,

மழகன் றினங்கள் மறித்துத் திரிவான்,

குழல்க ளிருந்தவா காணீரே,

குவிமுலை யீர்வந்து காணீரே. 20

தரவு கொச்சக் கலிப்பா

திருப்பாதாதிகேசம் (அடியும் முடியும்)

43. சுருப்பார் குழலி யசோதை முன்சொன்ன,

திருப்பாத கேசத்தைத் தென்புது வைப்பட்டன்,

விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்

உரைப்பார்போய், வைகுந்தத் தொன்றுவர் தாமே. 21

அடிவரவு:சீத முத்தும் பணை உழ பிறங்கிய மத்த இருங்கை வந்த அதிருங் பெருமா நாள்கள் மை வண்டு எந் நோக்கி விண் பருவம் மண் முற்றில் அழகிய கருப்பார்- மாணிக்கம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is வண்ண மாடங்கள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  மாணிக்கங்கட்டி
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it