Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஆய்ச்சியர்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

நான்காம் பத்து

ஆய்ச்சியர்

திருவெள்ளியங்குடி

இவ்வூர் மாயவரம்-கும்பகோணம் பிரிவில் அணைக்கரைக்கு ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. திருவிந்தளூரில் பெருமான் ஸேவை கிடைக்காமையால் வருந்திய ஆழ்வாரை இவ்வூர்ப் பெருமாள் அழைத்துத் தரிசனம் தந்தருளினார்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ணபிரான் கோயில் திருவெள்ளியங்குடி

1338. ஆய்ச்சிய ரழைப்ப வெண்ணெயுண் டொருகால்

ஆலிலை வளர்ந்தவெம் பெருமான்,

பேய்ச்சியை முலையுண் டிணைமரு திறுத்துப்

பெருநில மளந்தவன் கோயில்,

காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும்

எங்குமாம் பொழில்களி னடுவே,

வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால்

திருவெள்ளி யங்குடி யதுவே. 1

கண்ணன் கருதிய கோயில் இது

1339. ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்

டரக்கர் தம் சிரங்களை யுருட்டி,

கார்நிறை மேகம் கலந்ததோ ருருவக்

கண்ணனார் கருதிய கோயில்,

பூநிரைச் செருந்தி புன்னைமுத் தரும்பிப்

பொதும்பிடை வரிவண்டு மிண்டி,

தேனிரைத் துண்டங் கின்னிசை முரலும்

திருவெள்ளி யங்குடி யதுவே. 2

காளியன்மேல் நடனமாடியவன் வாழ்விடம் இது

1340. கடுவிட முடைய காளியன் தடத்தைக்

கலக்கிமுன் னலக்கழித்து, அவன்றன்

படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப்

பல்நடம் பயின்றவன் கோயில்,

படவர வல்குல் பாவைநல் லார்கள்

பயிற்றிய நாடகத் தொலிபோய்,

அடைபுடை தழுவி யண்டநின் றதிரும்

திருவெள்ளி யங்குடி யதுவே. 3

காளமேகன் கருதும் கோயில் இது

1341. கறவைமுன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த

காளமே கத்திரு வுருவன்,

பறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற

பரமனார் பள்ளிகொள் கோயில்,

துறைதுறை தோறும் பொன்மணி சிதறும்

தொகுதிரை மண்ணியின் தென்பால்,

செறிமணி மாடக் கொடிகதி ரணவும்

திருவெள்ளி யங்குடி யதுவே. 4

பார்த்தசாரதியாய் இருந்தவன் இருக்கும் இடம் இது

1342. பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து

பாரதம் கையெறிந்து, ஒருகால்

தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த

செங்கண்மால் சென்றுறை கோயில்

ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி

'எமக்கிட மன்றிª 'தன் றெண்ணி,

சீர்மலி பொய்கை சென்றணை கின்ற

திருவெள்ளி யங்குடி யதுவே. 5

கோலவில்லிராமன் கோயில் இது

1343. காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை

உறக்கட லரக்கர்தம் சேனை,

கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த

கோலவில் இராமன்றன் கோயில்,

ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்

ஊழ்த்துவீழ்ந் தனவுண்டு மண்டி,

சேற்றிடைக் கயல்க ளுகள்திகழ் வயல்சூழ்

திருவெள்ளி யங்குடி யதுவே. 6

திருவிக்கிரமன் கோயில் இது

1344. ஒள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த

மாவலி வேள்வியில் புக்கு,

தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு

திக்குற வளர்ந்தவன் கோயில்,

அள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயில்கள்

அரியரி யென்றவை யழைப்ப,

வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான்

திருவெள்ளி யங்குடி யதுவே. 7

நரசிங்கப்பெருமான் வாழ்விடம் இது

1345. முடியுடை யமரர்க் கிடர்செயு மசுரர்

தம்பெரு மானை,அன் றரியாய்

மடியிடை வைத்து மர்வைமுன் கீண்ட

மாயனார் மன்னிய கோயில்,

படியிடை மாடத் தடியிடைத் தூணில்

பதித்தபன் மணிகளி னொளியால்,

விடிபக லிரவென் றறிவரி தாய

திருவெள்ளி யங்குடி யதுவே. 8

ஆழியான் அமரும் கோயில் இது

1346. குடிகுடி யாகக் கூடிநின் றமரர்

குணங்களே பிதற்றிநின் றேத்த

அடியவர்க் கருளி யரவணைத் துயின்ற

ஆழியா னமர்ந்துறை கோயில்,

கடியுடைக் கமலம் அடியிடை மலரக்

கரும்பொடு பெருஞ்செநநெ லசைய,

வடிவுடை யன்னம் பெடையடும் சேரும்

வயல்வெள்ளி யங்குடி யதுவே. 9

இவ்வுலகை ஆள்வர்

1347. பண்டுமுன் ஏன மாகியன் றொருகால்,

பாரிடந் தெயிற்றினில் கொண்டு,

தெண்டிரை வருடப் பாற்கடல் துயின்ற

திருவெள்ளி யங்குடி யானை,

வண்டறை சோலை மங்கையர் தலைவன்

மானவேல் கலியன்வா யலிகள்,

கொண்டிவை பாடும் தவமுடை யார்கள்

ஆள்வரிக் குரைகட லுலகே. 10

அடிவரவு: ஆய்ச்சியர் ஆநிரை கடுகற வை பார் காற்று ஒள்ளிய முடி சூடி பண்டு -- அறிவது.
  


 


 
 


 

.


 


 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is நும்மைத் தொழுதோம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  அறிவது
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it