Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஆளும் பணியும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

ஆறாம் பத்து

ஆளும் பணியும்

திருநறையூர் -- 4

திருநறையூரில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள நம்பியின் பெருமைகளை இங்கே ஆழ்வார் பாடியுள்ளார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நறையூர் நம்பிதான் இராமபிரான்

1508. ஆளும் பணியு மடியேனைக்

கொண்டான் விண்ட நிசாசரரை,

தோளும் தலையும் துணிவெய்தச்

சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான்,

வேளும் சேயு மனையாரும்

வேற்க ணாரும் பயில்வீதி,

நாளும் விழவி னொலியோவா

நறையூர் நின்ற நம்பியே. 1

நறையூர் நம்பிதான் பரசுராமன்

1509. முனியாய் வந்து மூவெழுகால்

முடிசேர் மன்ன ருடல்துணிய,

தனிவாய் மழுவின் படையாண்ட

தாரார் தோளான், வார்புறவில்

பனிசேர் முல்லை பல்லரும்பப்

பான லொருபால் கண்காட்ட,

நனிசேர் கமலம் முகங்காட்டும்

நறையூர் நின்ற நம்பியே. 2

நறையூர் நம்பிதான் வாமனன்

1510. தெள்ளார் கடல்வாய் விடவாய

சினவா ளரவில் துயிலமர்ந்து,

துள்ளா வருமான் விழவாளி

துரந்தா னிரந்தான் மாவலிமண்,

புள்ளார் புறவில் பூங்காவி

புலன்கொள் மாதர் கண்காட்ட,

நள்ளார் கமலம் முகங்காட்டும்

நறையூர் நின்ற நம்பியே. 3

நறையூர் நம்பிதான் கண்ணபிரான்

1511. ஒளியா வெண்ணெ யுண்டானென்

றுரலோ டாய்ச்சி யண்கயிற்றால்,

விளியா ஆர்க்க ஆப்புண்டு

விம்மி யழுதான் மென்மலர்மேல்

களியா வண்டு கள்ளுண்ணக்

காமர் தென்றல் அலர்தூற்ற,

நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்

நறையூர் நின்ற நம்பியே. 4

நறையூர் நம்பிதான் கம்சனைக் கொன்றவன்

1512. வில்லார் விழவில் வடமதுரை

விரும்பி விரும்பா மல்லடர்த்து,

கல்லார் திரடோள் கஞ்சனைக்

காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்,

சொல்லார் சுருதி முறையோதிச்

சோமுச் செய்யும் தொழிலினோர்,

நல்லார் மறையோர் பலர்வாழும்

நறையூர் நின்ற நம்பியே. 5

நறையூர் நம்பிதான் வாணன் தோள்களைத் துணித்தவன்

1513. வள்ளி கொழுநன் முதலாய

மக்க ளோடு முக்கண்ணான்

வெள்கி யோட, விறல்வாணன்

வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான்,

பள்ளி கமலத் திடைப்பட்ட

பகுவா யலவன் முகம்நோக்கி,

நள்ளி யூடும் வயல்சூழ்ந்த

நறையூர் நின்ற நம்பியே. 6

நறையூர் நம்பிதான் பார்த்தசாரதி

1514. மிடையா வந்த வேல்மன்னர்

வீய விசயன் தேர்கடவி,

குடையா வரையன் றெடுத்தாயர்

கோவாய் நின்றான் கூராழிப்

படையான், வேதம் நான்கைந்து

வேள்வி யங்க மாறிசையேழ்,

நடையா வல்ல அந்தணர்வாழ்

நறையூர் நின்ற நம்பியே. 7

பாஞ்சாலியின் கூந்தலை முடித்தவன் இவனே

1515. பந்தார் விரலாள் பாஞ்சாலி

கூந்தல் முடிக்கப் பாரதத்து,

கந்தார் களிற்றுக் கழல்மன்னர்

கலங்கச் சங்கம் வாய்வைத்தான்

செந்தா மரைமே லயனோடு

சிவனு மனைய பெருமையோர்,

நந்தா வண்கை மறையோர் வாழ்

நறையூர் நின்ற நம்பியே. 8

சிவபிரானின் குறை தீர்த்தவன் இவன்

1516. ஆறும் பிறையும் அரவமும்

அடம்பும் சடைமே லணிந்து,உடலம்

நீறும் பூசி யேறூரும்

இறையோன் சென்று குறையிரப்ப,

மாறொன் றில்லா வாசநீர்

வரைமார் வகலத் தளித்துகந்தான்,

நாறும் பொழில்சூழ்ந் தழகாய

நறையூர் நின்ற நம்பியே. 9

இவற்றைப் படித்தோரைத் தேவர்களும் வணங்குவர்

1517. நம்மை யுடைய மறையோர்வாழ்

நறையூர் நின்ற நம்பியை,

கன்னி மதில்சூழ் வயல்மங்கைக்

கலிய னொலிசெய் தமிழ்மாலை,

பன்னி யுலகில் பாடுவார்

பாடு சாரா பழவினைகள்,

மன்னி யுலகம் ஆண்டுபோய்

வானோர் வணங்க வாழ்வாரே. 10

அடிவரவு:ஆளும் முனி தெள்ளார் ஒளி வில் வள்ளி மிடை பந்து ஆறு நம்மை -- மான். 

 


  


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is அம்பரமும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  மான்கொண்ட
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it