Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தந்தை காலில்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஏழாம் பத்து

தந்தை காலில்

திருவழுந்தூர் -- 1

திருவழுந்தூர்ப் பெருமாளின் திருநாமம் ஆமருவியப்பன். தாயாரின் பெயர் செங்கமலவல்லி. தம் உள்ளத்திலும் கண்ணிலும் எப்பொழுதும் நிற்கும் பெருமாளை ஆழ்வார் ஈண்டுப் பாடியுள்ளார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எம்பெருமான் ஊர் திருவழுந்தூர்

1588. தந்தை காலில் பெருவி

லங்கு தாளவிழ, நள்ளிருட்கண்

வந்த எந்தை பெருமானார்

மருவி நின்ற வூர்போலும்,

முந்தி வானம் மழைபொழியும்

மூவா வுருவில் மறையாளர்

அந்தி மூன்று மனலோம்பும்

அணியார் iF அழுந்தூரே. 1

பார்த்தசாரதியின் ஊர் திருவழுந்தூர்

1589. பாரித் தெழுந்த படைமன்னர்

தம்மை யாள, பாரதத்துத்

தேரில் பாக னாயூர்ந்த

தேவ தேவ னாயூர்போலும்,

நீரில் பணைத்த நெடுவாளைக்

கஞ்சிப் போன குருகினங்கள்,

ஆரல் கவுளோ டருகணையும்

அணியார் வயல்சூழ் அழுந்தூரே. 2

இராவணனைக் கொன்றவன் ஊர் திருவழுந்தூர்

1590. செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக்

கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும்,

உம்பர் வாளிக் கிலக்காக

உதிர்த்த வுரவோ னூர்போலும்,

கொம்பி லார்ந்த மாதவிமேல்

கோதி மேய்ந்த வண்டினங்கள்,

அம்ப ராவும் கண்மடவார்

ஐம்பா லணையும் அழுந்தூரே. 3

என் கண்ணிலும் கருத்திலும் நின்றவர் ஊர் இது

1591. வெள்ளத் துள்ளோ ராலிலைமேல்

மேவி யடியேன் மனம்புகுந்து,என்

உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும்

நின்றார் நின்ற வூர்போலும்,

புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப்

போன காதல் பெடையோடும்,

அள்ளல் செறுவில் கயல்நாடும்

அணியார் வயல்சூழ் அழுந்தூரே. 4

எல்லாம் ஆனவர் நின்ற ஊர் இது

1592. பகலு மிரவும் தானேயாய்ப்

பாரும் விண்ணும் தானேயாய்,

நிகரில் சுடரா யிருளாகி

நின்றார் நின்ற வூர்போலும்,

துகிலின் கொடியும் தேர்த்துகளும்

துன்னி மாதர் கூந்தல்வாய்,

அகிலின் புகையால் முகிலேய்க்கும்

அணியார் iF அழுந்தூரே. 5

என் உள்ளம் புகுந்தவர் நின்ற ஊர் இது

1593. ஏடி லங்கு தாமரைபோல்

செவ்வாய் முறுவல் செய்தருளி,

மாடு வந்தென் மனம்புகுந்து

நின்றார் நின்ற வூர்போலும்,

நீடு மாடத் தனிச்சூலம்

போழக் கொண்டல் துளிதூவ,

ஆட லரவத் தார்ப்போவா

அணியார் iF அழுந்தூரே. 6

நான் பக்திக் கண்ணீர் விடச் செய்தவர் ஊர் இது

1594. மாலைப் புகுந்து மலரணைமேல்

வைகி யடியேன் மனம்புகுந்து,என்

நீலக் கண்கள் பனிமல்க

நின்றார் நின்ற வூர்போலும்,

வேலைக் கடல்போல் நெடுவீதி

விண்தோய் கதைவெண் மணிமாடத்து,

ஆலைப் புகையால் அழல்கதிரை

மறைக்கும் iF அழுந்தூரே. 7

எனக்குக் கனவில் காட்சி தந்தனர் ஊர் இது

1595. வஞ்சி மருங்கு விடைநோவ

மணந்து நின்ற கனவகத்து,என்

நெஞ்சு நிறையக் கைகூப்பி

நின்றார் நின்ற வூர்போலும்,

பஞ்சி யன்ன மெல்லடிநற்

பாவை மார்கள், ஆடகத்தின்

அஞ்சி லம்பி னார்ப்போவா

அணியார் iF அழுந்தூரே. 8

என் ஐம்புலன்களையும் கவர்ந்தவர் ஊர் இது

1596. என்னைம் புலனு மெழிலுங்கொண்

டிங்கே நெருந லெழுந்தருளி

பொன்னங் கலைகள் மெலிவெய்தப்

போன புனித ரூர்போலும்,

மன்னு முதுநீ ரரவிந்த

மலர்மேல் வரிவண் டிசைபாட

அன்னம் பெடையோ டுடனாடும்

அணியார் வயல்சூழ் அழுந்தூரே. 9

இப்பாடல்களைப் பாடினால் பாவம் நீங்கும்

1597. நெல்லில் குவளை கண்காட்ட

நீரில் குமுதம் வாய்காட்ட,

அல்லிக் கமலம் முகங்காட்டும்

கழனி யழுந்தூர் நின்றானை,

வல்லிப் பொதும்பில் குயில்கூவும்

மங்கை வேந்தன் பரகாலன்,

சொல்லில் பொலிந்த தமிழ்மாலை

சொல்லப் பாவம் நில்லாவே. 10

அடிவரவு:தந்தை பாரித்து செம்பொன் வெள்ளத்துள் பகல் ஏடு மாலை வஞ்சி என் நெல்லில் -- சிங்கம்.

 

 


  


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கண்சோர
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  சிங்கமதாய்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it